வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 15 August 2023

விடுதலைவீரர் வலேரியன் 3
கதர் கல்யாணம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அந்தக் கால சீர்திருத்தத் திருமணம் அது. வலேரியன் பர்னாந்துவுக்கும் பழைய காயல் மகத்துவம் மச்சாடோவுக்கும் 1942 பிப்ரவரி 13 ஆம் நாள்  கதர் கல்யாணம் தான் நடந்தது.  மணப் பெண்ணுக்கு  ஒரு கதர் புடவையும், மணமகனுக்கு  கதர் வேட்டியும் மட்டுமே செலவு. பூமாலைக்குப் பதில் கதர் நூல் மாலை மாற்றிக் கொள்வார்கள். இந்த  எளிய முறை திருமணத்துக்குப் பின்னர் இவர் மீண்டும் இலங்கை சென்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சேவையாற்றுகிறார். 

சுதந்திரம் அடைந்த நாளன்று வலேரியன் பர்னாந்து இலங்கையில் தான் இருந்திருக்கிறார். கொழும்பு கண்ணாரத் தெருத் திடலில் நடைபெற்ற விழாவில்  அந்நாளைய இலங்கைக்கான இந்திய தூதர் வி.வி.கிரி தலைமையேற்க வலேரியனுக்கு இந்திய தேசியக் கொடியேற்றும் சிறப்பளிக்கப் படுகிறது.

தேசிய கட்சி ஒன்றின் முழு நேர ஊழியராகவே செயல்பட்டு, எதற்காக இவ்வளவு பெரிய தியாகங்களை செய்து போராடினாரோ அந்த சுதந்திரம் கிடைத்து விட்டது. யார் வாய்மொழியை மந்திரமாக ஏற்றுக் கொண்டார்களோ, அவர் சுட்டுக் கொல்லப்பட்டு சுதந்திர தேசிய அரங்கில் இருந்து அகற்றப்பட்டார்.. 

தான் பிறந்த தேசத்தை விடுதலை செய்யப் பெரும் படை திரட்டிக் கொண்டு அணிவகுத்து வந்த தலைவர் என்ன ஆனார் என்று தெரியாமலே காணாமல் போனார். பொன்னுலகம் நோக்கி அழைத்துச் சென்றவர்கள் சட்டென்று விடை பெற்றுக் கொண்டதால் பின்னால் வந்தவர்களில் பலர் திகைத்துப் போய் தெவங்கி நின்றார்கள். சிலர் உறுதியாக முன்னேறி முக்கியமான தளங்களில் தம்மை வசதியாக நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

தூத்துக்குடியில் இவர் தலைவராக மதித்திருந்த மாசிலாமணி பிள்ளை காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தலில் நிற்கவே வாய்ப்பு மறுக்கப் பட்டார். சுதந்திரம் அடைந்த பின் மாகாண சட்ட மேலவைத்  தேர்தலில் சுயேச்சையாக நின்று தோற்றே போனார். 

1950 ஆம் ஆண்டில் தாயகம் திரும்பிய வலேரியன் தெவங்கித் தான் போனார். வீரபாண்டியன் பட்டனம் தாமஸ் நடுநிலைப் பள்ளியில் நூற்பு நெசவு ஆசிரியராக  சில ஆண்டுகள் பணியாற்றுகிறார் வலேரியன். பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரமுயர்த்தும் முயற்சியில் ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெறுகிறார். அதன்பின் கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் நூற்பு ஆசிரியராகவும், ஹரிஜன நல இலாகாவில் தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காகவும் பணியாற்றுகிறார். 

1960 ஆம் ஆண்டில் வினோபா பாவே,விமலா டக்கர் ஆகியோர் பின்னே வலேரியன் பய்னாந்து ஒரு தொண்டராகிறார். 1966 முதல் 1969 வரை வினோபா பாவேவின் சீடர் குட்டி அவர்களோடு பாதயாத்திரை ஊழியராக  இணைந்து காந்தியடிகளின் கிராமராஜ்ய கனவை நனவாக்கச் சேவையாற்றுகிறார் வலேரியன்.

இந்தியா முழுவதும்  40 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று விட்டதாக அறிவிக்கிறார் வினோபா பாவே.. ஒன்றுக்கும் உதவாத வறண்ட நிலங்களையும் தூர்ந்து போன  ஏரி கண்மாய்களையும் நிலக்கிழார்கள் வாரி வழங்கிய துயர நாடகம் அது.

இந்த காலகட்டத்தில்  மூத்தமகள் தேவியின் திருமணத்தை. மதுரையில் கதர் கல்யாணமாக  நடத்தி வைக்கிறார் வலேரியன். தன் மொத்த வாழ்வையும் தேசத்துக்காகத் தொலைத்துவிட்டு தன் குடும்பத்தோடு பரிதாபமாகத் திண்டாடுகிறார் வலேரியன்.1967 இல் அண்ணா முதல்வரான பின்னர் மாநில அரசின் சார்பில் விடுதலை வீரர்களுக்கான ஓய்வூதியம் 22.06.1967 முதல் மாதம் ரூபாய் 50 தரப் படுகிறது.  தியாகி வலேரியன் பர்னாந்துவின் குடும்பம் திருச்செந்தூரிலிருந்து மனைவியின் ஊரான பழையகாயலுக்கு குடிபெயர்கிறது.

அங்கும் வலேரியன் பர்னாந்து சும்மா இருக்கவில்லை.  கிராமசபை அமைத்துக் காரியதரிசியாக சேவையாற்றுகிறார். சிறிது காலத்திற்குப் பின்னர், இளைய மகள் சுதந்தராவுக்கு   வேலை கிடைத்ததன் காரணமாக குடும்பம் தூத்துக்குடிக்கு குடிவருகிறது. 

வலேரியன் பர்னாந்து  01.03.1970 முதல்  11.05.1972 வரை நெல்லை வண்ணாரப் பேட்டை தினமலர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அறுபது வயதைக் கடந்த ஒரு பெரியவருக்கு அவர்கள் என்ன வேலை கொடுத்திருப்பார்கள்? பாவம் கடும் உழைப்பாளியும் நேர்மையாளருமான பெரியவர் என்ன வேலை செய்திருப்பார்? அந்த வயதில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு வேலை செய்து பொருள் ஈட்ட போய் வந்த போது  அவர் மனம் என்ன பாடு பட்டிருக்கும் ? 

சுதந்திர வெள்ளி விழா கொண்டாட்டத்திற்குப் பின் நடுவண் அரசிடமிருந்து தியாகி ஓய்வூதியம்  மாதம் ரூபாய் 1250 வர ஆரம்பிக்கிறது. ஒரு வழியாக இவரைத் தியாகியாக அங்கீகரித்து விட்டது மத்திய அரசு.1973ஆம் ஆண்டு குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சியரால் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வலேரியன் பர்னாந்துவுக்கு சுதந்திரப் போராட்ட தியாகி என்பதற்கான தாமிரபட்டயம் வழங்கப் படுகிறது.

1980 இல் இளைய மகள் சுதந்தராவுக்கும் மணம் முடித்து  வைக்கிறார் வலேரியன். குறை ஒன்றும் இல்லை என்று சொல்லி நிறைவாழ்வு வாழ்ந்த வலேரியன் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் தனது நீண்ட ஓட்டத்தை நிறைவு செய்து கொள்கிறார்.

நம் நாட்டின் விடுதலை என்பது வெறுமனே ராட்டையில் நூற்று எடுக்கப்பட்டதில்லை என்பதையும், ஒவ்வொரு ஊரிலும் இப்போது அறியப்பட்டிருக்கும் ஒன்றிரண்டு பேர் மட்டுமே விடுதலைப் போராட்ட வீரர்கள் இல்லை என்பதையும். இன்னும் பல நூறு தியாகிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சாதாரணர்களாக வாழ்ந்து மறைந்து விட்டார்கள் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் நம் நெஞ்சில் இருத்த வேண்டும்.
-முத்துக்குமார் சங்கரன் 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com