வேம்பாற்றில் பெரிய தகப்பன் புனித சவேரியார்
1542 ஆம் ஆண்டுகளில் தனது வேத போதக
அலுவல்களின் நிமித்தம் முத்துக்குளித்துறை பகுதிகளில் வலம் வந்த புனித சவேரியார்
பலமுறை வேம்பாற்றிற்கு வந்து தமது மறைபணியை ஆற்றியுள்ளார். அவருக்கு புனிதர்
பட்டம் கிடைக்க முக்கிய காரணமாக அமைந்த கேணியில் விழுந்து இறந்த குழந்தையை
உயிர்பித்தது வேம்பாற்றில் தான் என பாப்பிறையின் இந்திய தூதுவர் மொன்சிங்கோர்
லடிஸ்லாஸ் செலாஸ்கி ஆண்டகையின் நூல் ஓன்று குறிப்பிடுகிறது. மேலும் உயிரிழந்த 50 பேருக்கு புதுமை செய்ததாக ஓர் கூற்றும் வேம்பாற்றில் நிலவுகிறது.
வேம்பாறு பரிசுத்த ஆவியானவர் ஆலயத்தின் தென்புற வாயிலில் காணப்படும்
சிதிலமடைந்த நிலையில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் “சுத்தமான பிரான்சிஸ்க்கு
பேரால் இந்த கட்டடம் கட்டுவிக்கப்பட்டது”. என்று எழுதப்பட்டுள்ளது. இது புனித
சவேரியார் காலத்தில் அல்லது அவரால் எழுப்பப்பட்ட கட்டடத்தின் நினைவுக் கல் என்றே
கருத முடிகிறது. அக்கட்டடம் அவரால் உருவாக்கப்பட்ட திண்ணை பள்ளியில் இருந்ததாக கூட
இருக்கலாம் எனவும் கருதலாம். அதனைப் பாதுகாத்து வரும் தலைமுறையினருக்கு அளிக்க
வேண்டியது நமது பெரும் கடமையாகும்.
வேம்பாற்றுவாசிகள் மீது அதிக பற்றும், நேசமும் கொண்டு உள்ளேன் என புனித
சவேரியார் கூறுவதை அவரது கடிதங்களில் காணப்படுவதன் மூலமாக அவர் வேம்பாற்று மக்களை அதிகம்
அன்பு செய்ததை அறிய முடிகிறது. வடுகரின் படையெடுப்புகளில் சிக்கி பாண்டியன் தீவில்
குடியேறிய தூத்துக்குடி மக்களுக்கு குடிக்க நீரும், உண்ண உணவும் வேம்பாற்று
மக்களிடமிருந்து பெறும்படி 1544 ஆம் ஆண்டு
செப்டெம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று மன்சிலாஸ்க்கு எழுதிய கடிதத்தில்
குறிப்பிடுகிறார்.
கொம்புத்துறையில் கோயில் கட்ட புனித சவேரியாருக்கு உதவிய பட்டங்கட்டி
மனுவேல் மோத்தா என்பவரும் வேம்பற்றைச் சேர்ந்தவரே ஆவர். தும்பிச்சி நாயக்கனின்
படையெடுப்புகளில் வேம்பாற்றுவாசிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் புனித சவேரியார்
இவர்களை வேற்றிடத்தில் குடியேற்ற திட்டமிட்டதை 1544 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று
எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். வேம்பாற்று மக்கள் மேல் அவர் கொண்ட அன்பினை
அவரே தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
வேம்பாறுக்கு வந்து தங்கும் போதெல்லாம் வேம்பாற்றின் அக்கரையில் குடிசைக் கோயில் ஒன்றினை அமைத்து வழிபட்டதாகச் சொல்லப்படும் இடத்தில் சிற்றாலயம் ஓன்று இருந்தது. வேம்பாறு பரிசுத்த ஆவி ஆலயப் பங்கில் இருந்த இந்த சிற்றாலயதிற்கு திருமணமான தம்பதியர் முதல் பயணம் செல்லும் சடங்கில் (வடக்கே போதல்) தங்கள் குடும்பத்தினருடன் இங்கு வந்து வேண்டுதலுடன் நன்றி செலுத்துவது வழக்கம். காலப்போக்கில் சிற்றாலயம் அழிவுற்றதும் 3.12.1981 ல் அவ்விடத்திற்கு நேர் எதிராக புதிய ஆலயம் அமைக்கப்பட்டு மிக. வந். அமலநாதர் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது. தற்போது இவ்வாலயம் புனித தோமையார் ஆலயப் பங்கிலுள்ளது. எனினும் பழைய ஆலயம் இருந்த பகுதியில் அப்பகுதி மக்கள் புதிய சிற்றாலயம் ஒன்றினை தற்போது அமைத்துள்ளனர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வேம்பாற்றினை பூர்வீகமாகக் கொண்டு வெளியூர்களில்
பயிலும் மாணவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் தாயகம் திரும்பும் போது “புனித
சவேரியார் மாணவர் கழகம்’ என்ற பெயரில் பல்வேறு நலப்பணிகளை கையாண்டனர். தங்கள் மரபு கீதத்தில் புனித சவேரியாரை போற்றிப் புகழ்ந்தனர்.
2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாளில் புனித சவேரியார் பேரால் கணிப்பொறி மையம் அமைக்கப்பட்டு
ஏழைக் குழந்தைகளுக்கு கணிப்பொறி அறிவினை கற்பித்து வருகிறது. அவ்வாறே புனிதரின்
நினைவால் பரிசுத்த ஆவியானவர் பங்கில் 2003
ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் நாளில் வாலிபர் பக்த சபையும் உருவாக்கப்பட்டுள்ளது.
நி. தேவ் ஆனந்த் பர்னாந்து