தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச் சரிதை.
திருமந்திர நகரில் திருக்கோவில் கொண்டெழுந்தருளி யிருக்கும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச் சரிதை.

அவையாவன:-
1. நம் திருவன்னையின் சிரமேற் சிங்காரிக்கும் திருமுடி, 1920ல் களவாடப்பட்டு, களங்கப்படுத்தபட்டு, பின் கண்டுபிடிக்கப்பட்டு, மாசு நீக்கி மீண்டும் கிரீடதாரணம் செய்யப்பட்டது எனும் சரித்திரம், நம்மில் எத்தணை பேருக்குத் தெரியும்.இச் சரித்திரத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பேராவலின் பேரில் இது இங்கு வெளிக் கொணரப்பட்டுள்ளது.
2. இதை எழுதிய வித்துவான் திருமிகு M.A.பீரிஸ் அவர்களின் தமிழ் அலங்கார நடைதனையும் அவர்தம் கற்பனைவளதினையும் விவரிப்புபுலமையும் நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எப்படி அலங்காரத்தமிழ் திரு.பீரிசின் பேனாமுனையில் இருந்து கசிந்தது என்பதை பறைசாற்றுவதற்கு இது பிரசுரிக்கப்படுகிறது.
3. மாதா மீது நாம் கொண்டிருந்த பரவசப் பக்தியையும் அதை வெளிப்படுத்தும் முறைகளையும் இக்கட்டுரை வெளிக்கொணர்வதால் இது இவ்விடம் பிரசுரிக்கப்படுகிறது.
*திருமந்திர நகரில் திருக்கோவில் கொண்டெழுந்தருளி
யிருக்கும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ்
ஆண்டவளின் திருமுடிச் சரிதை.*
_(வித்வான் எம்.ஏ. பீரிஸ் அவர்கள், 1920ல் எழுதியது)
பரமதயாநந்த பரமேஸ்வரியாகிய பரிசுத்த பனிமயத் தாயின் திவ்விய மங்கள வருக்ஷோத்ஸ்வம் பரம்பரையை அநுசரித்து 1920 ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 தேதி வயாகிய சுபதினத்தில் சர்வாடம்பரங்களுடன் இனிது நிறைவேற்றப்பட்டது. பரமதாயின் பக்தர்கள் அனைவரும் தத்தமக்குரிய இக்ஷ்ட சித்திகளைப் பெற்று மிழ்வராயினர்.இதில் ஒரு விக்ஷேசத்தைக் குறிப்பிடுதல் அவசியம். அதாவது பரம தேவதாயின் விக்ஷேசப் பாதுகாவலை விடாது தழுவி நிற்பவர்களாகிய பரதகுலத்தவர்களின் கல்வி, செல்வாக்கு, நாகரிகம் முதலிய அபிவிருத்திகளின் பொருட்டு பரத கான்பரென்சு எனும் முதலாவது மஹா ஜன சபை ஸ்தாபிக்கப்பட்டது, இத்தினமகாலின், ஏனைய வருக்ஷங்களிலும், பாரத மாதாவாகிய அர்ச் பனி மயத்தாயின் திவ்ய உத்ஸவமானது பரத குலத்தவர்களுக்கு விக்ஷே குதூகலத்தையும் உத்ஸாகத்தையும் உண்டுபண்ணத் தக்கதாயிருந்ததென்பதில் ஆக்ஷேபமின்று.
நெடிய மயக்கத்தைக் கொன்று ஜெயவிருதேந்திய மஹோந்நத மஹா இராணியாகிய பரிசுத்த பரம அன்னையின் திரு வருக்ஷோத்ஸ்வம் பூர்த்தியான ஆறவது தினமாகிய 1920 ஆண்டு ஆகஸ்டு மீ 10 தேதி , செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் அவ்வன்னை எழுந்தருளி யிருக்கும் தேவாலயத்தின் மணியாவது அலங்கரிக்கப்பட்டது.
இம்மணியோசை நகரத்தையே நடுங்க வைத்துவிட்டது. யாது சம்பவித்ததோ வென்ற மனத்திராய் யாவரும் அர்ச் பனிமயத் தாயின் தேவாலயத்தை தேடி ஓடி வந்தனர். சில நிமிக்ஷங்களுக்கெல்லாம் சிறுவர், வாலிபர், வயோதிகர், ஆண், பெண் அனைவரும் எள்ளிட இடமின்றித் தேவாலயத்தில் நிறைந்துவிட்டனர்.
ஹா! பரிதாபகரமான காட்சி
பயங்கரமான காட்சி
நடுக்கத்துற் குரிய காட்சி
நாவாலுரைக்கமுடியாத காட்சி
ஐயோ! சர்வலோக இராக்கினியாகிய
பரிசுத்த பனிமயத் தாயின்
கோடி சந்த்ரப்ரபையை
யொத்து விளங்கும் வதன மண்டலம்
விசனத்திலடிபட்டு விளங்குகின்றது. எத்தகைய கவலை, படை, துன்பங்களையும் மாத்திரைப் பொழுதில் போக்ககூடிய கருணாசாகரமாகிய கிருபாநேத்திரங்கள் பார்த்தவர்கள் மனதைப் பதைப்புறச் செய்யக்கூடிய வியாகூலத்தைக் கொண்டு விளக்குகின்றன. அன்பும், புன்னகையும், அமைந்தொழுகும் செம்பவழ வாய் வாடிய குமுத மலர் போன்று சோகமயத்தை யடைந்திருக்கின்றது காணுந்தோறும் ஆநந்தாமிர்தத்தை அள்ளியிறைக்கும் பரமதேவதாயினது திவ்விய சொரூபத்தோற்றம் யாவருள்ளத்தையும் நடுங்குறச்செய்து தேகம் மயிர்க்குச் செறிய ஆலயமுழுவதும் அம்மா! அம்மா!! தாயே! தாயே!! மாதாவே! மாதாவே!! என்ற கூக்குரலைக் கடல் முழக்கோ வென்றெண்ணும்படி உண்டுபண்ணி விட்டது.
ஐயோ! பரிதாபம்! ஆற்றோணைத்துக்கம்! அடக்கமுடியாத கக்ஷ்டம் அறியமுடியாத சம்பவம். என்னை? ஸ்வர்ணகசித ரத்னசிம்மாதனத்தின் மீது திருக்கோவில் கொண்டிருந்தாளாகிய எமதாத்தாளது ஈராறு தாரகை பூத்த, எழின்மிக்க சிரோபாரத்தை அழகுசெய்து கொண்டிருந்ததாகிய வெண் பொற் கிரீடத்தைக் காணவில்லை.
ஐயோ! அம்மட்டுமா? எமதன்ணையின் திவ்விய கரத்தில் செவ்விய அன்னம்போல் அமர்ந்து குறுநகை புரிந்து கொண்டிருந்த திruக்குழந்தையாகிய எம்பெருமான் திவ்யஜேசுவினது சென்னியில் மின்னிக்கொண்டிருந்ததாகிய வெண்பொற் கீரிடத்தையும் காணவில்லை.
திரியுக இராஜேஸ்வரியாகிய எமதன்னைக்கும் எவ்வுயிர்க்கும் இறைவனாகிய எமதப்பனுக்கும் ஏக காலத்தில் இவ்வித நிந்தை ஏற்படுமெனில் அதை யாரே சகிக்க வல்லார்?
உணர்விலந்தார் பலர்
உரையிழந்தார் பலர்
மதியிழந்தார் பலர்
மனசிழந்தார் பலர்
உடல் மறந்தார் பலர்
உடனயர்ந்தார் பலர்
ஆலய முழுவதும் கண்ணீருங் கம்பலையுமேயன்றி வேறில்லை.
மாதர்கள் ஒருபுறமாய் நின்று ஆற்று பெருக்கோ அல்லது ஊற்றுப் பெருக்கோ எனக் கண்ணீரைப் பெய்து மாதாவே! மாதாவே!! மன்னித்தருளும்! மன்னித்தருளும்! என்றிரங்கி விம்மி விம்மி யழுததொலி எவ்விதத்தானும் அடக்க முடியாததாயிற்று. குருப்பிரசாதிகளும், திருப்பணியாளரும் ஏனையோரும் ஆலயத்தின் தளம் முதல் முகடு வரை ஒவ்வொரு யிடத்தையும் தேடிப்பார்த்தனர். காணப்படவில்லை. சஞ்சலம் விர்த்தியாகின்றது. சாந்திக்கிடமில்லை. அனற்பட்ட மெழுகாய் அகங்கரைகின்றனர். ஆலைவாய்க்கரும்புபோல் அங்கலாய்க்கின்றனர்.
ஆலயத்தின் உட்புறத்தில் பாடகர் ஸ்தலமாகிய மேடையின் கிராதிகளில் கனத்ததும், மெல்லியதுமாகிய இருகயிறுகள் கட்டிக்கீழே தொங்கவிடப்பட்டிருந்தன. கனத்தகயிறு ஆலயமணியில் கட்டியிருந்ததாகும். அக்கயிற்றின் வழியாக மேலேறிப்பார்க்கும் வெளிப்புறத்திலிருந்து வரக்கூடிய மேடை வாசல்கள் திறக்கப்பட்டிருந்தன. கள்வர், திருடர் என்ற பேரிரைச்சல் கிளம்பிற்று. மூலைமுடங்குகளெல்லாம் தேடினர். கள்வரையும் காணோம். கனகசோபித முடிகளையும் காணோம்!!
ஹா! துரோகம்!! சகல நலன்கட்கு ஊற்றாகவும், உறைவிடமாகவும் இருக்கக்கூடிய எம்பெருமாட்டியின் திருச்சிரசை தீண்டுவொர் யார்? திருடுவார் யார்? பேய்க்கும்
அரிதன்றோ?
அங்ஙனமிருக்க களவாடினர் மானிடராய்க் கொள்ளுதல் எங்ஙனம்?
ஐயோ! முன்னம் எம்பெருமானாகிய திவ்ய ரக்ஷகனை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த பன்னிரு சீடர்களிலொருவனாக யூதாஸ் ஸ்காரியோத் எனும் கொடிய பாவியின் செய்கையை யொப்ப நயவஞ்சகமாகச் சென்று எமது தாயின் முடியைக் கவர்ந்தார்போலும்.
சேயனுக்குள்ளது தாய்க்கிராதா? யூதாஸ் ஸ்காரியோத் தன்னைக் காட்டிக் கொடுக்க இசைந்திருந்த பெருங்குணம் அவனை ஈன்றெடுத்த எமதன்னைக்கில்லாதொழிதல் எங்ஙனம்? ஆனதுபற்றியே சண்டாளர்கள் நமதன்னையின் திருச்சிரசைத் தீண்டவும் திருமுடியைத் திருடவும் இசைந்தாளன்றி வேறில்லை யென்பதே துணிவு.
ஹா! அம்மா! நின்கருணயை எவ்வாறுரைப்பது.
உரைக்கவும் நினைக்கவும் முடியாத
கருணாகரச் சாகரமே-
நினது தாசர்களாகிய எங்களுக்குத்
துன்பிழைத்ததாகிய அலகை இன்றும்
என்றும் நினது திருவடித் தாமரைக் கீழ்
ஓய்வொழிவின்றி நசுங்கி அல்லற்பட்டுக்
கொண்டிருக்க நினது திருமுடி கவர்ந்து செல்லத் துணிந்த அலகையினும் கொடிய அவ்வலகையை அக்கணமே நீறாக்க நினையாது அக்கொடிய எண்ணம் நிறைவேறச் சிரந்தாழ்த்தியது புதுமையன்றோ?
அமலோற்பவி! மன்னுயிர்க்காக்கத் தன்னுயிர் துற என்ற மஹா வாக்கியத்தின் பெருமையை நின்னிடம் கண்டோம். நிகரற்ற நின்துணை நீடு வாழ்க!
எவ்வித பிரயத்தனங்களும் பலிக்கவில்லை. அழுததைத் தவிர விமோசனத்திற்கிடமில்லை. தாயும் மகனும் காணப்படும் முடியிழந்த தோற்றமானது கன்னெஞ்சனையும் விடாது கதற வைத்துவிட்டது.
எல்லோரும் அழுது கொண்டிருக்கும்போது எவர் அமர்த்துவார் அழுகைதனை பரமதேவதாயைத் தவிர!
அவளே! அம்மா! தாயே!! மாதர்க்கரசியே!! மக்களின் அழுகையை அமர்த்தினாள்.
அற்புதம்! அற்புதம்!! சில வினாடிகளுக்குள் எங்கும் நிர்சப்தமாகி விட்டது. எல்லோரும் முழந்தாளிட்டனர். தேவதாய்க்கும் அவளது திருக்குமாரனுக்கும் சேர்ந்து போன நிந்தைக்குப் பரிகாரமாக ஐம்பத்துமூன்று மணிச்ஜெபமும் மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற ஜெபமும் ஜெபிக்கப்பட்டது.
ஊரும் காலும் ஒடுங்கிய நேரம்
மானிட வியாபக ஒதுங்கிய வேளை
வியாகுலமானது ஊடறுத்துக் கொண்டிருக்கும் சமயம்
கண்ணீர் பிரவாகம் சுனையினின்று
எழுந்தாற்போல் பொங்கித் தாரை தாரையாய்
வடிந்துகொண்டிருக்கின்ற சந்தர்ப்பம். இத் தருணத்தில் ஜெபிக்கப்படும் ஜெபமானது எத்தகைய உருக்கமும் பக்தியுடைத்தான தாயாருக்கு மென்பதையெடுத்துரைத்தல் இயலாத விக்ஷயம்.
ஹா! பெருமூச்சும் விம்முதலும் அழுகையும் கலந்த மந்திரஒலியானது திவ்யதாயின் திருச்செவிகளின் வழியூடுருவி அவனது திவ்ய திரு ஹிருதயத்தை வதைத்ததாகிய வாதனையை எமது தாய் சகிக்க முடியாதவளாய் அவள் புரிந்தருளிய அற்புத நலத்தை எந்த நாவைக் கொண்டு புகழ்வது.
ஐம்பத்துமூன்று மணிச் ஜெபமும் ‘மிகவும் இரக்கமுள்ள தாயே’ என்ற ஜெபமும் முடிந்தன. அப்பால் அர்ச்செயசிக்ஷ்ட கன்னிமரியாளின் தஸ்நேவிஸ் மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற இறுதிச் ஜெபத்தை மும்முறை உச்சரித்து முடியும் தருணம் ஹா! என்ன அற்புதம்! மேக கர்ச்சனையை நேர ஒரு பேரொலி ஆலயமெல்லாம் அதிரும்படி கேட்கப்பட்டது இவ்வளவே எல்லோரும் வெளிவந்தனர். அகப்பட்டன! அகப்பட்டன என்ற பேரிரைச்சல் அண்டம்மதிர்ந்தன.
அற்புதம்! அற்புதம்!! என்ற ஓசையானது நாலு திக்குகளிலிருந்தும் சப்திக்கின்றது. திருமுடிகளைக் கண்டுகுளிரக் கண்டு தெரிசிக்க வேண்டுமென்று அவாவினால் இழுக்கப்பட்டு ஜனங்களனைவரும் ஒருவரோடுஒருவர் மோதிக் கொண்டு கூட்டத்தினிடைப் புகுவராயினர். இஃது பெருந்துயரத்தைத்தருவதாயிருந்தது. உடனே, எவ்விடத்திலிருந்தபோதும் எக்காலத்தில் எல்லோரும் கண்குளிரக் கண்டு தெரிசிக்கும்படி உயிர்த்த ஓரிடத்தில் எமது தாயானதும் அவளது திருக்குமாரனதும் திருமுடிகள் ஸ்தாபிக்கப்பட்டன.
ஹா! பயங்கரம். அழகிய முடிகள் நசுங்கப்பட்டு அழகிழந்திருந்தன. சில தாரகைகளும் அத்தாரகைகளையேந்தி நிற்கும் வில்வளைவுகளில் சிலவற்றையும் காண முடியவில்லை. எனினும் எல்லோரும் இனிது தெரிசித்துத் தாயானது அதியற்புத விக்ஷேக்ஷத்தைக் கண்டு வாயாரப் புகழ்ந்து அவரவர் இல்லம் புகுவாராயினர்.
மேற்கூரிய திருமுடிகள் இரண்டும் தேவாலயத்துக்கெதிராக கடற்கரையருகில் செப்பனிட்டு வைக்கப்பட்டிருந்த இருப்புப் படகுகள் ஒன்றினுக்கடியில் கண்டெடுக்கப்பட்டன. சதியர் யாரோ தென்படவில்லை. தேவதாயும் க்ஷமித்துவிட்டனர். தேவதாயின் அன்பும் பாதுகாவலும் விக்ஷேக்ஷமாய்ப் பரதகுலத்தவர் மத்தியில் பிரகாசிக்குமாக,
இஃதிங்கனமாகத்;
தீயர்களால் தீண்டப்பட்ட அத்திருமுடிகளை நன்கு செப்பனிட்டுக் கிரீடதாரணஞ்செய்யத் தினங்குறிப்பிடப்பட்டது.
1920 செப்டம்பர் மாதம் 9 ம் தேதி வியாழக்கிழமை முதல் 12ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கிரீடதாரண உஸ்தவம் வெகு சிறப்பாகவும், வெகு கம்பீரமாகவும் நடைபெற்றது.
எமது நகர்ப்பங்கு விசாரணை மிகவும் சங்கைக்குரிய A.மோனீஸ் சுவாமியவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து இவ்வுத்ஸவத்தை மிகு விமரிசையாகக் கொண்டாடினர். திருவிழாவின் கடைசி தினத்திற்கு முந்தின தினமாகிய சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நிந்தை பரிகார ஆராதனை செய்யும் பொருட்டாய் திவ்ய சற்பிரசாத எழுந்தேற்ற ஸ்தாபகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. கடைசித் தினமாகிய ஞாயிற்றுக்கிழமை பாடற்பூசை, தேவராதனை முதலிய சடங்குகள் நிறைவேறியபின் மிகவும் சங்கைக்குரிய A.மோனீஸ் சுவாமியவர்கள் பிரசங்கத் தொட்டியிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை கேட்போர் மனது பரவசமாகும் வண்ணம் திவ்ய தாயினது பிரபாவங்களை வாசாமகோசரமாய்ப், பாலுந் தேனும், பாகும் பழமுங் கலந்து ஊட்டியது போல் பிரசங்கமாரி பொழிந்தனர்.
அப்பால், கனம் சுவாமியவர்களால் பரலோக பூலோக ராஜேஸ்வரியும் , பாவிகளுக் கடைக்கலமும், எழு கடல் துறைக்கும் நாமுண்டென்று பிசகாத அரணாயிருப்பவளும் , பரதர் பாதுகாவலும் , மாதாவுமாகிய திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கும் அவளது திருக்குமாரனுக்கும் கிரீடதாரணம் செய்யப்பட்டது.
சந்தோக்ஷ ஆரவாரகீதங்கள் கோக்ஷித்தன. பரம தேவதாயை யாவரும் தெரிசித்து அவளது திருப்பாத முத்திசெய்து, இக்ஷ்ட சித்திகளைப் பெற்றுச் செல்லுமாறு திவ்ய சொரூபத்தைப்பீடத்தின் மத்தியில் ஸ்தாபகம் செய்து வைக்கப்பட்டது.
அவ்வாறே காலை முதல் மாலை வரை பரதகுலத்தினர் யாவரும் ஏனைய கிறிஸ்தவர்களும் இடைவிடாது தெரிசித்துப் பாதமுத்திசெய்து செல்வாராயினர். இரவில் பஜனை கோஸ்டியர் மேலதாளங்களுடனும் தேவதாயின் சித்திரப்படத்துடனும் தேவதாயின் பிரபாவங்களையும் பிரஸ்தாசம்பவங்களையுங் குறிப்பிடக்கூடிய பாட்டுக்களைப்பாடி ஊர்வலம் வந்தனர்.