வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 7 April 2016

கூம்பொடு மீப்பாய் களைதல்?

பொலநறுவைக் கல்வெட்டில் பரதவர் கலம்
தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திலும் சரி சோழர் காலத்திலும் சரி கலம் செலுத்தும் பாடலகளை குறிக்கையில் கூம்பொடு மீப்பாய் களைதல் என்றே கூறுகின்றன.

மீப்பாய் என்பது பாய்மரக் கப்பலின் பாய் மரத்துணியை மட்டும் குறிக்கும். அதனால் அதைக் களைவதோ விரிப்பதோ இப்போதும் நடைமுறையில் இருக்கும் வழக்காகவே தெரிகிறது. ஆனால் கூம்பொடு (பாய் கட்டப்பட்டிருக்கும் மரம் கூம்பு போல் உள்ளதால் கூம்பொடு எனக் கூறப்படுகிறது) மீப்பாய் களைதல் என்றால் கூம்பையும் ஏற்றி இறக்க தமிழர் கலங்களில் வசதி இருந்ததா? என்ற கேள்வி என்னில் எழுந்தது.


யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் - புறநானூறு


போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு,
மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. - கம்பர் இராமாயணம்


மேலுள்ள இரண்டு பாடல்களுமே மடக்கும் கூம்புகளை தமிழர் கலங்கள் பெற்றிருந்தன எனக் காட்டுகின்றன. கம்பராமாயணம் எழுதிய போது கம்பர் தானறிந்தவற்றை சேர்த்தே எழுதியிருக்கிறார்.

20ஆம் நூற்றாண்டு கப்பல்கள் கூம்பை மடக்கும் நுட்பத்தை பயன்படுத்தினரா என அறிய ஆவல்.

நான் கூம்பொடு மீப்பாய் களைதல் பதிவை இட்ட போது அதன் முடிவில் பாய்மரத்தை கட்டும் மரக்கூம்பு மடித்து வைக்குமாறு உருவாக்கப்பட்டதா எனக் கேட்டிருந்தேன். ஆனால் தற்பொது மார்க்கோபோலா குறிப்புகளில் 13ஆம் நூற்றாண்டில் அது போன்ற கப்பல்களை சப்பானியர் பயன்படுத்தினர் எனத் தெரிகிறது. அவர் எழுதிய குறிப்புகளை பார்ப்போம்.

வியாபாரிகள் பயணிக்கின்ற தேவதாரு மரங்களால் செய்யப்பட்டிருந்தன. பல பாய்களைக் கொண்ட நான்கு பாய்மரங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் இரண்டு பாய்மரங்கள் ஏற்றி இறக்கி தேவைக்கேற்ற உயரத்தில் வைத்துக்கொள்ளும் அமைப்போடு இருந்தன.

இப்போது மார்க்கோ போலோ குறிப்புகளையும் சங்க காலச் சான்றுகளையும் ஒப்பிடலாம்.

பல பாய்களைக் கொண்ட நான்கு பாய்மரங்கள் அமைக்கப்படுகின்றன. 

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பரதவர் உபயோகித்த கலம். நான்கு பாய்மரங்களைக் கொண்டது

அதில் இரண்டு பாய்மரங்கள் ஏற்றி இறக்கி 

கோடிக் கோடுங் கூம்புயர் நாவாய் - சீவக சிந்தாமணி 2331

தேவைக்கேற்ற உயரத்தில் வைத்துக்கொள்ளும் அமைப்போடு இருந்தன.


கூம்புமுதன் முருங்கவெற்றிக் காய்ந்துடன்
(மதுரைக்காஞ்சி.376)


கூம்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது - 
(புறநானூறு.30:10-15) 


ஆக இதிலிருந்து அறிவது யாதெனில் கூம்பொடு மீப்பாய் களைதல், கூம்புயர் நாவாய், கூம்பு முதன் முருங்க வெற்றி போன்ற சொற்றொடர்கள் தமிழர் உபயோகித்த கலங்களில் மீப்பாய் தேவைக்கேற்ப மடக்கியும் விரித்தும் களைந்தும் களையாமலும் கூம்பை உயர்த்தியும் தாழ்த்தியும் பயன்படுத்துமாறு அமைக்கப்பட்டன எனத் தெளிவாகத் தெரிகிறது.


 
நன்றி : Fromthenmaduraitotenkasi
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com