வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 15 August 2023

விடுதலைவீரர் வலேரியன்
போராட்டம் என்றால் முதல் ஆளாகப் போய் நின்றுவிட்டு, போராட்டம் வெற்றியைத் தந்தவுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில்  தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் காயங்களுடன் ஒதுங்கிக் கொண்டு,   தன் நலனை முன்னிறுத்திக் கொள்ளத் தெரியாத ஒரு விடுதலை வீரரை இன்று நினைவு கூறலாம்.

வீரபாண்டியன் பட்டினம் வலேரியன் பர்னாந்து அப்படிப்பட்டவர் தான்.

1909ல் வீரபாண்டியன் பட்டினத்தில் பிறந்த அவர் 1922ல் இலங்கை பள்ளியில் படிக்கச் செல்கிறார். நான்கு வருடம் கழித்து இந்தியா திரும்பிய அவர் தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு மீண்டும் இலங்கை செல்கிறார். 1930 மே மாதத்தில் தொழிற்சங்கத் தலைவி மீனாட்சியம்மையாரின் எழுச்சி மிகுந்த சொற்பெருக்கொன்றை வலேரியன் பர்னாந்து கேட்கிறார். விடுதலைக்காகப் போராட யாரெல்லாம் தயார் என்று மீனாட்சி அம்மையார் கேட்டதும் வலேரியன் பர்னாந்து முதல் ஆளாகச் சென்று தன்னைப் போராட்ட களத்திற்கு ஒப்புவிக்கிறார். வலேரியன் பர்னாந்துடன் அவருடைய நண்பர்கள் சிலரும் மீனாட்சி அம்மையாரின் தலைமையை ஏற்றுக் கொண்டு,அடுத்த மாதமே அவருடன் இந்தியா வருகிறார்கள்.

ஊர் ஊராகச் சென்று  வலேரியன் எழுச்சிமிக்க சொற்பொழிவு ஆற்றுகிறார். 1930 ஜூலையில் காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை அறிவித்தவுடன் மதுரையில் களம் காண்கின்றனர் வலேரியனும் நண்பர்களும்.  போராட்டத்தில் வன்முறை வெடிக்க வலேரியன் கைது செய்யப்பட்டு முதலில் மதுரை சிறையிலும் பிறகு திருச்சி சிறையிலும் அடைக்கப்படுகிறார்.

வலேரியனின் நண்பர்கள் டன்ஸ்டன் எம்.டிவோட்டாவும் மற்றவர்களும்  மதுரை போராட்டத்தில் பங்கேற்று விட்டு திருச்சி சென்று அங்கும் போராட்டம் நடத்துகிறார்கள் அங்கு ரகசிய இடத்தில் தங்கியிருந்த போது போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள்.

டன்ஸ்டன் டிவோட்டா திருச்சி சிறையில் ஆறு மாதம் அடைக்கப்படுகிறார். புன்னக்காயலைச் சேர்ந்த  ஜெர்மியா பெர்னாண்டஸ் அலிகார் சிறையிலும், எரோமியர் பர்னாந்து கடலூர் திருச்சி பெல்லாரி சிறைகளில் அடுத்தடுத்தும் அடைக்கப்படுகின்றனர்.. இதே போல் மாசிலாமணி ஃபர்னான்டஸ்  முதலில் கடலூரிலும் பிறகு அலிப்புரம் சிறையிலும் அடைக்கப்படுகிறார். செல்லியா பெர்னாந்து அலிகார் சிறையில் அடைக்கப்படுகிறார். இவரும் புன்னக்காயலைச் சேர்ந்தவரே.

இந்த சமயத்தில் வலேரியனின் தாயார் காலமாகிவிட, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட வலேரியனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஐந்து மாத தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் வலேரியன் மதுரை வைத்தியநாத  அய்யர் வழிகாட்டுதல்படி வரிகொடா இயக்கம், அந்நிய துணி புறக்கணிப்பு முதலிய போராட்டங்களில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

 திருச்செந்தூரில் நடைபெற்ற கள்ளுக்கடை ஏலத்தின் போது எதிர்ப்பு முழக்கமிட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வலேரியன் திருச்செந்தூர் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்து விடுதலையான பிறகு இலங்கை சென்று ஜே.பி.ரொட்ரீக்ஸ் ஆரம்பித்த தேசிய கிறித்துவ தொண்டர் படையில் இணைந்து பணியாற்றுகிறார். 

வீரபாண்டியன் பட்டினத்தில் பிறந்து வளர்ந்த அவர் தொழிலோ வியாபாரமோ புரிவதில் நாட்டமில்லாதவராகவே இருந்திருக்கிறார்.  இலங்கை வாலிபர் சங்கத்தில் இணைந்து பணியாற்றி வந்த அவர் ஒருநாள்  கோவில் விழாவுக்குப் பூக்கள் வாங்கப் போன வழியில் அரசியல் உரை கேட்டு விடுதலைப் போரில் உடனே இணைந்து இந்தியா வந்து சிறை புகுந்து பின் மீண்டும் இலங்கைக்கே திரும்பி இருக்கிறார்.

நேருஜியின் 1936 இலங்கை சுற்றுப்பயணத்தில் ஜே.பி.ரொட்ரீக்ஸுடன் இணைந்து தொண்டர் படைத் தலைவராகப் பணியாற்றுகிறார். வலேரியன் பெர்னாந்துவின் உணர்ச்சிமிகு உரைகளைக் கேட்டு நேரு அவரைப் பாராட்டுகிறார். அதன் பிறகு நேருவைப் போன்று நீள் கோட்டு அணிய ஆரம்பிக்கிறார் வலேரியன். இவர்கள் இருவரும் ஒருமுறை நேருவுடன் தோணியில் பயணம் செய்த போது தூத்துக்குடிக்கு வருமாறு ரோட்டரிக்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட நேருஜி பின்னர் தூத்துக்குடி வருகிறார்.

வலேரியன்  இந்தியா திரும்பிய பிறகு ஜீவா தலைமையில் சாத்தான்குளத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். பிறகு ஏரலிலும் மாநாட்டை நடத்துகிறார். ஒரு முறை போலீஸாரால் தாக்கப்பட்டு ஒரு பள்ளத்தில் வீசப்பட்டும், முன்னை விட வீரியமானவராக மீண்டும் எழுந்து வருகிறார். 
(தொடரும்)

 முத்துக்குமார் சங்கரன் 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com