வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 27 August 2023

பண்பாட்டில் சிறந்த பரதவர் 5

Joseph Anselm Vaz
Flying Officer, Indian Air Force


'1938 இல் என் சித்தப்பா எம்.ஜோசப் நார்பர்ட் வாஸ் திருமணம் நடக்க இருந்தது... நாங்கள் சிப்பிக்குளத்தைச் சேர்ந்தவர்கள். மணமகள் பேபி கிரேஸ் குடும்பம் பழையகாயல். சிப்பிகுளம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மணமகன் குடும்ப உறுப்பினர்கள் திருமணத்தில் கலந்துக் கொள்ள இருந்தனர். அந்த நாட்களில் தொலைதூர இடங்களுக்குச் செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் கிடையாது. அப்போது சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே போக்குவரத்தை இயக்கி வந்தன. கடலோர கிராமங்களுக்கு போக்குவரத்து பற்றி நாங்கள் கனவிலும் நினைக்க முடியாது. என் அப்பா இக்னேஷியஸ் வாஸ் மொத்த குடும்பத்தை கொண்டு செல்வதற்கு எட்டு மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு மாட்டு வண்டியிலும் இரண்டு வாழைப்பழ குலைகள் தொங்கிக் கொண்டு இருந்தது.' இவ்வாறாக எனது பெரியம்மாவை அவரது சித்தப்பாவிற்கு மணம் முடிக்க வந்த கதையை கூறுகின்றார் அண்ணன் கலாபன் வாஸ்.

பழைய காயல் - சிப்பிகுளம் சம்பந்தங்கள் ஏராளமாக உண்டு. காரணம் இரு ஊர்க்காரர்களும் பண்பாட்டில் சிறந்தவர்கள். உபசரிப்பில் உயர்ந்தவர்கள். இவ்வாறாக நமக்கு மிகவும் நெருக்கமானவர் அண்ணன் கலாபன் வாஸ். அவர்களுடைய சிறப்புகளை பற்றி பரதவ/ கத்தோலிக்க திருச்சபையில் அனைவரும் அறிந்து இருந்தாலும் அவரது நீண்டகால அனுபவங்கள் குறி்த்து எழுதாவிடில் எனது எழுத்து முழுமை பெறாது.

கலாபம் என்பது வர்ணஜாலத்தைக் குறிக்கும்;
மயிலின் தோகையைக் குறிக்கும்;
மயிலிறகின் ஸ்பரிசத்தைக் குறிக்கும்!

சிறுவயதில் புத்தகத்தின் நடுவே மயிலிறகை வைத்து குட்டி போடும் என்று காத்திருந்தாரோ என்னவோ அவரது சாதனை பட்டியல் மிகவும் நீண்டது. மணல்பாடும் மணப்பாட்டிலும், முத்து நகரிலும், சண்டீகர் விமான படைதளத்திலும் சிறந்த மாணவராக விளங்கினார். விமான படையில் அவர் பல போர் சூழ்ந்த காலங்களில் வீரமுடன் பணி செய்தார். 1962 சீனாவுடனான போரிலும், 1965 மற்றும் 1971 பாகிஸ்தானுடனான போர்களில் தீரமுடன் பணி செய்தார்.
1968 ல் சுக்காய் 7 போர்விமானத்திற்கான தொழில்நுட்ப பயிற்சிக்காக USSR (ஒன்றுபட்ட ரஷ்ய வல்லரசு) சென்று வந்தார். 1979 ல் ஜாகுவார் விமான தொழில்நுட்ப பயிற்சியில் இங்கிலாந்தில் ஈடுபட்டார்...என்பது அவரது நீண்டகால தாய் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஓர் சாதனை. கலாபன் வாஸ் அவர்களும் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவும் விமான படையில் நண்பர்களாக இருந்தார்கள் என்பது சிறப்பு. பல ஒலிம்பிக் வீரர்களும் அவருடன் பணி செய்தார்கள்.

1986 புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் சென்னை வருகையின்போது அவரை வரவேற்று முதல் சல்யூட் கொடுத்ததும், திரும்ப செல்லும்போது விமான படை சார்பில் அருகில் நின்று வழியனுப்பியதும் தனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியூட்டும் தருணங்களாக எண்ணி மகிழ்கின்றார். கலைஞரைப் போன்று இளம் வயதிலேயே நாடகங்கள்,கதைகள், கட்டுரைகள், செய்திகள் எழுத ஆரம்பித்து விட்டார் அன்செல்ம்.

ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். அவர் இளைஞராக சிப்பிகுளத்தில் எழுதி,நடித்த நாடகத்தை தூத்துக்குடி மறை மாவட்ட முதல் ஆயர் திபுர்சியூஸ் ரோச் அவர்கள் கண்டு மகிழ்ந்து பாராட்டினார். விகடன், கல்கி, தீபம், முத்தாரம், நம்வாழ்வு உட்பட ஏராளமான பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பல கிறிஸ்தவ பத்திரிகையில் ஆசிரியராக, இணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக ஞான தூதன் பத்திரிகையில் இவரது பங்களிப்பு அளவிட முடியாதது. அருள்தந்தையர்கள் தூதனின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்குசற்றும் சளைக்காத வகையில் திரு. கலாபன் வாஸ் அவர்களும் தனது தன்னலமற்ற உழைப்பை கொடுத்துள்ளார்.

திரு. கலாபன் வாஸ், 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தூதன் பவளவிழாவில் “ஞானதூதன் விருது” வழங்கி, கௌரவிக்கப்பட்டார். சிப்பிக்குளம் மண்ணின் மைந்தரான அருட்தந்தை ஜே. எக்ஸ். பூபால ராயர் அடிகளாரை முதல் ஆசிரியராகக் கொண்டு, 1928 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு ரோச் ஆண்டகை அவர்களால் தொடங்கப்பட்டது. “அர்ச். சவேரியார் ஞானதூதன்“ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கிய ஞான தூதன் பத்திரிகை.

தூதனின் மிகப் பழமையான பிரதியாக 1944 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இதழ் தம்மிடம் இருப்பதாக, 20 ஆண்டுகளுக்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஞானதூதனின் பவளவிழா மலரில் திரு. கலாபன் வாஸ் ஆவணப்படுத்தியுள்ளார். மறைமாவட்டத்தில் அடிப்படை கிறித்தவ சமூகங்களை உருவாக்குவதற்கு 1989 ஆம் ஆண்டில் ஆயர். அமலநாதர் அவர்கள் அருள்தந்தை. லியோ செயசீலன், திரு. கலாபன் வாஸ், ஆகியோரை மதுரையில் நடைபெற்ற 'புதுவாழ்வு' பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

இப்பயிற்சிகளுக்குப் பின் புதுவாழ்வு இயக்குனராக பணி. ஆர்தர் ஜேம்ஸ் அவர்களும், இணை இயக்குனராக திரு. கலாபன் வாஸ் அவர்களும் ஆயர் அவர்களால் பணி நியமனம் பெற்று பொதுநிலையினர் பணியகத்தில் இருந்து ‘புதுவாழ்வு’ பணிகளைத் துவங்கினர். கோட்டாறு மறைமாவட்டத்தில் அருள்தந்தை எட்வின் அடிகளார் 'அன்பியம் 'என்று இக்குழுக்களுக்குப் பெயரிட்டார். அதை அடியொற்றி தமிழகத்தில் புதுவாழ்வுக் குழுக்கள் 'அன்பியம்' என்று அழைக்கப்படலாயிற்று.

மேலும் பல மறைமாவட்டங்களுக்கும் சென்று பயிற்சியளிக்க உருவாக்கப்பட்ட தமிழக குழுவில் திரு. கலாபன் வாஸ் அவர்கள் இடம் பெற்று குருக்கள், அருள்சகோதரிகள் ஆகியோருக்குப் பயிற்சியளித்தார் என்பது பொதுநிலையினர் ஒவ்வொருவருக்கும் ஒரு தூண்டுகோலாக அமைகிறது. அன்னை தெரசாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த ஒரு வரவேற்பு நிகழ்வில் அன்னையின் அருகிலிருந்து கலந்து கொண்டதை தன் வாழ்வின் பாக்கியமாக கருதுகின்றார்.

தூத்துக்குடி மறைமாவட்டத்தில் திருமண தயாரிப்பு வகுப்புகளை வாரம் தோறும் நடத்தி வருகின்றார். இயற்கை முறை குடும்ப கட்டுப்பாடு மற்றும் ஆண்/பெண் குழந்தைகள் உருவாகவும் ஆலோசனை வழங்குகிறார். அமெரிக்க டல்லாஸ் நகரில் நடந்த 'இதயத் துடிப்பு' குடும்ப நலன் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய மருத்துவர் அல்லாதவர் என்பது பெருமைப்பட வேண்டிய செய்தி.

ஒரு நூலை எழுதி வெளியிடுவதே பிரசவத்தை போன்று மிகவும் கடினமானது... ஆனால் கலாபன் வாஸ் ஏறக்குறைய இருபது நூல்களை எழுதி சாதனை படைத்துள்ளார். மென்மையான பேச்சும், மேன்மையான செயல்களும் கொண்டவர்... கலாபன் வாஸ் என்கிற அன்செல்ம் வாஸ்... கடலோர கத்தோலிக்க வரலாற்று சகாப்தம்.

தேன்வளன் @ Joemel Fernando

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com