வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 18 August 2016

இரத்த பூமி - பாகம் 5
முத்தம்மையின் பாம்படம்

நாயக்கபடைகளுக்கு பலம் கூட்டி மீண்டும் 2000 வீரர்களை வடக்கு தெற்காக செந்தூருக்கும் தூத்துக்குடிக்கும் பாளயத்திலிருந்து அனுப்பி வைத்தான் விதாலன். கீழக்கரை குதிரைமரைக்காயர் சங்குமரைகாயர் சகோதரர்களோடு தொடர்புகொண்டு விதாலன் தாக்குதல் பற்றி நாயக்கமன்னருக்கு அவர்கள் வழியாக செய்தி அனுப்பியிருந்தார் பாண்டியனார். பேச்சு வார்த்தைக்காக மதுரையிலிருந்த போர்த்துகீசிய தலைமைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட பேச்சுவார்த்தையை புறகணித்தவர்கள் கடலிலே இரப்பாளி தாக்குதலுக்கு பயந்து வேதாளை கடல்வழி பயணத்தை விடுத்து பாண்டியனார் செய்தி அனுப்பியிருந்த மறவர்கள் துணையோடு மேற்கே பெரியகுளம் வழியாக மலைதாண்டி கொச்சினுக்கு பயணப்பட்டனர்.

இரவோடு இரவாக சாய்க்கப்பட்டிருக்க வேண்டிய நாயக்கபடை தப்பியது பின்னடைவுதான் என்றாலும் பரணியாற்று வெள்ளம் தாண்டி நாயக்கர் படை வரமுடியாது என்பதனால் தற்போதைய மூர்களின் தாக்குதலை எதிர்நோக்கியே புன்னை பரதவர்கள் காத்திருந்தனர்.

காலையிலிருந்து புன்னை கரையோரம் கடற்கரை ஊர்பரதவர்களும் பட்டங்கட்டிகளும் வந்திறங்கிய வண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் கோட்டைக்குள்ளே உணவு பரிமாறப்பட்டு தூரத்தில் காத்திருக்க மீண்டும் அனுப்பி வைத்தனர், கூட்டம் கூட்டமாக புன்னைகரையின் வடக்கு தெற்கு கடலோரங்களின் தாளை புதர்களுக்குள்ளும் மணல் மேடுகளுக்குள்ளும் மறைந்துகிடந்தனர்.

இந்த முறை போர்ச்சுகல் படை மதுரை சென்றுவிட்டதால் பரதவர்களே படைவீரர்களாக மாறியிருந்தனர். படைகளம் முழுவதும் கொற்கைகோவின் கட்டுப்பாட்டில் இருந்தது. கொற்கைகோ, கேப்டன்கொட்டின்கோ காத்தவராயன் காணியாளன் மற்றும் போர்ச்சுகல் உடையில் பரதகுல மறவர்கள் 100 பேரும் போர்ச்சுகல் சிப்பாய்கள் 50 பேருமாக பரதவ இளைஞர்கள் 100 க்கும் அதிகமாக மொத்தத்தில் சுமார் 300 க்கு குறையாமல் இருந்தனர். அனைவருமே புதைக்க பட்டிருந்த வலைகளை தாண்டி கடலடியில் நின்றுகொண்டிருந்தனர்.

காலம் தனது காவு படலத்தை தொடர காத்திருந்தது, தூரத்தில் சின்னதும் பெரிதுமான பாய் மரக்கப்பல்கள் தென்பட்டன. மக்கள் அங்கு இங்குமாக ஓட ஆரம்பிக்க, அந்த கூட்டத்தில் சின்னராசா எங்கள கொன்னு போடுங்கன்னு நேற்று சொன்ன வீரபரத்தி முத்தம்மை தனது இடது பாம்பட காதை அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட ஒரு கையில் பாம்படமும் மறு கையில் காது அறுத்த கத்தியுமாய் பரதகுல பத்தினி கண்ணகியாய் வந்தாள். ஐயா சின்னராசா, இந்தாங்க பாம்படம் பரத்திமார் மானத்தையும், பரவமார் கடல்நிலத்தையும் காப்பத்துங்கய்யா என்றபடி கொற்கைகோவின் வலது கை விரல்களுக்குள் பாம்படத்தை திணித்தாள்

தன் எதிரே போர்களத்தில் இரத்தகோலத்தோடு பரத்தி முத்தம்மை ஒரு நிமிடம் ஆடிப்போனார் கொற்கைகோ. ஏதும் சொல்ல முடியாமல் யாத்தே முத்தம்மை, என்னஇது...?  போஆத்தா சண்டைக்கு நாளியாச்சி.!!

அவர் சொன்னதையும் கண்டுகொள்ளாமல், “பரம்பரை பாண்டிமார் வழக்கப்படி ஆத்தா நான் வைக்கிறேய்யா ரத்த குறி” என்றபடி கிழிந்து தொங்கிய தன் காது சதையை அழுத்தி பிடித்து இரத்தத்தை உறுவி எடுத்து கொற்கைகோ நெற்றியிலே தேய்த்து சரித்திரம் சொல்லும் ராசா.....! உங்க வெற்றியை னு சொல்லியபடி அவள் வைத்த குறியால் வெற்றி கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொண்டு பதட்டமே இல்லாமல் ஆணவத்தோடு நிதானமாக கோட்டையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

கையிலிருந்த பாம்படத்தையும் இரத்தம் சொட்டசொட்டபோகும் முத்தம்மை வையும் பார்த்த கொற்கைகோ யாத்தே இந்தா பாம்படம் என்றழைத்தவர், ஏதோ நினைத்தபடி அதை அப்படியே.. தன்சீருடையை இழுத்து கழுத்துக்கு கீழே உள்ளே போட்டவர் உணர்ச்சி வசப்பட்டபடி இன்னும் வேகமானார். கொற்கைகோ கூவினார். வீரர்கள் தவிர அனைவரும் கோட்டைக்குள் சென்று வாயில்களை அடையுங்கள் சீக்கிரம். இரண்டு நாட்களாக அல்லாடி இப்போதுதான் வாடையின் வாட்டம் அறிந்து பாயை திருப்பிய இரப்பாளியின் காவுபடை இறக்கை கட்டி பறப்பதுபோல அலை கிழித்து பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

இன்னும் சில மணித்துளிகளே உள்ள நிலையில் கொற்கைகோ கேப்டனிடமிருந்து தொலைநோக்கியை வாங்கி இரப்பாளியின் படைகளை பார்த்தார். தூரத்து பாய் ஓட்ட வேகத்தோடு வந்த முதல் கப்பல் பெரியதாக இருந்தது. மூன்று பக்கமும் பீரங்கி இருந்தது. 2oo க்கு அதிகமானோர் கறுப்பு ஆப்ரிக்கர்களும், வெள்ளை அரபியர்களும் கலந்து இருந்தனர், அடுத்து அடுத்து என 3 சின்னதும் பெரிதுமாக கப்பல்களில் சுமார் 1000 க்கும், குறையாதவர்களாக இருந்தனர்.

வேக முடிவெடுத்த கொற்கை உடையிலுள்ளவர்கள் மட்டும் கடலடியில் நில்லுங்கள் மற்றவர்கள் வடக்கு வாசல் செல்லுங்கள். கேப்டன் நீங்களும் உங்கள் வீரர்களும் கோட்டை மேல் நின்று பீரங்கி தாக்குதலை கவணியுங்கள், ராயா நீயும் மேலே போ.. காணியாளா நீ மட்டும் கட்டளை கொடியோடு என்னோடு இங்கேயே இரு, சீக்கிரம் சீக்கிரம் என விரட்ட …. அப்படியே ஒருகூட்டம் பெயர்ந்து வடக்கு வாசல் போனது. கொட்டின்கோ தனது வீரர்களோடு கோட்டைக்குள் சென்று கதவை மூடினார்.

இரப்பாளியின் முதல் பாய்மரக் கப்பல் தறிகெட்டுபாய்ந்து புன்னை கரையேற வந்தது. பாய்கள் அவிழ்த்து விடப்பட கனபொழுதில் கிழக்கே கடலோரம் நின்றிருந்த பரதவர்களை கடந்து மேற்கே வடபரணி கிளைக்குள்ளே பாய்ந்து முன்னேறியது. பரணியின் எதிர்வெள்ளத்தால் வேகம் குறைய வடகிளையின் வடக்குகரையோடு ஒதுங்கி தரை தட்டி நின்றது.

அதை தொடர்ந்து வந்த அடுத்த கப்பலும் அவ்வாறே உள்நுழைந்து பொழிமுகம் தாண்டி கரையேறி நின்றது. இன்னும் இரண்டு கப்பல்கள் பாய்கள் அவிழ்க்கப்பட்டு வேகம் குறைந்த காரணத்தால் கரையருகே உள்ளே முன்னேற முடியாமல் தாவுக்கு மீண்டும் வழிய ஆரம்பித்தது. உயிர் களை புசித்தே தீராத பசி கொண்ட காலம் எனும் காலன் இதோ வந்தே விட்டான்.

முதல் கப்பலில் இருந்து தளபதி பாய்மர கயிற்றை வெட்டி தாவிபிடித்து இரண்டாம் கப்பலுக்கு பறந்து கொண்டிருந்தான். கவனித்த கொற்கைகோ காணியாளா கிழக்கே பீரங்கியால் தாக்கு என ஆணையிட்டபடி பரணி கரையோரமாக மேற்கே நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். காணியாளன் கணநேரத்தில் தன்கொடி தூக்கி கிழக்காலே தாழ்த்த மேலிருந்து இராயன் ஆணையிட வினாடியில் கடலுக்குள்ளே பீரங்கிகுண்டுகள் இடைவிடாது குண்டுமழை பொழிந்தன. இரண்டு கப்பல்களுமே நினைப்பதற்க்கு நேரமின்றி தீக்காட்டில் அலும்பி அமிழ்ந்தன.

பரணியின் தென்கரை மேலேறி நின்ற 2ஆம் கப்பலிலிருந்து கர்ண கொடுரமான ஊளையோடு அரபிய கொள்ளை தளபதி ஆணையிட்டான். அனைவரையும் தாக்கி கோட்டையை பிடியுங்கள், எதிர்பவரை கொன்று போடுங்கள். உடனே தாக்குங்கள்..... என்றபடி கப்பலில்இருந்து கீழே துள்ளி குதித்தான். அவன் விழுகின்ற நடுவழியிலேயே தூரத்திலிருந்து ஓடிவந்தபடி கொற்கைகோ வீசியடித்த குத்துவாள். மின்னலாய் தளபதியின் தொண்டை குழியில் பாய்ந்து அவன் உயிரை பருகியது. 

உயிரற்ற உடலாய் தாமிரபரணி கரையில் விழுந்தான் தளபதி முதல் உயிர் பலி கணநேரத்தில் பீதியான கொள்ளையர்கள் ஆணையிட ஆளில்லாமல் அதிர்ச்சியடைந்தனர். கட்டுகோப்பிளந்து கலவரமாயினர். கொற்கை ஆணையிட்டார், பரதவ மண்ணிலே பாரசீகரின் பாதம்கூட படக்கூடாது வெட்டிச்சசாயுங்கள் மறவர்களே! மேற்கு நோக்கியே நகருங்கள்!! வலைகளுக்குள் சிக்கி கொள்ளாதீர்கள்!!!

படகுகளிலிருந்து குதித்த இராட்சதர்களின் பாதங்கள் பரணிகரை தொடுவதற்கு முன்பே பரதவ வீரர்கள் பாய்ந்து முன்னேறி வெட்டிசாய்த்தனர். வடக்கு கப்பலிலிருந்தும் ஆற்றிலே குதித்து கொள்ளையர்கள் நீந்தி வந்து கரையேறிக்கொண்டிருக்க, கிழக்கே இருந்து மேற்காக கொற்கைகோ வெட்டி சாய்த்து முன்னேறி கொண்டிருந்தார். கடலுக்குள் எரிந்த கப்பலிலிருந்து கரைக்கு வந்த கொள்ளையர்களை மணல்மேடுகளில் பதுங்கி கிடந்த பட்டங்கட்டிமார் படை பந்தாடியது.

தெரியாத இடத்தில் புரியாத நிலையில் பொறியில் சிக்கிய இறப்பாளிக்கூட்டம் பரதவர் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது. களம் கைமாறூம் நிலையிலே கோவில் மணி விடாது ஒலிக்க கோட்டையை பார்த்த கொற்கை அங்கே இராயன் மேற்கே நோக்கி கைகாட்ட மேற்க்கே திரும்பி பார்த்தபோது, பரணியின் வடகரையில் மேற்க்கே வெகு தூரத்தே படகுகளிலும் கரையோரமாகவும் நாயக்க படைகள் சாரை சாரையாக வந்துகொண்டிருப்பதை கண்டதும் கோட்டை கதவுகளை திறந்துவிடு இராயா என உத்தரவிட்டார் கொற்கைகோ.

எல்லோரும் கோட்டைகுள்ளே செல்லுங்கள் என்றபடி வடக்குவாசலை நோக்கி சண்டையிட்டப்படி முன்னேறினார். ஏற்கனவே அரபிய தளபதியை வெட்டிசாய்த்த போர்த்துகீசிய தளபதியாக போர்த்துகீசிய தளபதி உடையிலிருந்த கொற்கைகோவை நினைத்துக்கொண்ட கொள்ளையர்கள் அவரையே குறிவைத்து மொத்தமாக சுற்றி வளைத்து தாக்க துவங்கினர். பரதவ வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு வாசல் வழி நுழைந்து கொண்டிருக்க கிழக்கு வாசல் வழியாக காயம் பட்ட பரதவர்களை தூக்கி சென்று கொண்டிருந்தனர்.

பேயாட்டம் ஆடிய இரப்பாளியின் அரக்கர்கள் நடுவே இடது விலாவிலே ஒரு குத்துவாள் ஊடுறுவி புதைந்திருக்க கீழே வலது கால்ஆடு சதை பிய்த்து தொய்க்க முன்னும் பின்னுமாக வெட்டுகள் விழுந்து விழுப்புண்களோடு பரதவனின் தந்தை வீர அபிமன்யுவாக தனி ஆளாக நின்று  நாலாபுறமும் சமாளித்தபடி வீரக்களமாடிக் கொண்டிருந்தார் கொற்கை. அவரது உடம்பிலிருந்து வழிந்த குருதி அவரை சுற்றி செஞ் சதுப்பு மணலாய் மாறி இருந்தது.

கோட்டைவாசல் நெருங்கி கொண்டிருக்க லாவகமாக பின்வாங்கி பின்வாங்கி வடக்குகோட்டை வாசல் சுவற்றோடு சாய்ந்தார். கொற்கைகோ, அவரது வெள்ளை சீருடை இரத்தத்தால் சிவப்புடையாக மாறியிருந்தது. அதற்குள்ளே சில பரதவவீரர்கள் குறுக்கே புகுந்து தாக்குதலை வாங்கி தன் பரதவதலைவனின் ஒரே வாரிசை காப்பாற்ற தங்கள் உயிரை ரத்தமும் சதையுமாக தாரை வார்த்து கொண்டிருந்தனர். 

கண்கள் மயங்க எண்ணங்கள் சிதற தன் தந்தை பாண்டியனார் தன்னை நம்பி இட்டு சென்ற பணி நாயக்க படைகள் வருகிறதே....? 
என் மக்கள் கதி .....? எல்லோரும் கடலுக்குள்ளே போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ,....? 
வீணாக என் மக்களை பலி கொடுத்து விட்டேனோ ...? 
நம்மால் எதிரிகளை வெல்ல முடியாதா......?
அனைவருக்கும் பரவன்தான் பகைவனா...?
ஆத்தா முத்தாரம்மன விட்டதால பழி எடுக்கிறாளா.....? 
பாண்டிமார் வம்சமே பட்டு போகுமோ......? 
என் தவறான முடிவால் பரதகுலம் அழியுமோ.....? 
ஐயா இருந்திருந்தா இப்படி நடக்காதே.....?

நான் இறந்துவிடுவேனோ நினைக்கும்போதே கொற்கை கோ மனபலமும் இழந்தவரானார்.

தன் மரண கணக்கை மனதுக்குள்ளே வாசிக்கும் போதே அதனை முடித்து வைப்பது போல் கொலை வெறியோடு காட்டுமிராண்டி ஒருவன் கொற்கை கோ மேல் பாய்ந்தான். கோட்டைச் சுவர் மணலிலே விழுந்தவர். மேலேறி அமர்ந்த அந்த கருப்பு அரக்கன் கொற்கை கோ வின் கழுத்தை நெறித்து, மூச்சை அடக்க முழு பலம் கொடுத்தான். கண்கள் பிதுங்க திணறிய கொற்கை கோ தள்ளி விட முடியாமல் தத்தளித்தார். தன் இறுதி நிமிட முட்டலிலே கை கால்களை உதறி பரிதவித்தார்.

மேலிருந்து இதை கண்ட காத்தவராயன் அலறித் துடித்தான் கோட்டைச்சுவரின் மேலே கிழக்கிலிருந்து கொட்டின் கோ விரைந்து வந்து கொண்டிருந்தார். அந்த கறுத்த பேயின் வலது கை கொற்கை கோ வின் இடது விலாவிலே புதைந்திருந்த குத்துவாளை திருக்கி உறுவ உயிர் வலியோடு தன் மரணத்தை உணர்ந்த கொற்கை கோ தன்னிலை மறந்தவராய் காலகாலமாக சொன்ன வார்த்தை ஆபத்தான கணத்திலே அறியாமல் விழுந்தது காப்பாத்து ஆத்தா முத்தாரம்மா என்பது.

காப்பாத்து ஆத்தா முத்தம்மை என்றே வந்தது. முத்தம்மையின் ரத்தகுறியும் வெற்றி வாழ்த்தும். கண நேரம் மனக்கண்ணில் வந்து போனது. அதே கணத்தில் கறுத்த காட்டேரி குத்துவாளை ஓங்கி கொற்கை கோ வின் வயிற்றோடு இறக்கியது.

கொற்கை கோ வின் சீருடைக்குள் வயிற்றில் கிடந்த முத்தம்மையின் பாம்படம் கணீரென்று சத்தமிட்டு வாளை வழுக்கி விட மரண அவஸ்தையில் மணலில் துளவிய கையில் பட்ட துப்பாக்கி எடுத்து டப்பென்று சுட தாடையில் குண்டு பாய்ந்து பொத்தென்று விழுந்தது. கொற்கை கோ வின் உயிர் குடிக்க நினைத்த காட்டேரி ஏதோ நடந்தது என அறிந்தும் அறியாமலும் மேலே இருந்து பொறுக்க முடியாமல் கீழே குதித்தான் காத்தவராயன்.

கொட்டின் கோ இப்போது மேலிருந்து தன் குழுக்களோடு கொற்கை பாண்டியனை சுற்றி வந்த கொள்ளையர்களை குறிபார்த்து சுட்டு தள்ள கூட்டம் கிழக்காக ஓடியது. இரத்த கறையோடு அங்கே வந்து சேர்ந்த காணியாளன். கொற்கை கோ வை இந்நிலையில் கண்டு ஓலமிட்டான். அங்கே கொற்கை கோ மயங்கி போயிருந்தான். காணியாளனின் அலறல் எல்லோரையும் பீதியாக்க ராயன் காணியாளனுக்கு விட்டான் ஓர் அறை குழப்பத்தை உருவாக்காதே கொற்கைக்கு ஒன்றுமில்லை.

தூக்கு என்றபடி இருவரும் கொற்கையை தூக்கி பிடிக்க காத்தவராயன் அப்படியே கொற்கையை தூக்கி தோள்களிலே போடவும் கோட்டை கதவுகள் மீண்டும் திறந்து கொற்கையும் தப்பிய பரதவர்களும் கோட்டைக்குள் நுழைந்து கொண்டனர். கதவு மீண்டும் அடைக்கப்பட்டது.

வடகரை கொள்ளை கப்பல்களை அழிக்க எரிஉமிழ்கலன்கள் வழி வைக்கோல் குண்டுகள் வீசப்பட்டன, அழிந்தும் அழியாமல் பரணியில் ஆடியபடி கப்பல்கள் கரையில் அமிழ்ந்து இருந்தன. வெளியூர் பட்டங்கட்டிகள் மீண்டும் தாளை புதர்களிலும் மணல் மேடுகளிலும், பதுங்கி கொண்டனர்.

புன்னைகரையிலே பரதவர்களின் ரத்தமும் பகைவரின் ரத்தமும் தோய்த்து போய் கிடக்க கிழக்கு வடக்கு தெற்காக படகிலும் கரையிலுமாக நாயக்கர்கள் கோட்டையை சூழ சூரியன் மறைய துவங்கியது. பகைவரின் பேயாட்டம் ஆரம்பமாகியது...

கடற்புறத்தான்

(தொடரும்) 

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com