இரத்த பூமி - பாகம் 4
1500 களில் மத்திய தரை கடல் பார்பேரிய கடற்கொள்ளையர்களின் விளையாட்டு மைதானமாக இருந்தது. ஐரோப்பியர்களுக்கு எதிரான மத ரீதியான போர்களில் ஈடுபட்டிருந்தது ஒட்டோமன் பேரரசு. இந்த ஆப்ரிக்க ஐரோப்பிய பகுதிகளை உள்ளடக்கிய இஸ்லாமிய பேரரசின் நியமிக்கப்பட்ட தளபதிகளாகவே பல பெரும் கொள்ளையர்கள் பணியாற்றினார்கள். ரீஸ் என பட்டபெயர் பெற்ற இவர்களில் கடல் புயல் என பெயர் பெற்றவன் குர்து கோலி ரீஸ். அவருக்கு சுமத்ரா தீவில் ஒட்டமான் பேரரசின் காலனியை நிறுவும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதனை நிறைவேற்ற பரிட்சாத்த முறையில் மலபாருக்கு வந்தவனே இரப்பாளி.

ஐரோப்பியர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய குர்து கோலியின் சீடனுக்கு போர்ச்சுகீசியரை சாய்ப்பது அல்வா சாப்பிடுவது போல , அதுவும் தனது மூர் இனத்தை இந்த மண்ணில் கால் பதிக்க விடாமல் இடைஞ்சலாய் இருக்கும் பரதவ பழங்குடியை அடிமையாக்கிவிட்டால் தனது இனம் இங்கே கொடிகட்டி பறக்கும் என்ற இனவெறியுடன் தான் இதிலே தன்னை ஈடுபடுத்தி கொண்டான்.
அவனது தாக்குதல் வித்தியாசமானது தனது படையில் 10 ல் ஒன்றை முதலில் அனுப்பி எதிரிகளுக்கு காவு கொடுப்பான். இவ்வளவு தான் எதிரிகள் என போரிட்டு வெற்றி மமதையில் களிபடைந்து களிப்பாறும் போது மொத்த பலத்தோடு இடியாய் இறங்கி அழித்து ஒழிப்பான்.
ஏப்ரல் 30 மாலையிலே தனது பாணியிலேயே உத்தரவிட்டான் இரப்பாளி. ஈசல் கூட்டமாய் மணப்பாட்டுக்கு நேர் கிழக்கே தாவிலே தழும்பி கொண்டிருந்த இரப்பாளியின் படையிலிருந்து ஒரு சிறு குழு மட்டும் புன்னைகரை நோக்கி பாயை உயர்த்தியது.
பரணி கரை தாக்குதல்
ஏப்ரல் 30 மேற்கே கதிரவன் மயங்க கிழக்கே இருள் புன்னைகரை நெருங்கியது. பரணியின் கரைகள் வெள்ளம் வடிந்த ஓடைகளாய் மாறிபோயிருந்தது. கோட்டையின் மேலே பீரங்கிகளோடு போர் ஆயுதம் தரித்த வீரர்களும் இருந்தனர். கோட்டையின் 3 பக்க கதவுகளும் மூடபட்டிருந்தன.
மணமாகாகுமரிகளும் ,சிறுமிகளும், குழந்தைகளுமாக சாரை சாரையாய் ரகசிய வழி வழியே கோட்டைக்குள்ளே நுழைந்தபடி இருந்தனர். கோட்டை மதிற்சுவரை ஒட்டி புதைக்கப்பட்ட ஆயுதங்களை அவரவர் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டிருந்தனர் அப்போது இதை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த காத்தவராயன் கொற்கை கோ விடம் சொன்னான். என்னப்பா இது எவனும் துப்பாக்கியும் வெடிகுண்டையும் எடுக்கவில்லை.
இந்த வெடிகுண்டு துப்பாக்கி இதுக்காகத்தானப்பா பட்டங்கட்டிமாரோட முருகன் கோயிலை ஆத்தா பகவதியம்மன் கோவிலையெல்லாம் விட்டுட்டு இந்த வெள்ளைக்காரவனோட சிலுவையை தூக்கிகிட்டு திரியிறோம். ஆமா உண்மைதான் பரவமார் பரவனுடைய ஆயுதத்தைத்தான் எடுப்பான். ஆதியிலே சுறாவை பிடிச்ச எறிகம்புதான் வேலாச்சு. அதுதான் இன்னும் கொஞ்சம் தூரம் போவதற்காக அம்பாச்சி. வேலும் வில்லும் பாண்டி பரவமார் உலகத்துக்கு கொடுத்த கடல் ஆயுதம் நண்பா....
இன்னும் சொன்னா நூத்துக்கணக்கான ஆயுதங்களை நம்ம முப்பாட்ட பாண்டிமார் வச்சி சண்டை போட்டிருக்காங்க அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ...........
எப்பா சின்ன ராசா நிறுத்து நீ பாண்டிய வம்சம்தாப்பா, முதல்ல இவனுவளை துப்பாக்கியை எடுக்கசொல்லுப்பா, என ராயன் பொறுமை இழந்தான். கொற்கை கோ மக்களிடம் அன்பு கட்டளையிட்டு துப்பாக்கியையும் குண்டுகளையும் எடுத்து பகிர்தளித்தான். அப்போது போர்த்துகீசிய வீரன் வந்து அவசரமாய் கொற்கைக்கோவை அழைக்க நண்பா.... காணியாளா.... பார்த்துக்கொள்ளுங்கள் நான் கிழக்கு வாசல் போகிறேன் என கொற்கை கோ விரைந்தார்.
அங்கே தூய தந்தையும் கேப்டனும் இருக்க கடற் கொள்ளையரை எதித்து போராடும் அனுபவமிக்க போர்த்துகீசிய படைவீரர்கள் குறைவாக உள்ளதோடு கடற் படை முன்னவர் ஆன்டனியே பிரான்கோ டி குஸ்போ மதுரை சென்றுள்ளதால் படை நடத்த முன்னவர் இல்லாது திணறுவதாக தூய தந்தை தயங்கி தயங்கி சொல்ல நான் நடத்துகிறேன் படையை என பதிலளித்தார் கொற்கை கோ தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி ஆனால் கேப்டன் அரைகுறையாக தலையாட்டினார்.
தண்ணீர் வற்றிய வடகிளை பரணியின் மேற்கே தூரத்திலுள்ள சின்ன மரப்பாலத்தில் காத்தவராயனும் காணியாளரும் காவலாய் நின்றிருந்தார்கள். புன்னைக் கரையிலே படகுகளே இல்லை. பரதவர் பட்டணமா இது என்ற அடையாளமே இல்லை. இம்முறை படகுகளை இழக்க பரதவர்கள் தயாரில்லை ஆனாலும் அத்தனை படகுகளும் போன வழி தெரியவில்லை. நேரம் செல்ல செல்ல சொல்ல முடியாத திகில் புன்னை முழுவதும் வியாபித்திருந்தது.
மேற்கு பக்கம் இருந்த இளைஞர் படை காத்தவராயனின் ஆணைக்காக காத்திருந்தது. கிழக்கே கொற்கை கோ தலைமையிலே 50 பரதகுடி மறவர்கள் போர்த்துகீசிய உடையிலிருந்தார்கள். நடுநிசி வேளையில் திடீரென அமைதியை குலைத்தபடி சங்கொலி விடாது முழங்கி நின்றது கண் இமைக்கும் நேரத்தில் இளைஞர் படை ஒன்று மரப்பாலம் அடைந்து கரையோரம் பதுங்கியது. இன்னும் சற்று நேரத்தில் வடக்கிலிருந்து அதை தொடர்ந்து தெற்கிலிருந்து சங்கொலி முழங்கி நின்றது.
பொதுவாக தமிழனின் படைகளிலே ஆபத்து உதவிகள் எனப்படும் மக்களில் ஒருவராக வாழும் அரசு ஊழியர்கள் அடையாளங்களை மறைத்து வாழ்ந்து வந்தார்கள். சொல்ல போனால் இன்றைய உளவுதுறைகளின் முதல் படிமம் அது. படைகள் நகர்வதை சங்கேத மாக கூறியது அவர்களது சங்கொலிதான் முப்புறமும் எழும்பிய சங்கொலி எதிரிகளின் அருகாமையை சொல்ல பரதவ வீரர்கள் முப்புறமும் ஆற்றை கடந்து போய் பதுங்கி கிடந்தனர்.
தெற்கு தென்மேற்கே காணியாளனும் வடக்கு வடமேற்கே காத்தவராயனும் தலைமையேற்றிருந்தனர். எதிரி குதிரைகளின் குளம்பொலியும் சலசலப்பும் அருகாமை உணரபட்டபோது அவர்களது தலை தென்பட்டதும் பரணியின் வடகரை தென்கரை எங்கும் குவிக்கபட்டிருந்த சண்டு சருகுகள் விறகுகள் என கரையெங்கும் தீப்பற்றி எரிந்தது.
எதிபாராத தாக்குதல் நடத்துவதாக எண்ணிக்கொண்டு வந்த நாயக்கர் படைக்கு முதல் அடியே அதிர்ச்சியை தந்தது. ஆனால் வடக்கு நாயக்க படை சேனாதிபதி தொடர்ந்து முன்னேற ஆணையிட பரணி ஆற்றின் வடகரையை நெருங்கிய வடக்கு படை அங்கே வெட்டி வைக்கப்பட்டிருந்த பொறிகளுக்குள் குதிரைகளோடு விழுந்து புரண்டனர். முன்னனி வீரர்கள் ஆளுயர குழிகளுக்குள் குதிரையோடு கிடக்க, பின்வாங்கியது வடக்கு படை. தெற்கு படை தீயினை கண்டதுமே மிரண்டு போய் நின்ற நிலையிலே, தீப்பொறிகளாய் வைக்கோல் போர் உருண்டைகள் அவர்கள் மீது எரிஉமிழ்க் கலன்களால் வீசப்பட தென்படையும் பின்வாங்கி இருளிலே கலந்தது.
எங்கும் ஆரவாரம் படைகள் பின்வாங்கி விட்டன என செய்தி கிழக்கு கோட்டை வாசலிலுருந்து குதிரையிலே ஆன்டனியே பிரான்கோ டி குஸ்போ உடையிலிருந்த கொற்கை கோ. பாய்ந்து வந்து ஆவேச குரலிட்டார். ஆரவாரத்தை நிறுத்துங்கள். காணியாளா அவசரப்பட்டுவிட்டாய் எதிரிகள் இன்னும் முன்னேறி வந்திருக்க வேண்டும். அவர்களுக்கு நமது தாக்குதல் அதிர்ச்சியை தந்து விட்டது. மீண்டும் படை கூட்டி வருவார்கள் தாமதம் வேண்டாம். ராயா ....காணியாளா ...... வடக்கேயும் தெற்க்கேயும் ஓராயிரம் படை வருவது போல ஓங்கார குரலிட்டு ஆற்றை தாண்டி விரட்டுங்கள்.
கிழக்கே ஓரிருவர் மட்டும் இருங்கள், பொறியில் கிடப்பவர்களை கட்டி வையுங்கள். அனைவரும் செல்வோம் என முதல் ஆளாக குதிரையிலே வடக்கு பாலம் தாண்டி விரைந்தார். பரதவர்கள் இடிமுழக்க சத்தத்துடன் பின் செல்ல எதிரிகளை நோக்கி வடக்கு தெற்கு என இருட்டிலே புகுந்தனர். கிழக்கு வெளுத்தது பரதவர்கள் புன்னை திரும்பியிருந்தனர். நாயக்கர்கள் நாலாபுறமும் சிதறி ஓடி இருந்தனர். பிடிபட்ட நாயக்க வீரர்கள் பாதி திட்டங்களை கக்கி இருந்தனர்.
அப்போது தான் கொற்கை கோவிடம் கேட்டான் காத்தவராயன் நண்பா, ஒரு சந்தேகம், நேற்று எதிரிகளை கண்டு பயந்து விட்டாயோ..!! ஏன் அப்படி கேட்கிறே என கொற்கை கோ வினவ இல்லை. பயத்திலோ இல்லை ஆக்ரோசத்திலே ஏதோ வாய்க்கு வந்தபடி ஊளையிட்டு நாயக்கமாரை விரட்டினியே..! அதான்
என்னது உளருனேனா நண்பா வெட்டு குத்துனா உனக்கு புரியும் அவனுவளுக்கு தெரியுமா.. தெலுங்கறுக்கு அதான் தெலுங்குல பீரங்கிபடையை திருப்பு.. மேற்கே இருந்து 1000 பேரும், வடக்கே வா. கிழக்கே இருந்த 1000 பேரும் வடக்கே வா நு அவனுவளுக்கு புரியும் படி தெலுங்குல சொன்னேன். நல்லா புரிஞ்சிட்டுது அவனுவளுக்கு ஓடின ஒட்டத்தை பாத்தியில்ல... மதுரைக்கு போய் சேர்ந்திருப்பானுவ காணியாளன் சொன்னான். தெற்கே வந்தவனு அப்படிதான் கன்னியாகுமரி போய் சேர்ந்திருப்பான் போல பேசிக் கொண்டிருக்கும் போதே தாமிரபரணியில் நீர் மேலேழும்ப துவங்கியது. சந்தோசத்துடன் கொற்கை கூவினார்.
பாண்டியன் நா யாருடா நம்ம கிட்டேயா... ஏரல்லே மதகையே உடைச்சி தள்ளிட்டானுவ.... நம்ம பயலுவ வரட்டும் இனி இந்த நாயக்க பயலுவ... நண்பா கொஞ்ச பேர் மட்டும் இங்கே கண்காணிப்பில இருங்க இவனுவள கோட்டைகுள்ளாடி கொண்டு போய் வைங்க... நாம இனி கடற்கரைக்கு வோம்னு கொற்கை கோ வும் மற்றவரும் கிழக்கு கடற்கரையை நோக்கி நடந்தனர்.
அரபிக்கடலையே அள்ளி குடித்த மூரின் கடற்படையை மன்னாரின் நீரோட்டமும் வாடை காற்றும் பின்னி எடுத்தது. மணப்பாட்டிலிருந்து பாய் உயர்த்தியவர்கள் மீண்டும் மீண்டும் தெற்கேயே தள்ளப்பட்டார்கள். தாவுக்கு தாவி போய் மீண்டும் மேற்காக பாய் உயர்த்தி விடியற்காலை வந்து சேர வேண்டியவர்களை பரதவ கடல் விளையாடித் தீர்த்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இறுதியாக தூத்துக்குடிக்கு வடக்கே போய் மீண்டும் பாயை மாற்றி புன்னைகரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.
இரைப்பாளியின் உயிர் காவுப் படை:
அதை தொடர்ந்து வந்த இரைப்பாளியின் படைகளோ இன்னும் தாவுக்குப் போய் காணாமல் போயிருந்தன. பரதவரும் பகைவரும் பற்பல திட்டங்கள் தீட்டினாலும் காலம் தன் பங்குக்கு தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தது.