வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 25 August 2015

சீக்ரெட் ரெசிபி மக்ரூன்
தூத்துக்குடி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடலோர கிராமங்களின் பெயர்கள், உணவுகள், பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றிலும் போர்ச்சுகீசியர்களின் படிமங்கள் உறைந்துள்ளதைப் பார்க்கலாம். ஆங்கிலேயர்களைப் போல் இல்லாமல், போர்ச்சுகீசியர்கள்.  தங்கள் ஆதிக்கத்தை மட்டுமல்ல, கலாசாரத்தையும் மக்கள் மத்தியில் பரப்பிச் செல்வதில் பெரும் நாட்டம் கொண்டார்கள். இப்போதும் கடலோர மக்கள் சுங்கா பைப்பால் புகையிழுப்பதெல்லாம் அதன் விளைவுகளில் ஒன்றுதான். அவ்விதம் தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்களின் இனிப்பு பதார்த்தம்தான் "மக்ரூன்".

இந்த போர்ச்சுகீசிய வார்த்தைக்கு, ‘முந்திரியும் முட்டையும் கலந்த இனிப்பு’ என்று பொருளாம். தூத்துக்குடியை நிர்வகித்த பிரபுக்களும்பாதிரிமார்களும் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து மக்ரூன்’ செய்து சாப்பிட்டார்கள். கொல்லம் வழியாக வந்ததால் முந்திரிக்கொட்டையை தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் ‘கொல்லாக்கொட்டை’ என்று அழைக்கிறார்கள்.

பரவலாக தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இந்த இனிப்பு கிடைத்தாலும், தோற்றுவாயான ‘தூத்துக்குடி மக்ரூன்’தான் சுவையிலும், தரத்திலும் முன்நிற்கிறது. 1 கிலோ மக்ரூன் செய்ய, அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ முந்திரி, 12 முதல் 15 கோழி முட்டைகள் தேவை. முந்திரிசர்க்கரையை நன்கு அரைத்துத்தூளாக்க வேண்டும். முட்டையின் வெண்கருவைக் கவனமாகப் பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கலக்கவேண்டும். மக்ரூனின் மென்மையைத் தீர்மானிப்பது இந்த கலக்கல்தான். இதற்கென கிரைண்டர் போன்ற இயந்திரத்தை தூத்துக்குடிக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள். 

சீக்ரெட் ரெசிபி மக்ரூன்

சிலவகை இனிப்புகளை வீட்டில் செய்ய நிறைய பொறுமை தேவைப்படும். அப்படியாக, சோன்பப்டி, ஜிலேபி, அல்வா, பெங்காலி ஸ்வீட்ஸ் வரிசையில் மக்ரூனும் இடம் பெறுகிறது. இருந்தாலும் முயற்சிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. முட்டை வெள்ளைக்கருவை நன்றாக அடித்துக் கலக்கி, சர்க்கரையும் பொடித்த முந்திரியும் கலந்து, கோன் வடிவத்தில் சுற்றிய பேப்பரில் மாவை இட்டு, கூம்பு வடிவில் மாவை வடித்து, பேக் செய்ய வேண்டும். சொல்லும் போது சுலபமாக தெரிந்தாலும், முட்டையை அடிப்பதும், சரியான பக்குவத்தில் சர்க்கரையை கலப்பதும், கலந்த கலவை மிகச்சரியான பதத்தில் இருந்தாலும் மட்டுமே மக்ரூன் நன்றாக வரும். இல்லையெனில் வடிவமும் சுவையும் மாறிவிடும். இருப்பினும் கொஞ்சம் மெனக்கெட்டு புதுவித இனிப்பை செய்வதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது!

என்னென்ன தேவை?
முட்டை (வெள்ளைக்கருவை மட்டும் கவனமாக பிரித்து எடுக்கவும்) – 2, சர்க்கரை (பொடித்தது) -150 கிராம், முந்திரி (பெரிய ரவை பதத்தில் பொடித்தது) – 1/4 கப், மக்காச்சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?
மைக்ரோவேவ் அவனை 150 டிகிரியில் 15 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்யவும். ட்ரேயில் பட்டர் பேப்பர் விரித்து வைக்கவும். முட்டையை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, எக் பீட்டர் கருவியால் நன்கு அடிக்க வேண்டும். முதலில் நுரைத்து, பின் வெள்ளையான க்ரீம் போன்ற பதம் வரும் வரை (சுமார் 20 நிமிடங்கள்) அடிக்க வேண்டும்.

சர்க்கரையையும் மக்காச்சோள மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து கைவிடாமல் அடிக்கவும். இதில் பதம் என்பது மாவை எடுத்து கவிழ்த்தால் கீழே விழக்கூடாது. முட்டை அடிக்கும் கருவியில் எடுத்தால் கூம்பு வடிவில் மாவு வரவேண்டும். அதுவரை முட்டை, சர்க்கரைக் கலவையை நன்கு அடிக்க வேண்டும். நல்ல வெள்ளையாக க்ரீம் பதத்தில் வரும்.

இறுதியாக முந்திரிப்பொடியை கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவும். முந்திரி கலந்த பின் எக் பீட்டரில் அடிக்கக்கூடாது. மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டியால் மெதுவாக கலந்துவிட வேண்டும். மக்ரூன் கலவையை கோன் வடிவ பட்டர் பேப்பர் அல்லது கேக்கில் ஐசிங் செய்யப் பயன்படும் கோனில் போட்டு, கூம்பு வடிவில் ட்ரேயில் வடிக்கவும்.

மைக்ரோவேவ் அவனை 100 டிகிரியில் 30 – 40 நிமிடங்கள் பேக் செய்யவும். பேக்கிங் ஆனதும் மைக்ரோவேவ் அவனை விட்டு வெளியே எடுக்கக்கூடாது. குறைந்தது 2 மணி நேரம் அதிலேயே இருக்கட்டும். பிறகு வெளியில் எடுத்து காற்று புகாமல் சேமிக்கவும்.

உங்கள் கவனத்துக்கு…
முந்திரி சேர்த்த பின் வேகமாகக் கலந்தாலோ, அடித்தாலோ சுவை மாறிவிடும்… வடிவமும் வராது. குறைந்த வெப்பத்தில் பேக் செய்வது அவசியம்.

வெளியில் எடுக்காமல் முழு இரவும் அதிலேயே வைத்தாலும் தவறில்லை.

காற்று புகாத டப்பாவில் அடைப்பது முக்கியம். இலையெனில் சில நிமிடங்களில் அதன் சுவை மாறிவிடும். 3 நாட்கள் வரை வைத்திருக்கலாம். அதிகபட்சம் 5 நாட்கள்.

முட்டைக் கலவையில் ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, வெனிலா, பிஸ்தா, சாக்லெட் போன்ற சுவைகள் சேர்த்தும் ரசனையான ரகளையான மக்ரூன்கள் செய்யலாம்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com