வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 5 July 2016

முத்துக்குளித்துறை: அச்சுத் தமிழின் பிறப்பிடம்
ஐரோப்பியரின் வருகைக்கு முன்பு தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளாகவே இருந்தன. செல்லரித்த ஏடுகளிலிருந்து செந்தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றி அச்சேற்றுவதில் முனைந்து உழைத்த உ.வே.சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரனார் முதலிய அறிஞர்களைத் தமிழகம் இன்றளவும் நன்றியுடன் நினைத்துப் போற்றுகிறது. அவ்வாறாயின் தமிழ் நூல்களை அச்சேற்றுவதற்கு முன்னோடியாக முதல் தமிழ் அச்சகம் அமைத்த சான்றோர்களை நன்றியுடன் நினைந்து போற்றுவது நம் கடமையன்றோ!

இந்திய மொழிகளுள் முதன்முதல் அச்சேறியவை தமிழ் நூல்களே என்பதை அறிஞர் தனிநாயக அடிகளார் நிறுவிக் காட்டியுள்ளார். அவ்வாறு அச்சேறிய முதல் தமிழ் நூல்கள் முத்துக்குளித் துறையுடன் நெருங்கிய தொடர்புடையவை. ஏனெனில் அந்நூல்களின் ஆசிரியர் முத்துக்குளித்துறையில் நீண்டகாலம் அருட்பணி ஆற்றியவர். அது மட்டுமல்ல அந்நூல்களை அச்சிடுவதற்கு முத்துக்குளித்துறைக் கத்தோலிக்கர் அக்காலத்திலேயே நிதியுதவி வழங்கியிருக்கிறார்கள். 

இது முத்துக்குளித்துறைக் கிறிஸ்தவர்கள் தமிழுக்கு ஆற்றிய பெருந்தொண்டு என்பதில் ஐயமில்லை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கிறிஸ்தவ மன்றாட்டுக்களைக் கொண்ட ஒரு சிற்றேடு லிஸ்பன் நகரில் உரோமானிய எழுத்தில் 1554-ஆம் ஆண்டு அச்சிடப் பட்டது. அதாவது, இன்று ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகள் வழங்கும் எழுத்தில் அச்சிடப் பெற்ற தமிழ் நூல் அது. இதுவே முதலில் அச்சேறிய முதல் தமிழ் நூல் என்னும் பெருமையை அது பெறுகிறது.

1546-ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மறை மாவட்டத்திலுள்ள புன்னைக்காயலைத் தலைமையகமாகக்கொண்டு நீண்ட காலம் பணியாற்றியவர் என்ரீக்கோ என்ரீக்கஸ் என்னும் இயேசு சபைக் குரு. தூத்துக்குடி, வேம்பாறு, குமரிமுனை, மணக்குடி, கடியப்பட்டினம், மன்னார் ஆகிய ஊர்களிலும் பணிபுரிந்த இவர் போர்த்துக்கீசிய நாட்டவர். தமிழில் தம்மை அன்டிறீக்கிப் பாதிரியார் என அழைத்துக் கொண்டவர். அவர் மொழி பெயர்த்த தம்பிரான் வணக்கம் என்னும் நூல் தான் தமிழ் எழுத்தில் அச்சேறிய முதல் தமிழ் நூல். இது கேரளத்திலுள்ள கொல்லத்தில் 1578-ஆம் ஆண்டில் அச்சிடப் பட்ட 16 பக்கங்கள்கொண்ட இந்நூல் கத்தோலிக்க சமயத்தில் பயன்படுத்தப்படும் செபங்களைக் கொண்ட மொழி பெயர்ப்பு நூலாகும். 

இதன் ஒரே பிரதி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உள்ளது. அதே அண்டிறீக்கி பாதிரியார் மொழிபெயர்த்த கிரீசித்தியானி வணக்கம் (கிறிஸ்தவ வழிபாடு) 1579- ஆம் ஆண்டில் கேரளத்திலுள்ள கொச்சியில் அச்சிடப் பட்டது. இது தமிழ் எழுத்தில் அச்சிடப் பெற்ற இரண்டாவது தமிழ் நூல். 112 பக்கங்கள் கொண்ட இந்நூல் வினா--விடை முறையில் அமைந்தது, கத்தோலிக்க சமயக் கோட்பாடுகளை விளக்குவது. அதே அன்டிறீக்கிப் பாதிரியார் மொழி பெயர்த்த, "கொம்பசியோனாயரு" (Confessionaryஅதாவது ஒப்புரவு அருட்சாதன நூல்) 1580--ஆம் ஆண்டில் கேரளத்திலுள்ள கொச்சியில் அச்சிடப் பட்டது. இது தமிழ் எழுத்தில் அச்சிடப் பெற்ற மூன்றாவது தமிழ் நூல்.

தமிழ் எழுத்தில் அச்சிடப் பெற்ற நான்காவது தமிழ் நூல் Flos Sanctorum என இலத்தீனிலும் "அடியார் வரலாறு" எனத் தமிழிலும் வழங்குகிறது. இது 670 பக்கங்களைக்கொண்டது. இதன் ஆசிரியர் அதே அண்டிறீக்கிப் பாதிரியார் தான்.இந்நூலுக்கு ஆசிரியர் இட்ட தமிழ்ப் பெயர் இன்னதென்று தெரியவில்லை. இந்நூலின் ஒரே ஒரு பிரதி மட்டும் தான் இன்று உள்ளது, அது வத்திக்கான் நூலகத்தில் உள்ளது. அதன் முதல் பக்கங்கள் தொலைந்து விட்டதால் நூலின் பெயர், அது அச்சிடப் பெற்ற ஊர், அச்சிடப்பெற்ற ஆண்டு முதலிய விபரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இந்நூலின் அச்சுப் பிரதியோடு ஒட்டப்பட்டுள்ள கையெழுத்துப் பக்கம் அன்டிறீக்கிப் பாதிரியாரின் பெயரில் 1586- ஆம் ஆண்டில் வரையப் பட்டுள்ளது. அதில் இந்நூலை வரைவதற்குப் பயன்பட்ட ஆதார நூல்கள் எவ்வெவை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அப்பக்கத்திலும் நூல் அச்சிடப் பெற்ற ஊரின் பெயர் இல்லை. 

1679- ஆம் ஆண்டில் கேரளத்திலுள்ள அம்பலக்காட்டில் தமிழ்--போர்த்துக்கீசிய அகராதி ஒன்று அச்சிடப் பட்டது. அதன் ஆசிரியர் இயேசு சபையைச் சார்ந்த அந்த்தாம் தெ ப்ரோயென்சா அடிகளார். முதன்முதலாக அச்சிடப் பட்ட தமிழ் அகராதி இதுதான். இவ்வகராதிக்குத் தாம் எழுதிய முன்னுரையில் "முத்துக்குளித்துறையில் அச்சிடப்பெற்ற Flos Sanctorum நூலிலிருந்து பல சொற்களை நான் இவ்வகராதியில் இணைத்துள்ளேன்." என ப்ரோயென்சா குறிப்பிடுகிறார். இதிலிருந்து அடியார் வரலாறு (இனி Flos Sanctorum என்னும் இந்நூலை அடியார் வரலாறு என்றே இக்கட்டுரையில் குறிப்பிடுவோம்.) முத்துக்குளித்துறையில் அச்சிடப் பட்டது என்பது தெளிவாகிறது. 16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இயேசு சபையார் ஆற்றிய பணிகள் பற்றி ஆராய்ந்த பேரறிஞராகிய ஜோசப் விக்கி. சே.ச. அடிகளாரும் அடியார் வரலாறு புன்னைக்காயலில் தான் அச்சிடப் பட்டது என உறுதி செய்கிறார்.

முத்துக்குளித்துறையில் அச்சிடப் பெற்றது என்றால் புன்னைக்காயலில் தான் அச்சிடப் பெற்றதாக நாம் எவ்வாறு துணியலாம் என சிலர் வினவலாம். அவ்வாறு துணிவதற்குரிய காரணங்கள் பின் வருமாறு:--

தமிழ் அச்சகம் தங்கள் ஊரில் அமைந்திருந்ததாக முத்துக்குளித்துறையின் வேறு எவ்வூரிலும் வழிவழிச் செய்திகள் இல்லை. புன்னைக்காயலில் மட்டுமே பங்குக் கோவிலாகிய புனித சவேரியார் கோவிலுக்குத் தென்கிழக்கிலுள்ள பகுதியில் தமிழ் அச்சகம் அமைந்திருந்ததாக அவ்வூர்ப் பெரியோர் கூறுகின்றனர். "அடியார் வரலாறு" நூலாசிரியராகிய அண்டிறீக்கிப் பாதிரியார் நீண்ட காலம் வாழ்ந்து பணியாற்றியது புன்னைக்காயலில் தான் என்பது ஆதாரபூர்வமான வரலாறு. 1587--ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் புன்னைக்காயலிலிருந்து இயேசு சபைத் தலைவர் ஆக்குவாவீவா அடிகளாருக்கு எழுதிய மடல்களில் 'அடியார் வரலாறு' நூலைத் தாம் முடித்து விட்டதாக அண்டிறீக்கிப் பாதிரியார் குறிப்பிடுகிறார். ஆகவே தாம் தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றி வந்த புன்னைக்காயலில் அச்சகம் அமைய அண்டிறீக்கிப் பாதிரியார் ஏற்பாடு செய்தார் எனக் கொள்வது பொருத்தமாகும்.

ஒரே அச்சகம் தானா?

ஏற்கெனவே கேரள நாட்டில் தமிழ் அச்சகம் நிறுவப் பட்டிருந்தது. அண்டிறீக்கிப் பாதிரியார் இயற்றிய தம்பிரான் வணக்கம் 1578--ஆம் ஆண்டில் கொல்லத்திலும், கிரீசித்தியானி வணக்கம் 1579--ஆம் ஆண்டு கொச்சியிலும், கொம்பெசியோனாயரு 1580 ஆம் ஆண்டில் கொச்சியிலும், அடியார் வரலாறு 1586--ஆம் ஆண்டில் புன்னைக்காயலிலும் அச்சிடப் பட்டு கொல்லம், கொச்சி, புன்னைக்காயல் ஆகிய எல்லா ஊர்களிலும் வெவ்வேறு அச்சகங்கள் நிறுவப் பட்டனவா அல்லது ஒரே அச்சகம் தான் பெயர்க்கப் பட்டு வெவ்வேறு ஊர்களில் நிறுவப்பட்டதா என வினா எழுப்பலாம். வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு அச்சகங்களை நிறுவுமளவுக்கு அக்காலத்தில் இயேசு சபையினருக்கு நிதி வசதி இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மை. அத்துடன் இந்த உண்மையையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். 

முதல் முதலாக 1577--ஆம் ஆண்டு அச்சகத்துக்கு உரிய தமிழ் எழுத்துக்களை கோவாவில் உருவாக்கிய சுவாம் அவர்கள் இறந்த பின் 1578--ஆம் ஆண்டில்புதிய தமிழ் அச்செழுத்துக்களை ஜான் தெ ஃபாரியா அவர்கள் கொல்லத்தில் வார்த்து உருவாக்கினார். அவர் வார்த்தெடுத்த அச்செழுத்துக்களே, தம்பிரான் வணக்கம், கிரீசித்தியானி வணக்கம், கொம்பசியோனாயரு, அடியார் வரலாறு ஆகிய நான்கு நூல்களிலும் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஆகவே முதன் முதலாகக் கொல்லத்தில் நிறுவப் பட்ட தமிழ் அச்சகமே பின்னர் இடம் பெயர்ந்து கொச்சி, புன்னைக்காயல் ஆகிய ஊர்களில் நிறுவப் பட்டது என்பது தெளிவு.

மூல நூல்கள் அல்ல. 

தம்பிரான் வணக்கம், கிரீசித்தியானி வணக்கம், கொம்பசியோனாயரு, அடியார் வரலாறு ஆகிய நான்கு நூல்களுமே மூல நூல்கள் அல்ல. அவை மொழிபெயர்ப்பு நூல்களே. 'தம்பிரான் வணக்கம்' செப நூல்தான் என்றாலும் அதை மொழி பெயர்த்தோர் அண்டிறீக்கிப் பாதிரியாரும், புனித பேதுருவின் மனுவேல் அடிகளாரும் என நூலின் தொடக்கத்திலுள்ள போர்த்துக்கேய மொழிக் குறிப்பு தெரிவிக்கிறது. இந்த மனுவேல் அடிகளார் இந்தியரா வெளிநாட்டவரா என்பது தெரியவில்லை. கொம்பசியோனாயரு என்பது Confessionario என்னும் போர்த்துக்கேயச் சொல்லின் ஒலிபெயர்ப்பாகும். ஒப்புரவு அருட்சாதன நூல் என்பது இதன் தமிழ் மொழிபெயர்ப்பு. கத்தோலிக்க விசுவாசிகள் தகுந்த முறையில் ஒப்புரவு அருட்சாதனத்தை நிறைவேற்றவும் இயேசு சபைக் குருக்களுக்கு உதவியாகவும் இந்நூல் கோவாவில் போர்த்துக்கேய மொழியில் தயாரிக்கப் பட்டது. 

தம் முத்துக்குளித்துறைக் கத்தோலிக்கருக்கு இது பேருதவியாக இருக்குமென்பதால் அண்டிறீக்கிப் பாதிரியார் இதனைத் தமிழில் மொழிபெயர்த்து 1580-- ஆம் ஆண்டில் கொச்சியில் அச்சிட்டதாக இந்நூலின் முன்பக்கக்குறிப்பு தெரிவிக்கிறது. மூல நூலின் ஆசிரியர் யார் என்பது குறிப்பிடப் படவில்லை. இந்நூல் 216 பக்கங்களைக் கொண்டது, முன்னரே தெரிவித்தது போல, இன்று நாம் 'அடியார் வரலாறு' என வழங்கும் நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயர் எது என்பது நமக்குத் தெரியவில்லை. நூலாசிரியராகிய அண்டிறீக்கிப் பாதிரியார் தம் பல மடல்களில் தாம் இந்நூலைத் தயாரித்து வருவது பற்றியும், பின்னர் 1586, 1587 ஆம் ஆண்டில் எழுதிய மடல்களில் இந்நூலை எழுதி முடித்து விட்டமை பற்றியும் குறிப்பிடுகின்றார். இந்நூலை வத்திக்கான் நூலகத்தில் கண்டெடுத்துத் தமிழுக்கு அறிமுகப் படுத்திய பேரறிஞர் சேவியர் தனிநாயக அடிகளார், யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவரும் தூத்துக்குடி மறைமாவட்டக் குருவுமாகிய இவர் வடக்கன்குளம் புனித தெரசா உயர்நிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டு காலம் துணைத் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்தவர். உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறுவதற்கு வித்திட்டவர். 

ஐரோப்பிய மொழிகள் பலவற்றைப் பயின்று அவ்வந்நாட்டு மக்களிடமும் அறிஞர்களிடமும் அவ்வந்நாட்டு மொழிகளில் பேசித் தமிழின் பெருமையையும், சிறப்பையும் உலகெல்லாம் பரப்பி உலகத் தமிழ் தூதராகத் திகழ்ந்தவர். 1948--ஆம் ஆண்டு தம் இலக்கியக் கழகத்தை மேதகு ரோச் ஆண்டகையின் தலைமையில் நிறுவியர். Flos Sanctorum என்னும் இலத்தீன் மொழித் தொடரை, 'திருத்தொண்டத் திருமலர்" என மொழி பெயர்த்து வழங்கியுள்ளார். ஆனால் இந்நூலின் மறு பதிப்பை ஆய்வுப் பதிப்பாகத் தமிழ் இலக்கியக் கழகத்தின் வழியாக வெளியிட்டுள்ள அருள்திரு, ச, இராசமாணிக்க அடிகளார், 'அடியார் வரலாறு' என்னும் மொழிபெயர்ப்பினை வழங்கியுள்ளார். இந்நூலில் பல புனிதர்களின் வரலாறுகளை வழங்குவதாக அதன் ஸ்பானிஷ் முன்னுரையில் அண்டிறீக்கிப் பாதிரியார் குறித்துள்ளதால் 'அடியார் வரலாறு' என்பதே இந்நூலுக்குப் பொருத்தமான பெயராகும்.

மொழிநடை

முத்துக்குளித்துறை வாழ் மக்களின் பதினாறாம் நூற்றாண்டுப் பேச்சுத் தமிழே இந்நூல்களின் நடையாக அமைந்துள்ளது. பேச்சுத் தமிழ்நடை என்பதால் காத்து (காற்று), சங்காத்தம் (உறவு), வேணும் (வேண்டும்), மாறிச்சு (மாறிற்று), மினைக்கெட்டு (வினை கெட்டு--வேலை கெட்டு) இன்னா (இதோ), சத்தியெடு (வாந்தி எடு), குடு (கொடு), பிஞ்சு (பிய்ந்து), உசர (உயர) காச் (காய்ச்ச) சிலவு(செலவு) போன்ற பல கொச்சைச் சொற்களை அந்நூலில் காணலாம். அதே வேளையில் பிழையாளி(பாவி), என் பிறப்பு(தம்பி), சட்டைக் குப்பாயம் (மேற்சட்டை), கைக்கூலி(இலஞ்சம்), பெரும்பாடு(ஒரு வகை நோய்), பெருநாள்(திருவிழா), உயிர்ப்பு, நோன்பு, நோற்றல், அறிக்கை, வணக்கம், பணிவிடை, நெருப்பு, பேறு, இரத்தம், புதுமை, பெருக(அதிகம்) போன்ற நல்ல தமிழ்ச் சொற்கள் இந்நூலில் பயின்று வருதல் மிகுந்த வியப்பைத் தருவதாகும். 

இந்நூல்களில் பெரும்பாலும் இலக்கணத்துக்கு ஒத்த வாக்கிய அமைப்பு பயின்று வருவது சிறப்புக்குரியதாகும், நன்றாகத் தமிழ் கற்ற பலரின் உதவியுடன் தம் மொழிபெயர்ப்புக்களைச் செம்மையாக்க முயன்றதாக அடிகளார் தெரிவித்தாலும் சொற்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் இந்நூல்களில் இடம்பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் இப்பிழைகள் நூல்களின் சிறப்பைக் குறைத்துவிடவில்லை எனத் துணிந்து கூறலாம். 

மொழிபெயர்ப்பில் இடர்ப்பாடுகள்

அண்டிறீக்கிப் பாதிரியாரின் நான்கு நூல்களுமே போர்த்துக்கேயத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள். கிறித்தவ சமயம் தமிழகத்துக்குப் புதிது என்பதைக் கவனத்தில் கொள்ளும்போது கிறித்தவ மறையியல் சொற்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதில் அன்டிறீக்கிப் பாதிரியார் எத்துணை இடர்ப்பாடுகளை எதிர்கொண்டிருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். தமிழ் மொழியைச் சரியாக அறியாத காரணத்தால் அருள் என்னும் சொல்லை அடிகளார் அறிந்திருக்கவில்லை. போர்த்துக்கேயச் சொல்லைத் தமிழ் ஒலிக்கேற்றவாறு மாற்றி 'கிராசா' (அருள்) என்பதை 'கிராசை' என மொழிபெயர்க்கின்றார். இவ்வாறு சரியான தமிழ்ச் சொற்களை அறியாத இடங்களில் பல போர்த்துக்கேயச் சொற்களை ஒலிமாற்றித் தம் நூல்களில் அவர் பயன்படுத்தியுள்ளார். 

அவ்வாறே ஆள், இடப்பெயர்களையும் தமிழ் ஒலிக்கு ஏற்றவகையில் அவர் மாற்றியுள்ளார். இவ்வாறு, தமிழில் முதன் முதலாக அச்சேறிய நான்கு தமிழ் நூல்களும் முத்துக்குளித்துறையில் பணி புரிந்த அண்டிறீக்கிப் பாதிரியாரால் இயற்றப்பட்டவை என்பது முத்துக்குளித்துறை மக்களுக்கு இன்றும் மகிழ்ச்சியும் பெருமையும் தருவதாகும். அத்துடன் கூடுதலான மகிழ்ச்சிக்கு மற்றொரு தகவலும் உண்டு. அண்டிறீக்கிப் பாதிரியாரின் நூல்கள் அச்சிடப் பட முத்துக்குளித்துறைக் கத்தோலிக்கர் பொருள் உதவி செய்திருக்கிறார்கள் என்னும் தகவல் தான். "உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் சொர்க்கத்துக்க்குப் போகிற வழி படிப்பிக்கத் தக்கப் புத்தகங்களை அச்சிலே உண்டாக்க வேண்டுமாதலால், அநேக முதல் அச்சுண்டாக்கச் செலவுகளை ஏற்றோம். ஆகையினால் இந்தப் புத்தகம் உங்கள் நன்கொடையாக வரவிட்டோம்." எனக் கிரீசித்தியானி வணக்கம் முகவுரையில் அண்டிறீக்கிப் பாதிரியார் எழுதியுள்ளார். திருமறைப் பணிகளுக்குப் பொருள் வழங்குவதில் முத்துக்குளித்துறைக் கத்தோலிக்க மக்கள் இன்று போலவே பதினேழாம் நூற்றாண்டிலும் தாராள உள்ளத்துடன் செயல்பட்டிருப்பது என்பது பெருமைக்குரியதாகும்.

இதை விளக்கிடக் கீழ்க்கண்ட பட்டியல் உதவும்

இன்றைய வழக்கு                      போர்த்துக்கேயச் சொல்            அண்டிறீக்கின் வழக்கு

திருத்தூதர்(அப்போஸ்தலர்)           Apostolo                                             அப்பொசுத்தொலு
அதி தூதர்                                            Ariarnjo                                             அறுக்காஞ்சு
தூதர்                                                     Anjo                                                  ஆஞ்சு
அன்னம்மாள்                                       Ana                                                  ஆனாள்
திருமுழுக்கு(ஞான ஸ்நானம்)       Baptismo                                           வவுத்தீஸ்மு
விவிலியம்                                        Bible                                                  வீவிலிய
கல்வாரி                                             Calvario                                               க்ல்வாரியு
திருச்சபை, திரு அவை                  Igreja                                                   இகிரேசை
பூசை, திருப்பலி                               Missa                                                   மீசை
லாசர்                                                Lazaro                                                   இலாசரு
லூக்கா                                            Lucas                                                      உலுக்கசு
லூசியா                                            Luzia                                                     உலுசியான்
திருவருட்சாதனம்                        Sacremento                                             சக்கிறமெந்து
இறைவாக்கினர்                            Profeta                                                     பொறோப்பெத்தை
பவுல்                                              Paulo                                                         பாவுலு
பூசை இரசம்                                  Vinno                                                        வீநு


அமுதன் அடிகள்
இயக்குநர், பல்நோக்கு சமூக சேவை மையம், தஞ்சை

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com