வேம்பாற்றில் தமிழ் பயின்ற அன்றிக் பாதிரியார்
தமிழ் மொழியின் அச்சுத் தந்தை என தமிழ் கூறும் நல்லுலகினால் அழைக்கப்படும் அன்றிக் பாதிரியார் 1520 ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டின் “வில்லா விசியோ” என்ற ஊரில் பிறந்தார். 1546 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டு முத்துக்குளித்துறையில் புதிதாக கத்தோலிக்கம் தழுவிய பரதவர்களுக்கு தேவையான ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுமாறு புனித சவேரியார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முத்துக்குளித்துறை வந்து சேர்ந்தார்.
1548 ஆம் ஆண்டில் வணக்கத்திற்குரிய அந்தோணி கிருமினாலி அடிகள் முத்துக்குளித்துறையின் சேசுசபை தலைமைக் குருவாய் பணியாற்றி வந்தார். புன்னைகாயல் வந்திறங்கிய ஹென்றிக் ஹென்றிக்ஸ் அடிகளாரை புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு ஆகிய ஊர்களில் மறைபரப்புப் பணிகளை பார்த்துக் கொள்ளுமாறு கிருமினாலி கேட்டுக் கொண்டார். இதனிடையில் 1549 ஆம் ஆண்டு வேதாளையில் நடைபெற்ற போரில் வடுகப் படையினரால் அந்தோணி கிருமினாலி அடிகள் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹென்றிக்ஸ் அடிகளார் முத்துகுளித்துறையின் தலைமைக் குருவாய் தேர்வு செய்யப்பட்டார்.
முத்துக்குளித்துறை பரதவர்களுக்கு மத போதகம் செய்யவும், அவர்களுடன் கலந்து பழகவும் வேண்டுமெனில் அவர்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன்படி தமிழ் மொழியை பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் முறையாகப் பயின்றார். முதன்முதலாகத் தமிழ் மொழியை முறையாகவும், இலக்கண வரம்போடும் கற்ற ஐரோப்பியர் இவர் ஒருவரே.
ஹென்றிக்ஸ் அடிகளார் தாம் தமிழ் மொழியை பயின்ற விதத்தை வேம்பாற்றிலிருந்து 1548 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி, உரோமையில் இருந்த சேசு சபையின் அதிபரான அர்ச். லொயலா இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடலில் பின்வருமாறு கூறுகிறார்....



இவ்வாறு ஹென்றிக்ஸ் அடிகளார் தமது கடிதத்தில் இந்த ஊர் என நமது தாய்பதியாம் வேம்பாற்றையும், வேறொரு சிற்றூர் என வைப்பாற்றையும் குறிப்பிடுகிறார். ஹென்றிக்ஸ் அடிகளாரின் கடிதத்தின் அடிப்படையில் அவர் தமிழ் பயின்றது வேம்பாற்றிலே என்பதை மட்டுமல்லாது அவர் தமிழ்படுத்திய விசுவாசக் கோட்பாடுகளை முதன் முதலாக வாசித்தது நமது திவ்ய இஸ்பிரித்து சாந்து சர்வேஸ்வரன் ஆலயத்திலே என்பது மிகவும் நமக்கு மிகவும் ஆனந்தமான செய்தியே ....
- நி. தேவ் ஆனந்த் பர்னாந்து