வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 1 August 2015

மச்ச வாகனத்தில் மாதாவின் வீதி வலம்


தமிழர் பண்பாடுகள் பொதுவாகப் புராணங்களிலேயே வேரூன்றி வளர்ந்துள்ளதைக் காண முடிகின்றது. இவை மதச் சார்புடைய சிந்தனைகளைத் தக்க வைத்துக்கொள்ளக் கையாளப்பட்டு வந்த உத்திகள். எடுத்துக்காட்டாக: புதுமனை குடி போக ஆடித்திங்களில் இராவணன் பட்டதும், மார்கழியில் மகாபாரத யுத்தம் நடந்ததும், புரட்டாசியில் இரணியன் மாண்டதும், பங்குனியில் பிரம்மன் முடியுற்றதாலும் இந்த மாதங்களைத் தவிர்த்துப் புதுமனைக்குப் போதல் நன்று என்பர் முதியோர். 

இதே போன்று "வாஸ்து" எனும் கட்டிட அமைப்பு சூரியனை மையமாகக் கொண்டு ஏனைய கோள்களுக்குத் திசைகளும் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி:

தென்மேற்கு கன்னி மூலை: உரிமையாளர்களின் இருப்பிடம், பணப்பெட்டி அமைதல்.

தென் கிழக்கு: அக்னி மூலை: சமையல் மற்றும் மின் சம்பந்தப்பட்ட இடமாக அமைதல்.

வடமேற்கு வாயு மூலை: திறந்தவெளியாகக் காற்றோட்டமாக அமைதல்.

என்பன போன்ற விதிகள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். ஆனால் காலப்போக்கில் அவற்றின் சமய தத்துவங்கள் மறக்கப்பட்டுப் பாரம்பரிய வழக்கங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் மூடப்பழக்கங்கள் எனக் கருதி ஒதுக்கப்படுகின்றன.

கட்டட அமைப்பில் கோயில், அரண்மனை கட்டடங்கள் என மூன்று பிரிவுகளில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. கட்டடக் கலை நூலை அறிந்த புலவர் 'நூலறிப் புலவர்' என்பதாக அழைக்கப்பட்டனர். (நெடுநல்வாடை). உலகில் மக்கள் பல குடிகளாகப் பல பகுதியில் பிரிந்து வாழ்ந்தார்கள். அக்குடிகளில் புண்ணிய சீலர்கள் தோன்றி மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தி சீரிய வாழ்க்கையாக உயர்த்தினார்கள். அத்தகைய தலைவர்களை தெய்வங்களாகவே மக்கள் கருதி அவர்கள் பெயரால் ஆலயங்கள் எழுப்பினார்கள். இந்த தெய்வீகத் தோற்றத்தின் சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் பரிணமித்தன. 

கட்டடக் கலையின் வடிவமைப்பில் கட்டப்பட்ட கோயில்களில் ஓவியக் கலை, சிற்பக் கலை, இசைக்கலை, நடனக் கலை ஆகியவற்றின் அடிப்படையில் பலவகை அமைப்புகள் உருவாகின. இவற்றுள் சிற்பக் கலையைப் பயன்படுத்தி உருவாக்கிய தேர் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 

பல தெய்வங்களின் உருவங்களைப் பல்வேறு நிலைகளில் சிற்பங்களாகச் செதுக்குவதற்கும், சுதையினால் செய்வதற்கும் வண்ண ஓவியங்களாக வரைவதற்கும் வழிகாட்டியாக அமைந்த நூல்களே சிற்ப நூல்களாகும். அவற்றுள் காச்யபம், சாரங்வதம், ப்ராம்மீயம் என்பன ஒரு சிலவாம். சங்க காலத்தில் தேர்களில் உள்ள சிற்பங்கள் வியத்தகு வேலைப்பாடு கொண்டு காட்சியளித்தன. தேரில் அழகிய மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. (இரா.நாகசாமி, மா. சந்திர மூர்த்தி--தமிழகக் கோயிற்கலைகள் 1976/15) 

மரத்தால் ஆன தேர்கள் மட்டுமின்றிக் கல்லால், உலோகத்தால் செய்யப்பட்ட தேர்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன. இராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள உத்தரகோச மங்கை என்னும் ஊரில் பாண்டிய மன்னன் விக்கிரமன் அமைத்த கல்தேர் அவ்வூரின் பழமையான ஆதிநாதர் ஆலயத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் சமஸ்தான ராஜேஸ்வரி கோயிலில் வெள்ளி ரதம் உள்ளதாகக் கூறப்படுகின்றது. 

அண்மைக்காலங்களில் தங்க உலோகத்தில் தேர் செய்யப்பட்டு வருகின்றது. பழநி ஆண்டவர் கோயில், மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில்களில் பல லக்ஷ ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட தேர் கோயில் விழாக்களில் பிரகாரத்தினுள் வலம் வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் 11 1/2 லக்ஷம் ரூபாய் செலவில் தங்கத் தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (நெல்லை வானொலி 10-3-2007 காலை 6-45 தமிழ் செய்தி) 

தேரில் காணப்படும் சித்திரங்கள் சமயக் கோட்பாடுகளையும் சமயம் சார்ந்த நிகழ்வுகளையும் மக்களுக்கு நினைவூட்டுவனவாக அமைந்திருக்கும் ஒரிஸ்ஸா மாவட்டத்திலுள்ள புவனேஸ்வர் நகர் அருகே அமைந்துள்ள கோனார்க் (Konark) என்ற அற்புத ஆலயம் அனைத்து நோய் தீர்க்கும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

இங்குள்ள தேரில் சூரியனின் புவிச்சுற்றுப்பயணத்தை வெளிப்படுத்தும் முகமாக 24 சக்கரங்கள், ஏழு குதிரைகள், 12 சூரியத் தகடுகள் சித்தரிக்கப்பட்டு பார்ப்போர் வியப்புறும் வண்ணம் அமைந்துள்ளது. அவற்றின் 24 குதிரைகள் 24 மணித்துளிகள் கொண்டது, ஒருநாள் என்பதையும் ஏழு குதிரைகள் ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரம் என்பதையும் 12 சூரிய தகடுகள் வருடத்தின் 12 மாதங்களையும் குறித்து சூரியனின் வான் பயணத்தை விளக்குகின்றன. (The Hindu 25/03/2007) 

இவ்வித இந்து மதம் சார்ந்த கோட்பாடுகளையும் பண்பாடுகளையும் முன்னர் இந்து மதத்தின் நெய்தல் நில மீனவர்களும் கடைப்பிடித்தனர். ஆனால் அவர்களில் முத்துக்குளித்து வந்த குழுவினர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் சார்ந்தபின்னர் கிறிஸ்தவக் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் தங்கள் பண்பாட்டில் மாற்றுக் கருத்தாகப் பார்க்கும் அவசியம் ஏற்பட்டது. இவ்வகையில் சமயவழி வாழ்க்கை முறைகள் அனைத்திலும் கிறிஸ்தவம் சார்ந்த சிந்தனைகள், விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அவற்றுள் சித்திரத் தேர் அமைத்தலும் அடங்கும். 

இம்முறையில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தழுவிய "தென்பரதவர்" சமுதாயத்தின் சாதித் தலைவர் தூத்துக்குடியில் பனிமய அன்னை ஆலயத்திற்கு நிர்மாணித்த சித்திரத் தேரின் தோற்றத்தை "சர்வ வியாபி" என்ற கத்தோலிக்கப் பத்திரிகை தன் பழம் பிரதி ஒன்றில் விவரிப்பது.  உலாவரும் தங்கத்தேர் (By. Dr.Rex சர்வ வியாபி ஆகஸ்ட் 1982)

திரு டாம் (Dom) கபிரியேல் டி குருஸ் 1720-ஆம் ஆண்டு ஒரு சிறு தேரைக் கட்டித் தூத்துக்குடி நகரின் வீதிகளில் முதன்முதலாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. டச்சுக்காரர்கள் (கத்தோலிக்க) கிறிஸ்து மதத்தைச் சூரையாடிய போது அவர்களின் கைகளில் சிக்காத வண்ணம் சவேரியர் தந்த சொருபத்தை (பனிமாதா) அவர் காப்பாற்றினார். பிறகு டி குருஸ் கோமஸ் அவர்களின் முன்னிலையில் ஒப்படைத்தார் என்பது வரலாறு. (புனிதர் பின்பு தான் மாதா சொரூபம் வந்ததாகக் கருத்து) டாம் கபிரியேல் டி கோமஸ் என்ற அன்பர் (முன்னவரின் பேரன்) ஒரு லட்சம் ரூபாய் செலவில் தங்கத் தகடுகள் வேயப்பட்ட பிரம்மாண்டமான தேர் ஒன்றை மிகுந்த முயற்சிகளுக்குப் பின் நிர்மாணித்தார். அந்தத் தேர் தான் இப்போதைய தங்கத் தேர். (இவரை மக்கள் தேர் மாறன் என்று அழைத்தனர்). தங்கத் தேரின் உயரம் 75 அடி. முதன்முறையாக 1806 ஆம் வருடம் பிப்ரவரி அன்று இழுக்கப்பட்டது. 

மேற்கூறப்பட்ட தூத்துக்குடி பனிமய மாதா ஆலய சித்திரத் தேரின் அமைப்பில் கிறிஸ்தவ சின்னங்களாகக் காணப்படுவன:

1. விடிவெள்ளியாக ஒரு விண்மீன் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இது "யாக்கோபிலிருந்து ஒரூ விண்மீன் உதிக்கும்" என்று இறைவாக்கை வெளிப்படுத்துகின்றது. மேலும் விவிலியத்தில் விண்மீன் வழிபாடு சுட்டப்படுகின்றது. (ஞான ஆகமம் 13:2)

2. ஒன்பது மீன்கள் சுழன்ற வண்ணம் மாதாவின் மகுடம் அமைக்கப்பட்டுள்ளது. இது நவகிரகங்களைக் குறிப்பதாக உள்ளது.

3. அதன் கீழ் உலகினைப் படைத்த இறைவனாகிய தந்தை, சுற்றிலும் வான தூதர் முதியவரின் தோற்றத்தில் பிதா.

4. பிதாவின் உருவத்திற்குக் கீழ் தூய ஆவியானவர் பிதாவுடன் ஒன்றானவர். வெண்புற தூய ஆவியின் சின்னம்.

5. அடுக்கடுக்காக சிறிய தூண்கள், நடுத்தரத் தூண்கள், பெரிய தூண்கள் என்பதாக நாலா பக்கங்களிலும் பன்னிரு தூண்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உள்ளன. இவை இஸ்ரேயலரின் பன்னிரு கோத்திரங்களைக் குறிப்பதாகும். இத்தூண்களின் மத்தியில் பட்டாடையால் முக்காடிட்டு திருமகனை இடக்கையிலேற்றிய நிலையில் மாதாவின் திரு உருவம், மறு கையில் செங்கனியுடன் காணப்படுகின்றது. இதன் பொருளை கீழ்க்காணும் சந்தியாகு சுவாமியவர்களின் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. 

ஏவையின் கனியாலே --ஏக்கமும் துயரும்
நீ தந்த கனியாலே--நேசமும் உயிரும்
ஏவையின் கனியாலே--ஏக்கமும் துயரும்
நீ தந்த கனியாலே---நீங்கும் எப்படியும் 
(பாடல்: மாசற்ற கன்னியே--தேவதோத்திரக் கீர்த்தனை)


6. அதனையடுத்து பக்கத்திற்கு இருவர் என நான்கு பக்கத்திலும் எட்டு வான தூதுவர்கள்.

7. அன்னை மரியாள் தாவீது அரசர் கோத்திரத்தைச் சார்ந்தவர் என்பதை நினைவுறுத்த தாவீது அரசர் உருவம், உலகரட்சகர் இயேசு பிறந்த போது அவரைக் காண வந்த மூவரசர் மற்றும் பன்னிரு அரசர் உருவங்கள் அலங்கரிக்கின்றன. 

8. நான்கு கிளிகளின் தலைகள் அழகிற்காக மேல் மூலைகளில் செதுக்கப்பட்டுள்ளன. சிலர் இதை மீனாக்ஷி தேவதை உருவம் என்பர்.

9. அதன் கீழ் நான்கு பக்கங்களிலும் பக்கத்திற்கு மூன்று வீதம் பன்னிரு புனிதர்களின் உருவங்கள். இவற்றுள் நற்செய்தியாளர் மத்தேயு, மாற்கு, லூக்காஸ், அருளப்பர் மற்றும் புனிதர்களான சவரியார், இஞ்ஞாசியார், தோமையார் திரு உருவங்கள். 

10. தேர்ப் பீடத்தின் கீழ் பாகத்தில் இடுப்பிற்கு மேல் பாகம் மனித உருவமும், கீழ்ப்பாகம் மீன் உருவமும் கொண்ட கயல் கன்னியர் இருவர், கயல் காளையர் இருவர் என நால்வர் தேரைத் தங்கள் முதுகில் சுமந்தபடிக் கைகளைக் கூப்பிய வண்ணம்காணப்படும் விசித்திரச் சிலைகள். 

11. தேரின் அடிப்பாகத்தில் நான்கு பெரிய சக்கரங்களும் இரு சிறிய சக்கரங்களும் தேரைத் தரையில் நிற்கச் செய்கின்றன.

12. இத்தேரை இழுப்பதற்குப் பயன்படும் கயிற்றின் திண்ணம் அரை அடி, நீளம் ஐம்பது அடிகள் முன்னும் பின்னுமாகக் கட்டப்பட்டுள்ளன. முன் கயிற்றில் மக்கள் தேரை முன்னோக்கி இழுத்துச் செல்லப் பின் கயிற்றின் உதவியால் வேகத்தடை செய்யப்படும். 

(முனைவர் தே. ஜாண்--தென் தமிழகத்தில் கத்தோலிக்கம் என்றும் நூல் பக்கம் 222--223, தழுவி எழுதியது)

இந்தச் சித்திரத் தேரின் உட்பொருளைப்பொதுவாக விவிலியத்தின் திருவெளிப்பாட்டின் தத்துவத்துடன் ஒப்பிட்டு வருணிக்கின்றனர் எழுத்தாளர்.

(திருவெளிப்பாடு அதிகாரம் 12)

அதன் அடிப்படையில் பனிமயத்தாயின் திரு உருவத்தைக் கதிரவனை ஆடையாக அணிந்தவளாகவும், வளர்மதியைப் பாதச் சுவடாகவும், பன்னிரு விண்மீன்களைக் கொண்ட கிரீடத்தை அணிந்தவளாகவும் அவரது மகன் குழந்தை இயேசு அணிந்துள்ள கிரீடம் அவர் உலகை ஆளும் அரசர் என்றும், அன்னையின் கையில் உள்ள செங்கனி விலக்கப்பட்ட கனி என்பதாகவும் வருணித்து அன்னையை மீட்பின் வரலாற்றில் புதிய ஏவாளாகக் காண்கின்றனர். (Ladislas Gomez--Pictorial of the Goldern Car--Tuticorin 1964/85) 

அடுத்துத் தேரின் பீடப் பகுதியின் நான்கு மூலைகளிலும் காணப்படும் கயல் கன்னியர், காளையர் உருவங்களைப் பற்றிப் பலர் பலவிதமான விளக்கங்கள் தருகின்றனர். முற்காலத்தில் கீழ்த்திசையிலிருந்து வந்த மக்கள் பாதி உடல் மனித உருவிலும் இடுப்பிற்குக் கீழ் பாதி உடல் மீன் வடிவத்திலும் தோன்றினார்கள் என்பதாக கி.மு. 260-ஆம் ஆண்டில் வாழ்ந்த பெராசுஸ் (Berasus) என்ற பாபிலோனிய அறிஞர் கூறுவார். (The Hindu 23/10/1944 quoted by J.V. Rodrigo கடல் கடந்த பழந்தமிழர்--தேரோட்ட மலர் 1955) 

மேலும் உவண்ணா (Oannes) அல்லது ஏயா-ஹான் (Ea--Han) என்னும் ஒரு மீனவனே தங்களுக்குச் சகல கலைகளையும் கற்பித்ததாக அக்கா முசயத்தர், பாபிலோனியர் ஆகியோர்க்கு மீனைத் தம் தெய்வமாக உபசரித்து வந்தனர் என்றும் இன்னும் சிலர் இந்த மச்ச மனிதர் பார்த்திபன் என்ற பெளரவக் கலப்பினத்தவர் கடவுள் எனவும் கூறுவர். (மேலது) புராணக்கூற்றுகளின் படி விஷ்ணுவின் தசாவதாரங்களில் முதலாவதாக மச்சாவதாரமே கூறப்படுவதால் மீன் வணக்கமே இந்தியாவின் ஆதி வணக்கமெனத் துணியலாம். உலகில் ஏற்பட்ட சலப் பிரளயத்தைப் பற்றியும் மனுச் சக்கரவர்த்திக்கு ஓர் மீன் அறிவிப்புச் செய்து அவரை அவ்வாபத்தினின்று காப்பாற்றிய சரிதையுமுண்டு. 

பாண்டிய அரசர் மீன் கொடியைத் தமது இலச்சினையாகக் கொண்டதும் மீனவ குல மாதர்களின் காதணிகளில் ஒன்று மகர குண்டலமெனவும் குறிப்பிடப்படுவதும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதாகும். (நிம்பை, வேம்பாறு) சூசை இஞ்ஞாசி தல்மேதா--தேரோட்ட மலர் 1947) திருவிளையாடல் புராணம் வலை வீசும் படலத்தில் முருகன் மகர மீனாகவும் இறைவி பரதவர் தலைவன் மகளாகவும் பிறக்க இறைவன் சாபமிடுதல் (உத்தரகோச மங்கைப் புராணம்) ஆனால் மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அதாவது பார்த்திபன் என்ற அரசனாகவோ, உவண்ணா அல்லது ஏயா-ஹான் என்ற மீனவன் தோற்றத்திலோ இந்த மச்ச மனித உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் காண்பதற்கில்லை. எனவே அதற்கான சரியான விளக்கம் தேவை. இதனை அகராதிகளின் துணை கொண்டு காண்போம். 

Nereid--daughter of the sea God Nereus

Nymph--One of the divinities lived in mountain, rivers, etc.

Mermaid--fabled half women half fish (Chamber Dictionary)

மச்ச புராணம்: இது மச்சாவதாரத் தோற்றம் விஷ்ணு சலப் பிரளயத்தில் மனுவைக் காத்தமை முதலியன உணர்த்தும். 

மச்ச மனிதன்: மெர்மெயிட், மெர்மென், மனிதனாகத் திமிங்கிலத்திலிருந்து திருந்திய உருவம்

கடற்கன்னியர்: கடலிலிருக்கும் தேவதைகள். இவர்கள் கடலோடிகளால் வணங்கப்படுவர். (அபிதான சிந்தாமணி)

மகர மீன்: வருணனின் வாகனம் (திருநெல்வேலித் தமிழ் அகராதி)

தேரின் பீடத்தை முதுகில் தாங்கிச் சுமந்த வண்ணம் கை கூப்பிய வண்ணம் காணப்படும் கடல் கன்னியர், கடல் காளையர் தோற்றம் எனக் கூறப்பட்டுள்ள அகராதிக் குறிப்புகளில் மகர மீன் வருணனின் வாகனம் என்றும் இந்த மகர மீனைக் கடல் கன்னியர் அல்லது கடல் தேவதைகள் எனக் கடலோடிகள் வழிபட்டனர் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன. 

எனவே மகரமீன் அல்லது மச்ச மீன் வருணனின் வாகனம் என்ற புராணக் கதையில் கூறும் வழிபாட்டைக் கிறிஸ்தவ மயமாக்கும் முயற்சியில் ஆகாயக் கடவுள் வருணனின் வாகனத்தை ஆகாயத்திலிருந்து பனிப்பொழிவு நிகழ்த்திப் பனிமய அன்னைக்கு வாகனமாக மாற்றியமைத்து விண்ணரசியைத் தேரில் அமர்த்தி நெய்தல்  நிலக் கடலோடிகள் வலம் கொண்டு வழிபட்ட வியப்பான செய்தியை இந்தச் சித்திரத் தேர் நமக்கு உட்பொருளாகப் படைக்கின்றது.  

தம்பி ஐயா பர்னாந்து, வரலாற்று ஆய்வாளர், வேம்பாறு 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com