வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 1 August 2023

பண்பாட்டில் சிறந்த பரதவர் 1

டாக்டர் அ ராஜா பிஞ்ஞேயிரோ

டால்பின் சிட்டி முப்பது ஆண்டுகளுக்கு முன்பே  ECR ல் புகழ்பெற்று விளங்கிய பொழுது போக்கு பூங்கா.  டால்பின் நகருக்கு எதிரே மற்றொரு பொழுதுபோக்கு பூங்காவும் இருந்தது. இந்த பொழுதுபோக்கு பூங்கா லிட்டில் ஃபோக்ஸ் கேளிக்கை பூங்கா என்று அழைக்கப்படுகிறது. 

டால்பின் சிட்டி கேளிக்கை பூங்கா தண்ணீரால் நிரம்பிய ஒரு நல்ல வேடிக்கையான இடமாகும்,  இது பிரபலமான தொழில் அதிபரும், கொடை வள்ளலுமான டாக்டர். அ ராஜா பிஞ்ஞேயிரோ  அவர்களால்  தொடங்கப்பட்டது.

சிங்கப்பூரைப் போன்றே ஓர் டால்பின் காட்சியை சென்னையில் அமைக்க விரும்பிய அ ராஜா பிஞ்ஞேயிரோ   ஐரோப்பாவிலிருந்து தனி விமானம் மூலமாக டால்பின்களை கொண்டு வந்தார் என்பது மிகவும் துணிச்சலான செயலாக பார்க்கப்பட்டது. இங்கு குழந்தை முதல் அனைவரையும் கவர்ந்த டால்பின்களால்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நாம் அனைவரும் அறிந்தது போல் டால்பின்கள்  மிகவும் நட்பான கடல் விலங்கு. 

 டால்பின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மிகப் பெரிய கடல் நீர் தொட்டிகள்  அமைக்கப்பட்டன. இந்த பொழுதுபோக்கு பூங்காவின்  டால்பின் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வெளி நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பயிற்சியாளர்களால் நடத்தப்பட்டது. பொழுதுபோக்கு பூங்காவிற்கு கடல் சிங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

ஆரம்ப காலத்தில் பொழுதுபோக்கு பூங்காவில் டால்பின்களின் நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. பின்னர் அது அமெரிக்க கடல் சிங்கங்களால் ஈடுசெய்யப்பட்டது, இது பார்வையாளர்களின் கண்களுக்கு சமமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. டால்பின் சிட்டியில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வுநேரப் படகு சவாரி, நீருக்கடியில் காட்சி மற்றும் ஸ்லைடு நீச்சல் குளம் உள்ளிட்ட பல செயல்பாடுகள் இருந்தன. மேலும் இங்கு சக் வேகன், டிஸ்கோ ஸ்கூட்டர், டீ கப், அனிமல் சிமுலேட்டர் மற்றும் டிராகன் ரைடு ஆகியவை அடங்கும்.

தமிழின் முதல் அச்சு நூல், முதல் மருத்துவமனை, முதல் அச்சகம், முதல் பொதுக்கல்வி நிலையம், முதல் பேச்சுத்தமிழ் அகராதி என்று 'புன்னைக்காயல்' லின் பங்கு ஏராளம். இது ஆத்தூருக்கு அருகில் அமைந்துள்ள அழகிய மீனவ கிராமம்.  16 ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய துறைமுகமாக விளங்கியது. புனித சவேரியாரின் முக்கியமான பணியிடம். இவ்வளவு சிறப்புகள் நிறைந்த ஊரில் பிறந்தவர்தான் சாதனையாளர் அ.ராஜா பிஞ்ஞேயிரோ.

பெருமை மிகு  அ.ராஜா பிஞ்ஞேயிரோ அவர்கள் எளிமையான குடும்பத்தில் பிறந்து தனது கடினமாக உழைப்பினால் ஏற்றுமதி துறையில் மாபெரும் சாதனையாளராக தடம் பதித்தார்.  மிகவும் சிறிய அளவி்ல் அவரால் மெட்ராஸ், பிராட்வேயில் ஆரம்பிக்கப்பட்ட M/S.Rajan Trading company  என்ற நிறுவனம் 1970 களில் வேகமான வளர்ச்சிகண்டது. 

M/S ராஜன் யுனிவர்சல் எக்ஸ்போர்ட்ஸ் (MFRS) பிரைவேட் லிமிடெட்,  என்கிற பெயரில் அ.ராஜா பிஞ்ஞேயிரோ ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவலாகப் பயணம் செய்து, ஆப்பிரிக்க இறுதிப் பயனாளிகள் மற்றும் விவசாயிகளின் உண்மையான  தேவைகளை தனிப்பட்ட முறையில் அறிந்து கொண்டார். அவர் ஆப்பிரிக்க நகரங்களில் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்துள்ளார். 

அவர் ஏற்றுமதி செய்த இயந்திரங்கள் :-

•  எஞ்சின் ஹீட்டர்கள்

•  டீசல் என்ஜின் கிரான்கேஸ்களுக்கான எண்ணெய்-எரிவாயு பிரிப்பான்கள்.

•  உள் எரிப்பு இயந்திரங்களுக்கான பம்புகள்

• மண் உரமிடும் உபகரணங்கள்.

•  தானிய அறுவடை மற்றும் செயலாக்க இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், பண்ணை பயன்பாடு

•  அரைக்கும் ஆலைகள், டிராக்டர் பொருத்தப்பட்டவை

• காய்கறி அறுவடை மற்றும்  இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்.

•  விவசாய மற்றும் தோட்டக்கலை கருவிகள் 

•  உணவுத் தொழிலுக்கான இயந்திரங்கள் மற்றும்  அரைத்தல் இயந்திரங்கள்.

•  உண்ணக்கூடிய தாவர எண்ணெய் ஆலை மற்றும் உபகரணங்கள்.

•  சமையல் தாவர எண்ணெய்  நசுக்குதல் மற்றும் அரைக்கும் இயந்திரங்கள்.

•  மில்ஸ், அல்ட்ரா ஃபைன் கிரைண்டிங். 
என்று அவர்களுடைய ஏற்றுமதி பட்டியல் நீண்டது.

ஆப்பிரிக்காவிற்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதின் காரணமாக வாடிக்கையாளர்களுடன் நல்ல புரிதல் கொண்டவர். அவர்களின் பிராண்ட் 'அமுதா', 'ராஜா' ஆப்பிரிக்க நாடுகள் முழுவதும் பிரபலமான பிராண்ட் ஆகும். அவர்களின் பிராண்ட் பெயரை பிரபலப்படுத்த, அவர் பல சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்று மிகவும் உழைத்தார். அதனால், ஜாம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ADB, UNDP, UNITED NATIONS மற்றும் WHO அதிகாரிகள் கூட நிறுவனத்தைப் பாராட்டியுள்ளனர். கானாவின் High commissioner அவரது இல்லத்திற்கே விஜயம் செய்தார்.  

வழிகாட்டுதலிலும் தலைமையிலும்  அ.ராஜா பிஞ்ஞேயிரோ, சிறந்து விளங்கியதால் நிறுவனம் பன்மடங்கு வளர்ச்சியடைந்தது. இதன் காரணமாக சிறந்த ஏற்றுமதியாளருக்கான இந்திய அரசின் விருதுகளை  பலமுறை வென்றார். அவரது நிறுவனத்தில்  Award கள் நிறைந்திருக்கும். அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுக்களையும் பெற்றார். 

1970,80 களில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்த காலம்.  நமது தூத்துக்குடி கடலோர இளைஞர்கள் மெட்ராஸ் போனால் ராஜா பிஞ்ஞேயிரோ கம்பெனில ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்று நம்பி வந்தார்கள்.  நூற்றுக்கணக்கான இளைஞர்கள்  அவரது நிறுவனங்களில் வேலையும் செய்தனர். பலருக்கு தங்குமிடமும் கொடுத்தார்.

சமய, சமுதாய சேவைகள் 

எப்படி அவரது ஏற்றுமதி நிறுவனம் உயர்ந்து நின்றதோ அப்படியே அவரது சேவை உள்ளமும் உயர்ந்து நின்றது. எப்போதும் சிரித்த முகத்துடனும், பிறருக்கு உதவி செய்யும் நல்ல உள்ளத்துடனும் காணப்பட்டார். ராஜா பிஞ்ஞேயிரோ அன்னை மரியாளின் மீது அளவற்ற பக்தி கொண்டவர்.  சென்னை பிராட்வே சகாய மாதா ஆலயத்திற்கு பின்புறம் உள்ள தெருவில் அமைந்திருந்தது அவரது இல்லம். அன்னையின் தேர்த்திருவிழா அவரது உபகாரத்திலும், தலைமையிலும் தான் நடைபெறும். 

 அதன்பின்னர் பெசன்ட்  நகரில்  அன்னையின் ஆலயத்திற்கு எதிரில் அவரது வீடு இருந்தது . அங்கும் திருவிழா,  தேர், மற்றும் ஆலய கட்டுமானம் அனைத்திற்கும் அவர் பெரும் உதவி செய்துள்ளார். மாணவர்களின்  கல்விக்கு பெருமளவு உதவி செய்தார்.

1986 திருத்தந்தை புனித ஜான் பால் சென்னை வருகையின் போது, ஆயர் அருளப்பா மற்றும் முதல்வர் எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கு இணங்க Transport committee  யின் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டார். சென்னை ராயபுரத்தில் உள்ள அன்னை தெரசாவின் இல்லத்திற்கு பல உதவிகள் செய்தார். அவர்களது பயன்பாட்டிற்காக வேன் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.  

புன்னைக்காயலில் செயின்ட்.ஜோசப்ஸ் நடுநிலைப் பள்ளி 1981 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி ராஜா பிஞ்ஞேயிரோவின் பெரு முயற்சியால்    உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.  பள்ளியை புதுப்பித்து, அனைத்து நிதி தேவைகளையும் வழங்கினார்.


அனைத்து சேவைகளுக்கும் மகுடமாக  புன்னைக்காயல் ஊரில் 'டாக்டர் ராஜா பிஞ்ஞேயிரோ  தொண்டு மருத்துவமனை' யை கட்டிக் கொடுத்தார். இந்த மருத்துவமனை செயின்ட் ஆன் (லூசர்ன்) சகோதரிகளால் நடத்தப்படுகிறது.கொடை நாயகர் டாக்டர் அ ராஜா பிஞ்ஞேயிரா அவர்கள் ஊருக்கு செய்த நலத்திட்டங்களின் நினைவாக அவரை சிறப்பிக்கும் பொருட்டு, பேருந்து நிலையத்தில் அவரின் முழு உருவச்சிலையை ஊர் மக்கள் அமைத்துள்ளார்கள்.

Pro Ecclesia et Pontifice ( லத்தீன் மொழியில் "சர்ச் மற்றும் போப்பிற்காக") என்கிற விருது திருத்தந்தை அவர்களால் டாக்டர் அ. ராஜா பிஞ்ஞேயிரோ  அவர்களுக்கு அவரது சேவைகளை பாராட்டி வழங்கப்பட்டுள்ளது.

- தேன்வளன்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com