வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 29 July 2016

இரத்த பூமி - பாகம் 2

1540 களில் போர்த்துகீசியரின் ஆளுமைக்கு உட்பட்ட தென் தமிழக கடற்கரை காமரின் கோஸ்ட் என அழைக்கப்பட்டது. சவேரியாரின் பதவியேற்பின் போது சேசுசபயின் தலைமை இடமாக இருந்த கன்னியாகுமரி வடக்கே மன்னார் வரை உள்ள பரதவர்களின் ஆன்மீக தேவை மற்றும் பாதுகாவல் கருதி மணப்பாடுக்கு இடம் பெயர்ந்தது. ஏற்கனவே பன்னெடுங்காலமாக பரதவ பாண்டியரின் தலைமை இடமான கொற்கை மணல் மூடிய பின் பழையகாயல் தலைமை இடமாகி, பின்னர் புதிய துறையான புன்னக்காயல் பாண்டியம் பதியாக விளங்கியது.

அங்கிருந்து மேலாக தாமிரபரணிஆற்றின் வழி படகு சரக்கு போக்குவரத்து பரதவரின் உரிமையாய் இருந்தது. இன்றைய திருவைகுண்டம் அணை உருவானதற்கு முன்பே ஏரல் பகுதியில் குறுக்கப்பட்ட தாமிரபரணியில் மதகும் மரப்பாலமும் அமைந்திருந்தது. கொற்கை குரும்பூர், ஏரல், ஆழ்வார் திருநகரி, கருங்குளம், செய்துங்கநல்லூர், நெல்லை, வீரவநல்லூர், என தாமிரபரணி கரையில் பரதவர்கள் உள்நாட்டிலே மீன்சந்தை படுத்துதல் வணிகம் என மறவர்களோடு பங்காளிகளாக வாழ்ந்து வந்தனர்.

தாமிரபரணி ஆற்றுப்படுகை கப்பல் போக்குவரத்து கப்பல் படைதளம் போன்ற நிர்வாக காரணங்களுக்கு உகந்ததாக இருந்ததனால் 1550 களில் சேசுசபைக்கும் போர்த்துகீசியருக்கும் பாண்டியம் பதியும் வாழ்ந்து வந்த புன்னக்காயல் தலைமையிடமாக மாறியது. மேற்கிலிருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி கிழக்கே இன்றைய ஆத்தூர் கழிந்து இரு கூறாக வடக்கு தெற்காக பிரிந்து கடலை அடைந்தது.

நடுவே உருவான தீவுத்திடலே அன்றைய புன்னக்காயல். தீவான புன்னைக்காயலில் போர்த்துகீசியர் செங்கல் மற்றும் களிமண்ணாலான ஒரு கோட்டையை கட்டி இருந்தனர். கோட்டையை சுற்றி பரதவர்கள் அடர்த்தியாய் அமைவிடம் அமைத்து காவலாய் இருந்தனர்.

கோட்டைக்கு மூன்று வாசல். கிழக்கு வாசல் போர்த்துகீசியருக்கும், தெற்கு வாசல் சேசு சபையினருக்கும், வடக்கு வாசல் பாண்டியம்பதிக்குமாக இருந்தது . மேற்கே வாசல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் கோட்டை சுவரை பின்புலமாக கொண்டு மேற்கு பகுதியில் பரதவர்கள் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். உள்ளே பாண்டியம்பதியின் அரண்மனை, போர்ச்சுகலின் மன்னார் தலைமை அலுவலகம், இராணுவ செயலகம், சேசுசபை தலைமையகம், பரதவர்களுக்கான ஏசு சபை ஆலயம் மற்றும் போர்ச்சுகல் இராணுவ கிடங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.

இங்கே மன்னார் கேப்டன் மனுவேல் ரொட்ரிக்கஸ் கொட்டின் கோ குடும்பத்தினர், சவேரியாரின் மாற்று பொறுப்பாளரான சேசுசபை ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அடிகளார் மற்றும் போர்த்துகீசிய தலைமையாளர்கள் , வீரர்கள் அனைவரும் இங்கே வாழ்ந்து வந்தனர். 1553 ஏப்ரல் மாதத்தின் 29 ஆம் நாள் மாலை மயங்கிய வேளையில் தாமிரபரணியின் வடகிளை ஆற்றிலே தறிக்கெட்டு பாய்ந்து வந்த படகொன்று புன்னைக்காயல் போர்த்துகீசிய கோட்டை பாண்டியம்பதியின் வடக்கு வாசலில் கரை ஏறி நின்றது.

படகிலிருந்து துள்ளி குதித்த பரதவ ஏரலர் சிலர் பதட்டத்துடன் பாண்டியம்பதியின் அரண்மணைக்குள் புகுந்தனர். சில மணி நேரங்களில் பல பாய்மர படகுகள் பரணி கரையிலிருந்து கடலுக்குள் பாய்ந்தன இருட்டிலே பரவின. கோட்டை காவலில் இருந்த போர்த்துகீசிய படைவீரர்களுக்கு இது வழக்கமான நிகழ்வென்று காணாதிருந்தனர்.

அதே நேரம் கோட்டைக்குள் இருந்த யேசு சபையின் ஆலயத்துக்குள்ளே. சபை பொறுப்பாளர் தந்தை ஹென்ரிக் ஹென்ரிக்கஸுடன் பரதவ தலைவர் விக்ரமாதித்ய பாண்டியரின் தனயன் கொற்கை கோ பாண்டியன் வரவிருக்கும் ஆபத்தினை விவரித்த போது அடிகளார் ஆடிப்போனார். யேசுவின் சிலுவையின் கீழ் நின்றவரின் கண்களில் நீர்.

காரணம், கோட்டையில் போதிய பாதுகாப்புக்கு படைகள் இல்லை. மதுரை நாயக்க அரசனை சந்திக்க வெடலைத்துறை வந்திறங்கும் கொச்சி தலைமையின் பாதுகாப்புக்காக முக்கால் பகுதி படை வெடலைக்கு போய் விட்டது. மதம் மாறிய பரத குலம் ஏற்கனவே பாதியாய் குறைந்து போன நிலையில் தீவுகளிலும் கடலிலும் வாழ்ந்து உயிர் பிழைத்த இந்த கூட்டம் இப்போது தான் நிம்மதியாக தொழில் செய்து வாழ்கின்றனர்.

மீண்டும் கொலைக்களமா..?

பரிதவித்த உண்மை ஆன்மீக தந்தை தனது பரதவ பிள்ளைகளின் உயிரைக் காக்க தேவனிடம் பித்து பிடித்தவராய் புலம்ப ஆரம்பித்தார். அப்போது தனது சகாக்கள் சிலரோடு வேகமாக உள்ளே நுழைந்து கேப்டன் கொட்டின் கோ ஆவேசமாக கேட்டார், பாண்டியம்பதி எங்கேவென, படைதிரட்ட பாய்மரத்திலே என அழுத்த விடை பகர்ந்தார் கொற்கை கோ பாண்டியன்.

ஏன் எதற்கு .... இது கட்டுக்கதை... வீண் குழப்பத்தை உருவாக்காதீர்கள் நாளை மதுரையில் மறு ஒப்பந்தம் ஏற்கனவே கொச்சின் தலைமை மதுரை சென்றடைந்து விட்டது. நாளை மறுநாள் பிரகடனம், என பாடம் நடத்துவதை கேட்க பொறுக்காத இளம் தலைவன் சீறினார். கேப்டன் கதையாக இருந்தால் நல்லது தான் வினையாகிப் போனால் விலை கொடுக்கப்படுவது எம் பரதவகுடி தானே பாதுகாப்புக்காக மதம் மாறிய நாங்கள் உங்களை பாதுகாக்க வேண்டியதாய் உள்ளது. 

இனி இம்மண்ணிலே பரதவனின் ஒரு துளி உதிரம் உதிர்ந்தாலும் எவனுக்கும் உயிர் இருக்காது என வெடிக்க, கொற்கை யாரிடம் பேசுகிறாய் மன்னார் கேப்டனிடம் என்பதனை மறந்து விடாதே என கேப்டன் கோட்டின்ஹோ கூச்சலிட ஆலயமே அலறியது. விவாதம் வழக்காக மாறுவதை உணர்ந்த தூய தந்தை கண்ணீர் வடிய இடை புகுந்து கேப்டன் நடக்காது இருந்தால் கர்த்தருக்கு மகிமை நடந்து போனால் ......?

நம் அனைவருக்குமே சிலுவை தான் கொற்கை கோ சொல்லுவதை கேளுங்கள். பிறகு முடிவு செய்யுங்கள். எப்படியாவது என் மக்களை காப்பாற்றுங்கள். கடவுளின் நாமத்தை ஏற்று நரகப்படும் பாமரனை காப்பாற்றுங்கள் என ஓலமிட்டு அழுதார்.

தூயத்தந்தை ஹென்ரிக் ஹென்ரிக்கஸ ஆலயம் அமைதியானது. சில நிமிடத்தில் மௌனம் கலைத்த இளம் தலைவர் தன் தந்தை பாண்டியபதிக்கு கிடைத்த எதிரிகளின் தாக்குதல் தொடர்பான உறுதி செய்யப்பட்ட விவரங்கள் பகைவர் படையின் ஊடுருவல் பற்றிய வழித்தட வரைவு தகவல்கள் அதை தடுக்க இரண்டு மணி நேரத்துக்குள் எவரையும் நாடாமல் கேட்காமல் போர்த்துகீசிய கோட்டைக்குள்ளே பாண்டியம்பதி செய்து முடித்த அலுவல்கள் அனைத்தையும் விவரமாய் சொல்ல சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் போர்த்துகீசியர்கள்.

சற்று முன்பு மன்னார் கேப்டன் என மார்தட்டியவர் எல்லாமே கைமீறி போனதை அறிந்து இயலாமையோடு கொற்கை கோ வின் அடுத்த திட்டம் பற்றி கேட்க சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அதே நேரம் நாயக்க படைகள் ஏரலில் மதகை அடைக்க ஆரம்பித்தனர்.

திருச்செந்தூரிலே இருந்து நாயக்க படை ஒன்று வடக்காக நகர்ந்து கொண்டிருந்தது. தூத்துக்குடியிலிருந்து நாயக்க படை ஒன்று தெற்காக நகர்ந்து கொண்டிருந்தது. புன்னக்காயலின் கிழக்கே ஆழி கடல் நடுவே பரதவரை அடித்தொழிக்க அவலட்சண புயல் ஒன்று ஆவேசமிட்டு கிளம்பி புன்னக்காயலின் கரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

நாற்புரமும் பகை சூழ நிர்கதியாய் நிற்கும் பரதவரை ஆண்டவர் காப்பாற்றுவாரா......இல்லை பரதவரை ஆண்டவன் காப்பாற்றுவாரா..

கொஞ்சம் பொறுத்திருப்போம் ....! படை வரட்டும் காத்திருப்போம் .....!!

(தொடரும்)
கடற்புறத்தான் 


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com