வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 1 August 2023

பண்பாட்டில் சிறந்த பரதவர் 2

ஓவியர் தாமஸ் ஜெயராஜ் பெர்னாண்டோ 


அது, 1974-ம் வருஷம். சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு என் மனைவி, பிள்ளைகளோட கிளம்பிப் போனேன். ட்ரெயின் மணியாச்சி ஜங்ஷன்ல கொஞ்ச நேரம் நின்னுச்சு. அந்த நேரத்துல ட்ரெயின்ல இருந்து இறங்கி, என் பசங்களை நான் புகைப்படம் எடுத்தேன். 

அப்போ அடுத்த ட்ராக்குல ஒரு ட்ரெயின் போய்க்கிட்டிருந்துச்சு. போன ட்ரெயின் கொஞ்ச நேரத்துல சட்டுனு நின்னுடுச்சு. அந்த ட்ரெயின்ல இருந்து ஒரு மிலிட்டரி ஜவான் இறங்கி நேரா என்கிட்ட வந்தார். என் கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுப் போனார். நான், `எங்கே கூப்பிடுறியோ வர்றேன். முதல்ல கையை எடு'னு ஆங்கிலத்துல சொன்னேன்.

நான் பேசின ஆங்கில வார்த்தைங்க அந்த ஜவானுக்கு உறைச்சிருக்கணும். கையை எடுத்துட்டார். அப்போதான் கவனிச்சேன். அது ராணுவ வீரர்கள், தளவாடங்களை ஏத்திக்கிட்டுப் போற பிரத்யேக ட்ரெயின்கிறதை. ஜவான், நேரா கமாண்டர்கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போனார். அவர் கேமராவை வாங்கி, அதுல இருந்த ஃபிலிம் ரோலை மட்டும் எடுத்துக்கிட்டு, கேமராவை கொடுத்துப் போகச் சொல்லிட்டார். குழந்தைங்களைப் படம் எடுக்குற ஆர்வத்துல மிலிட்டரி ட்ரெயின் போனதை நான் கவனிக்கலைனு அவர் புரிஞ்சிக்கிட்டார்.

இந்தச் சம்பவத்துல ஜவானைத் தோளிலிருந்து கையை எடுக்கச் சொன்னபோது வந்த கோபம்... கமாண்டர் ஃபிலிம் ரோலைப் பிடுங்கும்போது, `வேற என்ன பண்ண முடியும்'கிற ஒரு நிதானம். இந்த மனப்பான்மை கடவுள் கொடுத்தது. இத்தனை களேபரங்களும் முடிஞ்சு, நான் என் கூபேக்கு வந்தா ட்ரெயின் அதுவரைக்கும் நின்னுக்கிட்டு இருந்துச்சு. அதுக்குக் காரணம் `காளி மார்க் சோடா கம்பெனி'யின் அதிபர் ராஜேந்திரன்தான். அவர் என் ஓவியங்களின் ரசிகர். `ஓவியர் ஜெயராஜை மிலிட்டரிகாரங்க அழைச்சிக்கிட்டுப் போறாங்க...  அவர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க’னு கார்டுகிட்ட சொல்லியிருக்கார். கார்டோ, `நானும் அவர் ஓவியங்களின் ரசிகர்தான் சார்’னு சொல்லியிருக்கார். இப்படி நமக்கு நெருக்கடியான நேரங்கள்ல எங்கிருந்தோ உதவி கிடைக்குமில்லே? அப்போல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்லிப் பழகிக்குவேன். அதுதான் என்னை இவ்வளவு உயரத்துக்குக் கொண்டு வந்ததுனு நினைக்கிறேன்.  

பிறப்பால் நான் கிறிஸ்துவன். சென்னையில ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல்  சர்ச்சுக்குப் போவேன். தூத்துக்குடி போனா, பனிமய மாதா கோயிலுக்கும், திரு இருதய ஆண்டவர் கோயிலுக்கும் போகாம வர மாட்டேன். எப்போ சர்ச்சுக்குப் போய் ஜெபம் பண்ணினாலும், ஒரே ஜெபம்தான், `எல்லாரும் நல்லாயிருக்கணும்'னு வேண்டிக்குவேன். நேத்திக்கு இன்னிக்குன்னு கிடையாது... என்னிக்குமே ஒரே பிரேயர்தான்.

எல்லாரும் `நீங்க ஏன் உங்களுக்குனு எதையும் கேட்க மாட்டேங்கிறீங்க?’னு கேட்பாங்க. `எல்லாரும் நல்லா இருந்தா, நிச்சயம் நாமும் நல்லா இருப்போம்ங்கிற நம்பிக்கைதான்’னு சொல்லிடுவேன். மத்தபடி பைபிளெல்லாம் அதிகம் படிச்சது கிடையாது. ஆனா, பைபிள்ல சொல்லி இருக்கிறபடி நடக்கணும்னு என்னால முடிஞ்ச அளவு முயற்சி செய்யுறேன். என்று தனது கடவுள் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். நம்ம ஊரு ஜெ...

நான் பிறந்தது தூத்துக்குடி. படிச்சது வளர்ந்ததெல்லாம் மதுரையில. அமெரிக்கன் காலேஜ்ல பி.ஏ பொருளாதாரத்தை 1958-ம் வருஷம் படிச்சு முடிச்சேன். சின்ன வயசுல இருந்தே படம் வரைவேன்.  எப்போது என்று சொன்னால் நான் மிகைப்படுத்துவது போல இருக்கும். மூன்று வயதிலேயே நான் படம் வரைய ஆரம்பித்து விட்டேன். சுவரில், காகிதத்தில் கார், பஸ், பொம்மை என்று ஏதாவது வரைவேன். என் அப்பா அதைப் பார்த்துவிட்டு, பையன் ஏதோ கிறுக்கியிருக்கான் என்றில்லாமல் ஊக்குவிப்பார். இப்படி இருந்தா நல்லா இருக்கும், இப்படி வரை என்றெல்லாம் சொல்வார். வீட்டுக்கு வருபவர்களிடம் காட்டுவார். என்னுடைய வளர்ச்சியில் அவருடைய பங்கை மறக்க முடியாது. 

பின் மதுரை சேதுபதி ஹைஸ்கூல், அமெரிக்கன் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும்போது ஓவியப் போட்டிகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். நண்பர்களோடு சேர்ந்து ‘சிற்பி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கிறேன். அதில் நிறையச் சிரிப்பு வெடிகள், படங்கள் வரைந்திருக்கிறேன்.

அப்பாவுக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றலானது. குடும்பத்தோடு சென்னைக்குப் போனோம். நான் படித்துவிட்டு வேலை தேடும் முயற்சியில் இருந்தேன். அப்பா என்னை கூப்பிட்டு, "நீ குமுதம், விகடன் பத்திரிகைகளைப் போய்ப் பார். உன் படத்தையெல்லாம் கையோடு எடுத்துக் கொண்டு போய்க் காட்டு. வாய்ப்புக் கிடைக்கும்" என்றார். அங்கேயெல்லாம் என்னை உள்ளே விடுவார்களா என்றே எனக்குத் தயக்கமாக இருந்தது. "இதோ பார், முடியும் என்று நினைத்தால் எதுவும் முடியும். முடியாது என்றால் முடியாது. மதுரையைவிட இங்கு வாய்ப்புகள் நிறைய. முயற்சி செய்" என்றார். 

நான் குமுதம் பத்திரிகைக்கு ஓவியங்களை எடுத்துக் கொண்டு போனேன். எஸ்.ஏ.பி., ரா.கி.ரங்கராஜன் இருவரையும் பார்த்தேன். எஸ்.ஏ.பி என்னிடம் "ரஃப் ஸ்கெட்ச்ன்னு சொல்றீங்க. ஆனா பத்திரிகைக்குன்னு வரைஞ்ச மாதிரி நல்ல க்வாலிட்டியா இருக்கே" என்றார். பின் ரா.கி. ரங்கராஜனிடம் "இவர்ட்ட நாம நேத்து பேசிட்டிருந்தோமே உங்களோட அந்த சிறுகதையைக் கொடுத்து வரையச் சொல்லுங்க" என்றார்.

ரங்கராஜனுக்கு ஒரே சந்தோஷம். அவருக்குச் சிரித்த முகம். ரொம்பப் பெருந்தன்மையான மனிதர். ஒளிவு மறைவு இல்லாதவர். அவர் பேச்சில் ஒரு நகைச்சுவை இருக்கும். பிறரை ஊக்குவிப்பதில் ரொம்ப ஆசை கொண்டவர். சிறுகதையைக் கொடுத்தார். நானும் வரைந்து கொடுத்தேன். கோட்டோவியம் தான். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

அக்டோபர் 10, 1958 இதழில் அந்த ஓவியம் வெளியானது. என் முதல் ஓவியமே ரா.கி. ரங்கராஜன் சார் கதைக்கு அமைஞ்சதில் எனக்கு ரொம்பப் பெருமை. பத்திரிகைகளுக்கு நான் வரைவேன் என்றோ, என்னால் முடியும் என்றோ நான் நினைத்தே பார்த்ததில்லை. 22 வயதில் தொடங்கிய அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது. 

ஒருமுறை காஞ்சிப் பெரியவர் என்னை வரச் சொல்லி மகாபாரதத்துலேருந்து, அஞ்சு காட்சிகளைப் படம் வரையச் சொன்னார். வரைஞ்சு கொடுத்துட்டு வந்தேன். அதுக்காக என்னைப் பாராட்டி ஒரு தங்கக்காசும், ருத்ராட்ச மாலையும் கொடுத்தார். அந்த மாலையைத்தான் எங்க வீட்டு வேளாங்கண்ணி மகதா சிலைக்கு அணிவிச்சிருக்கேன். அந்தச் சிலை எங்க குடும்ப நண்பர் டைரக்டர் மகேந்திரன் வேளாங்கண்ணி போயிட்டு வந்தபோது அன்போட பரிசா கொடுத்தது. 

மகேந்திரன் சாருக்கு என் ஓவியங்கள் ரொம்பப் பிடிக்கும். அவரும் என்னை மாதிரியே மதுரை அமெரிக்கன் காலேஜ்ல படிச்சவர். அவர் `நண்டு'னு ஒரு படம் டைரக்ட் பண்ணினார். அப்போ அவரோட குழந்தைகளை எங்க வீட்டுலதான் விட்டுட்டுப் போனார். அவர் குழந்தைகளும் எங்க குழந்தைகளும் நல்ல ஃபிரெண்ட்ஸ். பசங்களைக் கூட்டிக்கிட்டு அவர் காரை எடுத்துக்கிட்டு பீச், மகாபலிபுரம்னு போயிட்டு வருவோம். என்னோட மாருதி சின்ன கார்ங்கிறதால அவரோட அம்பாஸிடர்ல சுத்தி வருவோம். 

இயக்குநர் மகேந்திரன் என்னிடம் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். கதாநாயகிக்குப் புதுமுகத்தைப் போடலாம்னு நெனக்கிறேன். எந்த முகம் சரியானதாக இருக்கும் என்று சொல்ல்லுங்கள் என்று கூட்டிச் சென்றார். ஏவி.எம். ஸ்டூடியோவில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கமல்ஹாசனைச் சந்திக்க சுஹாஸினி வந்திருந்தார். அவர் கமலுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த நான், யார், யாரையோ நாயகியாக்குவதை விட இந்தப் பெண் பொருத்தமானவராக இருப்பார் என்று மகேந்திரனிடம் சொன்னேன். மஹேந்திரனும் ஒப்புக் கொண்டார். 

அப்போது சுஹாசினி கேமரா அசிஸ்டெண்டாக இருந்தார் என்று நினைவு. மகேந்திரன் பேசி அவரைச் சம்மதிக்க வைத்தார். நான் அதில் காஸ்ட்யூம் டிசைனர். அதில் சுஹாசினி அணிந்த காஸ்ட்யூம் எல்லாம் என் மகள் ஹில்டா போடுவதின் மாடல்கள்தான். அந்தப் படம் நல்ல வெற்றி. அதேபோல ரஜினி நடித்த ‘ஜானி’ படத்திலும் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றினேன். ரஜினியைச் சந்தித்த மகேந்திரன், "இவர்தான் உங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனர், ஓவியர் ஜெயராஜ்" என்று அறிமுகப்படுத்தினார்.

 அதற்கு ரஜினி, "நல்லது சார். மத்தவங்களவிட ஒரு ஓவியருக்கு நல்லா காஸ்ட்யூம் டிசைன் செய்யத் தெரியும். ஓவிய அனுபவமும் நிறைய இருக்கும். இவரையே வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார். ரஜினி அணிந்த ஆடைகளில் "Music the life giver" என்று நான் போட்டிருந்தது எல்லாருக்கும் பிடிச்சிருச்சு. அது இசை சம்பந்தப்பட்ட படம்.

ஜெயராஜ்... 50 ஆண்டுகால தமிழ்ப் பத்திரிகையுலகில் தவிர்க்க முடியாத பெயர். நட்சத்திர ஓவியர். ஒரு கட்டத்தில் இவர் வரைந்த ஓவியங்கள் 47 பத்திரிகைகளில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த அளவுக்கு ஓவியங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். `கறுப்பு வெள்ளை ஓவியம்' என்றால் வரைவதற்கு அரை மணி நேரமும், `வண்ண ஓவியம்' என்றால் முக்கால் மணி நேரமும் ஆகுமாம். சின்னக் குண்டூசி முதல் பெரிய பெரிய பொருள்கள்வரை அத்தனையையும் செய்நேர்த்தியோடு வீட்டில் அழகுற வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள், இவரும் இவரது துணைவியார் ரெஜினாவும். 

இந்தப் பேனா, இந்த மேஜை, இந்தத் தூரிகை, இந்த வண்ணங்கள் யாவும் கடவுளின் கருவிகள் என்றுதான் நினைக்கிறேன். என்று கூறினார் தமிழ் பத்திரிகை? உலகின் ஜாம்பவான் ஓவியர் ஜெ... யார் மனதையும் புண்படுத்தாதவர், எப்போதும் புன்சிரிப்போடு இருப்பார், ஜெயராஜ்.  புது வகை சித்திரங்களை அறிமுகப்படுத்திய ஜெயராஜ் வரைய ஆரம்பித்து 60 வருடங்கள் நிறைந்துவிட்டன. பத்து லட்சத்திற்கும் மேல் ஓவியங்கள், ஏராளமான விருதுகள்... பத்திரிகைகளை வாங்கும் தமிழர் இல்லங்களில் ஜெ... ஓர் அடையாளம்.

இன்னொரு அற்புதமான விஷயம், கலைஞரைச் சென்று பார்த்தை பற்றி கூறுகிறார் : அவர் மாதிரி கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது. என்னை நண்பன் மாதிரி பக்கத்தில் உட்காரவைத்து, எழுதப்போகிற வரலாற்றுத்தொடருக்கு எப்படி படம் புலி பண்டாரக வன்னியன்’, ‘குறளோவியம்’, ‘தொல்காப்பியம்’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’ என அனைத்து தொடர்களுக்கும் வரையச் சொன்னார். பாராட்டி தட்டிக்கொடுத்தார். 1962ல் எங்களுக்குத் திருமணம் நடந்தது. ரெஜினா என் வாழ்வில் கிடைத்த பாக்கியம். அவள் அன்பை பெரிதாக வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

வரைந்து காட்டவும் முடியாது. எனக்கு அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என பெரும் சொந்தமுண்டு.  ஒருவரிடமும் சிறு பிணக்கில்லை. என்னை விடவும் ரெஜினா அவர்களை அன்பில் நனைப்பாள். அவளுக்கு அன்பு செலுத்துவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. எங்கள் அன்பிற்கு சாட்சியங்களாக ஹில்டா, டிஸ்னி இருக்கிறார்கள்.

திருமணம் ஆன புதிதில் அவளைப் பார்க்க தூத்துக்குடி போவேன். நான் தெரு முனையில் சூட்கேஸுடன் வரும்போதே ஓடிவந்து நடுரோட்டில் என் கழுத்தைக் கட்டிக் கொள்வாள். ‘என்னடா நடக்குது இங்கே’ என்பதுபோல அனைவரும் பார்ப்பார்கள். எனது எல்லா வெற்றிக்கும் காரணம் என் மனைவிதான். எனக்கு உதவியாக இருப்பது, பிரஷ் எடுத்துத் தருவது, தேவையானதை வாங்கி வைப்பது, கதைகளை படித்துக் காட்டுவது, எதை எப்போது, எந்த இதழுக்கு அனுப்புவது என்று ஒழுங்குபடுத்துவது என்று எல்லாப் பணிகளையும் செய்வார்.

 அதுமட்டுமல்ல; நான் வரையும் ஓவியங்களைச் சரிபார்த்து, "இது இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும்;" "இது அதிக கவர்ச்சியாக இருக்கிறது. சரியில்லை; இதைக் கொஞ்சம் மாற்றினால் இன்னும் பெட்டராக இருக்கும்" என்றெல்லாம் ஆலோசனை சொல்வார். நானும் உடனே மாற்றி விடுவேன்.  இவளுக்கென்ன தெரியும். இவள் ஆர்டிஸ்ட்டான நம்மைக் குறை சொல்வதாவது என்றெல்லாம் நான் நினைத்திருந்தால் அன்றே நான் தோற்றுப் போயிருப்பேன். ஆலோசனை கூறும் மனைவியின் கருத்துக்கு, ஒரு ரசிகையின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டதால்தான் நான் இன்று நாலு பேர் பாராட்டும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன்.

ஜெயராஜ் எந்தக் கல்லூரியிலும் போய் ஓவியம் கற்கவில்லை. இவர்தான் குரு என்று சொல்லிக் கொள்கிற மாதிரி யாரும் இல்லை. ஒற்றைச் சொல்லில் சொன்னால் ‘சுயம்பு’. தினத்தந்தி, ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுத சுரபி, குங்குமம், சாவி, ராணிமுத்து, தென்றல் போன்ற பிரபல இதழ்களுக்கும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளிலும் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கும் மூச்சு விட நேரமில்லாமல் 60, 70களில் வரைந்து கொடுத்து ரெக்கார்டு ஏற்படுத்தியவர்.

தமிழ்நாடு பாட நூல்கள், ஓரியண்ட் லாங்மென், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி, அறிவொளி இயக்கம், குடும்பக் கட்டுப்பாடு, எய்ட்ஸ் விழிப்பணர்வு, சாம்பா பப்ளிகேஷன்ஸ் பாட நூல்கள், ஒய்.ஆர்.ஜி.கேர் போன்ற மக்கள் விழிப்புணர்வு ஓவியங்கள் என கணக்கில்லாமல் தீட்டியவர்.

அகிலன், லட்சுமி, கவிஞர் கண்ணதாசன், கலைஞர், சுஜாதா, சிவசங்கரி, புஷ்பா தங்கதுரை, இந்துமதி, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திரகுமார் போன்ற 400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத் தன் ஓவியங்கள் மூலம் உயிர் கொடுத்தவர்.

சிறுவர்களுக்காக நான் வரைந்ததில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது Oxford Dictionary for Children. அதற்குப் படம் வரைந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல இடங்களில் அது நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. 

ஓரியண்ட் லாங்க்மனுக்கு வரைந்திருக்கிறேன். குமுதத்தில் சுஜாதா எழுதிய ‘நடுவானத்தில்’ என்ற சித்திரக்கதைத் தொடருக்கு நான் வரைந்ததைப் பலரும் பாராட்டினர். ஃபாரின் ஸ்டேண்டர்டுக்கு இருக்கிறது என்றார்கள். ஒரு எழுத்தாளனுக்கு, ஓவியனுக்கு முதன்முதலில் பாராட்டு விழா நடத்தியதே சாவிதான். சோழா ஷெரட்டனில் என்னையும் சுஜாதாவையும் அவர் கௌரவப்படுத்தினார். அதை என்னால் மறக்கவே முடியாது.

சாவி அவர்களோடு இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா, ஜெர்மனி எனப் பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன். ஒருமுறை பிரான்ஸ் செல்வதற்காக விசா நேர்காணலுக்குப் போயிருந்தோம். விசா அதிகாரி ஒரு மாதிரி ரஃப் அண்ட் டஃப் ஆக இருந்தார். விசா கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது. அவரோடு நான் பேசிக் கொண்டிருந்தபோதே கீழே மேசைமீது அவரது உருவத்தை வரைந்து கொண்டிருந்தேன். 

"நான் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நீ கீழே ஏதோ செய்து கொண்டிருக்கிறாயே" என்று கோபத்தில் கத்திவிட்டு அதை வாங்கிப் பார்த்த அவர் சிரித்து விட்டார். சூழ்நிலை மாறியது. எங்களுக்கு விசாவும் கிடைத்தது. அந்த ஓவியத்தை அந்த அதிகாரியிடமே கொடுத்துவிட்டேன். சாவிக்கு இதில் ஒரே சந்தோஷம். ஓவியனால் முடியாத ஒன்று, அவன் ஓவியத்தால் முடிந்ததே என்று எனக்கும் சந்தோஷம்தான்.

ஜெயராஜுக்கு ஒரு விபத்தில் வலது கை எலும்பு முறிந்து விட்டதால் சிலகாலம் இடது கையால் படம் போட்டிருக்கிறார். கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியாமல் இருக்கும் அந்த நேர்த்தியை சாவி மிகவும் பாராட்டியிருக்கிறார். குங்குமம் இதழுக்காக ஒருமுறை காலாலேயே படம் வரைந்திருக்கிறார். மௌத் ஆர்கன் வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். 

• கலைஞரின் முரசொலி அறக்கட்டளை பொற்கிழி தந்துள்ளது.

• மலேசியாவில் தூரிகை மன்னன் பட்டம்

• விஜிபி விருது, வாஷிங்டன் டி.சி.,யில் ஓவியச் செம்மல் பட்டம்

• சீதாப்பாட்டி- அப்புசாமி அறக்கட்டளை விருது.

• தூத்துக்குடி நகர மக்கள் இவருக்கு ‘ஓவியச் சக்கரவர்த்தி’ என்ற சிறப்புப் பட்டம் தந்துள்ளனர்.

(பல்வேறு பத்திரிகை பேட்டிகளில் இருந்து தொகுக்கப்பட்டது.)

தேன் வளன் என்கிற ஜோமெல்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com