வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 9 July 2016

பழந்தமிழர் கடல் வணிகம் – 3

பழந்தமிழர்களின் வணிகத்தை, முக்கியமாக அவர்களின் கடல்வணிகத்தை அறிந்து கொள்ளவேண்டுமானால் தமிழ் அரசுகள் வெளியிட்ட நாணயங்கள் குறித்தும், தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் குறித்தும் அறிந்துகொள்வது அவசியமாகும். அந்த அடிப்படையில் இக்கட்டுரை தமிழகத்தில் கிடைத்த நாணயங்கள் குறித்துப் பேசுகிறது. அத்துடன் வடநாட்டுடன் தமிழகம் நடத்திய வணிகம் குறித்தச் சில தரவுகளையும் இக்கட்டுரை தருகிறது.

தொன்மையான தமிழக நாணயங்கள்:

தொன்மையான தமிழக நாணயங்கள் குறித்து நாணய வியல் ஆய்வாளரும், தினமலர் ஆசிரியருமான இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது ‘செழிய, செழியன் நாணயங்கள்’ என்கிற நூலில்(முதல் பதிப்பு, ஏப்ரல்-2014) தந்துள்ள பல தரவுகள் குறித்துக் காண்போம். காசுகள் என்பது பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகும். சங்க நூல்களில் இச்சொல் பல முறை வருகிறது. அன்று இக்காசு ஒருவகை அணிகலனாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்காசு வேப்பம் பழம் போன்றும், நெல்லிக்காய் போன்றும் இருந்ததாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. சிறியதாகவும் கோளவடிவிலும் இருந்த பொன்னாலான இக்காசுகள் அன்று வணிகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொண்மையான நாணயங்கள் குறித்து வால்டர் எலியட் அவர்கள், “தொண்மையான தங்க நாணயங்கள் அனைத்தும் வழுவழுப்பான உருண்டை வடிவில் காணப்பட்டன. இன்னதென்று இனங் காண முடியாத ஒரு சிறு முத்திரைப் பதிவே அவற்றில் இருந்தது. இந்தத் தங்க நாணயங்கள் மிக நீண்ட நெடுங்காலமாகவே வழக்கில் இருந்து வந்திருக்க வேண்டும். அலாவுதீனின் படைகளும் அவனுக்குப்பின் வந்தவர்களும் டெல்லிக்குக் கொள்ளையடித்துச் சென்றவற்றில் பெரும்பகுதி இந்த நாணயங்களாகவே இருந்திருக்கின்றன” என்கிறார் (1.இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களது ‘செழிய, செழியன் நாணயங்கள்’ நூல், பக்: 15; 2.வால்டர் எலியட் – தென்னிந்தியக் காசுகள், பக்: 53)

தமிழகத்தில் திருநெல்வேலியில் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாங்கிய தொகுப்பில் தொண்மையான ஆறு சிறிய கோள வடிவ முடைய செப்பு நாணயங்களும், ஒரு வெள்ளி நாணயமும் இருந்ததாகக் குறிப்பிட்டு அதன் முழுத் தரவுகளையும் தனது நூலில் அவர் வெளியிட்டு உள்ளார். இதன் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்கிறார் அவர். இவை தாமிரபரணி ஆற்றுப் படுகையில் கிடைத்தவை. இந்தச் சிறிய கோளவடிவில் உள்ள நாணயங்களின் விளிம்புப் பகுதியில் ஒரு சிறிய சின்னம் உள்ளது. அதே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் முன்புறம் யானைச் சின்னம் உள்ள தொண்மையான ஐந்து நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன் பின்புறம் எந்தச் சின்னமும் இல்லை. இந்த ஐந்து நாணயங்கள் குறித்தத் தரவுகளை இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது அதே நூலில் வெளியிட்டுள்ளார். இதன் காலம் சுமார் கி.மு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு என்கிறார் அவர். இவைபோக முன்புறம் செழிய என்கிற பெயரும் பின்புறம் யானைச் சின்னமும் உள்ள வெள்ளீயம், செம்பு, பித்தளை, வெண்கலம் ஆகிய உலோகங்களால் ஆகிய 50 நாணயங்களின் தரவுகளையும் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிழற் படங்களோடு தனது அதே நூலில் வெளியிட்டு உள்ளார்கள். இவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என அவர் கருதுகிறார்(அதே நூல், பக்: 18-54).

நீலகிரி வெண்கலக் கிண்ணம் (கி.மு. 500)

coins 211தாமிரபரணியில் கிடைத்த, கி. மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, முன்புறம் செழிய என்கிற பெயரும் பின்புறம் யானைச் சின்னமும் உள்ள வெள்ளீய நாணயம் ஒன்று கல்பாக்கம் அணுசக்தி ஆய்வு நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது எனவும், அதன்படி அந்நாணயத்தில் பெரும்பகுதி வெள்ளீயமும், இரும்பு, நிக்கல், செம்பு முதலியன தலா ஒரு விழுக் காட்டிற்கும் குறைவாகவும் இருப்பதாக அறியப் பட்டுள்ளது எனவும், இந்த வெள்ளீய நாணயங்களை கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறார் இரா.கிருஸ்ணமூர்த்தி அவர்கள். ஆதிச்சநல்லூரில் பல வெண்கலக் கிண்ணங்கள் கிடைத்துள்ளன. இதனை ஆய்வு செய்த ஆய்வாளர் டாக்டர் சாரதா சீனிவாசன் அவர்கள் இவைகளின் காலம் கி.மு. 1000 ஆம் ஆண்டுவரை இருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளார். நீலகிரி அகழாய்வில் ஒரு அழகிய வெண்கலக் கிண்ணம் கிடைத்துள்ளது. அதனை ஆய்வு செய்த ஆய்வாளர் டாக்டர் சாரதா சீனிவாசன் அவர்கள் அதன் காலம் கி.மு. 500 க்குள் இருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். (SRINIVASAN, S., HIGH TIN BRONZEBOWL MAKING FROM KERALA, SOUTH INDIA AND ITS ARCHAEOLOGICAL IMPLICATIONS IN SOUTH ASIAN ARCHAEOLOGY, 1993, PP.695, 705).

இந்த வெண்கலக் கிண்ணங்கள், இந்த வெள்ளீய நாணயம் முதலியவற்றுக்கான மூலப் பொருட்களான வெள்ளீயம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே நேரடியாகக் கொற்கை துறை முகத்திற்குக் கொண்டுவரப் பட்டிருக்க வேண்டும் எனவும், அதற்கு தாய்லாந்து, மலேசியா நாடுகளில் மிகப் பழங்காலத்தில் இருந்து இந்த வெள்ளீயம் மிக அதிக அளவில் கிடைத்து வருவதே காரணம் எனவும், கூறுகிறார் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்(அதே நூல், பக்: 54-57)

முதுகுடுமிப் பெருவழுதியின் நாணயம்:

பிரித்தானிய-ஜெர்மன் ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட இலங்கை அநுராதபுரம் அகழாய்வில் ‘பெருவழுதி’ நாணயங்கள் சில கிடைத்துள்ளன எனவும் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும், அந்நாணயங்கள் எல்லாம் சம காலத்தவை எனவும் யாழ்ப்பாணப் ப. புஸ்பரட்ணம் என்பவர் தமிழகக் கடல்சார் வரலாறு என்கிற நூலில் தெரிவித்துள்ளார்(பக்: 24). இந்த நாணயங்கள் பெருவழுதி என்கிற பெயர் பொறித்த நாணயங்களாகும். அதாவது பெருவழுதி என்கிற பாண்டிய வேந்தனால் வெளியிடப்பட்ட நாணயங்களாகும். பெருவழுதி என்கிற பெயர் கொண்ட பாண்டியர்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிலர் இருந்துள்ளனர். ஆனால் நாணயங்கள் எல்லாம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனும்பொழுது, கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெருவழுதி என்கிற பெயர் பெற்றவன் முதுகுடுமிப்பெருவழுதி மட்டுமே ஆவான். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இவனுக்கு முன் பெரும்பெயர் வழுதி என்கிற ஒருவன் பாண்டிய வேந்தனாக இருந்துள்ளான். அவனது பெயர் பெருவழுதி அல்ல. பெரும் பெயர்வழுதி. அவனுக்குப்பின் வந்தவனே இந்த முதுகுடுமிப் பெருவழுதி ஆவான். இவன் அதிக வேள்விகளையும் செய்தவனாகக் கருதப்படுகிறான்.

ஆதலால் இந்தப் பெருவழுதி நாணயங்கள் முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட நாணயங்களே ஆகும். முதுகுடுமிப் பெருவழுதி நாணயங்களைத் தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களும் தமிழகத்தில் கண்டறிந்துள்ளார். இதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிறார் அவர். முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள், ஆட்சியாளனின் உருவம் பொறிக்கப்படாததாலும், அதன் எழுத்தமைதியைக் கொண்டும் இந்நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்கிறார். நமது இலக்கியக் கணிப்புப்படி இவனது காலம் கி.மு. 320-280 ஆகும். அதாவது கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு எனலாம்(ஆதாரம்: 1.பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் – டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி, டிசம்பர்-2013, பக்: 18, 2.Natana Kasinathanan-Tamils Heritage page: 45).

மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்:

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேல் இரும்பொறை என்பவன் தான் பத்தாவது பதிற்றுப்பத்தின் பாட்டுடைத்தலைவன் எனக் கருதப்படுகிறான். இவனுக்குப்பின் வந்தவன் பொறையர்களின் இறுதி வேந்தனாக இருந்த கணைக்கால் இரும்பொறை ஆவான். கணைக்கால் இரும்பொறைக்குப்பின் வாரிசுகள் இல்லை என்பதால், கோதைகுல வேந்தர்கள்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com