வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 10 April 2016

கலிகெழு கொற்கை

கொற்கைநகர் கி.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்தது. பின்னர் நெடுஞ்செழியன் காலத்திலேயே தற்போதைய மதுரைக்கு பாண்டியர் தலைநகர் மாற்றப்பட்டது. அதன்பிறகும் இந்நகர் சிறப்புக்குன்றாமல் “பெரிப்ளூஸ்”, டாலமி காலம் வரை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. முத்துக்குளித்தலுக்கு இந்நகர் பெரும் சிறப்பைப் பெற்றிருந்ததை பெரிப்ளூஸின் செங்கடல் செலவு நூல் மூலமாக அறியலாம்

கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் மூன்றாம் தலைநகரம் கொற்கை ஆகும். கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து மீண்ட பரதவர்கள் உருவாக்கியதே கொற்கை. கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம், பாண்டிய நாட்டு வணிக துறைமுகமாகவும், பாண்டியர்களின் கப்பல் படைத்தளமாகவும் இருந்தது.

சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.

கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.

புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம்.

பட்டினப்பாலை எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம்.

சிறுபாணாற்றுப்படை நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம்.

பெரும்பாணாற்றுப்படை கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது.

கொற்கை வில்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

தலையாங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான். கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர். முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர்.

அங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர்.

மறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர்.கொற்கைப் பகுதியில் பழையர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர். கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.

மறைந்துவிட்ட துறைமுகம் கொற்கை.

கொற்கை என்பது பண்டைய பாண்டியர்களின் தலைநகரம் என்று சங்க பாடல்கள் சான்றுக் கூறுகின்றன. கண்ணகி மதுரையை எரித்தப்போது பாண்டிய நாட்டின் மன்னராக இருந்த நெடுஞ்செழியனின் தம்பியான வெற்றிவேல் செழியன், கொற்கையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்துள்ளதாகச் சிலப்பதிகாரம் செப்புகின்றது. இந்த கொன்றை நகர் மிகப்பெரியக் கடல்துறைமுகமாக இருந்திருக்கின்றது. சீன யாத்திரிகர் ”யுவான் சுவாங் அவர்களின் குறிப்புகளில் கூட கொற்கைப் பற்றி சில செய்திகள் கூறப்பட்டிருகின்றது . ஆனால் இன்று தமிழ்நாட்டு கடற்புர மாற்றங்களால் துறைமுகமாக இருந்த இந்த நகரம் இன்று ஒரு சிற்றூராக மாறியுள்ளது. ஒருக் காலத்தில் கொற்கை நகரை நீராட்டிய கடல் இன்று 6 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ளது. முன்பு, கொற்கை பக்கமாகத்தான் தாமிரபரணி ஆறு பாய்ந்து கொண்டிருந்ததாம். அந்த ஆறு வழியாக, கடலுக்கு பாதை. ஆனால் இன்று, ஆறும் இல்லை. கடலும் இல்லை.

மடல் விரிந்த வாழைகள், தாரைகள் நீந்தும் குளம், மங்கையின் மார்பிலிருந்து நழுவிய சிற்றாடை போல் நெளியும் சிற்றோடை என மருதநிலத்தின் இலக்கணம் மாறாத அந்த சிற்றூர்தான் அலையடிக்கும் கடலும், நீர்யானை போன்ற நாவாய்களும், சங்கறுக்கும் ஒலியும், முத்துக்கு விலை பேசும் சத்தச் சலனமும் மிக்க நெய்தல் நிலம் சார்ந்த பட்டினப்பாக்கமாக விளங்கியதென்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி

வலம்புரி மூழ்கிய வான்மதில் பரதவர்

ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லென

கலிகெழு கொற்கை

என உயர்வு நவிற்சி இல்லாத சங்கப்பாடலே இதற்கு சான்றாக இருக்கிற பொழுது அதை நம்பித்தான் ஆகவேண்டும்.காலத்துக்கு ஆற்றல் அதிகம். அது மானுட வரலாற்றின் பக்கங்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் புரட்டிப் போட்டுவிடும். மறப்போர் பாண்டியன் “அறத்தின் காக்கும் கொற்கை அம்பெருந்துறை” என அகநானூறு அடையாளம் காட்டும் பாண்டியர்களின் பழம்பதியான கொற்கை தான் இன்று மருத நிலமாக இவ்வாறு உருமாறிக்கிடக்கிறது.

கி.மு. 4–ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4-ம் நூற்றாண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட நம்நாட்டுப்புலவர்களும், வெளிநாட்டு பயணிகளும் கொற்கையின் புகழைப் பாடியிருக்கிறார்கள்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com