வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 3 August 2016

தூத்துக்குடியின் முதல் ஆலயம் ஒரு ஆய்வு

கால ஓட்டத்தின் புழுதிப்படலத்தில் புதையுண்டு கிடக்கும் பல வரலாற்றுத் தடயங்கள் வெளிச்சத்தின் முகங்காணாமலே மறைந்து கிடக்கின்றன. கள ஆய்வுக் காற்றின் சுழற்சி எப்போதாவது தூசு துடைத்தெறியும்போது நுதலித்துக் காட்டும் தடயங்களின் மேல் எந்த அளவிற்கு வரலாற்றியல் விவாதப் பிரதிவாதங்களின் ஒளி படுகிறதோ அந்த அளவிற்கே பிற்கால மனிதச் சாந்ததிகளால் மறக்கப்பட்ட முற்காலச் சம்பவங்களின் பகுதி பிம்பங்களையாவது திறந்து காண முடிகிறது. தூத்துக்குடியின் பழைய ஆலய வரலாறும் இதற்கு விலக்கல்ல.

மூர், இனத்தவரின் மூர்க்கக் கொலை வெறியாட்டத்தாலும், விஜய நகரப் பேரரசின் வடுகப் படையெடுப்புக்களாலும் பலமிழந்து பரிதவித்த பரத இனத்தின் பாதுகாப்பிற்காக போர்த்துக்கீசியரின் படைபலம் முதன் முதல் கிடைத்தது. 1505--ஆம் ஆண்டு தொம். லொரொன்சோவின் தலைமையில் வந்த கப்பற்கூட்டம் புன்னைக்காயல் கடலில் நங்கூரமிட்ட நாளில் தொடங்கியது என்பதும் 1536--ஆம் ஆண்டு தொம் பேதுரு வாஸ் என்ற போர்த்துக்கீசிய பேரதிகாரியின் முன்பு எழுபத்திரண்டு பரத குலத் தலைவர்கள் கொச்சியில் கிறித்துவம் தழுவியதைத் தொடர்ந்து, வேதாளையில் மூர் இனத்தவர் ஒடுக்கப்பட்டதும், அதன் பயனாய் ஒட்டு மொத்த முத்துக்குளித்துறை பரதவரும் கிறிஸ்தவ மறை தழுவியதும், பிறகு 1542--ஆம் ஆண்டு புனித சவேரியார் இங்கு வந்து மறை போதித்து ஒரு கட்டுக்கோப்பான பரத கிறித்துவ சமுதாயத்தை நிறுவிச் சென்றதும் வரலாற்று உண்மைகள் என்பதை மீண்டும் இவண் விரித்துரைக்கத் தேவையற்றது.

1505--ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த போர்த்துக்கீசிய கத்தோலிக்கர்களுக்கும், அவர்களோடு மண உறவு கொண்டிருந்த சுதேசிகளுக்கும், 1536 இல் ஒட்டு மொத்தமாக மறை தழுவிய பரத குல கத்தோலிக்கர்களுக்கும், தங்கள் மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக ஏதாவது ஒரு ஆலயம் இருந்திருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு ஒரு ஆலயம் இருந்ததென்றால் எப்போது --யாரால்--- எந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தது என்ற வினாக்கள் எழுவது இயல்பு. அவ்வினாக்களுக்கு விடை தேடித் துழாவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பலராலும் தொடரப்பட்டிருக்கும் தேடல்களுக்கும், துழாவுதல்களுக்கும், அவ்வப்போது வெளிப்படும் தடயங்களும். வரலாற்றியல் ஆய்வு சார்ந்த அணுகலும் நுணுகலுமே அடித்தளம் என்பதால் இன்று மக்களிடையே பரவலாக நிலவி வரும் ஞான வாதப் பக்திப் பாரம்பரியக் கதையின் எல்லை வட்டத்துப் பிடிக்குள் அடக்கி முடக்க இயலாதவாறு ஆய்வியல் முடிவுகள் எதிர்காலத்தில் நழுவிப்போகும் வாய்ப்புக் கூட உருவாகலாம்.

கி.பி. 1505 முதல் கி.பி. 1542 வரை அதாவது போர்த்துக்கீசியப் படை முதன் முதலில் இம்மண்ணில் கால் பதித்தது முதல் புனித சவேரியாரின் வருகை வரையிலான 37 ஆண்டு கால இடைவெளியில் தூத்துக்குடியில் ஒரு ஆலயம் இருந்தது என்பதையும் அது யாரால் எப்போது கட்டப்பட்டது என்பதையும் தெள்ளத் தெளிவாக அருட்தந்தை முனைவர் வெனான்சியுஸ் அடிகளார் தனது, "இடியின் இரகசியம்" என்ற தமிழ் நூலில் ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். (இடியின் இரகசியம்--முதற்பதிப்பு 1986--பக்கங்கள் 5-ஆம் 6 அவற்றின் அடிக்குறிப்புக்களும்). உரோமையில் படிக்கத் தனக்குக் கிடைத்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி, அங்கு ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கும் ஆவணங்களைக் குறிப்பாக இயேசு சபைத் துவக்க முன்னோடிகளான புனித லொயோலா இஞ்ஞாசியாரின் நண்பர் குழாத்தைச் சேர்ந்த புனித சவேரியாரின் இந்திய வருகைக்குப் பின் இங்கிருந்து எழுதப்பட்ட ஆண்டு மடல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள், நூல்கள் முதலியவற்றுள் புகுந்து நடத்திய ஆய்வுகளின் முடிவாக, 1536-இல் பரதவருக்கு ஞான நீராட்டிய அருட்தந்தை பேதுரு கொன்சால்வஸ் அடிகளார் 1538--ஆம் ஆண்டு தூத்துக்குடியில் புனித பேதுரு பெயரால் ஒரு பெரிய அகலமான ஆலயம் கட்டி எழுப்பினார் என்பதையும், அதே ஆலயத்தில் 1542--இல் இங்கு வந்த புனித சவேரியார் திருப்பலி நிறைவேற்றினார் என்பதையும் எண்பித்துக் காட்டி இருக்கின்றார்கள். அதில் கருத்து வேறுபாடிருக்கக் காரணமில்லை என்றாலும், அவர் சுட்டிக் காட்டுகின்ற அகலமான பெரிய பேதுரு ஆலயம் எந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தது என்பது இன்றும் விவாதத்துக்குரிய பொருளாகவே சிலரால் கருதப் படுகிறது.

தூத்துக்குடியில் இன்று இரண்டு தெருக்கள் புனித பேதுருவின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

1. புனித பீட்டர் கோயில் தெரு:

இன்றைய சிலுவைக் கோவிலுக்குப் பின்புறம் தெற்கு வடக்காய்ச் செல்லும் தெரு.

2. புனித பீட்டர் கோயில் சன்னதித் தெரு

ஒன்றாம் இலக்கத்தில் கூறப்பட்ட தெருவிலிருந்து ஏறத்தாழ 1.2 கிலோ மீட்டர் வடக்கே தள்ளி இன்றைய வணிகவரி அலுவலகத்திற்கு எதிராகக் கிழக்கு மேற்காகச் செல்லும் தெரு.

இலக்கம் 1-இல் கூறப்பட்ட பீட்டர் கோவில் தெரு தொடங்கும் தெற்கு மூலைக்குப் பின்புறம் குறைந்தது அரை நூற்றாண்டிற்கு முன்பு வரை பாழடைந்த நிலையில் ஒரு கோயிலும், அதன் நடுப்பந்தியில் இரு ஜாதித் தலைவர்களின் கல்லறைகளும் அருட்தந்தை ரொண்டர் அடிகளாரின் கல்லறையும் இருந்தன. அந்தக் கோயிலின் தென்புறம் விக்டோரியா பூங்காவும், பெரிய கோவிலுக்கென்று ஒரு பழைய கல்லறைத் தோட்டமும், திரு ஆசனக் கோயிலுக்கென்று ஒரு பழைய கல்லறைத் தோட்டமும் இருந்தன. அவை யாவும் அழிக்கப்பட்டு இப்போது அந்த இடம் முழுவதுமாக லசால் மேல்நிலைப்பள்ளிக் கூடமும் தலசால் கிறிஸ்தவ அருட் சகோதரர்களின் வாழிடமாகவும் மாற்றப் பட்டிருக்கின்றன.

இலக்கம் இரண்டில் கூறப்பட்ட புனித பீட்டர் கோயில் சன்னிதித் தெருவின் மேற்குக் கடைசியில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட புனித பேதுரு சிற்றாலயம் ஒன்று இன்றும் நிற்கிறது. இந்த ஆலயம் நிற்கும் இடம், முன்பு போர்த்துக்கீசியர் காலத்தில் கத்தோலிக்கக் கல்லறைத் தோட்டமாக இருந்து, டச்சுக்காரர்களின் படையெடுப்பின்போது தரைமட்டமாக இடித்துத் தள்ளப்பட்டு, பின்பு பிற இன மக்களின் குடியிருப்பாக மாறியதாகக் கருதப்படும் வாடித் தெருவிற்குத் தெற்கே அருகாமையில் அமைந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாக வாடித் தெரு ஆரம்பிக்கும் காளியப்ப பிள்ளை தெரு சந்தியில் இன்று புதுப்பிக்கப்பட்டு நிற்கும் வளைவு வாயிலைப் பழைய மைய வாடியின் வாசல்தான் என்று சில ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

நம்முன் எழுகின்ற வினா 1538--இல் அருட்தந்தை பேதுரு கொன்சால்வஸ் அடிகளாரால் கட்டப்பட்டதாக அருட்தந்தை வெனாஸ்சியுஸ் அடிகளார் எண்பிக்கும் பெரிய அகலமான அழகிய பேதுரு ஆலயத்திற்கும் மேலே கூறப்பட்ட இரண்டு கோயில்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா இல்லையா என்பது தான். அதற்குள் புகுமுன்பு மனித இன சமூகவியல் குடியிருப்பு மரபுகளையும் சில வரலாற்றுச் சம்பவங்களையும் நினைவில் கொள்வது அவசியம்.

1. மனிதக் குடியேற்றங்களும், நாகரிகங்களும் தொல் பழங்கால முதற்கொண்டு தோன்றும் பிறப்பிடங்கள் ஆற்றங்கரைகளும் கடற்கரைகளுமாகவே இருந்திருக்கின்றன.

2. நெய்தல் புலத்து மக்களின் வாழ்வாதாரம் கடல் சார்ந்த ஒன்றாதலால்--அவர்கள் தங்கள் நிரந்தரக் குடியிருப்புகளை அமைக்கும்போது சில சாதகமான இயற்கைக் கட்டமைப்புகள் கொண்ட இடங்களையே தெரிவு செய்வர்.

3. அக்கட்டமைப்புக்களில் முதன்மையானது அலைவாய்க்கரைக்கு அருகாமையில் உள்ள, பாதுகாப்பான மேட்டுப் பகுதி. அவ்வாறு மேட்டுப் பகுதியில் தோன்றிய கடற்கரைக் குடியிருப்புகள், வளர்ந்து துறைமுகமாகி மற்ற மூன்று திசைகளிலும் மேடு, பள்ளங்களைக் கடந்து பரந்து விரிந்து பெரு நகரமானாலும், அந்த ஊர் கடல் மட்டத்திற்கு மேல் எத்தனை அடி உயரத்தில் இருக்கிறது என்பதை நிர்ணயப்படுத்தும் அளவீட்டுக்குறி (Bench Mark) அந்த ஊர் முதலில் தோன்றிய மேட்டுப் பகுதியான இடத்தை வைத்துத் தான் நிலைப்படுத்தப்படுவது வழக்கம்.

4. அந்தப் பாதுகாப்பான மேட்டுப் பகுதியில் நல்ல நிலத்தடி நீர் கிடைக்கவேண்டும். ஏனென்றால் உயிர் ஆதாரங்களில் குடிநீர் முக்கியமான ஒன்று. பர்தவர்களின் பூர்வீகக் குடியிருப்பிடங்கள் கடலுக்கு அருகாமையில் இருந்தாலும் நல்ல நிலத்தடி நீர் கிடைப்பதைக் காண இயலும்.

5. பொதுவாக ஆலயங்களை ஊரின் நடுவிலோ அல்லது ஒரு முதன்மையான இடத்திலோ தான் அமைப்பது வழக்கம். பரதவக் கிறிஸ்தவர்களும் போர்த்துக்கீசியரும் தங்கள் ஆலய முகப்புகள் கடலை நோக்கி இருக்கும்படி அமைத்து அதையே தங்கள் கடல்வழிப் பயணத்தின் போது "மதி" வைத்து (Bearing) இலக்குகளைக் கண்டறியப் பயன்படுத்தினர். 

6. போர்த்துக்கீசியர் காலத்தில் அன்றைய மரபுப் படி ஆயர்கள், அருட் தந்தையர்கள் மற்றும் பொது நிலையினரில் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அரசர்கள், சிற்றரசர்கள், பிரபுக்கள் போன்றோர் இறந்துவிட்டால் அவர்களின் உடல்களைத் தகுதிக்கேற்ப ஆலய நடுப்பகுதியிலோ முற்றத்திலோ அடக்கம் செய்வது வழக்கத்திலிருந்தது. சென்னையில் "லஸ்" ஆலயம், வண்ணாரப்பேட்டை புனித ரோக் ஆலயம் போன்ற பழமை வாய்ந்த ஆலயங்களில் அது போன்ற கல்லறைக் கற்களை இன்றும் காணலாம்.

7. 1536 முதல் 1658 ஆம் ஆண்டு வரையில் ஏறத்தாழ 122 ஆண்டுகள் தூத்துக்குடியில் கோலோச்சிய போர்த்துக்கல் ஆதிக்கம் 1658 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வான் கோவன்ஸ் என்ற டச்சுப்படைத் தளபதியின் படையெடுப்பால் முறியடிக்கப்பட்டது. போர்த்துக்கீசியரும் பரதர்களும் ஊரை விட்டுத் துரத்தியடிக்கப்பட்ட பின் அவர்கள் வாழ்ந்த தூத்துக்குடியை டச்சுக்காரர்கள் கைவசப்படுத்தி அதில் ஒரு கோட்டையை எழுப்பினார். புனித பேதுரு ஆலயமும், போர்த்துக்கீசியரும் பரதரும் வாழ்ந்த இடத்தில் அமைந்திருந்ததால் டச்சுக் கோட்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது. (காண்க; இடியின் இரகசியம் பக்கம் 63)

மேற்கூறிய மரபுகளையும் வரலாற்றுச் செய்தியையும் மனதில் வைத்துக் கொண்டு பழைய பேதுரு ஆலயம் இருந்த இடத்தைத் தேடுவோம்.

சீர்த்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த ஆங்கிலேயரான பிஷப் கால்டுவெல் தாமெழுதிய திருநெல்வேலி மாவட்ட வரலாற்று விவரச் சுவடியில் ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார். அதாவது (இப்போது மதுரா கோட்சுக்குச் சொந்தமான கோட்டை ஆபீசு) பழைய டச்சுக் கோட்டைக்கருகில் அமைந்திருந்த கால்வினிய திருச்சபை ஆலயத்தைப் புதுப்பிக்கும்போது தமிழில் எழுதப்பட்ட ஒரு கத்தோலிக்கப் பெண்ணின் கல்லறைக் கல்லைக் கண்டெடுத்ததாகவும் அதை அந்த ஆலயத்தின் சுவரில் பதித்ததாகவும் குறிப்பிடுகின்றார். அந்தக் கல்லறைக்கல்லை இன்றும் தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமாகிவிட்ட கடற்கரைச் சாலையிருக்கும் English Church இன் தலைவாசலின் உட்புறம் வலது பக்கச் சுவரில் காணலாம். ஆயர் கால்டுவெல் 1872--ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மாவட்டத்தில் மறைப்பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு தமிழறிஞர்; சிறந்த ஆய்வாளர்.

வாசகர்கள் எளிதில் படித்துப் பார்ப்பதற்கேதுவாக கல்லறைக்கல்லின் படத்தைக் கீழே தருகின்றேன்.

வாசகத்திற்கு மேலே தலைப்பில் ஒரு அரசு முத்திரையும் (Coat of Arms) நான்கு பூக்களுக்கு மத்தியில் ஒரு மயிலின் உருவமும் பொறிக்கப்பட்டு அதன் கீழ் ஆண்டு மாதம் தேதி இவைகள் தமிழ் இலக்கத்தில் தொடங்கி அக்காலத் தமிழ் எழுத்தியல் முறைப்படி மெய்யெழுத்துக்களுக்கு மேல் குத்து இடாமல் எழுதப் பட்ட வாசகத்தின் பொருள்: "சுவாந்தாக் குருசு சிந்திக்கு (Joan da Cruz) மகள் சுவானாளை (Joanna) இந்தக் குழியில் அடக்கியிருக்குது. இதை வாசிக்கிறவர்கள் தம்பிரானுக்காக ஒரு கிரியெலசொனும் (Kyrie Eleison) ஆவே மரியாவும் (Ave Maria) ஓதிக்கொள்ளவும்" என்பதாகும். இந்தக் கல்வெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டைக்குறிக்கும் தமிழ் இலக்கங்களை உயர்திரு James Julius Cotton என்ற ஆங்கில அதிகாரி 1904/1906 இல் தாமெழுதிய The Inscriptions on Tombs and Monuments in and around Madras Presidency என்ற நூலில் கி.பி. 1618 என்று புரிந்தெழுதுகின்றார். சென்னை லொயோலா கல்லூரிப் பேராசிரியரும் ஆய்வாளருமான அருட்தந்தை முனைவர் S. ராஜமாணிக்கம் சே.ச அடிகளாரும் தனது "The Oldest Epitaph in Tamil", என்ற ஆய்வறிக்கையில் கி.பி. 1618 என்றே எடுத்துக் கொள்கின்றார். மேற்கூறப்பட்ட பேரறிஞர்களின் கருத்துக்கட்கு முரண்படுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். அக்கல்வெட்டின் காலம் எது என்பதைக் கண்டறிந்து அச்சுவட்டின் மேல் ஆய்வின் அடி பற்றி நடப்பது தான்.

முதலில் தமிழ் இலக்கங்கள் எவை--அவை ஆங்கில எண்களுக்கு நிகர் என்னவென்று பார்ப்போம். க=1 உ=2, ங=3, ச=4, ரு=5, சு-6, எ=7, அ=8, கூ=9, ய=10, ள=100, சூ=1000, ௵= வருடம், ௴=மாதம், ௳=தேதி, மார்கழி= டிசம்பர் 15 முதல் ஜன்வரி 14 வரை உள்ள தமிழ் மாதம்.

கி.பி. 1618 என்று தமிழில் எழுதியிருந்தால் அது சரசாளய அ என்று தொடங்க வேண்டும்.

(அதாவது சா=1000, சாள=600, ய=10, அ=8)

ஆனால் நாம் இன்று காண்பதெல்லாம் ஒரு சிறு இடைவெளி விட்டு )/ளய அ என்பனதான் )/ என்று சிதைவுப்பட்டுக் காணப்படும் எண். சா என்ற 6 ஐக் குறிக்கும் எண்ணின் சிதைவா, அல்லது எ என்ற 7 ஐக்குறிக்கும் எண்ணின் சிதைவா என்பது தான் வினா. )/என்ற சிறிய வளைவும், பெரிய கோடும் எ என்ற எண்ணை ஒத்தே காணப்படுகின்றது. எனவே அது எளய அ என்று 718 ஆவது ஆண்டைக் குறிப்பதாகவே இருந்திருக்க அதிக வாய்ப்பிருக்கின்றது. "எ" என்ற 7 ஐக் குறிக்கும் எண்ணுக்கு முன்பு ஆயிரத்தைக் குறிக்கும் "சர" என்ற தமிழ் எண் இருந்ததென்றால் அது 1718 ஆக வரும். 1658 இலேயே அந்த இடம் டச்சுக்காரர் வசம் சென்றுவிட்டதால் 1718 இல் கத்தோலிக்கப் பெண் அங்கு அடக்கம் பண்ணப்பட வாய்ப்பே இல்லை. எனவே கல்லறையின் காலம் 718 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் தேதி என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது.

தென் தமிழகம் முழுவதும் போர்த்துக்கீசியர் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பிருந்தே கொல்லம் ஆண்டு முறைதான் பின்பற்றப்பட்டது என்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை முன் வைக்கலாம். இன்று கூட திருமண அழைப்பிதழ்களில் இந்து சகோதரர்கள் கொல்லம் ஆண்டையும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது எழுதித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. ஆங்கில ஆண்டுக் கணக்கும் மாதக் கணக்கும் தமிழகக் கிறித்துவர்களால் பிற்காலத்திலேயே பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். 

இந்திய காலக் கணிதத்தில் அரிய பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர் ஆய்வறிஞர் L.D.சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள். தனது ஆய்வின் முடிவாக An Indian Ephemeris என்ற காலக் கணித நூலை வெளியிட்டார். அவருடைய ஆய்வின் அடிகளைப் பற்றிக் கொண்டு தமிழ் பல்கலைக் கழக ஓலைச்சுவடித் துறை ஆய்வாளர் மோ.கொ. கோவை மணியன் "இந்தியக் காலக் கணிதம் கி.பி. 700--1999" என்ற நூலை எழுதியிருக்கின்றார்கள். மேற்கூறிய இரு ஆய்வாளர்களும் தெற்குக் கொல்லம் ஆண்டு கி.பி. 824 இல் தொடங்கியதாக வரையறைப் படுத்தியிருக்கின்றனர். எனவே கி.பி. 824 க்குப் பின் 718 ஆவது கொல்லம் ஆண்டு என்பது ஆங்கில, அதாவது, கிறிஸ்து சகாப்தத்தில் 1542 ஆம் ஆண்டாக வரும். எனவே சுவானா என்ற பெண்ணின் உடல் கி.பி. 1542 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கல்லறைக்கல் தோன்றிய காலம் 1542 என்று கணித்த முடிவிற்கு வேறு சில சுற்று வட்ட ஆதாரங்களும் புலப்படுகின்றன.

1. தமிழக அரசின் தொல்பொருள் துறை அருங்காட்சியகக் காப்பாளாராகப் (Curator) பணியாற்றி ஓய்வு பெற்ற என் கெழுதகை நண்பரும் புதைபொருள்/கல்வெட்டுக்கள் ஆய்வாளருமான சென்னை குரோம்பேட்டையைச் சார்ந்த உயர்திரு எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் மேற்படி கல்வெட்டை ஆராய்ந்து என்னோடு பகிர்ந்து கொண்ட செய்திகளில் ஒன்று, கல்வெட்டில் காணப்படும் தமிழ் எழுத்து வடிவு அமைப்பு 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில் விஜய நகர அரசு காலத்துத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்து வடிவத்தை ஒத்திருக்கிறது என்பது.

2. புனித சவேரியார் மூன்று இந்தியர்களோடு 1542-- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் நாள் கோவாவிலிருந்து புறப்பட்டு ஒரு மாத காலக் கடல் பயணத்திற்குப் பின் மணப்பாடு வந்து அங்கிருந்து நடந்து தூத்துக்குடிக்கு வந்தார். முதல்வேலையாக சில சுதேசிகள் துணையோடும் தன்னோடு வந்தவர்கள் துணையோடும் முக்கியமான கத்தோலிக்க ஜெபங்களையும் திருமறைப் போதனைகளையும், (Catechism) தமிழில் மொழி பெயர்த்துப் பரவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து மனப்பாடம் செய்ய வைத்தார். (காண்க: The Jesuits in India--1542--1773 by Fr. John Correia Afonso S.J. Page 10-- published by Heras Institute of Indian History and Culture, Bombay)

3. புனித சவேரியார் கணக்கப்பிள்ளைகள் என்ற உபதேசிமார்களை ஊருக்கு ஊர் நியமித்து தமிழ் ஜெபங்களையும் அடிப்படை மறைக்கல்வியையும் கற்றுக் கொடுக்கச் செய்தார். (காண்க அதே நூலில்)

4. கி.பி. 1547 முதல் இங்கு மறைப்பணியாற்றி நாட்காட்டியில் சீர்த்திருத்தம் செய்து கி.பி. 1600 இல் புன்னைக்காயலில் மரணமடைந்து தூத்துக்குடி கல்லூரி சிற்றாலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட அருட்தந்தை என்றி என்றிக்கஸ் காலத்திலேயே ஜெபங்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்யப்பட்டு கணக்கப்பிள்ளைகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டன. எனவே அவர் காலத்திற்குப் பிந்தியதல்லக் கல்லறைக் கல்வெட்டு.

5. எனவே தமிழ் ஜெபங்கள் பரவலான நடைமுறைக்கு வருவதற்கு முன்பே கல்லறைக் கல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் வாசிப்போரை கிரியலெசோனும் ஆவே மரியாவும் ஓதிக்கொள்ளவும் என்று லத்தீன் மொழி ஜெபங்களே குறிக்கப்பட்டிருக்கின்றன.

எனவே கல்வெட்டின் காலம் 1542 ஆகத்தான் இருக்க வேண்டும். அதாவது புனித சவேரியார் தூத்துக்குடி வந்து மறைப்பணி துவங்கிய ஓரிரு மாதங்களுக்குள் சுவானாள் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்போது புனித பேதுரு ஆலயம் கட்டப்பட்டிருந்த இடத்தைத் தேடத் துணியலாம்.

1. அலைவாய்க் கரைக்கு அருகில் பாதுகாப்பான மேட்டுப் பகுதியில் நல்ல நிலத்தடி நீர் கிடைத்த இடமாகத் தெரிந்தெடுத்து பரதர்களும் போர்த்துக்கீசியர்களும் குடியேறியிருந்த தூத்துக்குடியை 1658 இல் டச்சுக்காரர்கள் படை எடுத்துக் கைப்பற்றி அதில் குடியேறிக் கோட்டையையும் அமைத்துக் கொண்டனர். (காண்க இடியின் இரகசியம் பக்கம் 56)

2. அருட்தந்தை பேதுரு கொன்சால்வஸ் அடிகளாரால் கட்டப்பட்ட பெரிய அகலமான பேதுரு ஆலயம் டச்சுக்காரர்களால் பிடித்தெடுக்கப்பட்ட அந்தப் பாதுகாப்பான மேட்டுப் பகுதியிலேயே இருந்திருக்க வேண்டும். எனவே தான் அந்த ஆலயம் இடிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதுவே புதுப்பிக்கப்பட்டு கால்வீனிய சபை ஆலயமாக மாற்றப்பட்டிருக்கலாம்.

3. 1658 இல் டச்சுக்காரர்கள் வசம் மாறிய அதே பகுதி 1820இல் இறுதியதாக ஆங்கிலேயர் ஆட்சி தூத்துக்குடியில் மலர்ந்த போது ஆங்கிலேயர் கைக்கு மாறியது.

4. சீர்திருத்த திருச்சபை போதகராக இங்கு வந்த வண கால்டுவெல் அவர்கள் அந்த டச்சுக்கோயிலைப் புதுப்பிக்கும்போது மேலே நாம் கூறிய கல்லறைக் கல்லைக் கண்டெடுத்து அந்த ஆலயச் சுவரிலே பதித்ததாகச் சொல்கிறார். அந்தக் கல் இன்றும் ஒரு தடயமாக இருக்கிறது. பிஷப் கால்டுவெல் 1872- ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கி மறைப்பணி ஆற்றியவர்.

5. அந்தக் கல்லறைக்கல்லில் அரசு இலஞ்சினையும் மயிலும் பொறிக்கப்பட்டிருப்பதால் அடக்கம் செய்யப்பட்ட பெண் அரச குலத்தையோ அல்லது உயர்ந்த அதிகார வர்க்கத்தையோ சேர்ந்தவளாக இருந்திருக்க வேண்டும். எனவே தான் ஆலயத்தினுள்ளோ அல்லது அதன் முற்றத்திலோ அடக்கம் செய்யப்பட்டிருக்கிறாள்.

6. கத்தோலிக்க மறையின் இலத்தீன் மொழி ஜெபங்கள் பொறிக்கப்பட்ட ஒரு கல்லறை பரிவினை சபை ஆலயத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இன்று English Church இருக்குமிடத்தில் பழைய பேதுரு ஆலயம் இருந்திருக்க வேண்டும்.

7. தூத்துக்குடி கடல் மட்டத்துக்கு மேல் எத்தனை அடி உயரத்தில் இருக்கிறது என்று கூறும் நிர்ணயக் குறி (Bench Mark) இன்றும் English Church வளாகத்திலே தான் இருக்கிறது. எனவே அந்தப் பகுதி தான் பூர்வீகப் பழைய தூத்துக்குடி.

அப்படியானால் முதலில் கூறிய இரண்டு பேதுரு ஆலயங்களும் ஏன், எப்போது வந்தன என்று வினாக்கள் எழுவது இயல்பு. அதற்குப் பல காரணங்களும் ஆதாரங்களும் இருக்கின்றன. கட்டுரை விரியும் என்பதைக் கருத்தில் கொண்டு சுருக்கமாகக் கூற முயல்கிறேன்.

ஜாதித் தலைவர்களும் அரசர்களும் தூத்துக்குடியையே தலைமை இடமாக முதலில் கொண்டிருந்தனர். எவ்வாறு ஆங்கிலப் படையெடுப்பின் போது ஜாதித் தலைவனும் பரிவாரமும் மணப்பாட்டிற்கு ஓடி ஒளிந்தனவோ அது போலவே டச்சுப் படையெடுப்பின் போது வீர பாண்டியன் பட்டணத்திற்கு ஓடி ஒளிந்திருக்க வேண்டும். டச்சுக்காரர்களோடு செய்த உடன்படிக்கைக்குப் பிறகு தூத்துக்குடிக்கு வந்து இரண்டாவது குடியேற்றமாக கல்லூரி ஆலயம், அருட்தந்தையர் இல்லம் இருந்த இடத்திற்கும் புனித பவுல் ஆலயம் முன்பிருந்த இடத்திற்கும் மத்தியில் ஜாதித் தலைவனும் அவனது பரிவாரமும் குடும்பங்களும் குடியேறியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களின் பூர்வீக வாழிடம் டச்சுக்காரர்களின் கோட்டையாக மாறிப் போயிருந்தது. பெரிய மாப்பிள்ளை சந்துக்கு வடக்கு, கிரக்கோப் தெருவிற்குக் கிழக்கு, பவுல் சந்திற்குத் தெற்கு, கடற்கரை சாலைக்கு மேற்கு, இந்த எல்லைக்குட்பட்ட கட்டிடங்களின் பழைய மூல ஆவணங்களை ஆய்வு செய்தால் வாஸ், கொரைரா, கோமஸ், பல்தான், மோத்த, சில்வா போன்ற அன்றைய அதிகார வர்க்கத்தவர்களின் பெயர்களைக் காணலாம். மேலும் ஜாதித் தலைவர்களைக் கண்காணிக்க அவர்களின் புதிய குடியிருப்பிற்குப் பின்புறம் அதாவது இன்று 11, 11 A இலக்கங்களைக் கொண்ட கிரகோப் தெரு வீட்ட்டில் டச்சுக் காவல் நிலையம் இயங்கி வந்ததற்கான தடயங்கள் இன்றும் இருக்கின்றன.

அது போலவே உழைக்கும் வர்க்கம் குறிப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டோர் கல்லூரி ஆலயத்திற்குத் தெற்கே குடியேறி அந்த இடத்தைக் கீழத் தூத்துக்குடி என்றழைத்தனர். கீழத் தூத்துக்குடி கெழுத்துக்குடியாக மருவிற்று.

வடக்கே கடலோடிகளின் மீகான்கள் அதாவது பாய்மரக் கப்பல் தலைவர்களின் குடியிருப்புத் தோன்றியது. முத்துக்குளிப்போர் அதற்கும் வடக்கே குடியேறினர். இவ்வாறு டச்சுக்காரர்களின் அனுமதியோடு தெற்கிலும் வடக்கிலுமாக இரண்டாவது குடியேறியவர்கள் தங்கள் பழைய பங்கு ஆலயத்தின் நினைவாக புதிய பேதுரு ஆலயங்களைக் கட்டி எழுப்பியிருக்கலாம்.

செல்வராஜ் மிராந்தா
மண்டல அதிகாரி, மத்திய அரசு பாய் கப்பல் துறை (ஓய்வு)
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com