தமிழர் கப்பற்கலை
தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில்தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதிலிருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றிலிருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.
கால வாரியாகத் தமிழர் கடல்சார் நுட்பங்கள்
சங்க இலக்கியங்களும் பெரிப்புளுசின் எரித்திரியக் கடற்செலவு, தாலமியின் நிலவியல் கையேடு, பிளினியின் இயற்கை வரலாறு ஆகிய நூல்களும் தமிழகத் துறைமுகங்கள், கடற்கரை வணிக மையங்கள்பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.
சங்ககாலம்
முதன்மைக் கட்டுரை: ஓதம் அறிதல்
ஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும். ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம் (Tide towards the Shore - High tide), கடல் ஓதம் (Tide towards the Sea - Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். ஓதம் குறையும் போது கடல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறிக் கடலுக்குள் செல்வர். ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு. மேற்கொடுத்த சங்கப்பாடல்களின் மூலம் ஓதம் என்ற இயற்கை சக்தியைக் கலம் ஓட்டத் தமிழர் பயன்படுத்தினர் என அறியலாம்.

சங்ககால தமிழர் கலங்கள் வேந்தர்களால் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்தப் பட்டதோடு நில்லாமல் இலங்கையை போரில் வெல்லுவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர்.
வரலாற்றுக் காலம்
முதன்மைக் கட்டுரை: சோழர் கடற்படை
முதலாம் பாண்டியப் பேரரசு (கி.பி. 550 - 950), சோழப் பேரரசு (கி.பி. 850 - 1250), இரண்டாம் பாண்டியர் பேரரசு (கி.பி. 1150 - 1350) போன்ற காலங்களில் தமிழர் கப்பல்கள் வணிகத்தில் சிறப்புற்றதோடு நில்லாமல் கடல் கடந்து இலங்கை, கிழக்குப் பகுதிகளில் உள்ள பல நாடுகளின் மீது படை எடுத்து வென்றனர். அதிலும் பாண்டியர் ஆட்சியின் கீழ் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் செயல்பட்டு வந்தன.
ஆங்கிலேயர் காலம்
"எங்கோ நடுவில் ஆங்கிலேயர் வருவதற்குச் சற்று முன்பிருந்தே நம் கப்பற்கலை சிறிது சிறிதாக ஒதுக்கப்பட்டு, ஆங்கிலேயரின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் தமது வாணிபம் பொருட்டு எத்துணை அக்கிரமும் செய்வதில் தயங்கவில்லை என்பதை பிறகு வாழ்ந்து மறைந்த வ. உ. சிதம்பரனார் வாழ்க்கையிலிருந்து அறிகின்றோம்" (நரசய்யா, 140).
"1789 இல், கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சாதகமாகக் கல்கத்தா கெஜட்டில், இந்திய தச்சர்களோ, பணிமனையினரோ, கொல்லரோ, கப்பல்களில் வேலை செய்ய இயலாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" (நரசய்யா, 154)
1906 இல் ஆரம்பிக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சுதேசிக் கப்பல் கம்பெனி பிரிட்டிஷ் இந்தியா கம்பெனியினதும் அன்றைய காலனித்துவ அரசின் கூட்டுச் சதியினால் அழிவுற்றது. "பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி சுதேசி கம்பெனியைவிடக் குறைவாகக் கட்டணம் விதித்து, துறைமுக அடிவருடி அதிகாரிகளின் தயவால், சுதேசி கம்பெனி கப்பலின் முன்பே சென்று, சிதம்பரம் பிள்ளையின் கப்பலுக்கு வருமானம் இல்லாதவாறு செய்தது." மேலும், "சிதம்பரம் பிள்ளையவர்களை கைது செய்தது" (நரசய்யா, 155).
நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் எழுதிய "நம் நாட்டுக் கப்பற்கலை" என்னும் நூலில் பண்டைய தமிழரின் கப்பற்கலை பற்றிய பல தகவல்கள் உள்ளன.
அன்னபூரணி
முதன்மைக் கட்டுரை: அன்னபூரணி (1930 கப்பல்)
1933 இல் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களின் ஒன்றான வல்வெட்டித்துறையிலிருந்து அன்னபூரணி என்னும் 133 அடி நீளமான பாய்க்கப்பல் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்கத்துறைமுகமான மசச்சூசெட்ஸ் இனை வந்தடைந்தது. இப்பாய்க் கப்பலானது யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது.
பாய்மரக்கப்பலாக ஆரம்பத்தில் இது கட்டப்பட்டாலும் இதை வாங்கிய அமெரிக்கர் பின்னர் இந்தக் கப்பலை நீராவிக்கப்பலாக மாற்றித் தரும்படி கேட்டதற்கிணங்க நீராவிக்கப்பலாக மாற்றிக் கொடுக்கப் பட்டது. - (ஆதாரம் - " வல்வெட்டித் துறையிலிருந்து வட அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் " )
தமிழ் மணி
பண்டைய காலங்களில் தமிழர்களின் கப்பலில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று தற்சமயம் நியூசிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டன்அருங்காட்சியகத்தில் "தமிழ் மணி" ஆக உள்ளது.
துறைமுகங்கள்
பண்டைக்கால முக்கிய துறைமுகங்கள்
பாண்டியர் துறைமுகங்கள் - 30 துறைமுகங்களுக்கும் மேலாகப் பாண்டியர்கள் துறைமுகங்களைக் கட்டியிருந்தனர்.
காவிரிப்பூம்பட்டினம் - சோழர்களின் துறைமுகம்
வஞ்சி - சேரர்களின் துறைமுகம்
இக்கால முக்கிய துறைமுகங்கள்
எண்ணூர்த் துறைமுகம்
கப்பல், கடல் கலங்கள் வகைகள்
அம்பி - பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி
திமில் - பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.
வெளிநாட்டார் குறிப்புகள்
குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரைஉலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு.
லெப்டிணன்ட் வாக்கர் என்ற ஆங்கிலேயர் கி.பி. 1811இல் நமது கப்பல்களைக் கண்டு வியந்து பின்வருமாறு கூறினார். 'பிரிட்டிஷ் காரர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துச் செய்து தீர வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை."
Thanks: www./ta.wikipedia.org