வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 28 July 2016

தேர்ஸ்

திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருவிழா நவநாட்களின் போது "தேர்ஸ்" என்ற வழிபாடு நடைபெறுவது வழக்கம். மதியம் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் இவ்வழிபாடு செபமாலை, தஸ்நேவிஸ் மாதா மன்றாட்டு, நற்செய்தி, மறையுரை மற்றும் அருளிக்க ஆசீருடன் நிறைவுபெறும்.

தேர்ஸ்-ன் பொருளை பலரிடம் கேட்ட போது, இது "நீண்ட மறையுரையின் பெயர்", "செபமாலை, மன்றாட்டின் பெயர்" என்று பலரும் பற்பல பொருளை கூறினார்கள். ஆனால் எதுவும் பொருந்துவதாக தெரியவில்லை.

தேர்ஸ்-ன் பொருள் இவ்வழிபாட்டின் மூன்று விடயங்களை உற்று நோக்குகையில் புலப்படுகிறது. அவை,

1) செபமாலையில் தியானிக்கப்படும் தேவரகசியம் - இந்த வழிபாட்டின்போது அனைத்து கிழமைகளிலும் தியானிக்கப்படுவது துக்கதேவரகசியம். பிறசெபமாலையில் செபிக்கபடுவது போல் அல்லாமல், தேர்ஸ்-ல் தேவரகசியம் வியாகுலமாதா பிராத்தனையாகப் பாடப்படுகிறது.

2) ஆசீர்வாதத்திற்கு பயன்படுத்தப்படும் அருளிக்கம் - திருசிலுவை அருளிக்கம்.

3) வழிபாடு தொடங்கும் நேரம் - நண்பகலுக்கு பின் மூன்று மணிக்கு வழிபாடு தொடங்குகிறது.

ஆதி கிறிஸ்தவர்கள் ஒரு நாளை பகல், இரவாக பிரித்தார்கள். அதை மேலும் ஒவ்வொரு மூன்று மணி நேரத்தை ஒரு பகுதியாக கணக்கிட்டார்கள். இவற்றில் பகல் மூன்றாவது (Terce -காலை 9 மணி) , ஆறாவது (Sext - நண்பகல் 12 மணி) மற்றும் ஒன்பதாவது (None - மதியம் 3 மணி) மணி நேரத்தில் செபிக்கும் பழக்கம் 2 ஆம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் உள்ளது. பின்னர் பல்வேறு திருத்தந்தையரால், புனிதர்களால் இந்த குறிப்பிட்ட மணி நேரத்தில் செபிக்கும் பழக்கம் மாற்றியமைக்கப்பட்டு இன்றளவும் துறவரத்தவர்களால் பின்பற்றப்படுகிறது. இதில் ஒன்பதாவது (மதியம் 3 மணி) மணி நேரம் இயேசு கிறிஸ்து மரித்த நேரம் என்பதால், பாடுகளை தியானித்து மனம்வருந்தி ஒப்புரவாகும் வழிபாடாக "தேர்ஸ்" திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் அன்னையின் ஆலயத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். இவ்வழிபாடு எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான வரலாற்று சான்றுகள் இல்லையெனினும், தேர்ஸ் என்ற இவ்வழிபாடு பாடுகளை தியானித்து மனம்வருந்தி ஒப்புரவாகும் வழிபாடு என்பதற்கு மேற்குறிய 1, 2 விடயங்கள் வலுவான சான்றாகிறது.

எண் மூன்றுக்கான போர்த்துகீசிய சொல் Três (தெரேஸ்) இதுவே மருவி தேர்ஸ்-ஆக மாறி இருக்கவேண்டும். எவ்வாறு பெயர் மருவியதோ அவ்வாறே வழிபாடும் மருவிவிட்டது. தேர்ஸ்-ன் இன்றைய வடிவம் 1904ஆம் ஆண்டு பண்டிதர் எம். எக்ஸ். ரூபீன் வர்மா அவர்களால் இயற்றப்பட்ட செபம், வியகுலமாதா பிராத்தனை (துக்க தேவரகசியதிற்கு பதிலாக செபமாலையில் தியானிக்கபடுவது), தஸ்நேவிஸ் மாதா மன்றாட்டு, மற்றும் நற்செய்தி மறையுரை அருளிக்க ஆசீருடன் தஸ்நேவிஸ் மாதா விருத்தம் பாடி நிறைவு செய்யப்படுகிறது.

- வாசு 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com