வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 13 August 2016

கடல் வாங்கலும், வரளமும்

"இன்னக்கி கடல் வாங்கலும்,வரளமுமா இரிக்கி. கடலுக்கு போவ ஏலாது" என்று கடலோடிகள் பொதுவாக சொல்வார்கள். கேட்பவர்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் வாங்கலும்,வரளமும் சிறிது வேறுபாடானவை. கடலின் ஆழிப் பகுதிகளில் பெரிய அலைகள் அதிகம் தோன்றுவதை அதாவது அலை கொந்தளிப்பை “கடல் வாங்கல்" என்ற சொல் மூலம் கடலோடிகள் வழங்குகின்றனர். 

வாங்கல் கடுமையாக இருந்தால் மீன் பிடிக்கச் செல்வதில்லை. கடல் வாங்கலின் போது உருவாகும் கம்பீரமான "கடல் முழக்கம்" ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவு வரை ஒலிக்கும். கடல் வாங்கல் மூன்று நாட்கள் வரை நீடிக்கும். கடல் வாங்கலாக இருக்கும் போது அடிப் பகுதி நீர் கலங்குவதால் பாறைகளுக்கு அடியில் பதுங்கி வாழும் கல் இறால் மீன்கள் இடம் பெயரும். 

இவைகளை பிடிக்க கல் இறால் வலைகளை முந்தைய தினம் கடலில் பாய்த்து (போட்டு) விட்டு அடுத்தநாள் நாள் சென்று வலைகளில் மாட்டி இருக்கும் கல் இறால் மீன்களையும், பாறை வளைகளுக்குள் வாழும் மீன்களையும் பிடித்து வருவர். கடலில் பிணம் மிதந்தால் கடல் வாங்கலாகி விடும் என்ற நம்பிக்கை இன்றும் சில கடலோடிகளிடம் உள்ளது. எனினும் நிலவின் ஈர்ப்பு விசையால் கடலில் ஏற்படும் ஓத ஏற்றமே வாங்கல் என்ற அறிவியல் உண்மையையும் கடலோடிகள் உணர்ந்துள்ளதோடு நீரோட்டத்தின் தன்மையும், காற்றின் போக்கையும் வைத்து வாங்கல் வரப்போவதை முன்கூட்டியே கணிக்கின்றனர்.

கடற்பரப்பு முழுவதும் காற்றுடன் சிற்றலைகள் மிகுந்து காணப்பட்டால் "வரளம்" என்று கடலோடிகள் குறிப்பிடுகின்றனர். கடல் வரளமாக இருந்தாலும் மீன் பிடிக்கச் செல்வர். காற்று சேலாகும் (அமைதியாகும்) போது வரளம் நின்று கடல் அமைதியாகி விடும்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com