வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 6 August 2016

பழந்தமிழரின் நாணயங்களும் காசுப்பரிமாற்றமும்

முன்னுரை : உலகினில் உள்ள மூத்த இனம் தமிழ் இனம் என்பர்மானுடவியல் அறிஞர்கள். தமிழ் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்பதும் அறிஞர்களின் முடிவாகும். குமரிக்கண்டத் தமிழர் பற்றிய கருத்தாக்கம் கடலியல் ஆய்வுகளால் உறுதி படக் காணலாம். சிந்து சமவெளி நாகரிகம் பழந்தமிழர் நாகரிகம் என்ற உண்மை உலகத்தின் பார்வையில் இன்று பட்டுள்ளது. அத்தகைய செம்மொழித்தமிழின் ஊற்றாக உள்ளவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் இடைச்சங்க நூற்களாகிய பஞ்சமரபு, ஐந்திறம் முதலானவற்றுடன் கி.மு. நூற்றாண்டைச் சார்ந்த தமிழிக் கல்வெட்டுக்கள் அயல் நாட்டவர் வணிகக் குறிப்புக்கள், முதலானவற்றுடன் பழங்காசுகள், வரலாற்று ஆவணமாகவிளங்கக் காணலாம். இன்றைய அகழ்வு ஆய்வில் கி.மு. நூற்றாண்டைச் சார்ந்த கிரேக்க, ரோமானிய ,சோனக (அரேபிய), வணிகர் தம் காசுகள் கொங்கு மண்ணில் ஏராளமாகக் கிடைத்துள்ளன. கி.மு.660 ல் கிரேக்க ரோமானிய நாடாளு மன்றத்தில் இயற்றப் பெற்ற தீர்மானம் ஒன்றில் கப்பல் கப்பலாக தமிழகத்திற்குக் காசு வந்ததைக் கூறும். இதனையே சங்க இலக்கியங்களும் சுட்டும். எனவே வரலாற்றின் ஆற்றல் மிக்க சான்றாக விளங்கும் உள்நாட்டு வெளிநாட்டுக் காசுகள், வணிகங்கள், சங்க இலக்கியங்கள் கூறும் நாணயங்கள், பண்ட மாற்றுக்கள், அயல் நாட்டவர் குறிப்புக்கள், அகழ்வில் கிடைத்த காசுகள் யாவும் தமிழ் இனத்தின் உலகளாவிய வணிகச்சிறப்பினை உணர்த்தி வருகின்றன. கற்களில் பொறிக்கப் பட்ட ஓவிய எழுத்துக்கள் முதல் இக்காலக் கணிப்பொறிஎழுத்துக்கள் வரை தமிழுக்கு 24 வகையான எழுத்துக்கள் உள்ளதையும் பல கல் வெட்டுக்கள் காசுகள் பற்றிப் பேசுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாணயம் – காசு – விளக்கம்

நயம் என்றால் நீதி , நாணயம் என்றால் சொல்லின் , நாவின் நீதி முறை என்று பொருள் படும். காசு என்பது சங்க காலத்திலேயே குற்றம்,தங்கக்காசு மற்றும் அணிகலன் என்னும் பொருள்களில் வழங்கியதை அறியலாம். காசு என்பதற்கு காசுக்கட்டி, குற்றம் , கோழை, நாணயம் ,பொன், மாதரணிவடம், மணி, வெண்பாவின் இறுதிச் சீர் என்னும் பொருள்களை அகராதி கூறும்(1) .

“ கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம் “

( வேப்பம் பழம் போன்ற காசு ஆதியில் உலகெங்கும் காசுகள் கட்டியாகவே இருந்தன)

“புது நாண் நுழைப்பான் நுதிமாண் வள் உகிர்ப் பொலங்கல ஒருகாசுஏய்க்கும் “

(கிளியின் வாயிலுள்ள வேப்பம் பழம் பொற்கொல்லன் நகத்திற்கு இடையில் உள்ள காசுக்கு உவமையாதல் காண்க) (2)

” பொன்செய் காசின் ஒண்பழம்“(3)

“காசு முறை திரியினும் ” (4) 

” மாடல்ல மற்றையவை “ (மாடு + ஐ = மாடை = பொற்காசு) (5)

எனவே நாணயம் என்பது பழங்காலத்தில் சொல்லின் நீதியையும், காசு என்பது பண்ட மாற்றுக்குப் பயன் படுத்திய காசினையும் ,அணிகலன்களையும் , பொற்காசினையும் குறித்ததை அறியலாம்.

சங்க இலக்கியத்தில் பண்டமாற்றும் காசும்:

திருக்குறளில் வைப்பகம் (வங்கி) என்றால் பொருள் பெற்றவர்கள் அந்தப் பொருளைக் கொண்டு அற்றார் அழிபசி தீர்த்தல் என்று கூறுவதையும் காண்க . எனவே பொருள் பெற்றவன் அதனை வங்கியில் போடாமல் ஏழைகளின் பசிப் பிணி போற்றுவதே அறம் என்றுகாண்க.

சங்க இலக்கியங்களில் ஏராளமான உள் நாட்டு வெளிநாட்டு வணிகம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன . அவற்றுள் வேண்டிய சிலவற்றை இங்குக் காண்போம்.

“தென்னாட்டிலிருந்து எகிப்து ஆப்பிரிக்கா வரை நம் நாட்டுப் பரதவர்….வணிகப் பொருளைக் கொண்டு குவித்தனர் என்றும் ஏடனிலிருந்து அரேபிய வணிகர்கள் இதற்கு உதவியாக இருந்தனர் என்றும்…..கூறுகின்றார்“(6)

” அரிசி, மிளகு, வால்மிளகு, இஞ்சி…இவற்றிற்கு கிரேக்க மொழியில் இன்றும்தமிழ்ப்பெயரே வழங்குகின்றன.” (7)

“மேனாட்டுக் குதிரைகளும் சீனம் , பர்மாப் பொருட்களும்…..உள்நாட்டுச்சரக்குகள் பற்றிப் பட்டினப் பாலை பேசும்” (8)

உரோம நாணயங்கள் எங்கு எங்கு கிடைத்தன என்பதைக் கொங்கு நாட்டு வரலாறு பட்டியல் இடக்காணலாம் (9)

கலைமகள் கலைக்கூடக் கை ஏடு பக்கம் 44ல் காசுகள் பற்றிய பட்டியல் ஒன்று தரக் காணலாம். கொங்கு நாடு என்னும் நூலும் பக்கம் 102 ல் காசுகள் பற்றிய பட்டியலைக் கொண்டிருக்கக் காணலாம். உள் நாட்டு ,அயல் நாட்டு வணிகத்தில் பண்ட மாற்றும் காசு பரிவர்த்தனையும் இருந்ததற்கு நிறைந்த சான்றுகள் வரலாற்றில் உள்ளன என்பதையும் நாம் அறிதல் வேண்டும் .


“வேட்டுவன் மான் தசை சொரிந்த வட்டியும்

ஆய்மகள் தயிர் கொடு வந்த தசும்பும் …. குளக்கீழ் விளைந்த வெண்ணெல்

முகந்தனர் கொடுப்ப உவந்தனர் பெயரும்” (10)


“தன்னாட்டு விளைந்த வெண்ணெல் தந்து

பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி” (11)


“ நெல்லின் நேரே வெண்கல் உப்பு “ (12)

“சங்க காலத்தில் பண்ட மாற்று வாணிகம் நடந்தது….அதே காலத்தில் செம்பு வெள்ளி பொன் காசுகலும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள் விலை உயர்ந்த பொருள்களை வாங்கப் பயன் படுத்தப் பட்டன ” (13)

“ நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளால்

எருமை நல்லான் கருநாகு பெறூஉம் “(14) என்பதால் நெய் விலைவிற்ற ஆயமகள்

கட்டிப் பசும் பொன் என்னும் பொற்காசுகளை வாங்காமல் , கன்றோடு கூடிய பால் எருமைகளை வாங்கிய செய்தியை அறிகின்றோம் . இதனால் காசுப் பரிமாற்றம் இருந்தமை அறியப்படும்.

நெல்லிக்காய் வடிவக் காசு பற்றி .. “ புல்லிலைநெல்லி….பொலஞ்செய் காசின் “ (15) நெல்லிக்காய் வடிவத்தில் காசுகள்பழக்கத்தில் இருந்ததை இதனால் அறியலாம். குயிலின் கண் போன்ற உகா மரக் கனி போன்ற காசு பற்றி அகநானூறு பேசுகின்றது (16) .அக்காசுகளை மகளிர் அணியாகக் கோத்து அணிந்தனர் என்பதை “ ஆசில் கம்மியன் மாசறப் புணர்ந்த பொலஞ்செய் பல் காசு ” (17) என்றும், “பல் காசு நிறைத்த ….. மெல்லியல் குறுமகள் (18) “ என்றும் சங்கப் பாடல்கள் பேசுவதால் இதனை அறியலாம்.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்க்கு அம்மன்னன் நாற்பது நூறாயிரம் பொற்காசு பரிசு தந்தான்(19) என்றும் , ஆடுகோட்பாட்டுச்சேரலாதனை காக்கைப் பாடினியார் பாட அவர்க்கு அவன் ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணம் (காசு) கொடுத்தான் என்றும் (20) .செல்வக் கடுங்கோனை கபிலர் பாட அவர்க்கும்அவன் நூறாயிரம் காணம் (பொற்காசு) என்றும்(21)பெருஞ்சேரல் இரும்பொறையை பாடிய அரிசில்கிழார்க்கு அவன் ஒன்பது நூறாயிரம் காணம் (22)கொடுத்தான் என்றும் , இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர்க் கிழார்க்கு முப்பத்தி ஆறாயிரம் காணம் பரிசு தந்தான் என்றும்(23) சங்க இலக்கியம் கூறக்காணலாம். அயல் நாட்டவர்களாகிய

தாலமி, பெரிபுலுசு போன்றவர்கள் நமது துறைமுக நகரங்களைப் பற்றியவிரிவான செய்திகளை(மேல்கிந்த(நெல்கிந்த) , விழிஞம் , வைக்கரை, நறவு,மாந்தை , முசிறி, தொண்டி, புகார், எயில் பட்டினம் போன்றவை) கூறிடவும் காணலாம். காசு அச்சடிக்கும் அக்கசாலைகள் பல இருந்தன என்பது பற்றிய குறிப்புக்களும் உள்ளன(24).

சங்ககாலக் காசுகள் பற்றிய ஆய்வுகள்:

தொல்லியல் ஆய்வர்கள் பலர் சங்ககால மன்னர்கள்வெளியிட்ட காசுகளைப் பற்றி ஆய்ந்துள்ளனர். அவற்றைப் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக் காண்போம். கி.மு.நூற்றாண்டைச் சேர்ந்த வேளாண்வணிக நாகரிகத்தின் அடையாளம் கொடுமணல். அங்கு நொய்யல் ஆற்றங்கரை நாகரிகம் சிறந்து இருந்தது. அது உலக வணிக நகரமாக விளங்கியது. அங்கு நடந்தத அகழ்வில் 68 செ.மீ ஆழத்தில் நாலாவது மண் அடுக்கில் 2.68 கிராம் எடையுள்ள வெள்ளி முத்திரைக்காசு கிடைத்தது. இக்காசின் முன்புறம் நான்கு குறியீடுகளும் பின்புறம் ஐந்து குறியீடுகளும் உள்ளன. இம்முத்திரைக்காசு வலச்சுற்றாகப் பதிக்கப் பட்டுள்ளது…… மேற்பரப்பில் கிடைத்த வெள்ளி முத்திரை நாணயத்தில் ஒரு சூரியனும், ஓர் ஆறிதழ் வட்டமும், ஒரு பிறையுடன் கூடிய மலையும், ஒரு கை அல்லது யானை போன்ற அமைப்பும்…….உள்ளன. மேற்பரப்பில்கிடைத்த காசு அகழ் குழியில் கிடைத்த நாணயத்தையே ஒத்துள்ளது(25) .இக்காசுகளின் எழுத்துக்கள் தமிழி எழுத்துக்கள் என்பர் அறிஞர்கள்.

ஈரோடு மாவட்டத்தில் நாணயங்கள் என்ற ஆய்வு நூல்,சங்ககாலச் சேரர் காசுகள், பாண்டியர் காசுகள், சோழர் காசுகள்,மலையமான் காசுகள் பற்றி விரிவாக ஆய்ந்து கூறக் காணலாம். ( 26) அவ்வாறே சேலம் மாவட்டத்தில் நாணயங்கள் என்ற நூலும் சங்க காலப் பாண்டியர் தம் பொற்காசு, காரி நாணயம், சங்கச் சேரர் காசு , பாண்டியன்பெருவழுதியின் செம்பொன் காசு பற்றி விரிவாக ஆய்ந்துள்ளது(27) அந்நூலிலும் தமிழகத்தில் நாணயம் அச்சிடும் அக்கசாலைகள் பற்றியும் காசு பரிவர்த்தனை பற்றியும் பேசப் பட்டுள்ளதையும் காணலாம்.(28)

கொங்கு வரலாற்று ஆய்வுகள் அன்றும் இன்றும் என்னும் நூலில் காசுகள் பற்றிய ஆய்வினைச் செய்த போளுவாம்பட்டி அறிஞர்இராமசாமி அவர்களின் கொங்கு நாட்டுக்காசுகள் என்னும் கட்டுரை பல அரிய செய்திகளைக் கூறக் காணலாம். அக்கட்டுரையில் காசு பரிவர்த்தனையில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும் (29) அச்சுக் குத்திய நாணயம் பற்றியும் காணம் பற்றியும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். (30) .பூந்துறையில் கிடைத்த காசுகளில் (56 காசுகள்), இரண்டு காசுகள் சங்ககாலப் பொற்காசுகளாகும், இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக ஆய்ந்து முடிவுகள் காணப்பட வேண்டும். (31)

முடிவுரை:

ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட , வெளிநாட்டுக் காசுகள் கொங்குமண்ணிலேயே அகழ்வு ஆய்வில் ஏராளமாகக் கிடைத்தன. கொடுமணல் உலக வேளாண் வணிக நகரமாகவும் விளங்கியது. அங்கு உள்நாட்டு வெளிநாட்டுக் காசுகள் நிறையக் கிடைத்தன. சங்ககால மன்னர்கள் தமிழி எழுத்தில் அச்சு குத்திய காசுகளை வெளியிட்டனர். சங்க இலக்கியம் கூறும் காசுகள் பற்றிய செய்திகள் அகழ்வு ஆய்விலும் ,கல்வெட்டுக்களிலும் உறுதி செய்யப் பட்டுள்ளதை அறியலாம். ஆதலால் சங்ககாலத்தில் உள்நாட்டு வணிகத்துடன் கப்பல் வணிகம் கீழ்த்திசை நாடுகளுடனும் , மேல்த்திசை நாடுகளுடனும் சிறப்பாக நடந்த செய்திக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றுள் நமது உலகளாவிய வணிகத்தை உறுதியோடு எடுத்துக்காட்டும் சான்றக சங்ககாலக் காசுகள். இன்றும் விளங்குகின்றன.

சான்றெண் விளக்கம்:

1) கதிரைவேற்பிள்ளை தமிழ் அகராதி பக்கம் 424

2) குறுந்தொகை பாடல் 67

3) நற்றிணை பாடல் 274

4) நற்றிணை பாடல் 66

5) திருக்குறள் 400

6) நாம் இருக்கும் நாடு. பக்கம் 12

7) நாம் இருக்கும் நாடு. பக்கம் 23

8) நாம் இருக்கும் நாடு. பக்கம் 76

9) கொங்கு நாட்டு வரலாறு. பக்கம் 26

10) புறநானூறு 33

11) குறுந்தொகை 269

12) அகநானூறு 140

13) பழங்காலத் தமிழர் வாணிகம் பக்கம் 21

14)பெரும்பாணாற்றுப்படை அடிகள் 164 முதல் 166 வரை

15) அகநானூறு 363

16) அகநானூறு 293

17) புறநானூறு 353

18) அகநானூறு 75

19) பதிற்றுப்பத்து நான்காம் பத்து

20) பழங்காலத் தமிழர் வணிகம் பக்கம் 23

21) பதிற்றுப் பத்து 7 ம் பத்து

22) பதிற்றுப் பத்து 8 ம் பத்து

23) பதிற்றுப் பத்து 9 ம் பத்து

24) சேலம் மாவட்டத்தில் நாணயங்கள் பக்கம் 9

25) கொடுமணல் அகழ்வு ஆய்வு ஓர் அறிமுகம் பக்கம் 25

26) ஈரோடு மாவட்டத்தில் நாணயங்கள் பக்கம் 21

27) சேலம் மாவட்டத்தில் நாணயங்கள் பக்கம் 5

28) சேலம் மாவட்டத்தில் நாணயங்கள் பக்கம் 9

29) கொங்கு வரலாற்று ஆய்வுகள் அன்றும் இன்றும் பக்கம் 9

30) கொங்கு வரலாற்று ஆய்வுகள் , அன்றும் இன்றும் பக்கம் 109

31) பூந்துறை நாட்டு வேளாளர் வரலாறு பக்கம் 36


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com