வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 15 August 2023

பண்பாட்டில்_ சிறந்த பரதவர்-5


Professor. MICHAEL BONAVENTURE DEMEL 

மெட்ராஸ் பிரசிடென்சி  என்பது பிரிட்டிஷ் இந்தியாவின் நிர்வாக உட்பிரிவாகும். அதில் மிகப் பெரிய அளவில், இந்திய மாநிலங்களான ஒடிசா, கேரளா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகள் உட்பட தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகள்  அடங்கும்.

1923 ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது.இந்த நேரத்தில், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பிராந்திய எல்லை ஒரிசாவின் பெர்ஹாம்பூரை உள்ளடக்கியது மற்றும் வடக்கில் ஆந்திராவின் ஹைதராபாத், தென்மேற்கில் கேரளாவின் திருவனந்தபுரம், மேற்கில் கர்நாடகாவின் மைசூர், பெங்களூர் மற்றும் மங்களூர் ஆகிவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

இவ்வளவு இடங்களையும் உள்ளடக்கிய  மெட்ராஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பொருளாதாரப் பாடத்தில் மாகாணத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றவர்  பழைய காயல் கிராமத்தில் உதித்த பரதவ மாணவன் என்றால் ஆச்சரியமாக இருக்கும். திருச்சி தூய வளனார் கல்லூரியில் பயின்ற மிக்கேல் பொனவந்தூர் டிமெல் தான் அந்த சூப்பரான மாணவர். அதுமட்டுமல்ல அவர் முதுகலைப்பட்டத்தின் அனைத்து பாடங்களையும் ஒரே ஆண்டில் எழுதி மெட்ராஸ் மாகாணத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார்.  வரலாற்று பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அதற்கு முன் தனது இளங்களைப் படிப்பை  தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டையில் பயின்றார்.  அங்கும்  பி.ஏ படிப்பில் முதல் மாணவராக தேர்வு பெற்று  தங்கப்பதக்கம் வென்றார்.  அவருக்கு ஆறு கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.  இவரது தந்தை பூரண சந்தியாகு டிமெல்  ஆங்கிலேயர் ஆட்சியில் போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வந்தார். பிற்காலத்தில் பழைய காயல் பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றினார்.

அந்தக்காலத்தில் நான்காம் வகுப்பிற்கே பொதுத்தேர்வு நடந்ததாக அறிகிறோம். பொனவந்தூர் டிமெல் பழைய காயலில் மூன்றாம் வகுப்புவரை பயின்ற பின்னர் நான்காம் வகுப்பு படிக்க தூய சவேரியார் பள்ளி, பாளையங்கோட்டை சென்றார். அவரும்,  தந்தையும் போக்கு வரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் பழைய காயலில் இருந்து 36 மைல்கள் நடந்தே சென்றார்கள் என அறிகின்றோம்.

பழைய காயலில் படிக்கும்போதே படிப்பில் படுசுட்டியாக இருந்த பொனவந்தூர் டிமெல் தனது பள்ளிக்கல்வி முழுவதையும் தூய சவேரியார் பள்ளி, பாளையங்கோட்டையில் விடுதியில் தங்கி பயின்றார்.  1920-30  ஆண்டுகளில் இப்படி ஊரைவிட்டு வந்து படிப்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். ஆனால் ஊரெங்கும் ஒரே மகிழ்ச்சி... காரணம் அவர்தான்  ஊரில் முதல் பட்டதாரி. எனவே அனைவரும் அவரை 'எம்.ஏ வாத்தியார் ' என்றே அழைப்பார்கள். அது அவரது பெயராகவே நிலைத்து விட்டது. பாளையங்கோட்டையில் படிக்கும் போது பொனவந்தூர் டிமெல் தனது குருவை சந்திக்கிறார். அவர்தான் பரதேசி பீட்டர்  என்று அழைக்கப்பட்ட பேராசிரியர்/ இறையடியார் பீட்டர் ரெட்டி. 

பரதேசி பீட்டர் ரெட்டியைப்பற்றி அறிந்தவர்கள் இப்போது அரிதாகவே இருப்பார்கள். சுருக்கமாக சொன்னால்  அவர் ஆசிரியர்,  கல்லூரி பேராசிரியர்  என்று பணி செய்தாலும் அவர் இறை ஊழியத்திற்கு தன்னை அற்பணித்தவர்.  தனது வருமானத்தை ஏழைகளுக்கு  கொடுத்து விட்டு  திருவோட்டில் பிச்சை எடுத்து சாப்பிடுவார்.

பொனவந்தூர் டிமெல் தனது  எம்.ஏ படிப்பை முடித்த பி்ன்னர்  மங்களூரில் பேராசிரியராக பணி செய்து வந்தார். பீட்டர் ரெட்டி தன்னை இறை பணிக்கு முழுமையாக அர்ப்பணிக்க தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பணியை துறந்தார்,  மேலும் அப்பணியை தனது மாணவராக இருந்த பொனவந்தூர் டிமெல்லுக்கு அளிக்கும்படி பரிந்துரைத்தார். 

1944 ஆம் ஆண்டு பொனவந்தூர் டிமெல் , தூய சவேரியார் கல்லூரி பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.  இவரிடம் கல்லூரியில் பயின்றவர்கள் பல்வேறு உயர் பதவிகளில் அமர்ந்தார்கள்.  குருக்களும் இதில் அடங்குவர். மறைந்த அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்ட் மற்றும் வைகோ இவரது மாணவர்கள். 

சில ஆண்டுகளுக்கு முன்பு லயோலா கல்லூரியில் உறையாற்றிய வைகோ பின் வருமாறு கூறினார் ' பேராசிரியர் டிமெல்லை ப்போன்ற பண்பான, அன்பான ஒருவரை நான் மீண்டும் சந்திக்க முடியாது... அவரது கற்பிக்கும் திறனையும் காண இயலாது.  அறுபது ஆண்டுகளுக்கு  பின்னும் அவர் என் நினைவில் இருக்கிறார்' என்று புகழ்ந்து பேசினார். பொனவந்தூர் டிமெல் கல்லூரி மாணவர்களுக்காக, பல்கலைக்கழக வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு பொருளாதார நூல்களை  எழுதினார். Home to Rome என்ற பிரபலமான சமய நூலையும் எழுதினார். 

பொனவந்தூர் டிமெல் மேடைப் பேச்சிலும் சிறந்து விளங்கினார்.  'மனுக்குலத்தை பெருக்குங்கள்' என்று அவரது பேச்சில் குறிப்பிடுவார்.  இறைவனின் கொடை மக்கட்பேறு அதை மறுக்கக்கூடாது என்ற நல்ல கருத்துடையவர்.  தனது வாழ்விலும் அதை நிருபித்தவர். 

13 முத்துக்களை பெற்றார்.  இளம் வயதில் ஒரு குழந்தையை இழந்தாலும் மீதமுள்ள 12 பிள்ளைகளையும்  சிறப்பாக வளர்த்தார்.  கடவுள் அவரிடம் ஒப்படைத்த  ஒவ்வொரு குழந்தையையும் சீருடனும்,  சிறப்புடனும் வளர்த்தார். பொறியாளராக, ஆசிரியர்களாக, மத்திய அரசு மற்றும் வங்கி அதிகாரிகளாக அவருடைய பிள்ளைகள் உயர்ந்தார்கள். மகன் பூரணம் டிமெல் SJ குருவானவராகவும்,  மகள் சிஸ்டர். பிலோமினா டிமெல்  கன்னியராகவும் உயர்ந்தனர். பொனவந்தூர் டிமெல் அவர்களின் துணைவியார் சிறிய புஷ்பம் , சீரிய மனைவியாக இருந்து குடும்பத்தை நடத்தினார். பிள்ளைகளை ஆளாக்கினார். 

இவர்களது பேரப்பிள்ளைகளும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  எல்லோரும் தொழில் முனைவோர்களாகவும், அதிகாரிகளாவும், பொறியியல் வல்லுனர்களாகவும்,  மகன் அல்போன்ஸ் - விஜயா இவர்களின் புதல்வர்  மைக்கேல் புகழேந்தி SJ குருவானவராகவும் உள்ளார். 

பரதேசி பீட்டர் பாளையங்கோட்டையில் இருக்கும்போது தனது சிஷ்யரான பொனவந்தூர் டிமெல் வீட்டில்தான் தங்குவார். சில ஆண்டுகள் அவர் கேரளா சென்று தனது மிஷினரி பணியை  செய்தார்.  அப்போது அவர் உடல்நலம் கெட்டு படுத்த படுக்கையாக விட்டார்.  தனது மாணவரை பார்க்க  ஆசைப்பட்டார்... உடனே பொனவந்தூர் டிமெல் விரைந்து சென்று அவரை ஒரு வேனில் ஏற்றி அழைத்து வந்தார்... அருட் தநதை. சேவியர் இருதயராஜ் சே.ச எழுதிய 'மூன்று சாட்சிகள் நூலில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது...

"பேராசிரியர் பீட்டர் பரதேசி மிகச்சிறந்த அறிவாளியும், பண்பாளருமான பேராசிரியர் டிமெல் வீட்டில் தங்கினார். டிமெல் பீட்டருக்கு மகனாய், தொண்டனாய்,துணைவனாய்,  பக்தனாய் இருந்து இரவு பகலாக பணிவிடை செய்தார்கள். தூக்கி நெஞ்சில் சாய்த்து வைத்து உணவு ஊட்டுவார்கள். பேராசிரியர் டிமெல் அவர்களின் குருபக்தி அபூர்வமானது "

தனது குருவான பீட்டர் பரதேசி மறைவுக்குப் பின் பொனவந்தூர் டிமெல் 'தூய நெஞ்ச கல்லூரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் பேராசிரியராக பணியாற்றி, மறைந்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். 

நன்றி : ஜூலி டிமெல் மற்றும் விஜயா அல்போன்ஸ்.

தேன்வளன்@ Joemel Fernando
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com