வேம்பாற்றில் வாசிக்கப்பட்ட நமது திவ்விய இரட்சகராகிய ஆண்டவர் பிறந்த திருநாள் கட்டளை
திரிபுவனம் விதித்து திரிவர்க்கப் பிராணிகளை வகுத்துத் திரிலோக சமஸ்தானமனைத்தையும் புரந்தாளுகின்ற தேவாதி தேவ பரம்பொருளான பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவெனும் தேவ திரித்துவத்தின், கற்பனையை மீறி நமது ஆதி தாய் தந்தையாகிய ஆதனும், ஏவையும் விலக்கின மரத்தின் கனியைப் புசித்ததினாலே, அவர்களும், அவர்கள் சந்ததியராகிய நாமும் நரக மரணத்திற்கேதுவாயிருந்த கனமான பாவதோஷத்தை நிவர்த்தி செய்து மோட்சபாக்கியத்திற்கு நம்மை உரித்தாளி யாக்கிறதற்காக

சுயம் சுயம் ஸ்திதிமூலனும்
வித்தியாங்க ஞானக்கியான தருமகிரம மூலனும்
ஜனனோற்பவ சர்வமூலானு மூலனும்
அருரூப ரூபஞான சொரூப
அப்பிரமாண, பிரமாண
அப்பரியந்த, பரியந்த
அசமசமானனும்
ஓயாஜோதிப் பிரதாப
ஒளியா மோட்சதியாக
திரிகால நிதானன்,
திரிலோகாதர, சர்வஸ்தான ஸ்தாபித
சர்வாதீஸ்பர சர்வேஸ்பரன்
திரித்துவத்தின் இரண்டாம் பெயரென்னும்
சுதனாகிய சர்வேஸ்பரன்
பூலோகத்தின் சகல மனுஜன்மங்களுக்குள்ளும்
யூதர்வம்சத்தின் தேவராஜனாகவும்
யாக்கோப்பின் சந்ததியில் அரியகன்னிகையின்
திருவயிற்றில் மாசிலாத மனுமகனாக
உற்பவிப்பாரென்று ஆதியிலே
இசையாஸ், எரேமியாஸ், இசக்கியாஸ், தானியேலென்ற
தீர்க்கதரிசிகள் நால்வர் முதல் இன்னும்
பன்னிருவர்களாலும்
பூர்வீகத்தில் எழுதிய
தீர்க்க வாக்கியங்களின் பிரகாரம்
எப்போதும் கன்னியாஸ்திரியாயிருக்கிற
பரிசுத்த மரியநாயகியின் திருஉதரத்திலே
மெய்யான தேவனும், மெய்யான மனுஷனும்
ஒன்றானவராய், உற்பவித்த ஒன்பதாம்மாதம்
பெத்லகேம் நகரில், வெல்லைமலைச் சார்பில்
இரண்டு மிருகங்களுக்கிடையில் திவ்வியமனுகோல
பாலனாகப் பிறந்த மகோற்சவத் திருநாள்
25ம் தேதியில் சுத்தமாய் கொண்டாடப்படும்...
- தெதெயும்