மருது பாண்டியருக்கு உதவிய பரதவ தலைவர்…
மருது சகோதரர்களின் தலைமையிலான படைகளுக்குத் தூத்துக்குடி பரதவர் சாதித்தலைவர் வெடிமருந்து, துப்பாக்கி, பீரங்கி முதலையவற்றைச் சேகரித்து வழங்கினார் என்ற செய்தி ஆங்கிலேயரின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
கி.பி. 1787ஆம் ஆண்டிலேயே ரிபெல் சேதுபதி எனப்படும் முத்துராமலிங்க சேதுபதியின் சார்பாகப் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சு ஆளுநரைச் சந்தித்த மயிலப்பன் சேர்வைக்காரர், படை உதவியும் வெடிமருந்தும் கேட்டார் என்றும் அப்போது அவருக்கு அவ்வுதவிகள் கிடைக்கவில்லையென்றும் "History of Maravas" என்ற நூலில் பக்கம் 220-222இல் முனைவர் எஸ். கதிர்வேல் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தூத்துக்குடித் துறைமுகத்தைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்த பாளையக்காரர்கள் பரதவர் கூட்டணி, இலங்கை வழியாகவும் வெடிமருந்துக்குரிய மூலப் பொருளான வெடியுப்பு (பொட்டாசியம் நைட்ரேட்) முதலியவற்றைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு. மேலும், மருது சகோதர்களிடம் ராக்கெட் (ஏவுகணை) இருந்ததாக ஆங்கிலேயக் கர்னல் அக்னியு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலம் வெடியுப்பினை மட்டும் இறக்குமதி செய்து இப்பகுதியிலேயே வெடிமருந்துத் தயாரிப்பு, ராக்கெட் தயாரிப்பு போன்றவை தொடர்பான சில சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு.
தூத்துக்குடித் துறைமுகத்தின் வணிக முதன்மை, பரதவர் சமூகத்தவரின் கடல் கடந்த (இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளுடனான) தொடர்புகள், கர்ப்பூரச் செட்டிகள் போன்ற வாணம் தயாரிக்கும் பாரம்பரியத் தொழில்நுட்ப அறிவு படைத்த சமூகத்தவருடனான வணிக உறவுகள், இவையெல்லாவற்றுக்கும் மேலாக இப்பகுதியில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகையான தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கிய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் சந்ததியினரிடம் மறைந்து போய்விடாமல் நீடித்து வந்த உலோகபாஷாணக் கலவைகள் குறித்த அறிவு ஆகியன இத்தகைய சோதனை முயற்சிகளுக்கு அடிப்படை உந்த சக்தியாக இருந்திருக்கலாம்.
ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் திரட்டிய படையில் மேற்படி சமூகத்தவர் மட்டுமின்றி, பெரும்பாலான இதர சமூகத்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். அப்படியிருந்தாலும் இந்த மக்கள் இயக்கம் தோல்வியையே தழுவிற்று.
புரட்சியணித் தலைவர்கள் ஒவ்வொருவராக வேட்டையாடிச் சிறைப்பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டனர். இரண்டாவது மட்டத் தலைவர்கள் 72 பேர் பினாங்குப் பகுதியிலிருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட அட்மிரல் நெல்சன் என்ற பெயர் கொண்ட கப்பலில் 72 போராளிகளும் தீவாந்தர சிட்சை (தண்டனை) அனுபவிப்பதற்காக அனுப்பப்பட்டனர்.
இக்கால கட்டத்தில் தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைவர் ஆங்கிலேயரின் கைகளில் அகப்படாமல் தலைமறைவாகிவிட்டார். பரதவர் சாதியினரின் அடைப்பனார் பதவியை வகித்த ஹென்றி லெயோன் என்ற பெயருடைய இன்பகவிராயரும் இவருடன் சேர்ந்து தலைமறைவானார். (இவ்விருவரும் இலங்கைக்குச் சென்றிருந்தனர் எனக் கருதப்படுகிறது).
கி.பி.1804 ஆம் ஆண்டில் பரதவர் சாதித்தலைவர் மணப்பாடு என்ற கடற்கரைச் சிற்றூரில் இருப்பதாக அறிந்த திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் கொக்ரேன், அவரை எவ்விதத்திலும் துன்புறுத்துவதில்லை என வாக்குறுதியளித்து, அவரைத் தூத்துக்குடிக்கே வரவழைக்க முயன்றார்.
அதற்காகக் கடிதம் ஒன்று எழுதி, தமது நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாகப் பரதவர் சாதித் தலைவரிடம் கொண்டு சேர்ப்பித்தார். அக்கடிதத்தில் கொக்ரேன் "பரதவர் சாதித் தலைவர் சார்ந்துள்ள கிறிஸ்துவ சமயத்தைத்தான் ஆங்கிலேயர்களும் பின்பற்றுகின்றனர்" எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
பரதவர் சாதித்தலைவர் ஆங்கிலேயரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கவில்லை. ஆயினும் போராட்டச் சூழல் முற்றிலும் மாறிப்போய் உயிர்த்தோழர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட நிலையில் மீண்டும் புரட்சியணியைக் கட்டியமைப்பதற்குரிய அவகாசமும் ஆற்றலும் இவருக்கு இல்லாததால் மணப்பாட்டிலேயே ஒதுங்கி வாழ்ந்திருந்து, 1808 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி மரணமடைந்தார்.
இவர் இறந்த பிறகு இவரது குடும்பத்தினர் இவரது உடலைப் பல்லக்கு ஒன்றில் வைத்துத் தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அடக்கம் செய்தனர்.
தொன் கபரியேல் கல்லறைக் கல்வெட்டு
தூத்துக்குடியிலுள்ள ஒர்னல்லோஸ் பள்ளிக்கூட வளாகத்தில் இவரது கல்லறைக் கல்வெட்டு உள்ளது. தமிழ், போர்ச்சுகீசிய மொழி ஆகியவற்றில் கல்வெட்டு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தொன் கபரியேலின் உருவ ஓவியம், கி.பி. 1808ஆம் ஆண்டில் வரையப்பட்டிருக்கலாம். இது காளையார் கோவிலில் உள்ள மருது சகோதரர்களின் உருவச் சிற்பங்களுக்கு இணையாகப் போற்றத்தக்கது. இவ் ஓவியத்தில் திருச்செந்தூர் முருகனுக்குரிய சேவலும் மயிலும் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.