வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 27 August 2023

தூத்துக்குடியின் நேதாஜி


தியாகி ஜே. பி. ரோட்ரிக்ஸ் 

1891ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்த இவர், 1921ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மதுரை ஆங்கிலேயக் கப்பல் கம்பெனியின் சுரண்டல்கள் நாளுக்குநாள் அதிகரித்த வேளை! உள்நாட்டுப் பொருட்களை தங்களின் சுப்பல்களில்தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற ஆணையை வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் விதித்து, அதைக் கொடுமையாகநடைமுறைப்படுத்திய, கடந்த நூற்றாண்டின் தொடக்கக் காலக்கட்டத்தில், சுதேசிக் கப்பல் போக்குவரத்து கொணர முயற்சி எடுத்த வ. உ.சிதம்பரனாருக்குத் தோள் கொடுத்தார் ஜே. பி. ரோட்ரிக்ஸ் .

அதற்கடுத்தும் அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கும் போராட்டத்திலும் மிகத் தீவிரமாகப் பங்கெடுத்தார். மக்களை ஒருங்கிணைத்து, பல இடங்களில் போராட்டங்களை நடத்தினார். கள்ளுக்கடை மறியலிலும் சேர்ந்து ஈடுபட்டு, தலைவராக உருவெடுத்து வந்தார். அவரின் ஈடுபாடு உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இன்னும் அதிகமாக இருந்தது.இந்த போராட்டங்களில் அவரது மனைவி ரோஸ்லினும் தீவிரமாக பங்கேற்றார்.

1930களின் தொடக்கத்தில் உச்சக்கட்டத்தில் இருந்தது. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடுமையான உப்பு வரியை எதிர்த்து நாடே கொந்தளித்துப் போயிருந்தது! உப்புச் சத்தியாக்கிரகத்தால் நாடு முழுவதும் போராட்டத்தில் மூழ்கியிருந்தது! நாடு விடுதலை வேட்கை உணர்வால் தூண்டப்பட்டிருந்தது! அத்தகைய விடுதலை உணர்வைத் தென்தமிழகத்தில் அதிகமாக்கி, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திய முக்கியமான தலைவர்களில் ஜே.பி. ரோட்ரிக்ஸ் ஒருவர் என்றால் அது மிகையாகாது.


உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம்! கிராமப்புற அடித்தள மக்கள் பலருக்கும் பரவலாகக் கொண்டு செல்லும் அடித்தளத் தொண்டராக மட்டுமல்லாமல், பல இடங்களில் அப்போராட்டங்களை ஒன்றிணைக்கும் தலைவராகவும் விளங்கினார் ஜே. பி. ஜவஹர்லால் நேரு, காமராஜ், சத்தியமூர்த்தி, இந்திரா காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் ஜே.பி ரோட்ரிக்ஸ் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஜே.பி. ரோட்ரிக்ஸ் நேருவுடன் கொண்டிருந்த நல்லுறவு, அவருடன் சிலோனில் இருந்து கப்பலில் பயணம் செய்த நேரு, தூத்துக்குடிக்கு விஜயம் செய்ய அவரது அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

நேருவின் தூத்துக்குடி விஜயத்தின் போது, ரோட்ரிக்ஸ் அவருக்கு பிரமாண்டமான மற்றும் ஈர்க்கக்கூடிய வரவேற்பை ஏற்பாடு செய்தார். காந்தியின் அழைப்பை ஏற்று, மாவட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அவரின் விடுதலை வேட்கையைப் புரிந்துகொண்ட காங்கிரஸ், பின்னாளில் அவரை அனைத்து இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினமாக்கியது. எல்லாம் அவரின் தியாகத்திற்கும் அர்ப்பணமிக்க ஈடுபாட்டிற்கும் கிடைத்த அங்கீகாரமே!

சுதேசி கப்பல் கழகத்தை ஆரம்பிக்கவும் நடத்தவும் தீவிரமாக வ. உ. சி.யுடன் சேர்ந்து செயல்பட்டார். ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான தொடர் பரப்புரைகளை எடுப்பதிலும் மக்களிடம் சுதேசப் போராட்டத்தைக் கொண்டுசென்று நிதி சேகரிப்பதிலும் முதன்மையானவராகச் செயல்பட்டார். அதேபோல ஜே.பி. ரோட்ரிக்ஸ் அவர்களும் மிகத் தீவிரமானவர்.அனைத்துச் செயல்பாடுகளிலும் தியாகி மாசிலாமணியுடன் இணைந்து செயல்பட்டுக் கிறித்தவ மக்களை சுதேசிப் பக்கம் இணைத்தார்.

பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார். "வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; வெள்ளையனுக்கு எதற்கு வரி கட்ட வேண்டும் ? -" என்று கொப்பளிக்கும் கோபத்துடன் கேள்விக் கணைகளை வினவியதாகக் கூறப்படும் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டப்பொம்மனைப் போல, ஜே.பி. ரோட்ரிக்ஸ்ம் உப்புக்கு இட்ட வரியை எதிர்த்துக் கேள்விகளைத் தொடுத்தார்.

“கடல்நீர் தரும் உப்புக்கு வரியா? நெய்தல் நிலம் கொடுக்கும் உப்புக்கு எதற்கு வரி? நெய்தல் நிலத் தமிழர்களான பரதவ குல மக்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, உழைத்து உருவாக்கும் உப்புக்கு ஏன் வரி கட்டவேண்டும் ? இது என்ன அக்கிரமம்?..." என்று பொங்கினார். ஏகாதிபத்தியம் திணித்த உப்பு வரியை எதிர்த்துப் போராடத் திட்டம் தீட்டினார். இயக்கமாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தார்.

ஜே. பி. ரோட்ரிக்ஸ் தனது விடுதலைக் கருத்துகளை வெளிப்படுத்தவும், அதன் வழியாக இளைஞர்களைச் சுதந்திரப் போராட்டத்தில் ஒன்றிணைக்கவும் ஓர் இதழையும் நடத்தினார். தமிழ் இளைஞர்களுக்கு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற தீவிரமான அறிவுரைகள் அந்த இதழில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் அவர்கள் வெளிப்படுத்திய உறுதியான பதிலால் கவலையடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம், பத்திரிகை மற்றும் அதன் நிறுவனர் ஜே. பி. ரோட்ரிக்ஸ் மீது பயங்கர அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. அவரது அச்சகம் சோதனையிடப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தேசத்துரோக நடவடிக்கைகளுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பத்திரிகை தடை செய்யப்பட்டு மூடப்பட்டது. மேலும், ஆங்கிலேயர்கள் அவரது 2.5 லட்சம் சொத்துக்களை பறிமுதல் செய்தனர். இந்த அடக்குமுறைகள் அனைத்திலும் மனம் தளராத ஜேபி சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பைத் தொடர்ந்தார்

போராட்டத்திற்காக வீரபாண்டியப்பட்டினத்தைச் சேர்ந்த வலேரியன் பெர்னாண்டோ என்பவரின் உதவியால், “தேசிய கிறித்தவத் தொண்டர் படை" (National Christian Volunteers Army) என்ற அமைப்பு ஒன்றை நிறுவினார். அதற்காக அண்டை நாடான இலங்கையிலுள்ள கொழும்பிற்குச் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 

சுபாஷ் சந்திரபோஸ் இந்தியத் தேசிய படையை நிறுவ ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதுபோல! இலங்கையிலுள்ள கிறித்தவ மீனவர்களை அந்த அமைப்பில் சேர்த்து போராடத் தூண்டினார். எந்த நாளில் காந்தி உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தாரோ, அதே நாள் ஜே.பி. ரோட்ரிகுவஸ் தூத்துக்குடியிலிருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் உள்ள தருவை குளத்திற்குத் தனது தொண்டர்களுடன் நடந்துசென்று ஊர்வலமாக தூத்துக்குடிக்கு வந்து, அங்கு கடல்நீர் எடுத்து உப்புக் காய்ச்சி ஏகாதிபத்திய ஆணையை மீறி உப்பு தயாரித்தார்.
.
அடக்குமுறையைத் தனக்குள் கொண்ட ஏகாதிபத்தியம் விட்டுவிடுமா? மக்கள் நல அரசு என்று கூறிக்கொள்ளும் இன்றைய சனநாயக அரசே தன்னை விமர்சிக்கும் தலைவர்கள்மீது தடா, பொடா போன்ற மனிதாபிமானமற்ற கடுமையான சட்டங்களைப் பிரயோகிக்கும்போது ஏகாதிபத்திய அரசு சும்மா இருக்குமா? போராளிகளைக் கைது செய்தது. அப்போராட்டத்தை ஒருங்கிணைத்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 200 அபராதமும் விதித்தது. வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதே சிறையில்தான் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜ், டி. பிரகாசம், பட்டாபி சீத்தாராமையா போன்ற தலைவர்களும் அடைக்கப்பட்டிருந்தார்கள். சிறையில் ஓராண்டு காலம் நாட்டிற்காக அவதிப்பட்டார்.

பிறகு, அவர் சிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார், அங்கு அவர் காலச்சக்ரம் என்ற வார இதழைத் தொடங்கினார். 1941 ஆம் ஆண்டு, தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டார். "என் உடலில் உள்ள கடைசி துளி ரத்தம் வரை என் தாய்நாட்டின் விடுதலைக்காக நான் போராடுவேன்" என்பது அவரது பிரபலமான வாசகம். சில வருடங்கள் கொழும்பிலும் ஹட்டனிலும் கடை வைத்திருந்த பிறகு, இந்தியாவுக்குத் திரும்பி 1943 இல் சென்னையில் குடியேறி தினமணியில் சேர்ந்தார். சென்னையில் குடியேறினாலும், அவர் அடிக்கடி தூத்துக்குடிக்கு வந்து இந்தியா சுதந்திரம் அடையும் வரை சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

என்னே அவரின் நாட்டுப்பற்று! அவரின் சுதந்திர தாகம்! எத்தகைய ஆழமான சுதந்திர வேட்கையும் அடிமைத்தனத்தின்மீது வெறுப்பும் இருந்திருந்தால், கடல் கடந்து சென்று அண்டை நாட்டிலிருந்து அர்ப்பணிப்புள்ள இளைஞர்களை அழைத்துவந்து போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்திருப்பார்! மெய்சிலிர்க்கிறது - அவரின் போராட்ட உணர்வை நினைத்து! அவரின் சுதந்திர தாகத்தை நினைத்து!

பின் குறிப்பு : பிரபல நடிகர் ஜே.பி சந்திரபாபுவின் தந்தையாவார் . ஜே.பி. ரோட்ரிக்ஸ் 

Source
https://cmsadmin.amritmahotsav.nic.in/unsung-heroes...
https://globalparavar.org/j-p-rodriguez-the-thoothukudi.../
இந்திய சுதந்திர போராட்டமும் கிறிஸ்தவர்களும் - முனைவர் எம் ஏ சேவியர்.


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com