அம்பாப் பாட்டு
வரலாற்று முன்னுரை

மீன் ஓர் முக்கிய உணவுப் பொருள். அதனை கடலிலிருந்து எடுத்து அளிப்பவர்கள் வலிமை பெற்றவர்கள். முத்தும், சங்கும் வியாபாரப் பொருட்கள்: இவை மிகுதியாகக் கிடைத்தால், அரசினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பழங்காலத்திலிருந்து தமிழ் நாட்டு மன்னர்கள் இத்தொழிலுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தனர். இத் தொழில்களைப் பாதுகாக்கவே கொற்கையில் ஓர் தலைநகரை நிறுவி அங்கு ஓர் காவற்படையையும் நிறுவியிருந்தனர். கடல் படு பொருட்களை வாங்குவதற்கு கொற்கையிலேயே ஒரு நாணய சாலையும் இருந்தது. இவையெல்லாம் பாண்டியர் பேரரசு நிலைத்திருந்த காலத்தில் நடைபெற்றது. பதினான்காம் நூற்றாண்டில் அராபியர்கள் வாணிபம் செய்வதற்காகத் தமிழ் நாட்டின் கீழ்க்கடற்கரைக்கு வந்தார்கள். தென்கடல் முத்தையும், தமிழ் நாட்டு துணி, மிளகு, அகில் முதலியனவற்றையும் ஏலம், கிராம்பு முதலிய வாசனைப் பொருள்களையும் அவர்கள் தங்கள் கப்பல்களில் ஏற்றி மேல் நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். கடல் வாணிபத்தில் பெருநிதி ஈட்டிய அராபியர்கள் காயல் பட்டணத்தில் பண்டகசாலைகள் அமைத்தனர். பாண்டிய அரசர்களுக்கு தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்திவிட்டு முத்து வாணிபத்திற்கு ஏகபோக உரிமை பெற்றனர். அது முதல் அவர்களுக்கும், கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவருக்கும் இடையே முரண்பாடுகளும், சச்சரவுகளும் தோன்றின.
அராபியர்கள் கடற்கரை எந்த அரசின் ஆதிக்கத்திலிருந்ததோ, அவ்வரசர்களைச் சந்தித்து தங்களுடைய வாணிப உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயன்றனர். கடற்கரை ஆதிக்கம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை நாயக்க மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதிகள் ஆகிய மன்னர்களின் கைக்கு மாறி மாறி வந்தது. ஆயினும் அராபிய வியாபாரிகளுக்கும் கடற்கரை மக்களுக்கும் ஏற்பட்ட சச்சரவு தீர்ந்தபாடில்லை.
இம் முரண்பாடுகள் பெரும் போராட்டமாக மாறிற்று. அவர்களிடையே நடந்த மிகப் பெரும்போர் ஒன்றைப் பற்றி 'ஜான் நியூ காவ்' என்னும் டச்சு வியாபாரி கீழ்வருமாறு எழுதியுள்ளார்
'அராபிய வியாபாரிகள் பரதவரது மூக்கையும், காதையும் வெட்டியெறிந்துவிட்டனர். பரதவர்கள், பெரும் கோபமுற்று படை திரட்டி பழிதீர்க்கக் கிளம்பினார்கள். முதல் போரில் அராபிய வியாபாரிகள் சிலர் சிறைப்பட்டனர். அவர்களது மூக்குகளையும் காதுகளையும் அரிந்துவிட்டு அவர்களை விடுதலை செய்து அனுப்பிவிட்டனர். இந்த அவமானத்தைப் பொறுக்கமாட்டாத அராபியர்கள் முப்பதினாயிரம் வீரர்கள் கொண்ட படை ஒன்றைத் திரட்டி தூத்துக்குடிக்கருகில் பாடியிறங்கினர். ஐயாயிரம் பரதவர்கள் ஆயுதம் தாங்கி அராபியரின் படையைத் தாக்கி ஏழாயிரம் படை வீரர்களைக் கொன்றுகுவித்தனர். அவர்களுடைய படை சிதறி ஓடிற்று. இந்த வெற்றிக்குப் பின்னர் பரதவர்கள் கடற்கரை ஓரமாக இருந்த பகுதிகள் அனைத்திலும் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். அராபிய வியாபாரிகள் செலுத்திய வரியைத் தாங்களே விசுவனாத நாயக்கருக்குச் செலுத்துவதாக ஒப்புக் கொண்டனர்.
ஆனால் கப்பல் வலிமை அவர்களுக்கு இல்லாததால் முத்தையும் சங்கையும் எடுத்தாலும் அது விலையாகும் இடங்களுக்குக் கொண்டு சென்று விற்க அவர்களுக்கு வழியில்லை. நாயக்க மன்னர்களுக்கு வரிசெலுத்த அவர்களால் முடியவில்லை. வரி பாக்கிக்காக அரசர் உத்தரவினால் பல பரதவத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிலர் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.
மேற்குத் கடற்கரையில் 1540 ஆண்டு முதலாக போர்த்துக்கீசியர்கள் கடற்கரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை பரதவர்கள் அறிவார்கள். படகோட்டிகள் சிலருக்கு அவர்களோடு வாணிபத் தொடர்பு உண்டு. போர்த்துக்கீசியரிடம் பெரிய கப்பல்கள் இருப்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டால், தங்களுடைய பொருள்களை அவர்களுக்கு விற்று அவர்களுடைய உதவியால் தங்களது கஷ்டங்களிலிருந்து தப்பலாம் என்று எண்ணினார்கள். சில தலைவர்கள் கோவாவிற்குச் சென்று போர்த்துக்கீசிய அதிகாரிகளையும், கத்தோலிக்கச் சாமியார்களையும் அழைத்து வந்தனர். 1533-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர் கப்பல் படையோடு வந்து கிழக்கு கடற்கரையிலுள்ள துறைமுகப் பட்டினங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். பரதவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஞானஸ்நானம் பெற்றனர். பூனைக்குத் தப்பியோடி புலிவாயில் மாட்டிக் கொண்டது போல பரதவர் நிலையும் ஆயிற்று. போர்த்துக்கீசியர் அராபியர்களை விட மோசமாகப் பரதவர்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். ஒரே மதத்தைச் சேர்ந்தோராயினும், போர்த்துக்கீசியர்கள் கொள்ளைக்காரர்தான் என்பதை பரதவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருவருக்குமிடையே பெரும் போராட்டம் மூள்வதற்கு முன்பாக போர்த்துக்கீசியர் அவர்களோடு ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள். இதன்படி மணப்பாறை, ஆலந்துலா, வீரபாண்டியன் பட்டணம், புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு என்ற ஏழு துறைமுகங்களிலும் ஏற்றுமதி செய்யும் உரிமையைப் போர்த்துக்கீசியர் பெற்றனர். ஆண்டுதோறும் அவர்கள் ஒரு தொகையும், தங்கள் வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகக் கப்பமாகச் செலுத்தினர். கடற்கரைத் தலைவர்கள் சங்கு குளிப்பையும் முத்துச் சலாபத்தையும் தங்கள் தகுதிக்கு ஏற்ற முறையில் நடத்திக் கொள்ள வேண்டும்.
மதுரை நாயக்கர்கள் கப்பற்படை பலமில்லாததால் போர்த்துக்கீசியர் நடவடிக்கைகளை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அதன் பின்னர், டச்சுக்காரருடைய போட்டி ஏற்பட்டதற்குப் பிறகு நிலைமை மாறியது. போத்த்துக்கீசியரின் உரிமைகளை டச்சுக்காரர்கள் கொண்டாடத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்குக் கப்பல் வலிமை மட்டும்தான் இருந்தது. முதலில் அவர்கள் பரதவர் எதிர்ப்பைச் சமாளிக்க நேர்ந்தது. பரதவர்கள் கத்தோலிக்கர்கள் ; டச்சுக்காரர்கள் பிராட்டஸ்டெண்டுகள். காலம் செல்லச் செல்ல வெளிநாட்டு வியாபாரத்திற்கு டச்சுக் கம்பெனிகளே சாதனமாக இருந்தபடியால் அவர்களோடு வாணிபத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் பரதவர்களுக்கு ஏற்பட்டது.
தென்னிந்திய அரசியல் அரங்கத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஓங்கியபோது டச்சுக்காரர்கள் ஆங்கிலேயரோடு வியாபாரப் போட்டியில் தோல்வியுற்றுக் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து வெளியேறினர்.
தமிழ் நாட்டுப் பரதவர் வீரம் மிகுந்தவர்கள். திறமை மிக்கவர்கள். தமிழ் நாட்டின் வரலாற்றில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள்.
அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் கடலில் கழியும். இன்னும் அவர்கள் மீன்பிடித்தல், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் முதலிய தொழில்களையே பெரும்பான்மையாகச் செய்து வருகின்றனர். 1533 க்கு முன்பாக அவர்கள் கடலன்னை என்னும் கடல் தெய்வத்தையும், வருணண், இந்திரன் போன்ற புராண தெய்வங்களையும், முருகன் என்ற தமிழ் தெய்வத்தையும் வணங்கி வந்திருக்கிறார்கள். கடலன்னை தற்பொழுது கன்னி மேரியாகி விட்டாள். பழங்காலத்தில் கடல் பயணத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்துகொண்டார்கள் என்பதற்கறிகுறியாக அவரது பாடல்களில் வேலனும், அல்லாவும் வணக்கத்திற்குரிய தெய்வங்களாகச் சொல்லப்படுகிறது. அவர்களுடைய பாடல்களில் ஆபத்திலிருந்து காக்கும்படி கடவுளை வேண்டிக் கொள்ளுகிறார்கள். வீட்டிலுள்ள மனைவியையும் குழந்தையையும் பற்றி அன்போடு எண்ணிப் பார்க்கிறார்கள்.அவர்கள் படகைக் கடலிலிறக்கும் பொழுதும், தண்டு வலிக்கும் பொழுதும், பாய்மரத்தை மேலேற்றி இறக்கும்பொழுதும், கடலில் போட்ட வலையை இழுக்கும்பொழுதும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த உழைப்போடு கலந்துதான் அவர்கள் பாடல் வெளியாகிறது. கடலில் செல்லும்பொழுது பல மணி நேரம் ஒருவர் மாறி ஒருவர் பாடிக் கொண்டேயிருப்பார்களாம். இம் மக்களின் பாடலுக்கு 'அம்பாப் பாடல்' என்று ஏன் பெயர் வந்தது என்று காரணம் சொல்வது கடினம். ஆனால் கடல் தெய்வம் கடலன்னை என்று அழைக்கப்பட்டதாலும், பின்னர் அத்தெய்வமே கன்னிமா என்று அழைக்கப்பட்டதாலும் இப்பாடல்கள் அம்பாள் பாடல்கள் என்று இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அம்பாள் என்னும் பெயர் பொதுவாகப் பெண் தெய்வத்தைக் குறிக்கும்.
-----------
1
ஏலோ இலோ ஈலோடு வாங்கு
வாங்குடா தோழா
வாழைத்தார் தருவேன்
தேங்காயும் மிளகும் தெரிவிட்ட பாக்கும்
மஞ்சள் இஞ்சி மணமுள்ள செண்பகம்
செண்பக வடிவேல் திருமுடிக் கழகு
வருகுது பெருநாள் தேரோட்டம் பார்க்க
தேரான தேரு செல்லப் பெண்டாட்டி
மாலை மசக்கி மையிடுங் கண்ணாள்
கண்ணுக்குச் செத்த மையிட வேணும்
பொய்யும் பிறக்குமோ பொய்க் கொடியாளே
நானிட்ட வாளை நல்ல சமத்தன்
கோழைப் பயலே கோமுட்டி வயிறா
உனக்கா எனக்கா பல்லாக்கு தனக்கா
வில்லே சரணம் வேந்தன் பாராய்
குறிப்பு: செண்பக வடிவேல்-வேலனைக் குறிக்கும். வில்லே சரணம், வேந்தன் பாராய்-இது இந்திரனையும், அவனது வில்லையும் குறிக்கும். இப்பாடல் பரதவர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவுமுன் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இப்பொழுதும் பாடப்படுகிறது.
------------
2
நாலு தண்டாம் பலவனாக்கு
நடுவ ஒரு பாய் மரமாம்
பாயிழுத்துக் கோசு ஊணி
பருமலுடன் சலுத்தணைந்து
சல் சல்லடம் சடுக்காப்பையா
நீயும் போடா கொய்யாக் கள்ளா
கொய்யாப் பழத்தின் ருசியும்
கொண்டு வந்தாலே தெரியும்
பாரக் கலவா பாப்பர மூஞ்சான்
சேரப்படுக்கும் செல்ல விலை மீன்
பாரக் குழலோ மேக வெளியாய்
ரஞ்சித நடையாள் கெஞ்சுது பாராய்
பண்ணி கிடந்து உறுமுது பாரு
பண்ணியடா ஒரு காட்டுப் பண்ணி
இன்னொரு பண்ணி வீட்டுப்பண்ணி
குறிப்பு: இப்பாட்டில் படகைக் கடலில் இறக்கிச் செலுத்தும் வரையுள்ள வேலைகள் வரிசையாகக் கூறப்படுகின்றன. மீன்களது பெயர்களும் ஒன்றிரண்டு கூறப்படுகிறது. அராபிய முஸ்லீம்களோடு செய்து சண்டையால் ஏற்பட்ட வெறுப்பு அவர்களைக் கேலி செய்யும் முறையில் 'பண்ணி' என்ற வார்த்தையில் வெளிப்படுகிறது. 'பன்றி' என்பது மக்களுக்குப் பிடிக்காது.
-----------
3
மணப்பாட்டுத் திருநாள் வருகுதடி
மதினியை ஒரு சத்தம் போடாதடி
கோட்டாத்துத் திருநாள் வருகுதடி
கொழுந்தியை ஒரு சத்தம் போடாதடி
வாடை முந்தும் கோடை முந்தும்
மாசி மாதம் கொண்டல் முந்தும்
காத்தடிச்சிக் கடல் கலங்கும்
கல்லு போட்டாத் தலை உடையும்
ஓடும் கடல் தனக்கு
உடையவளே எந்தனுக்கு
உல்லன் தட்டிப் பாயுதடி
ஓடப் படிகரை மடியை
உண்ணாமல் திண்ணாமல்
ஊர்ப்பயணம் போகாதடி
ஆளை எண்ணிப்படி போடம்மா
ஆரோக்கிய மாதாவே
--------
4
அல்லாவோட காவலுல
ஆபத் தொன்றும் வாராம
பெரிய உந்தன் காவலுல
பேதகங்கள் வாராம
மரியே உன் காவலுல
மனதிரக்கம் வைப்பாயே
காப்பாத்த வேணுமம்மா
கன்னிமரித்தாயே நீ
பாவிக்கிரங்கும் பரிசுத்த மாதாவே
மாதாவே என்றால் மலையும் இளகுமம்மா
கர்த்தரே என்றால் கல்லும் இளகுமம்மா
கல்லும் மலையும் கரம்பக் கயிறாமோ
வில்லோ சரணமம்மா வேந்தன் மகனார்க்கு
---------
5
வாளா வலை முடிந்து வங்கடைக்கு மால் முடிந்து
கோலா வலை முடித்து குறுக்கட்டாமல் முடித்து
காஞ்சி வனமடியே கள்ளரோட காடடியே
இருளடைந்த சோலையிலே இணைபிரிந்த மான் போல
மானோடா ஓடுறது மறியடா நல்ல தம்பி
மானோடும் தூரமெல்லாம் தானோட வல்லவியோ
வள்ளம் வித்தேன் வலையும் வித்தேன்
வாளா வலை புனையும் வித்தேன்
கொம்பை வித்தேன் குழலை வித்தேன்
குடிக்க இருந்த செம்பை வித்தேன்
எல்லாம் வித்துக் கள் குடித்தேன்
ஏங்குனாப்பில தூங்கிவிட்டேன்
தூங்கி முழிச்சபய தோணி கட்டி வாழ்ந்தபய
வாராயோ காத்த நீயே வளம் பெரிய சோழகமே
சோலையிலே அவ கிடந்து
சுட்ட நண்டுக்கால் பெறக்கி
கால் வழியே ஓடுதம்மா கடிக்கு தம்மா கட்டெறும்பு
கட்டச்சியோ நெட்டச்சியோ
காயலான் தங்கச்சியோ
தங்கச்சியோ பட்டணத்தாள்
தனியே நல்ல முரசு விட்டாள்
போடு லக்கை போடு லக்கை
கைமாத்திப் போடுலக்கை
கள்ளன் வந்தான் திருடன் வந்தான்
கட்டாமைக் காரன் வந்தான்
------------
6
சிலுவை வரைந்து கொண்டேன்
திருப்பாதம் தெண்டனிட்டேன்
கன்னி மேரி மாதாவே
கர்த்தா வே காத்தருளும்
காணிக்கை நேர்ந்தனம்மா நான் ஒரு
கைக் குழந்தை வேணுமின்னு
தெற்கே திருப்பதியாம்
தேவ மாதா சன்னதியாம்
மறப் பதில்லை திருப்பதியை
மனப் பாட்டு முனைக் குருசை
குருசே உனைத் தொழுவேன்
கும்புடுவேன் ஆதரிப்பாய்
வேளையிது வேளையம்மா
வேளாங்கண்ணி மாதாவே
மாதாவே உன்னுதவி-உன்
மகனுதவி வேணுமம்மா
தாயே உனதடிமை
தற்காக்க வேணுமம்மா
நண்டு படும் தொண்டியடா
நகர படும் நம்புதாளை
நம்பிக்கை உண்டுமம்மா
நமக்குதவி நாயனுண்டு
நாயன் அருளாலே
நான் பாடவே துணிந்தேன்
நமக்குப் படைகளுண்டு
நாத சுரக் காரருண்டு
பிச்சிச் சரமோ-நீ
பின்னி விட்ட பூச்சரமோ
பூவைச் சொரிந்தவள் நீ
போன வழி வாராளடா
பச்சை மணக்குதடி
பாதகத்தி உன் மேலே
எல்லை கடந்தாளடி
இலங்கை வனம் கடந்தாள்
தில்லை வனம் கடந்தாள்
திருவணையும் குற்றாலம்
பாராமல் போராளடி
படமெடுத்த நாகம் போல
வட்டார வழக்கு: பலவனுக்கு-பலவை நாக்கு; கோசு-முன் வாயில் கட்டும் கயிறு; பருமல்-பாயுடன் சேர்ந்த கம்பு; சலுத்து-பருமலும் பாய்மரமும் சேர்த்துக்கட்டும் கயிறு; பாரக் கலவா, பாப்பரமூஞ்சன்-மீன்களின் பெயர்கள்; வாளா, வங்கடை, கோலா, குருக் கட்டா- மீன்களின் பெயர்கள்; இவற்றைப் பிடிக்கத் தனித்தனி வலைகள் உண்டு.
குறிப்பு : இவை போன்ற பாடல்கள் பலவற்றை ஆ.சிவசுப்பிரமணியன் சேகரித்துள்ளார்.
சேகரித்தவர் :பீட்டர் முறாயீஸ்; அனுப்பியவர்: S.S. போத்தையா
இடம் : தூத்துக்குடி,
------------
Thanks: www.projectmadurai.org