திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளது கிரீடாதாரணத்தின் போது பாடிய பதினான்கு சீரிரட்டை
இந்த மீண்ட முடிதனை திரும்ப சூட்டிய போது பாடப்பட்ட கவிதைகளை கீழே தந்துள்ளோம். இரண்டாம் கவிதையை படிக்கப் படிக்க, நமது புலவரின் தமிழ் அருமை தெளிவாக தென்படும்.
திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளது கிரீடாதாரணத்தின் போது பாடிய பதினான்கு சீரிரட்டை
ஆசிரிய விருத்தம்

வானாடு செல்வமே, வரையாடு தீபமே
வான்மக ராஜேஸ்வரியே.
வற்றாத கேணியே பரலோக ஏணியே
வாடாத நறிய பூவே.
மறையவர் இன்பம் நீ மறைக்கொரு பிம்பம் நீ
மாசிலா வடிவம் நீயே.
மன்னவர் மகுடம் நீ மகிதல சிகரம் நீ
மகத்துவ சொரூபம் நீயே,
தேனாடு மலரடி திருமந்த்ர நகரினைத்
திருக்கோவில் கொண்ட நாளாய்
செய்தமா நன்மையை எழுதவோ நினைக்கவோ
செப்பவோ முடியாதம்மா.
செய்ந்நன்றி கொன்றவர் சிறுதொழில் வஞ்சகர்
தீயவர் நினக் கிழைத்த
செயலரும் நிந்தையை நினைக்கவுந் துடிக்குதே
திருவுளம் சகித்த தென்னே.
மானாடு நின்விழா நிறைவுற்ற தினமாறு
மதிக்குமா வணி நாள் பத்து
வளரிருட் போதுநிற் பதமுறை யலகையின்
வலைப்படு கயவ ரந்தோ.
வல்லபீ! நினதுடுச் சிரமிசை துலங்குமா
மணிமுடி கவர்ந்து செல்ல;
மைந்தரும் மாதரும் மனமொடிந் திருகணீர்
வடித்தவர் தொழுதல் கண்டு
மீனாடு நின் முடி அலையோரங் காணவே
மிகு புதுமை செய்த தாயே
மிளிர்வடி விழந்ததை யியல்வரை திருத்தியுன்
வியன்சிர ஸமைக்க வேண்டி
விசித்தமா மகுடமிது; விருப்பமுட னேற்றருள்
விரிமழை பொழிவா யம்மா
மிகுமந்த்ர நகர்தந்த திருமந்த்ர முறைசந்த
மரியதஸ் நேவிஸனையே.
இராகம் செஞ்சுருட்டி (லாவணி) தாளம் ஆதி
அகிலமனைத்து மொரு மொழியிலமைத்த திரு
அமலன் திருக்கரத்தி லிருக்க
இளம்பிறையுடு சுடர்கதி ரெறிக்க
மணி-மகுடமதனை யபகரிக்க
வந்த-அதிசயமிதை விரித்துரைக்க
முடி-யாதுநிச்சய மாகு மற்பவி
வேகி யெப்படி யோதமுற்படல்
ஐயோ-கொடியர் நெஞ்சமுருக்கு
இந்த அவமதிக்கெவர் மனச்செருக்கு
திருட்டுத் தொழில் நடத்தப்
பொருத்த முறு கனத்த
இருட்டுப் பொழுதிலையோ பாவியே
திரி-புவனமாள் திவ்ய பிரதாபியே
வளர்-திருப்பதிமிசை வந்துலாவியே
அவள்-இருக்கும் இருப்பிட்த்தைத் தாவியே
துணி-வேதுபெற்றதோர் தாயிலுத்தம
தாய் சிரத்தினிலே ஜொலித்திடு
மகுடமெடுத்த பச்சை நாவியே
உன்னை-மன்னித்தாள் எங்கள் மஹாதேவியே
தட்டுமணிக் கயிற்றை
வெட்டித் தட்டினுட்
புறத்திற் கட்டியது தொங்கவிட்ட சூது
மெல்லப் பற்றிப்பற்றிக் கீழிறங்க ஏது
கடை-கெட்ட துட்டச் செய்கையன்றோ ஈது
மதி தட்டுக்கெட்டுப் போனவகையாது
மட-மாதருக்குள தீதபொற்புயர்.
தாய்மலர்ப்பத சேவை நிற்பவ
ராரோ அவர்க்கு நிறைபாது
தந்-தாதரிப்பாள் குறை யாது
இரக்கமெனும் புனலைச்
சுரக்குந் தடாக மவள்
எவர்க்கும் நல்லுப காரியல்லவா
இதை-ஏனோமறந்தாய் மஹா வல்லவா
அன-லெரிவாய் நரகக்குழி செல்லவா
இடர் எண்ணினாய் உனக்கிது நல்லவா
அவளற்புதச்சொரு பத்தினித்தெரி
சித்த வர்க்கதி சித்திவிர்த்திக
ளெய்துமெனல் பழமை யல்லவா
இதை-எடுத்து விரித்துனக்குச் சொல்லவா
பால்சுரக்கும் பான்மடுவைத்
தானறுத்துப் பால் குடிக்க
வே நினைத்த பான்மையது நோ
சதி-காரரிருள் சூழுமந்தகார
வேளை-யாருமறியாது வந்தபார
உபகாரி யெமதன்னை சிரோபார
முடி-பற்றியோடிய வெற்றி தானென
உற்றதோர் மனம் பற்றுதே நனி
பசிப்பிணி வறுமை நோய் தீரத்
தகு-வழியவளிணையடி சார
அண்டினவர்க் கபய
மென்றும் அளிப்பாளென
அன்றுபெர்நர் துரைத்தவாக்கு
அது-குன்றுமெனும் பயமோ தாய்க்கு
மிக-நன்றுநன்றுனது செல்வாக்கு
ஆஹா கண்டோ முனது மனப்போக்கு
பர-மண்டலத்தினி லண்டரெத்தனை
தொண்டிசைத்தடி தெண்டனிட்டிடும்
அரசீ நினது கிர்பாநோக்கு-என்றும்
அகலாதிருக்குமடி யோர்க்கு
ஆழக்கடல் குளித்து
மாமுத்தது படுத்துச்
சீர்மிக்குலவு மதிகுலமே
திருமந்திரமா நகர்த் தலமே
வளர்-சிம்மாசனத் தெழுந்த நலமே
பர-தவர் தமக்குய ரடைக்கலமே
வினை-நீங்க வற்புத மோங்ரு பொற்கர
மேந்து தற்பர னேர்ந்துபெட்புற
வேண்டுவாய் அமிர்த பொற்கலமே
எம்-விண்ணப்ப மிது நற்கோகிலமே.
—-