வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 15 August 2023

விடுதலைவீரர் வலேரியன் 2
இலங்கையிலும் தமிழ்நாட்டிலுமாக  மாறி மாறி தேசிய இயக்கப் பணிகளிலும், தொழிற்சங்க அமைப்புப் பணிகளிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த . வலேரியன் பர்னாந்து 1933 - 1940  காலகட்டத்தில் திருச்செந்தூர், ஆத்தூர், பழையகாயல், தூத்துக்குடி, தருவைக்குளம், வேப்பலோடை ஆகிய பகுதிகளில் வலேரியன் ‘தன்பாடு உப்புப் பாத்தி’கள் அமைத்து சுமார் 7000 தொழிலாளர்களுக்கு சுயவேலை வாய்ப்பிற்கும் ‘அண்டா சாப்பாடு’ முறையில் உணவுக்கும் வகை செய்கிறார். 

பாரி கம்பெனியாரின் மூடப்பட்ட குலசேகரம் பட்டினம் ஆலையில் பணி புரிந்த தொழிலாளர்களையும், ஆலை மூடப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்த மக்களையும், இரயில்வேயில் பணியாற்றியவர்களையும்  ஒருங்கிணைத்து அமைப்பாகத் திரட்டி இருக்கிறார். பாரி நிறுவனத்தாரின் தொழிலாளர் விரோத அடக்குமுறைக்கு எதிராகப் போராடி,  ஒரு உடன்படிக்கை வலேரியனால் ஏற்படுத்தப்படுகிறது. வாக்கு மீறும் கம்பெனிக் காரன்  இவரையும் மக்களையும் எளிதாக ஏமாற்றுகிறான்.வேலைநிறுத்தம் நடத்துகிறார் வலேரியன். 
 
வருவாயின்றித் துயருற்ற தொழிலாளர் குடும்பங்ளுக்குத் தன் உடைமைகளை விற்று உணவளிக்கிறார். கையில் மெகாஃபோனை வைத்துக்கொண்டு  கிராமம் கிராமமாகப் போய் தேசபக்தி பிரச்சாரம் செய்திருக்கிறார்.  மூடப்பட்ட ஆலையை, கிராமமக்களின் ஆதரவோடு மீண்டும் இயக்கும் முயற்சியில் கூட ஈடுபட்டிருக்கிறார். விதவிதமாகப் போராடியும் விடிவு வரவில்லை.

1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஜெபமணிஅம்மாள்  பங்கேற்று கைதானதற்கு  முன்பாகவே மாசிலாமணி பிள்ளை தான் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாக விரும்பி, காந்தியடிகளிடம்  சிறப்பு அனுமதி பெற்று இருந்தார். அப்போது தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில்,  “ அந்தப் போராட்டத்தில் காவல் அதிகாரிகளால் ஏதும் வன்முறை நிகழ்ந்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என வலேரியன் பர்னாந்து சவால் விட்டுப் பேசியதால் கைது ஆணை (Arrest Warrant) பிறப்பிக்கப் பெறுகிறது. ஆனால் போலிசாரால் கைது செய்ய முடியவில்லை . வலேரியன் தப்பி விடுகிறார். 

காவல்துறைக்கு சவால் விட்டுவிட்டு தப்பி ஓடிய வலேரியன் பர்னாந்து எங்கேயும் போய் ஒளிந்து கொண்டாரா? இல்லையே. தன் மீது பிறப்பிக்கப்பட்ட கைது ஆணை யிலிருந்து தப்பித்த பிறகான தலைமறைவு வாழ்விலும் பல அரசியல் கூட்டங்களில் தோன்றி உரையாற்றுகிறார் வலேரியன்.  கிட்டத்தட்ட 70 நாட்கள் போலீசாருக்கு போக்கு காட்டிய பின்னர் 1941 பிப்ரவரியில்  தூத்துக்குடியில் கைது செய்யப்படுகிறார். 

கடும் கோபத்தில் இருந்த  காவலர்களால்  வன்மையாகத் தாக்கப் படுகிறார். ஐந்து நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பின்னரே விசாரிக்கப்பட்டு தண்டிக்கப் படுகிறார். ஆறு  மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப் பெற்று அலிப்புரம் கிளையில் அடைக்கப் படுகிறார். மிகுந்த சித்திரவதைகள் நிறைந்த வெஞ்சிறை வாசத்துக்குப் பிறகு  1941 ஆகஸ்ட் 5 ஆம் நாள் விடுதலை ஆகிறார். 

விடுதலை ஆனால் என்ன? ஒரு காந்தியவாதி வேறு எங்கு போவார் ஏரல், ஆறுமுகநேரி யிலுள்ள காதி வஸ்திராலய நிர்வாகியாகப் பணியாற்ற ஆரம்பித்தார். வீரபாண்டியன் பட்டனம் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் மாதர் சங்கங்கள் அமைத்து முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும்,  ஆண்களுக்கும் கை இராட்டைகள்  வழங்கி கதர் நூல் நெய்யப் பயிற்றுவிக்கிறார். சுமார் 3000 இராட்டைகள் பகிர்ந்தளிக்கப் படுகின்றன,. 

ஆயிரம் சுற்று நுால் கொண்ட நூல் கண்டுக்கு, ஒரு 'சிட்டம்' எனப் பெயர்.  ஒருவர் அதிகபட்சமாக தினசரி மூன்று சிட்டங்கள்  நுால் உற்பத்தி செய்யலாமாம். பஞ்சு நிறுவனத்தால் வழங்கப்பட்டு நுாலும் அவர்களாலேயே கொள்முதல் செய்யப்படும். ஒரு சிட்டம் நுால் உற்பத்திக்கு கூலியாக  நான்கு அணா வழங்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலிருந்து சுமார் 1000 சிட்டங்கள்  கதர்நூல் சேகரிக்கப் பட்டிருக்கிறது

இந்த உற்பத்தியில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும், இராட்டைகளைப் பழுது நீக்கவும், நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரை 'தறி வாத்தியார்' என்று பொதுமக்கள் அழைத்தனர். ஆமாம்! வலேரியன் பர்னாந்து  இப்போது வாத்தியார் . 

( மாசில்லாமணி பிள்ளை
ஜெபமணி அம்மாள் தம்பதி
)
இவ்வாறாக பஞ்சு கொடுப்பதிலும், நூற்ற நூலைச் சேகரிப்பதிலும் வலேரியன் பர்னாந்துவின் நாட்கள் ஓடிக் கொண்டிருந்த போது, ஒருநாள் மணப்பாடு செல்லும் வழியில் வலேரியன் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். விலங்கிடப் பட்டு,  குலசேகரன் பட்டனம் கிளைச் சிறையில் ஒருநாள் அடைக்கப் பட்டார். காரணம் அந்தப் பகுதியில் உப்பு ஆய்வாளர் வில்ஃப்ரட் லோன்  என்ற ஆங்கிலேய அதிகாரி போராட்டக் காரர்களால் கொலை செய்யப் பட்டிருந்தார். இந்தக் கொலைக் குற்றவாளிகளை வெறி கொண்டு தேடிய  போலீசாரிடம் தான்,  நூல் சிட்டம் சேகரிக்கப் போன   தறிவாத்தியார்  சிக்கிச் சிறை சென்று, மறுநாள் விடுதலையானார்.
(தொடரும்) 

- முத்துக்குமார் சங்கரன் 

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com