வேம்பாத்து அக்கரை புனித சவேரியார் கோயில்
புனித சவேரியார் முத்துக்குளித்துறையின் ஊர்கள் தோறும் சுற்றித் திரிந்து கத்தோலிக்க வேதத்தில் பரதவர்களை உறுதிப் படுத்தினார் என்பது வரலாறு. அந்த காலக்கட்டத்தில் இரவு நேரங்களில் குடியிருப்புகளைக் கடந்து தனிமையில் ஒரு குடிசையில் தங்கி செபத்திலும், தியானத்திலும் செலவிட்டார் எனக் குறிப்புகள் உள்ளன. அவ்வாறு வேம்பாறு வந்து தனது வேத போதக பணிகளில் ஈடுபட்ட பின்னர் இரவில் தங்க வேம்பாறு ஆற்றின் அக்கரையில் ஒரு குடிசை அமைத்து தங்கினார். அந்த இடத்தில் புனித சவேரியார் வருகையின் நினைவாக புனித சவேரியார் பெயரில் குடிசைக் கோயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அக்காலத்தில் வேம்பாறு பரிசுத்த ஆவி ஆலயப் பங்கின் கீழ் இருந்த இந்த நினைவுச் சிற்றாலயத்திற்கு பங்கு மக்கள் திருமணம் செய்த புதுமணத் தம்பதியரை ‘வடக்கே செல்லுதல்’ எனும் முதல் பயண சடங்கிற்கு தங்கள் குடும்பத்தினருடன் அழைத்து வந்து, ஆலயத்தில் ஜெபித்து, நன்றி செலுத்தி சிற்றுண்டி அருந்தி வீடு திரும்புவது வழக்கம். (இன்றும் இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது.)
வேம்பாறு ஊரில் ‘முதலாளி’ என அனைவராலும் அழைக்கப்பட்ட திரு. ச.அ. அய்யாதம்பி தமேல் அவர்களுக்கு சொந்தமாயிருந்த இப்பகுதி பனைமரங்களை குத்தகைக்கு (பாட்டம்) எடுத்து இவ்விடத்தில் குடியிருந்த ‘பொத்தச்சி’ என்று அழைக்கப்பட்ட அந்தோணியம்மாள் அவர்கள் புனித சவேரியார் தங்கிய இடத்தில் இருந்த ஆலயத்தை பராமரித்து வந்தார்.
1947 ஆம் ஆண்டில் வேம்பாறு தூய ஆவி ஆலய பங்கின் துணைப் பங்கான புனித தோமையார் ஆலயம் தனிபங்காக மாறியது. புனித சவேரியார் ஆலயம் இருந்த பகுதியில் புனித தோமையார் ஆலய பங்கு மக்கள் வாழ்ந்து வந்ததால் புனித சவேரியார் ஆலயம் புனித தோமையார் பங்குடன் இணைக்கப்பட்டு பரிசுத்த ஆவி பங்கிலிருந்து விடுபட்டது.

அவ்வாலயம் சிதிலமடைந்த காலத்தில் அப்பகுதியில் குடியேறிய மக்களுக்கு பலவித கடும் நோய்களும், பேய்களின் தொல்லைகளும் ஏற்பட அப்பகுதியில் மீண்டும் புனித சவேரியாருக்கு ஆலயம் அமைக்க எண்ணி பரிசுத்த ஆவி பங்கினை சேர்ந்த திரு. கோயில்பிள்ளை விக்டோரியா அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பழைய ஆலயத்திற்கு நேர் எதிரில் மண் சுவரில் ஓடுகளால் வேயப்பட்ட கோயில் கட்டப்பட்டது.
இதனிடையே இக்கோவிலை கற்கோவிலாக மாற்றும் முயற்சியில் இப்பங்கு மக்கள் ஈடுபட்டனர். இறுதியில் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 3 தேதி அன்று கோவில் கட்டி முடிக்கப்பட்டு முத்துக்குளித்துறை மறைமாவட்டத்தின் நான்காம் ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
- நி. தேவ் ஆனந்த் பர்னாந்து