தான் கொண்டுவந்த அங்காடிகளை கடற்கரையில் விற்றுவிட்டு.. வீடு திரும்பிய மாரியம்மாளை இங்கே வான்னு கூப்பிட்டு வெஞ்சனத்துக்கு கொண்டுபோன்னு ஒரு வாளை மீனை அவளிடம் கொடுத்தான் சூசை.. இன்னைக்கு மத்தியானம் நம்ம வீட்டுக்கு சாப்பிட வர்றியலா.. என்று கேட்டவளிடம்.. வலை பிஞ்சு கெடக்கு.. நெறைய வேலையிருக்கு நான் வரல..
அப்ப நான் அடுப்பு பத்தவைக்க மாட்டேன்.. எனக்கு மீன் வேண்டாம் என்றாள் மாரியம்மாள்..
ஏண்டி இப்படி அடம் புடிக்க.. சரி நான் வர்றேன்.. எடுத்துட்டு போ.. தன் கணவன் கொடுத்த மீனை பெட்டிக்குள் வைத்து சலேத்மேரியின் வீட்டை கடந்து தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாரியம்மாளை...
அக்கா.. இங்கே வாங்களேன்.. சலேத்மேரியின் குரல் கேட்டு திரும்பியவளை... வீட்டுக்கு உள்ளே வாங்க என்றாள்.
தலையில் வைத்திருந்த பெட்டியை கீழே இறக்காமல் என்ன என்றுகேட்ட மாரியம்மாவின் கைகளை பிடித்துகொண்டு... அக்கா ..நாளைக்கு எனக்கு கல்யாணம்.. நீங்க கண்டிப்பா சந்தியா ராயப்பர் கோவிலுக்கு வரனும் என்றாள் சலேத்மேரி.. சரி வர்றேன்... சுரத்தில்லாமல் ஒலித்தது மாரியம்மாவின் குரல் ..
நாளைமுதல் என் புருஷன் இன்னொருத்தியின் கணவன்.... நான் தப்பு பன்னிட்டோனோ.... அந்த வயதுக்குரிய ஏக்கமும், ஆசையும் அழுகையாய் மாறி அவள் நடந்து சென்ற பாதையெங்கும் கண்ணீர் சிதறி சிதறி மணல் ஈரமாக கிடந்தது..
சந்தனமாரியும் அவள் கணவனும் சாயல்குடி மைனர் வீட்டிற்க்கு செல்ல அங்கு அவர்களுக்கு கிடைத்த மரியாதையை பார்த்து பூரித்து போனார்கள்.. பங்காளி என்ற முறையில் உங்கள்ட்ட முதன்முதலா சொல்ல வந்துருக்கோம். எங்க மகளுக்கு கல்யாணம்.. நீங்க நேரடியா வந்து கல்யாணத்துல நெற செலுத்திட்டு போகனும் என்றாள் சந்தனமாரி..
நம்ம பாரம்பரிய வழக்கப்படி சிறப்பாக நடத்திருவோம் என்றார் சாயல்குடி மைனர்... மாரியம்மாவின் வீட்டிற்குள் நுழைந்த சூசை.. பசிக்குது சீக்கிரம் சோறு போடுன்னு சொன்னவன் தான் கொடுத்துவிட்ட மீன் சமைக்காமல் பெட்டியில் அப்படியே இருப்பதை பார்த்து.... நான்தான் வர்றேன்னு சொன்னன்ல... ஏன் சமைக்கல...எரிச்சலுடன் கேட்க...
சூசைக்கு பதில் ஏதும் சொல்லாமல் விசும்பி கொண்டிருந்தாள்..
அவன் அருகில் சென்று.. நான் உங்க மடியில படுத்துகிறவா..?
அவனின் பதிலை எதிர்பார்க்காமல் தன் இரு கைகளாலும் அவன் அகன்ற தொடையை இறுக அணைத்து அவன் மடியில் தலைசாய்த்து ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள் மாரியம்மா.. சூடான கண்ணீர் சூசையின் தொடையிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.. உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் என்னை விட்டு பிரிஞ்சு போயிறுவீங்களோன்னு எனக்கு பயமா இருக்கு... தினமும் ஒருவேளையாவது என் கையால சமச்சத நீங்க சாப்பிடனும்.. இல்லைனா சாப்பிடாமலே நான் செத்துருவேன். எல்லாமே எனக்கு நீங்கதான்..அழுதுகொண்டே சொன்னவளின் முகத்தை தனக்கு நேராக திருப்பி..
ஊர் உலகத்துக்கு சலேத்மேரி என் பொண்டாட்டி மாதிரி நான் சாகுற வரை என்னைக்கும் உன்கூட நான் இருப்பேன். போதுமா..
ம்ம்....
எப்பவுமே உன்னை தொடுவதற்கு கூட என்னை விடமாட்ட.. இன்னைக்கு நீயா வந்து என் மடியில் படுத்து கிடக்க...
அதுவா.. நீங்க என்னை விட்டு விலகி போயிடுவியள்னு பயத்துல உங்களை இறுக்கி பிடிச்சுறுக்கேன்..
அப்ப ..உன்னைவிட்டு விலகி போயிற வேண்டியதுதான்.. ச்ச்சீசீ.. போங்கத்தா வெட்கத்துடன் நெளிந்தாள் மாரியம்மா...
ரெட்டைமாடு பூட்டிய வண்டியில் சாயல்குடி மைனரும் .. குதிரை மேல் இருந்தவனின் கைகளில் குடசுருட்டியும்.... (பாண்டிய அரசகுடி திருமணத்தில் மாப்பிள்ளை இந்த அழகிய பெரிய குடையின் கீழ்தான் ஊர்வலமாக நடந்து வருவார்..) நாலைந்து பேர் பறையடிக்க ஆர்ப்பாட்டத்துடன் மூக்கையூரை நோக்கி கிளம்பியது.. மூக்கையூர் எல்லையில் சாயல்குடி மைனரை வரவேற்று கோவிலுக்கு கூட்டி சென்றார்கள் பெரியவர்கள்..
தங்க நிறத்திலான பட்டு நூலால் நெய்த அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய குடசுருட்டியை அவருக்கு பின்னால் ஒருவன் கொண்டு வந்தான். இவர்களின் வருகையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒரு முதியவரிடம் அருகில் நின்ற மாரியம்மா..
எதுக்கு தாத்தா இந்த கல்யாணத்துக்கு மட்டும் ஜமீன் வர்றாரு, குருதை வருது.. பெரிய குடை வருது... மூக்கையூர்ல மீன் பிடிக்கிறவங்க எல்லோருமே அரச வம்சம்..
இவர்கள் சோழர்களாக, பாண்டியர்களாக வாழ்ந்த அரசகுடிகள் முன்னூறு வருடங்களுக்கு முன் நாயக்கர் படையினராலும் மாலிக்காபூரால் உருவான மூர் என்ற வடுக இனக்குழுவாலும் சிதறடிக்கப்பட்டு கடற்கரை ஓரங்களில் ஒதுங்கினார்கள்..
இவர்கள் இனத்தின் தலைவி மதுரை மீனாட்சி.. குமரி அம்மனாக அவதாரம் எடுத்து இவர்களை கடற்கரை பிரதேசத்தில் நிலை நிறுத்தினாள்.. பின் நூறு வருடங்களுக்கு முன் மீண்டும் அதே இனக்குழுக்களோடு நடந்த சண்டையில் மிக பெரிய அழிவை சந்தித்தது இந்த இனம். தன் மக்களை அழிவிலிருந்து பாதுகாக்க இவர்களின் அரசர் போர்த்துகீசியர்களோடு செய்த ஒப்பந்தத்தின் படி... தலைமையின் உத்தரவுக்கு பணிந்து இவர்கள் அனைவரும் ஒரேநாளில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள்..
தங்களை அழித்த மூர் இனகுழுவை 1538 ஆம் வருஷம் வேதாளை என்ற ஊர் அருகே போரை திட்டமிட்டு கடலிலே நடத்தி ஆயிரக்கனக்கான பேரின் தலைகளை சீவி கடலிலே போட்டு தங்கள் பழியை தீர்த்து கொண்டார்கள்.. தப்பித்தவர்களில் ஒன்றிரண்டு பேர் இலங்கைக்கு ஓடி சென்றார்கள் ..அந்த இனம் அத்தோடு முற்றிலுமாக அழிந்து போனது.. தங்களை சீண்டியவனை காத்திருந்து ஒரு இனத்தையே முற்றிலுமாக வேரறுத்த அரசகுடியின் வாரிசுகள் இவர்கள்..
என்னது... என் புருஷன் அரசகுடி வாரிசா.. வாயை பிளந்து நின்றாள் மாரியம்மா..
...... தொடரும் .....
- சாம்ஸன் பர்னாந்து
கொற்கை அழிந்து சில நூறு வருடங்களுக்கு பிறகு... மணப்பாடு, வீரபாண்டியன்பட்டனம், புன்னக்காயல் மற்றும் வேம்பார் ஆகிய துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடைபெற்றது... குறிப்பாக புன்னையும் வேம்பாரும் அயல்நாடு வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது..
புன்னக்காயலிலிருந்து அரேபிய தீபகற்பம், தென்எகிப்து வரை சென்று அங்கிருந்து தரைவழி போக்குவரத்து வழியாக டமாஸ்கஸ், ஜெருசலேம் மற்றும் ரோம் வரையிலும் சிலர் மத்தியதரை கடல் பகுதியை கடந்து மேற்கு உலக (ஐரோப்பா) வர்த்தகத்தில் பரதவ கடல் வணிகர்கள் ஈடுபட்டார்கள்.. பட்டு, சந்தனம், யானைதந்தம், மிளகு, முத்து இவைகளை கொண்டு சென்றார்கள்... வேம்பாரிலிருந்து கீழ்திசை நாடுகளுக்கு மட்டுமே அதிகமாக வணிகம் செய்தார்கள்.. இலங்கை, சிங்கப்பூர், கடாரம், (கம்போடியா) சைனா, இந்தோனேசியா வரை நீடித்திருந்தது இவர்களின் வணிகம்..
கருவாடு, உப்பு, பருத்திநூல், முத்து, மற்றும் பவளம்... (கடலில் உள்ள பவளப்பாறையிலிருந்து உடைத்து எடுக்கப்படுவது. தூத்துக்குடியிலிருந்து இலங்கையின் மன்னார் பகுதிவரைதான் பவளபாறைகள் காணப்படும்..)
ராம்நாடு சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்ட வீடுகளில் முதன் முதலாக சீனா பீங்கான் தட்டுகள் புழக்கத்திற்க்கு வந்ததற்கு வேம்பார் பரதகுல கடல் வணிகர்களின் இறக்குமதியே காரணம்... கி.பி 1800 பிற்பகுதியில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் ஒட்டு மொத்த பரதவர்களின் கடல் வணிகமும் அழிக்கப்பட்டது.. ஓரிரு குடும்பங்கள் அந்த வரலாற்றை இன்னமும் கடத்தி வருகிறது.. கடல் பெருவணிகம் அழிக்கப்பட்டதால் இன்று பரதவர் இனம் மீனவர் என்ற ஒற்றை அடையாளத்தை மட்டுமே தாங்கி நிற்க்கிறது..
மூக்கையூரில் நெல் விளைந்தாலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பருத்தி விளைச்சலே அதிகம். இவர்களிடமும் சொந்தமாக பருத்தி வயல் இருந்தது.. மூக்கையூர் பெண்கள் சந்தைகளில் கருவாட்டை கொடுத்து பருத்தி மூட்டைகளை வாங்கி ஊருக்கு கொண்டுவந்து... பருத்தியை தன் தொடையில் வைத்து உருட்டி உருட்டி பருத்திநூல் (ஒடநூல்) தயாரிக்கத் தொடங்கினார்கள். காலப்போக்கில் இவர்களிடமிருந்து பருத்தி நூல்கண்டுகளை விலைக்கு வாங்க வேம்பாரிலிருந்து கடல் வணிகர்கள் வந்தார்கள்..
எம்மா.. என்று கூப்பிட்ட தன் மகன் பிலேந்திரனை என்ன என்பது போல் சைகையால் கேட்ட சந்தனமாரியிடம்.. நம்ம கருவாடு இங்கே உள்ள சந்தையில விக்கிறதவிட இலங்கைல அஞ்சுமடங்கு அதிகமா விக்குமாம். பருத்தி நூல்கண்டும் நல்ல விலையாம்.. கடல்ல என் பக்கத்துல வலைவிட்ட வேம்பாரு பையன் சொன்னான். அடுத்த வாரம் அவன் இலங்கைக்கு போறானாம்.. நம்ம வீட்ல உள்ள கருவாட்டை எடுத்துட்டு நானும் அவன் கூட இலங்கைக்கு போய் அங்கிருந்து ஒரு வாரத்துல திரும்பி வந்துருவேன்.. சரியாம்மா ...
தன் அக்கா சந்தனமாரிக்கு அருகில் நின்ற சூசை உடனே பிலேந்திரனிடம் நாமளும் பெருசா யாவாரம் பார்ப்போம் நீ இலங்கைக்கு போய்ட்டு வா என்றான்..
சரி .. மாமா..
சீலா, கட்டா, மற்றும் நெத்திலி கருவாடும், நூல்கண்டும் வேம்பாரிலிருந்து வந்த வள்ளத்தில் இலங்கை கொண்டு செல்ல ஏற்றப்பட்டது.. ஒரு கூட்டம் கடற்கரையில் நின்று வழியனுப்பி வைத்தது பிலேந்திரனை. மூக்கையூரில் முதல் கடல் வணிகம் ஆரம்பமானது.. கடற்கரையிலிருந்து திரும்பி தன் தம்பியோடு கூட நடந்து கொண்டிருந்த சந்தனமாரி..
தம்பி.. உன் மருமகள் சமஞ்சு ரொம்ப நாளாயிட்டு (5 மாதம்) கொமர ரொம்ப நாள் வீட்ல வைக்ககூடாது. அதுனால இந்த மாச கடைசில உனக்கும் சலேத்மேரிக்கும் கல்யாணத்த முடிச்சுறுவோம். அதுக்குள்ள உன் மருமகனும் இலங்கையிலிருந்து வந்துருவான்... எந்த பதிலும் சொல்லாமல் தன் அக்காவுடன் கூட நடந்து வந்து கொண்டிருந்தான் சூசை..
என்னடா உம்முன்னு வர்ற.. பதறிக்கொண்டு ஒன்னுமில்லக்கா என்றான் சூசை.. அவன் கண்கள் கலங்கியிருந்தது... சந்தனமாரிக்கு தெரியாது..
அடுப்பு எரிக்க பனை மட்டைகளை பொருக்கி கொண்டு வீட்டிற்குள் நுழையும் போது வாசலில் நின்ற மாரியம்மாவின் அம்மாச்சி.. உன் புருஷன் உன்னை தேடி அப்பவே வீட்டுக்கு வந்துட்டாரு போய் பாரு...
வீட்டின் நடுவில் மரச்சட்டத்தில் கண்ணை மூடி சாய்ந்திருந்தவனை
என்னங்க.. ஏன் அசந்துபோய் உட்கார்ந்து இருக்கிய...
கண்ணுலாம் கலங்கிபோய் இருக்கு என்னாச்சு உங்களுக்கு ..?
மௌனமாகவே இருந்தான் சூசை..
உங்களுக்கு பிரச்சனை தீறனும்னா நான் செத்து போயிறவா ..?
கண்களை உயர்த்தியவனை...
எனக்கு எல்லாம் தெரியும் என்றாள்.
சலேத்மேரி இன்னைக்கு என்னட்ட சொன்னா..
எனக்கும் எங்க மாமாவுக்கும் இந்த மாச கடைசில கல்யானம்னு ..
பொறந்ததிலிருந்து இப்பவரைக்கும் நீங்கதான் அவ புருஷன்னு நினைப்பவளை நீங்க ஏமாத்தபோறியளா.. ?
அவள் வாழ்க்கையை கெடுத்து நான் வாழமாட்டேன் ..
என் புருஷன் சாகுரவரைக்கும் இந்த ஊர்ல தலை நிமிர்ந்து நடக்கனும் அதுக்காக எந்த தியாகம்னாலும் நான் என் புருஷனுக்காக செய்வேன்....
சலேத்மேரியை நீங்க கல்யாணம் கட்டிங்குங்க என்றாள் மாரியம்மா..
கொஞ்சநேரம் சோகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தவன் பின் தன் அரைஞான் கயிற்றில் சேர்த்து கட்டியிருந்த சுருக்கு பையை விரித்து அதிலிருந்து தன் அக்காவுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த தங்கநிறம் கொண்ட ஒரு முத்து கோர்த்த நூல் கயிறை எடுத்து அவளிடம் கொடுத்து...
கழுத்துல போட்டுக்கோ ..என்றான்
கண்களை அகல விரித்து எனக்கா.. நான் அங்காடி விக்கிறவ..
நீ என் பொண்டாட்டி தான..
ம்ம் ..தலையை மேலும் கீழுமாக வேகமாக ஆட்டினாள் மாரியம்மா..
அப்ப இந்தா.. அவள் கையில் வைத்து அழுத்தினான் சூசை..
வீட்டைவிட்டு வெளியே கொஞ்சதூரம் சென்றவனை என்னங்க.. என்று கூப்பிட்ட மாரியம்மாவை நோக்கி திரும்பி வந்தவன் என்ன என்பது போல் கண்களால் கேட்க ..
ஒன்னுமில்ல சும்மாதான்.. ஒங்க முகத்தை திரும்ப பார்க்கனும் போல இருந்துச்சு...
கோட்டி சிறுக்கி...சிரித்த முகத்துடன் திரும்பி சென்றான் சூசை..
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 14
Dev Anandh Fernando
08:38

சித்திரை பிறந்தது...
கடலுக்குள் முத்து குளிக்க போனவுங்க பாண்டியன் தீவிலிருந்து நாள கழிச்சு ஊருக்கு வர்றாங்க... வேம்பாரிலிருந்து மூக்கையூருக்கு தகவல் வந்திருந்தது... மூக்கையூர் கடற்கரையில்அதிகாலையிலேயே பெரும் கூட்டமொன்று கடலை பார்த்தபடி நின்று கொண்டிருந்தது.. கொஞ்சம் கொஞ்சமாக சில கருப்பு தெரிய தொடங்கியது கடலில்.. .
வழக்கம்போல் தன் புருஷன் கரைக்கு திரும்பி வந்துட்டான்னு பார்க்க ஒவ்வொரு நாளும் கடற்கரைக்கு தேடிவரும் மாரியம்மா.. கடற்கரையில் கூட்டமாக நின்று கடலையே பார்த்து கொண்டிருந்த ஒருத்தியிடம்.. எதுக்கு கூட்டமா இங்கே நிக்கிறிய என்றாள்.. முத்து குளிக்க போனவுங்க மூனுமாசம் கழிச்சு இன்னைக்கு தான் ஊருக்கு வர்றாங்க..
கடலில் தூரமாக சுட்டிகாட்டி அந்தா வருதுபாரு கட்டுமரம் என்று சொல்லி கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் கட்டு மரங்களை காட்டினாள்.. மாரியம்மா சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள். பரவசத்தில் அங்காடி கொட்டான் அவள் கையிலிருந்து கீழே விழுந்தது கூட தெரியவில்லை அவளுக்கு ...
சந்தனமேரிக்கு தன்முகம் தெரியக்கூடாதுன்னு தலையில் முக்காடிட்டு அவளுக்கு பின்புறம் செல்லும் போது.. எல்லா மரத்துக்கும் சாய ஒடிவருதுலம்மா அதுதான் சூசை மாமா கட்டுமரம்.. சந்தனமாரியின் இன்னொரு மகன் அவளிடம் சொல்லி கொண்டிருக்கும் போதே முதல் ஆளாக கரைக்கு வந்து சேர்ந்தான் சூசை..
தம்பீ.. ஓடிசென்று தன் தம்பியையும் சூசையோடு துணைக்கு சென்ற தன் மகனையும் இரு கைகளாளும் அணைத்து அவர்களுக்கு நெற்றியில் சிலுவை வரைந்தாள் சந்தனமாரி.. தன்னை யாரும் பார்த்துவிட கூடாதென்று முகத்தை மேலும் மறைத்து கூட்டத்திற்குள் சென்றாள் மாரியம்மா.. முழுநேரமும் கடல்லயே கெடந்து நல்ல சாப்பாடு இல்லாம கண்ணுலாம் குழியோடிபோயி ரொம்ப கெறங்கிபோய் வந்திருந்தான் சூசை.. இதுலவேற தலை முடியெல்லாம் செம்பட்டையா மாறி போயிரூந்துச்சு..
கூட்டத்திற்குள் கிடைத்த இடைவெளியில் கண்ணை மூடாமல் சூசையை உத்து பார்த்து கொண்டிருந்தாள் மாரியம்மா.. பனை ஒலை பாயில் பரப்பியிருந்த முத்துக்களை பார்த்து பரவசப்பட்டு போயி.. தம்பி இதுக்கு முன்னால இப்படி பார்த்ததேயில்லை என்றாள் சூசையின் அக்கா சந்னமாரி... வெள்ளை, நீலம், இளம்சிவப்பு மற்றும் ஒருசில முத்துக்கள் கருப்பு நிறமாகவும் காணப்பட்டது.. அளவில் பட்டாணியிலிருந்து குன்னிமுத்து வரை இருந்தது.. முட்டை வடிவிலான முத்துக்களே அதிகம் இருந்தது. விலை அதிகமான உருண்டை முத்துக்கள் கொஞ்சமே கிடந்தது. அரிதிலும் அரிதாக காணப்படும் தங்கநிற முத்து ஒன்று மட்டுமே இருந்தது ..
வேம்பாருல இருந்து முத்துக்களை விலைக்கு வாங்க வருவாங்களாம்.. தன் அக்காவிடம் சொன்னான் சூசை... தன் மகள் கல்யாணத்துக்கு முத்துமாலை செஞ்சு மீதம் இருந்தால் மட்டுமே விற்பதென முடிவெடுத்தாள் சந்தனமாரி..
சரி.. சாப்பிடாம கெடந்து உன் வயிறுலாம் ஒட்டிபோய் கெடக்கு.. உன் மருமகள் கஞ்சியும் மஞ்சள் ஊத்தி அவிச்ச காரலும் கொடுத்துவுட்டுருக்கா.. சாப்ட்டுட்டு தூங்கு... சரிக்கா என்றான் சூசை..
சூசை தன்னை எப்படியும் பார்க்க வராமல் இருக்கமாட்டான்னு வீட்டுகதவை திறந்தே வைத்திருந்தாள் மாரியம்மா.. இரவு வரை தன்னை பார்க்க வராததால் அழுதுகொண்டே அப்படியே தூங்கிபோயிருந்தாள்.. விடிஞ்சும் விடியாம இருக்கும்போதே அவளை தேடி வீட்டிற்கு சென்றான் சூசை.
வீட்டு கதவு பளார்னு திறந்து கிடப்பதை பார்த்து பதறிக்கொண்டு உள்ளே போக ..
தலைவிரி கோலத்தோடு தூங்கிகொண்டிருந்தவள் ஆள் அரவம் கேட்டு விழித்து இவனை பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து முகத்தை சோகமாக்கி அவனை பார்க்காமல் தலைகுனிந்தவாறே இருந்தவளின் அருகில் போய் உட்கார்ந்தான் சூசை..
அவனை ஏறெடுத்துகூட பார்க்காமல் அமைதியாய் இருந்தவள் .. திடிரென ஏங்கி ஏங்கி அழுக தொடங்க... இப்ப அழுகுறத நிறுத்துறியா இல்ல நான் எந்துச்சு போகவா.. கோபம் வருதாக்கும்.. இங்க ஒருத்தி உங்களுக்காக காத்து கிடக்காள்னு உங்களுக்கு மறந்து போச்சுல.. நேற்று உன்னை கடற்கரைல பார்த்தேன் தெரியுமா உனக்கு ..
எப்ப பார்த்திய... கரைக்கு வந்ததும் முதன்முதலா உன்னையத்தான் பார்க்கனும்னு வந்தேன்.. அந்த கூட்டத்துல எனக்கு வேறு யாருமே தெரியல.. உன் முகம் மட்டும்தான் தெரிந்தது... தன் கணவனின் பாசத்தை நினைத்து அழுகையை நிறுத்தினாள்.. இன்னைக்கு ஞாயிற்றுகிழமை நான் கோவிலுக்கு போகனும் என்று கிளம்பியவனை..
பொறுங்க.. ரொம்ப கிறங்கிபோயிருக்கிய... மண்குவளையில் பழைய கஞ்சியும் காயப்போட்ட சுண்டக்காயையும் கொண்டு வந்து கொடுத்தாள்.. சூசை சாப்பிடும்போது அவன் அருகில் அமர்ந்து அவனை பார்த்தவாறே பிரிந்திருந்த மூன்று மாச ஏக்கத்தையும் தணித்து கொண்டாள்..
ஜெபதேயுவின் மகனே என்ன இந்த பக்கம் நடமாடுறிய.. தன் மகன் இயேசுவால் யாக்கோபு என்றழைக்கப்பட்ட சந்தியாகப்பரிடம் கேட்டார் கடவுள்.. மூக்கையூருல எனக்கு நீங்க கட்டிகொடுத்த குடிசை வீட்ல ரொம்ப கூட்டம் குமியுது.. சிலநேரத்துல எனக்கு மூச்சு முட்டுது ஆண்டவரே... எனக்கு அழகான பெரிய வீடு கட்டிதர்றேன்னு சொன்னியல்ல.. அதான் ஞாபகபடுத்திட்டு போகலாம்னு வந்தேன்... அதற்கெல்லாம் காலம் நேரம் இன்னும் நெறய இருக்கு.. இப்ப நான் சொன்ன வேலையை மட்டும் ஒழுங்கா செய்யும் என்றார் கடவுள்... உத்தரவு ஆண்டவரே என்றார் சந்தியாகப்பர்.....
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 13
Dev Anandh Fernando
06:25

பாண்டியன் தீவை வந்தடைந்த மூக்கையூர் இளைஞர்களை தன் இனத்துக்காரன் என்று சிநேகமாக பார்த்தது மட்டுமல்ல.. வேம்பார் குழியோடிகள் கொண்டுவந்த வெள்ளை எருக்கம் வேரை அவர்களிடம் கொடுத்து (எருக்கஞ்செடி வேம்பார் கடற்கரை மணலில் அதிகம் காணப்படும்) இதையும் இடுப்பில் சுற்றி கொள்ளுங்கள் என்றார்கள்.. எருக்க வேரின் வாடைக்கு பெரிய சுறாக்கள் கிட்ட நெருங்காது..
(முத்து குளிக்கும் போது இதுவரை சுறாமீனால் மரணம் நடைபெறவில்லை என்றாலும் பாதுகாப்புக்காக உடலில் கட்டி இருப்பார்கள்.. குழியோடும் போது திடிரென மூச்சடைத்ததால் மட்டுமே சில மரணங்கள் நடந்துள்ளது...)
உவரி மற்றும் மணப்பாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்கள் ஊருக்கு அருகிலுள்ள புன்னைகாயல் குடமுத்தி பாரிலும்.. வேம்பார், சிப்பிகுளம் மற்றும் மூக்கையூரை சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள பாண்டியன் தீவின் கிழக்கே உள்ள சிலுவைபாரிலும் முத்துக்குளிப்பதென தீர்மானித்து.. கிழக்கு மற்றும் தென்கிழக்காக பிரிந்து சென்றார்கள் தொல் பரதவ குழியோடிகள்..
முத்து குளித்தல் என்பது வருடத்தில் தை, மாசி, பங்குணி ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே நடைபெறும். அந்த மாதங்களில் தான் தென்கடல் (மன்னார் வளைகுடா) தெளிஞ்சுருக்கும் குளியோடும் போது கடலின் தரைபகுதி வரை நன்றாக தெரியும். சித்திரை மாச தொடக்கத்திலேயே கச்சான் நீவாடு (நீரோட்டம்) ஒட தொடங்கியதும் கடல் கலங்கிரும். முத்து குளித்தல் நிறுத்தப்படும்.. ஐப்பசி மற்றும் மார்கழி மாதங்களில் கடற்கரை மணலில் மீன்களை கருவாட்டுக்காக காயப்போட மாட்டார்கள்..
நிறைய உப்புபோட்டு மீனை காயப்போட்டாலும் சின்னதா மழை பெஞ்சாலும் அஞ்சுமணி நேரத்துல புழு வச்சுறும் கொஞ்ச நேரத்துல மீன்ல உள்ள முள்ளு மட்டும்தான் கடற்கரைல கெடக்கும்... தை மாசம் தொடங்கி முடியப்போகுது வெயில் ஒறைக்க தொடங்கிட்டு.. காயப்போட்ட கருவாடுகளை வட்டான்ல அள்ளி சந்தைக்கு போக தொடங்கினார்கள் மூக்கையூர் பெண்கள்..
மழை முடிஞ்சு இந்த வருஷத்துல இப்பத்தான் கருவாடு கெடச்சதால கடலாடி சந்தைக்கு வந்தவர்கள் போட்டி போட்டு அதிக விலைகொடுத்து வாங்கி சென்றார்கள்.. தாங்கள் கொண்டுவந்த பொருளுக்கு இப்படி ஒரு விலை கிடைக்கும்னு எதிர்பார்க்கல மூக்கையூர் பெண்கள்..
கமுதியை விட கடலாடியில விலை ரொம்ப கம்மியாயிருக்கு .. இவர்களை கடந்து சென்றவர்கள் பேசிக்கொண்டு சென்றதை கேட்டு பிரமித்து போனார்கள்... சரி.. நாங்க நாலஞ்சு பேரு இங்கவுள்ள அப்புமாரு வீட்ல.. நாங்க யார்னு சொல்லி தங்கிக்கிறோம். நீங்க மூக்கூருக்கு போய் எங்க வீட்டுக்காரங்கள்ட்ட விவரத்தை சொல்லி கருவாட்டை இங்க கொண்டுவர சொல்லுங்க... அவர்களுக்குள் பேசி முடிவெடுத்து, வயசு அதிகமான நாலைந்து பேர் கடலாடியில் தங்க மீதிபேர் மூக்கையூரை நோக்கி சென்றார்கள்..
இவர்கள் தங்களுக்கு நெருக்கமான பங்காளி உறவுமுறை பெண்கள் என்று தெரிந்து இன்முகத்தோடு வரவேற்று, தங்களின் வீடுகளில் தங்கவைத்தார்கள் கடலாடியில் வசிக்கும் அப்புமார்கள்... மூக்கையூர் கருவாடு கடலாடி சந்தையில் மண மணத்தது... என்னதான் பங்காளி வீடுனாலும் எத்தனை நாள் அவுங்க வீட்ல தங்குறது..
கருவாடு விக்கிறதுல நல்ல சம்பாத்தியம் வருது.. அதுனால இந்த ஊர்லயே...
நாமே ..சொந்தமா வீடு கட்டுவோம்னு (பனை ஒலை வீடுதான்) முடிவெடுத்து ஒரு இடத்தை தேர்வு செய்து நாலைந்து பேர் பக்கத்து பக்கத்துலயே வீடுகட்டி அங்கேயே நிரந்தரமாக தங்க தொடங்கினார்கள்...
முதன்முதலாக மூக்கையூரிலிருந்து தங்களின் தொழிலுக்காக வெளி குடியேற்றம் தொடங்கிய ஊர் கடலாடி. கொஞ்சகாலத்தில் அவர்களின் நெருங்கிய சொந்தகாரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு வந்து வீடு கட்டி அங்கேயே தங்க தொடங்கினார்கள். கடலாடியில் கடல் இல்லையென்றாலும் இவர்களின் வருகையால் நிலத்தில் விளையும் விளை பொருட்களை விட கடலாடி கருவாடு பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது... (சில காலங்கள் கழித்து கமுதி பார்த்திபனூர் மற்றும் விருதுநகர் வரை கருவாடு விற்பனைக்காகவே மூக்கையூர் மக்களின் குடியேற்றம் நடந்தது)
எம்மா.. மாமா எப்பவுமே கடல்லதான் கெடப்பாகளாக்கும்.... சலேத்மேரி தன் அம்மா சந்தனமாரியிடம் கேட்டாள்.. இல்ல.. இல்ல.. ராத்திரி யாரும் கடல்ல தங்கமாட்டாங்க. அன்னைக்கு புடுச்ச முத்து சிப்பிய சாயந்தரம் கரைல கொண்டுபோய் கொடுத்துட்டு அடுத்தநாள் காலைலதான் திரும்ப கடலுக்கு செல்வாங்க.. மாமா எப்ப திரும்பி ஊருக்கு வருவாக..
தன் மகள் கல்யாண ஏக்கத்தோடு கேட்பது போல் தோன்றியது சந்தனமேரிக்கு.. சரி... தம்பி போயி ஒரு மாசம் முடிஞ்சுட்டு. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு சித்திரை மொதல் வாரத்துல ஊருக்கு வந்துருவான். மகளும் சமஞ்சு நாலஞ்சு மாசம் ஆயிறும். இதுக்கு மேலே கொமர வீட்ல வைக்ககூடாது..
வர்ற வைகாசி மாசத்துலயே தம்பிக்கும் மகளுக்கும் கல்யாணத்த முடிச்சுடனும்னு மனசுக்குள் முடிவெடுத்தாள் சந்தனமாரி...
கடற்கரையில் பரவி கிடந்த மீன்களை விற்று கொண்டிருந்த சந்தனமாரி தன்னை கடந்து கொஞ்ச தூரம் சென்ற மாரியம்மாளை பார்த்து..
ஏலா.. இங்க வா புள்ள..
சந்தனமேரி தன்னை கூப்பிடதை கேட்டு பதறிபோனாள் மாரியம்மாள்..
தன் விஷயம் அவளுக்கு தெரிந்திருக்குமோன்னு பயந்து கொண்டே சந்தனமேரி அருகில் சென்றாள்.. ஒருமாசமா மீன் வாங்கவே மாட்டேங்குற.. ரொம்ப கெறக்கமா வேற இருக்க... உன் புருஷன் வெளஞ்சத கொண்டுகிட்டு விக்கிறதுக்கு வெளியூர் போயிறுக்கானாக்கும் ..
ஆம் என்பது மாதிரி தலையாட்டினாள்.. புருஷன் திரும்பி வர்றதுக்குள்ள நல்லது பொல்லத சாப்புட்டு உடம்பை தேத்து... சரி.. வர்றேன்னு சொல்லிவிட்டு சந்தனமாரியை விட்டு கடந்தாள்.. மாரியம்மாவுக்கு பயத்தில் உடலெங்கும் வியர்த்து கொட்டியிருந்தது..
சூசை தனக்கு கிடைக்கமாட்டான் என்று தெரிந்தும் கூட ஒவ்வொரு நாளும் முத்து குளிக்க கடலுக்கு சென்றவன் எப்போது திரும்பி வருவான் என்று காலையிலிருந்து சாயந்தரம் வரை மட்டுமல்ல சில வேளைகளில் இரவு நேரம்கூட கடலை பார்த்தபடியே ஏக்கத்துடனே அலைந்து கொண்டிருந்தாள் மாரியம்மாள்...
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள்-12
Dev Anandh Fernando
08:24

ஒரு ஞாயிற்று கிழமையில் வேம்பாரிலிருந்து திருப்பலி நிறைவேற்ற வந்த பாதிரியாரோடு அந்த ஊரை சேர்ந்த பெரியவர்களும் மூக்கையூர் வந்தார்கள்..
திருப்பலி முடிந்ததும் ஊர் கூட்டம் கூடியது..
வேம்பார் தலைவர் பேசினார்..
கடலில் மீன்களை யார் வேண்டுமானாலும் பிடித்து கொள்ளலாம்.. ஆனால்.. முத்துக்குளித்தலும் முத்து வணிகமும் பாண்டியாபதி அரசவையின் கீழ் அவரின் அனுமதியோடு மட்டுமே நடைபெறும். தூத்துக்குடி, உவரி அதை சுற்றிய ஊர்கள் மற்றும் சிப்பிகுளம், வேம்பார் இவைகள் மட்டுமே பாண்டியாபதியால் முத்து குளிக்க அனுமதிக்கபட்ட ஊர்கள்..
பாண்டியன் தீவில் வாழும் மக்களுக்கு நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கடனாக இந்தமுறை நீங்களும் எங்களோடு சேர்ந்து முத்து குளிக்கலாம் என்று பாண்டியாபதி உத்தவிட்டுள்ளார் என்றார்.
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட பாண்டியன் தீவில் (தற்போது தூத்துக்குடியிலிருந்து தரைவழி போக்குவரத்து) முத்து வணிகத்திற்காக எப்பொழுதுமே நாலைந்து கப்பல்கள் தீவை சுற்றி நங்கூரமிட்டு கிடக்கும்..
பாண்டியாபதியின் முத்துக்குளித்துறையில் குமரியிலிருந்து இலங்கை வரை 65 முத்து படுகைகள் இருந்தன. எந்த இடத்தில், எந்த காலத்தில் முத்து குளிக்க வேண்டும் என்பதை பாண்டியாபதியே அறிவிப்பார்.. முத்துகுளித்துறை ஆங்கிலேயர்களால் பின்னாளில்.... PEARL FISHERY COAST என்று அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமாகியிருந்தது..
ஒரு இடத்தில் முத்து குளித்தால் மீண்டும் அந்த இடத்தில் முத்து குளிக்க நான்கு வருடத்திற்கு மேலாகும்.. முத்துக்களின் வளர்ச்சியைக் கணித்தே இந்த முறை பின்பற்றப்படும். முத்துக்குளித்தலில் ஈடுபடும் பொழுது சிலகாலம் தூத்துக்குடியை சுற்றியுள்ள சிப்பி பாறைகளிலும் சில நேரங்களில் இலங்கைவரை சென்று கூட முத்துக்குளித்தலில் ஈடுபடுவார்கள்...
(பரதவர்கள் இலங்கையில் குடியேற முத்து குளித்தலே முதல் காரணமாயிருந்தது) சிப்பிக்குள் உள்ள முத்துக்கள் வளர்ச்சியடையும் காலத்தை கணக்கிட்டு பின் இடங்கள் கண கச்சிதமாக தேர்வு செய்யப்படும்.. பிடித்து வரும் முத்து சிப்பிகளை மூன்றில் ஒரு பங்கு பாண்டியாபதியின் அரசவைக்கு வரியாக செலுத்த வேண்டும். முத்து வணிகத்தில் பாண்டியாபதியின் வாரிசுகளே நேரடியாக ஈடுபட்டார்கள்.
தூத்துக்குடியை சுற்றி நிறைய சிப்பி பாறைகள் இருந்தாலும் வருடாந்திர கணக்குப்படி இந்த வருடம் புன்னக்காயலுக்கு எதிரே உள்ள குடமுத்திபாரிலும் மற்றும் பாண்டியன் தீவிற்கு சற்று கிழக்காக உள்ள சிலுவைபாரிலும் மட்டும் முத்து குளிக்க பாண்டியாபதியால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்கள் வேம்பார் ஊர் பெரியவர்கள்..
எங்களுக்கும் கடலில் முத்து குளிக்க அனுமதியா?
மூக்கையூர் இளைஞர்கள் சந்தோஷத்தில் நாலைந்து பேர் ஒடிச்சென்று கடலில் குதித்தார்கள்..
அவர்களுக்கு கடலிலிருந்து முத்து எடுத்து கொடுத்து கிடைக்கும் வருமானத்தை விட.. என்றாவது ஒருநாள்.. 15 பாக ஆழத்துல குழியோடி தரையைத் தொட்டு பாறை மேலே பரவி கெடக்குற நல்லா வெளஞ்ச சிப்பியை
பார்த்து. பார்த்து பொறுக்கி தண்ணிக்கு மேலே கொண்டு வந்துரனும்னு கடற்கரைல உள்ள எல்லா இளந்தாரிகள்ட்ட வெறித்தனமா ஆசை இருக்கும்.
ஆனா.. அவுங்கள்ட்ட கடல்ல குழியோடுவதற்கான ஏத்தனங்கயிறு (நீளமான கயிறு மற்றும் மாப்பா போன்ற பொருட்கள்) இருக்காது..
எங்கள்ட்ட "மாப்பா" இல்லை (இடுப்பை சுற்றி கயிறோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கும் பை.. இதில்தான் கடலிலிருந்து பொறுக்கி எடுக்கும் முத்து சிப்பிகளை சேமிப்பார்கள்) என்றதற்கு நாளை உங்களுக்கு கொடுத்து அனுப்புகிறேன் என்றார் வேம்பார் தலைவர்..
மூக்கையூரில் உள்ள பெரியவர்களுக்கு முத்து குளித்தல் என்பது பிடிக்கவில்லை..
பத்துவருஷத்துக்கு முன்னாடிலாம் கடல்ல வலையை விட்டு வாங்கும் போது மீன்களோடு சேர்த்து வலையில் தைத்து ஒன்றிரண்டு முத்து சிப்பிகளும் வரும்
சிப்பிக்குள் பெரிதும் சிறுதுமாக நாலைந்து முத்துக்கள் மின்னும்.. அதனுடைய உண்மையான மதிப்பு தெரியாமல்.. கள்ளுக்கடைக்கு போயி பண்டமாற்று முறையில் முத்து சிப்பிய கொடுத்துட்டு கள்ளு குடிப்பாங்க... (நாங்கள்லாம் முத்து கொடுத்து கள்ளு குடிச்ச பரம்பரையாக்கும்)..
முத்துகுளித்துறைக்கு யாரும் போகாதியன்னு சொன்னா எந்த இளந்தாரிகளும் கேட்கமாட்டானுக.. போறவுங்க.. போங்கப்பா என்றார்கள் மூக்கையூர் பெரியவர்கள்... சூசை முதல் ஆளாக துள்ளி குதித்தான்..
அக்கா நான் முத்துக்குளித்துறை போறேன் என்றான் சூசை தன் அக்காவிடம்.. நல்லபடியா போய்ட்டு வாங்க ராசா என்றாள் சந்தனமாரி..
தன் மகள் கல்யானத்துல எல்லோரும் உத்து பார்க்கும்படியா அவள் கழுத்துல முத்துமாலை போடனும்னு பெருங்கனவொன்று இருந்துச்சு அவளுக்கு.. தன் தம்பி கெட்டிக்காரன் எப்படியும் கொண்டு வருவான்னு தம்பி மேல நம்பிக்கையும் இருந்துச்சு..
போகும்போது தன் மகனையும் உடன் கூட்டிட்டு போ என்றாள் சந்தனமாரி...
கடலுக்குள் குதிக்குமுன் தன் உடம்பைக் கயிற்றால் சுற்றி முடிச்சு போட்டு கயிற்றின் நுனியை வள்ளத்தின் அமர்ந்திருக்கும் மனைவியின் அண்ணன் அல்லது தம்பியிடமே கொடுக்கப்பட்டது. இது காலகாலமாக நடைமுறையில் இருந்தது ...
கடல்ஆழத்தில் மூச்சுமுட்டியவுடன் கயிற்றை இழுத்து சிக்னல் கொடுப்பார்கள். கடலுக்கு உள்ளே இருப்பது தன் மச்சான் என்று வள்ளத்தின் மேலிருந்து புயல் வேகத்தில் கயிறு மேலே இழுக்கப்படும்.. முத்துக்குளித்தலில் மட்டுமல்ல பின் நடந்த சங்கு குளித்தலிலிலும் (முதுகில் சிலிண்டர் கட்டி குழியோடும் வரைக்கும்) இதுதான் நடைமுறையில் இருந்தது..
யாத்தா.. மாமாவை முத்து குளிக்க போகச்சொல்லாதிய.. கடலுக்குள்ள ஆழமா போனா காது செவிடாயிரும் என்ற தன் மகள் சலேத்மேரியிடம்.. இந்த ஒருதடவை தானம்மா.. மாமா நல்லபடியாய் போய்ட்டு வரட்டும்னு சமாதானபடுத்தினாள் தாய் சந்தனமாரி..
மாரியம்மாவை தேடி அவள் வீட்டிற்கு சென்றான் சூசை..
எப்ப போறீங்க..? என்றாள் கண்கள் கலங்கியபடி...
உனக்கெப்படி தெரியும்..
உங்களை தவிர வேறு எதுவுமே தெரியாதவளுக்கு இந்த விஷயம் எப்படி தெரியாம போகும்...
நான் இதுவரை சேர்த்து வச்சுறுக்குற என் சம்பாத்தியத்தை ஒங்கள்ட்ட தர்றேன்.. நீங்க கட்டிக்க போற சலேத்மேரிட்ட கொடுத்துருங்க.. பிறகு எதுக்கு நீங்க வெளியூருக்கு போய் கஷ்ட்டப்படனும் ..
என் புருஷன பார்க்காம நான் உயிரோடு இருந்துருவன்னு நெனக்கியலா...?
சொல்லி முடிக்குமுன் வாட காலத்துல பெய்யுற மழைமாதிரி கண்ணிலிருந்து அவ்வளவு கண்ணீர்.. சூசை உணர்ச்சி வசப்பட்டு...
யேய் .. இங்க பாரு இந்த ஒருதடவை மட்டும்தான்... வெகுநேரம் பேசி மாரியம்மாளை சமாதானப்படுத்தினான் சூசை.. அடுத்தநாள் மூக்கையூரிலிருந்து நாளைந்து கட்டுமரங்களும், ரெண்டு வள்ளமும் புறப்பட்டது ...
கடலில் கால் நனைத்தபடி ஏக்கத்தோடு ஒருத்தியும்..
கடற்கரைக்கு அருகில் நின்ற பனைமரத்துக்கு பின்னால் கண்ணீரோடு ஒருத்தியும் கடலில் கலன்கள் மறையும் வரை பார்த்து கொண்டேயிருந்தார்கள் ....
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 11
Dev Anandh Fernando
07:32

மாரியம்மாளை பார்க்காமல் திரும்பி வந்ததால் தூக்கமில்லாமல் புரண்டு கோண்டேயிருந்தான் சூசை.. காலையில் கடலுக்கு செல்லகூட மனமில்லாமல் சென்று.. மடி ( வலை) கிழிந்து அன்று.. அவனுக்கு மட்டும் பாடு இல்லாமல் கரை திரும்பியவன் எரிச்சலுடன்... அக்கா.. ஒங்க மீனோடு சேர்த்து இதையும் வித்துருங்க ..அக்காவின் பதிலை கூட கேட்காமலே அவளை கடந்து சென்றான் சூசை... மீன்பாடு இல்லாததுனால தம்பி வருத்தத்துல போறான்னு நெனச்சுக்கிட்டாள் சூசையின் அக்கா சந்தனமாரி..
உடலெங்கும் மீன் செதில்கள் அப்பியிருந்ததால் குளத்திற்கு சென்று குளித்துவிட்டு ஈரமான உடையை கூட கழற்றாமல் மாரியம்மா இருக்காலான்னு பார்க்க பதட்டத்துடன் அவள் வீட்டிற்க்கு சென்றான் சூசை... சூசை வருவதை தூரத்திலேயே பார்த்த மாரியம்மா அம்மாச்சி தன் பேத்தியின் புருஷன் வருவதை கண்டு வீட்டைவிட்டு வெகுதூரமாக நடந்து போனாள்.. பழைய துணிகளை மூட்டையாக கட்டி அதில் தலைவைத்து தூங்கி கொண்டிருந்த மாரியம்மாவை..
எந்திரி.. என்று அதட்டல் குரல் கேட்டு விழித்தவள் வீட்டுக்குள் தன் மிக அருகில் சூசை நிற்ப்பதை பார்த்து மிரண்டு போய் எழுந்து கண்களை தாழ்த்திய படி எழுந்து அவன் அருகில் போய் நின்றாள் மாரியம்மா...
ஏன் இப்படி பன்றே.. என்னைய நிம்மதியா இருக்க விடமாட்ட போல.. மீன்பாடு வேற இல்லாத கோபத்துல அவளை கன்னத்தில் ஒங்கி அறைந்தான் சூசை.. கிண்ணாரமா சுத்தி துணிமூட்டை மேலே விழுந்தாள்..
ஏண்டி என்னை கிறுக்கன்னு நெனச்சியோ.. உன்னைய தேடி அலஞ்சு உன்னை பார்க்காம ராத்திரி பூரா தூங்கல... கடலுக்கு போயும் வெளங்கல... உன்னைய விட்டுட்டு நான் திரும்ப ஊருக்கு போயிறலாம்னு நெனைக்கேன்... சூசை எரிச்சலுடன் பேசியதை பார்த்து, பதறிபோய் எழுந்த மாரியம்மா அவன் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து சட்டென தன்னை மறந்து தன் மாராப்பால் அவன் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்தாள்.
நான் செஞ்சது தப்புத்தான் போதுமா..
அடிவாங்கிய அவள் கண்ணம் சிவந்திருப்பதை பார்த்து ..
ஏதோ.. கோபத்துல அடிச்சுட்டேன், சரியா.. என்றான் சூசை...
அவள் தன் கண்ணத்தை தொட்டுபார்த்து கடுமையாக வலித்தாலும் அதை வெளிகாட்டாமல்.. என் புருஷன்தான அடிச்சாரு.. பரவாயில்ல என்றாள் மாரியம்மா உற்ச்சாகமாக வலியை மறைத்து கொண்டு... சூசை தன் கைகளால் அவள் தலையை அணைத்து தன் பக்கம் இழுக்கும் போது அவனின் கைகளை தட்டிவிட்டு...
யாரவது பார்த்துட போறாங்க.. போய்ட்டு வாங்க என்றாள்.. சூசை வீட்டை விட்டு வெளியே செல்லும்போது..
என்னங்க..
திரும்பி பார்த்தான் சூசை.. வீட்டுட்டுக்கு போய் சீக்கிரம் சாப்பிடுங்க..
எதுக்கு என்பது மாதிரி கண்களை உயர்த்தினான் சூசை.. எனக்கு பசிக்குது என்றாள் மாரியம்மாள்... தான் சாப்பிடாம அவள் சாப்பிடமாட்டாள் என்று நினைத்து வீட்டிற்கு போனவுடனே மளமளவென கலயத்திலிருந்த பழைய கஞ்சியை குடிக்க தொடங்கினான் சூசை..
வேம்பாறிலிருந்து வட்டாண்களை (பனை ஒலையால் செய்யப்பட்ட பெரிய பெட்டி) வாங்கி வந்து காயப்போட்ட கருவாடுகளை அதில் அள்ளி வைத்து பெண்கள் தலைசுமையாக விவசாய கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்க தொடங்கினார்கள்.. ஆண்களுக்கு நிகராக பெண்களும் உழைத்ததால் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு கொண்டே சென்றது..
மூக்கையூரிலிருந்த ஒன்றிரண்டு பூர்வ குடி மக்களின் விவசாய நிலங்களையும், பனங்காடுகளையும் விலைக்கு வாங்கி மூக்கையூர் முழுவதையும் தன்வசப்படுத்தினார்கள்...
மூக்கையூரில் வசிக்கும் மக்களின் பொருளாதார நிலையை கேள்விபட்டு இடிந்தகரையிலிருந்தும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் மூக்கையூரை நோக்கி கட்டுமரங்கள் புறப்பட்டது... பூர்வகுடி கிராம மக்களின் ஜனத்தொகையை விட குடியேற்றம் நடந்த மூக்கையூர் ஜனதொகையாலும் பொருளாராதத்தாலும் புகழ் பெற்றது..
இராமநாதபுரம் சமஸ்தானத்தின் பார்வை மூக்கையூரின் மேல் விழுந்தது.. பொழுது விடிஞ்சும் விடியாம இருக்கும் போது எந்துச்சு மணலை வச்சு பல்லு வெளக்கிட்டு பழைய கஞ்சில உள்ள நீராத்தணிய மட்டும் குடிச்சுட்டு கடலுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து கிளம்பினான் சூசை ..
கடற்கரைக்கு செல்லும் வழியில் ஒரு பனை மரத்துக்கு பின்னாலிருந்து என்னங்க... இங்கே வாங்களேன்.. ஒரு குரல் கேட்டது..
முகம் மங்கலாக தெரிந்தாலும் குரல் யாரென்று தெரிந்து நெருங்கி போனான் சூசை.. எதுக்கு இந்நேரத்துல வந்துருக்க..
நீங்க திரும்ப உங்க ஊருக்கு போயிட்ட மாதிரி கனவு வந்துச்சு.. அதுலயிருந்து தூங்கவேயில்லை..அதான் உங்களைபார்த்துட்டு போகலாம்னு வந்தேன் என்றாள் மாரியம்மா.. சூசையை மிக நெருக்கமாக பார்த்துவிட்டு பனை மர கூட்டத்திற்குள் மறைந்து போனாள்மாரியம்மாள்... அதிகாலையில் அவளை பார்த்த சந்தோஷத்தில் துள்ளலுடன் கடலுக்கு சென்ற சூசை..
திரும்பி வரும்போது தாங்கமுடியாத அளவுக்கு மீன்களால் ஒமல் நிறைந்திருந்தது.. கடற்கரையில் மாங்கோடு மீன்களை கொட்டினான்.. மீன்கள் ஒவ்வொன்றும் வழுக்கி கொண்டு போய் அந்த பகுதி முழுவதும் நிறைத்தது..
சந்தனமாரி தன் தம்பியை நோக்கி வந்தாள்.. கூட்டமாக சிதறி கிடந்த மீன்களின் அளவை பார்த்து.... என் தம்பி பெரிய கம்மாறுகாரன் பெருமிதத்தோடு சொன்னாள் சந்தனமாரி...
எக்கா ..எங்கே மருமகளை காணோம்? தன் அக்காவிடம் கேட்டான் சூசை...
வெட்கம் கலந்த சிரிப்போடு.. ஒம் மருமகள் நேத்து ராத்திரி சமஞ்சுட்டா என்றாள் சந்தனமாரி...
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 10
Dev Anandh Fernando
06:58

ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலையில் வேம்பாரு தூயஆவி ஆலயத்தில் திருப்பலி முடித்துவிட்டு அங்கிருந்து கடற்கரை வழியாக நடந்து மூக்கையூர் வந்து திருப்பலி நிறைவேற்றினார் வேம்பார் பங்கு தந்தை... மூக்கையூர் மக்களுடனேயே ஒன்றாக உணவருந்தி பொழுது சாயும் நேரத்தில் வேம்பாருக்கு திரும்பி செல்வார் பங்கு தந்தை... அவரை பாதிதூரம் வரை சென்று வழியனுப்பி விட்டு திரும்பி வருவார்கள் மூக்கையூர் இளைஞர்கள்... இது வாரவாரம் நடைமுறைக்கு வந்தது..
அதிகாலையில் கடலுக்கு செல்லுமுன் கோவில் இருக்கும் திசையை நோக்கி திரும்பி பார்த்து பிதா.. சுதன்.. கைகளால் உடம்பில் சிலுவை போட்டபின் கடலில் கால்களை நனைத்தார்கள் மூக்கையூரிலிருந்து தொழிலுக்கு செல்பவர்கள்....
இனி கோவிலுக்கு அருகில் சென்று குடியிருப்போம்னு கடற்கரை அருகிலிருந்த குடிசை வீடுகளை பிரித்து கோவிலுக்கு அருகாமையில் போய் வீடு கட்டினார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் இடையில் மிக நீண்ட இடைவெளி இருந்தது. சமையலுக்கென்று தனியாக சிறு குடில் போடப்பட்டது.. பெண்கள் ஒதுங்குவதற்கு வளவு அமைத்து வீட்டை சுற்றி பனைஒலையால் அரண் அமைத்தார்கள்....
கோவிலை சுற்றி கிட்டத்தட்ட ஒரு மைல் சுற்றளவுக்கு வீடுகள் பெருகியது.. ஆட்கள் நடமாட்டம் உள்ள ஊராக மாறிப்போனது மூக்கையூர். சாயல்குடிக்கும் மூக்கையூருக்குமான ஒற்றையடி பாதை ரெட்ட மாட்டுவண்டி போற அளவுக்கு அகலமானது.. சாயல்குடி மைனரும் அடிக்கடி மூக்கையூர் வந்து போக தொடங்கினார். இவர்களின் பங்காளிகள் என்று அழைக்கப்பட்ட இனத்தவருடன் நெருக்கம் கூடியது... ஆப்பனூரிலிருந்து மக்கள் வந்து போக தொடங்கினார்கள்..
காய்ந்து கிடந்த பனை மரங்களின் தூர் பகுதியை (அடி பகுதி) வெட்டி எடுத்து அதன் உள் பகுதியை நன்றாக குடைந்து தொட்டியாக மாற்றினார்கள்.. அதன் பெயர் பத்தை.. என்று அழைக்கப்பட்டது.. தண்ணீர் தேக்கி கொள்ள உதவும் ஆணமாகவும் (பாத்திரம்) கருவாடு தயார் செய்யவும் பயன்பட்டது பத்தை.. விற்காத மீன்களை கொண்டுவந்து பத்தையில் தட்டி... நல்ல தண்ணீர் ஊற்றி மற்றும் உப்பும் போட்டு துணியால் பத்தையை மூடிவிடுவார்கள்.. அடுத்தநாள் பத்தையில் உள்ள மீன்களை அள்ளி கடலில் அலசி கடற்கரை மணலில் காயப்போடுவார்கள்..
கச்சான் காலத்துல நல்ல வெயில்ல மீன் காஞ்சவுடனே அந்த கருவாட்டு வாசம் மூக்கையூரையும் தாண்டி போய்க்கிட்டு இருந்துச்சு.. நாங்களே சந்தைகளில் வித்துட்டு வர்றோம்னு நாலைந்து பெண்கள் கிளம்பினார்கள் சூசையின் அக்கா சந்தனமாரி உட்பட..
கொஞ்ச காலத்தில் மூக்கையூர் கருவாட்டுக்காக செவல்பட்டி சந்தையும், கடலாடி சந்தையும் இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது... நாறி போன சீலா வாளை போன்ற பெரிய மீன்களை அறுத்து சீக்கிரம் கெட்டுபோகும் குடல் பகுதிகளை அகற்றிவிட்டு உடலின் உள்ளே உப்பால் நன்றாக தேய்த்து பனை ஒலைபாயில் சுருட்டி குழி தோண்டி புதைத்து ஒரு வாரம் கழித்து அதை வெளியே எடுப்பார்கள்... இது பட்டறை கருவாடு என்று அழைக்கப்படும்.... இதன் சுவைக்கு ஈடு இனையே கிடையாது.. மூக்கையூரை சுற்றியுள்ள கிராமங்களில் மட்டுமல்ல தூரமாக உள்ள கமுதி, பார்த்திபனூர் இன்னும் சற்று அதிக தூரத்திலுள்ள விருதுநகர் வரை மூக்கையூர் கருவாடு மணத்தது..
ஒரு பனைமரத்துக்கு பின்னால் நின்று.. சூசை எப்போது வெளியே வருவான்..... தூரத்தில் இருந்த அவனது வீட்டையே பார்த்து கொண்டிருந்தாள் மாரியம்மா....
கொஞ்சநேரத்தில் சூசை வீட்டை விட்டு வெளியே வந்தவன் இவளை பார்த்ததும் என்ன என்பது போல் சைகையால் கேட்டான்..
மாரியம்மா கைகளால் அவனை அழைத்து இங்க வாங்க என்றாள் ..
அவள் அருகில் சென்றதும் சூசையை திரும்பி பார்க்காமலயே ஒரு மண்சட்டியை நீட்டி இதுல கறியும் சோறும் இருக்கு...
எங்க அம்மாச்சி உன் புருஷன்ட்ட கொடுத்துட்டுவான்னு சொன்னாங்க..
அதான் கொண்டுவந்தேன்.. இந்தாங்க என்றாள் மாரியம்மாள் அவனை திரும்பி பார்க்காமலே...
அவள் தன்னை பார்ப்பதை கூட தவிர்ப்பதை நினைத்து கோபத்துடன்..
எனக்கு வேணாம் என்று சொல்லி வந்த வேகத்திலேயே திரும்பி போனான் சூசை...
என்னங்க .. மாரியம்மாவின் குரலுக்கு திரும்பாமலே சென்றான் சூசை...
நீங்கள் சாப்பிடாமல்.. நான் சாகுற வரைக்கும் இனி சாப்பிட மாட்டேன்..
தூரத்தில் ஒலித்த மாரியம்மாவின் குரலை கேட்டு பதறி திரும்பும் போது மாரியம்மாவை அந்த இடத்தில் கானவில்லை...
சூசை ஓடிசென்று அவளை அங்கும் இங்குமாக தேடினான் ..
அவன் தேடிய பாதையெங்கும் அவளது கண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்திருந்தது..
தன்னை காணாது பதறிக்கொண்டு தேடும் தன் புருஷனை காதலோடு அடர்ந்த பனைமர கூட்டத்திற்க்குள் மறைந்து நின்று ரசித்து கொண்டிருந்தாள் மாரியம்மா...
சாயந்திர கச்சான் காத்து ரொம்ப ஒரமா இருந்ததாலே.. அலைகளின் சப்தம் மூக்கையூரை நிரப்பியிருந்தது ....
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 9
Dev Anandh Fernando
07:14

கோவில் கட்டுவதற்க்காக வேம்பாரிலிருந்து சாமியார்கள் வர்றாங்க.. அதனால யாரும் கடலுக்கு செல்ல கூடாது என்று எல்லோரும் தீர்மானித்தார்கள்.. மூக்கையூர் வந்த பாதிரிகளை வரவேற்று கூட்டி சென்றார்கள்.. கச்சான் காலத்தில அலை ஏண்டு வரும் அதுனால கடற்கரைக்கு மிக அருகில் கோவில் கட்டக்கூடாது, கொஞ்சம் உள்ளே தள்ளி போய் கட்டுவோம்னு தீர்மானித்து கடற்கரையிலிருந்து அரை மைல்கள் தள்ளி இடத்தை தேர்ந்தெடுத்தார்கள்..
கிழக்கு பகுதியில் குண்டாறும் கடலும் கலக்கும் முகத்துவாரம் அருகிலிருந்தது.. ஒரு ஆள் உயரத்துக்கு மண்சுவர் கட்டி அதுக்கு மேலே பனைஒலை வச்சு குடிசை கட்டிக்குவோம்..
சரி.. இந்த கோவில் எந்த புனிதருடைய ஆலயம்..?
பாதிரி கூட்டத்தினரை பார்த்து கேட்டார்..
சந்தியா ராயப்பர் ஆலயம் ஒன்றிரண்டு பேரை தவிர அனைவரும் சொன்னார்கள்..
(கூட்டத்தில் முக்கால் வாசிபேர் இடிந்தகரையை சேர்ந்தவர்கள் சில பேர்தான் கூட்டப்புளி, பெரியதாழை, மணப்பாட்டை சேர்ந்தவர்கள்)
பாதிரியாரும் மக்களும் சேர்ந்து சரி என்று முடிவெடுத்தார்கள்.. சாயல்குடி மைனருக்கு தகவல் சொல்லி அனுப்பப்பட்டது.. தொடக்க நாளன்று அவரும் தன் பரிவாரங்களோடு வந்து இறங்கினார்.. மளமவென வேலை தொடங்கியது.. பெண்கள் பாத்திரங்களில் களிமண்ணை அள்ளி கொண்டு வந்தார்கள். ஆண்கள் அதை வாங்கி ஆள் உயரத்திற்கு சுவர் எழுப்பினார்கள். ஒரு பிரிவினர் பனை மரங்களை சாய்த்து காயப்போட்டு சட்டம் செய்தார்கள். கூரை வேய்வதற்க்காக பனை ஒலை காய்ந்து கொண்டிருந்தது... பெண்கள் தலையில் சுமந்து வந்த களிமண்ணை அவர்களிடமிருந்து வாங்கி இறக்கி வைத்து கொண்டிருந்தான் சூசை..
தலையில் முக்காடிட்டு முகம் தெரியாமல் தலையிலிருந்த பாத்திரத்தை இறக்கி கொடுத்தாள் ஒருத்தி.. அவள் கழுத்தில் தொங்கிய தாலியை பார்த்தவுடனே தெரிந்து விட்டது சூசைக்கு.. இவள் மாரியம்மா என்று.. அவள் கொஞ்சதூரம் தள்ளி நடந்து சென்றபின் அவளை கூப்பிட்டான் சூசை..
யேய்.. நில்லு
நிற்காமல் தொடர்ந்து சென்றாள் மாரியம்மாள்.
நில்லு அதட்டினான் சூசை..
முகம் திருப்பாமல் அப்படியே நின்றாள்
நீ எதுக்கு மண் சுமக்குற..
என் புருஷன் கும்பிடுற சாமி கோவில் அதான்..
அடுத்து அவன் பேச தொடங்குமுன் அவனை விட்டு வெகுதூரம் போய்விட்டாள் மாரியம்மாள்..
கோவில் கட்டி முடிச்சாச்சு என்று வேம்பாறு போய் பங்குதந்தையிடம் சொன்னார்கள்..
நாளகழிச்சு சுருபத்தோட நான் அங்கு வர்றேன் என்றார் வேம்பார் பங்குதந்தை.. மூக்கையூர் திருவிழா கோலம் பூண்டது... நிறைய மீன்களை கொடுத்து ஆடுகள் வாங்கி எல்லோரும் கூட்டாக சாப்பிட அசன சோறு தயார் செய்தார்கள்..எங்களின் குல தெய்வம் வருகிறது, அவரை வரவேற்க வரவேண்டும் என்று தங்களின் பங்காளி சாயல்குடி மைனரிடம் சொன்னார்கள் மூக்கையூர் பெரியவர்கள்..
கண்டிப்பா நான் வருவேன் என்று சொல்லி.... சந்தியா ராயப்பரை (பீட்டர்) வரவேற்க சாயல்குடி மைனரும் மூக்கையூர் மக்களும் திரண்டார்கள்..
அதோ .. வந்து கொண்டிருந்தார் குதிரை மீதேறிய சந்தியாகப்பர்..
யேசுவின் முதல் சீடரான புனித யாக்கோபு.. ( ஜேம்ஸ் ) சுருப வடிவில் ..
(யாக்கோபு கடலோடிகளின் இனத்தை சேர்ந்தவர்...
இவர்களின் முதல்வன் மட்டுமல்ல..
இந்த இனத்தின் பாதுகாவலர் என்ற ரீதியில் சந்தியாகப்பரை கொண்டுவந்தார்கள் பாதிரிகள் கொச்சி மேற்றாசனம் விரும்பியபடி)
இவரும் வாளோடு குதிரையில் இருந்ததால் இவரை ராயப்பர் என்றே நம்பினார்கள் ..
( இன்றுவரை மூக்கையூரிலும் சரி... தங்கச்சிமடத்திலும் உள்ள சந்தியாகப்பர் ...
கோவிலும் சரி..சந்தியா ராயப்பர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது...)
மூக்கையூர் இராயப்பர் கோவில் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பரவசத்துடன் பேசப்பட்டது ..
(ஐநூறு வருடம் கழிந்தாலும் இடிந்தகரை இராயப்பர் கோவில் தாக்கம் பல தலைமுறைகளை கடந்தும் மூக்கையூர் வழிவந்த மக்களிடம் இன்னும் வாய் வழியாக சொல்லி கொடுக்க பட்டு கொண்டேயிருக்கிறது. தற்போதைய தலைமுறைதான் சந்தியாகப்பர் (ஜேம்ஸ்) கோவில் என்று அழைக்கிறார்கள்..)
கடலுக்கு சென்று பிடித்த மீன்களை விற்று கொண்டிருந்தான் சூசை.. வெகு நேரமாகியும் அவனிடம் மீன் வாங்க வரவில்லை மாரியம்மாள்.. அவளை பார்த்துவிட மாட்டோமா? ஏங்கி கொண்டிருந்த சூசையை பார்க்காமலே அவனை கடந்து சென்றாள் மாரியம்மாள். தூரத்தில் மீன் விற்று கொண்டிருந்தவனிடம் மீனை வாங்கி திரும்பி செல்லும் போதும் அவனை பார்க்காமலே சென்றாள்.. அவளுடைய இந்த நிராகரிப்பால் சூசையின் கண்கள் கலங்கியது.. அவள் தூரமாக சென்றுவிட்டதால் ஒடிச்சென்றான் சூசை ..
மாரியம்மாள் அடர்ந்த பனைமர கூட்டத்திற்க்குள் செல்லும் போது அதட்டலுடன் நில்லு என்றான் சூசை.. திரும்பாமல் நின்றாள் மாரியம்மா..
திரும்பு ..
திரும்பி பார்த்தவள் சூசையின் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து பதறிபோய் அவனை நோக்கி நகர்ந்தவள் சட்டென நின்றாள்...
ஏன் இப்படி நடந்துக்கிற..
என்னங்க.. உங்கள் கண்ணில் தேங்கியிருக்கும் கண்ணீர் நீங்கள் என்மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டுகிறது. ஆனால் நான் உங்களையே நம்பியிருக்கும் பெண்ணுக்கு என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்றாள் மாரியம்மா..
நீங்க சாப்பிடாம நான் சாப்பிடமாட்டேன்.. நீங்கள் தூங்கிய பிறகுதான் என் கண்கள் மூடும் இது என்றைக்கும் மாறாது... நீங்க அழுக கூடாது உங்கள் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தாலும் நான் கரைந்து போய் விடுவேன் இல்லை என்றால் உங்களை விட்டு காணாமல் போய் விடுவேன் என்றாள் மாரியம்மாள் ..
சூசை மறுபக்கம் திரும்பி தன் கண்களை துடைத்துவிட்டுஅவளையே பார்த்து கொண்டிருந்தான் ..
என்னங்க... அப்படிலாம் பார்க்காதீங்க.. என்னால தாங்க முடியாது என் புருஷன் மடில விழுந்துருவேன்.. வேணாம்.. தயங்கி தயங்கி நின்றபடி தன் புருஷனை கடந்து சென்றாள் மாரியம்மா...
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 8
Dev Anandh Fernando
07:34
மூக்கையூருக்கு புதிதாய் வந்த கட்டுமரங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 25 எண்ணிக்கையானது.. புதிதாய் வந்தவர்கள் கடற்கரைக்கு அருகிலேயே தங்களுக்கென்று மள மளவென பனை ஒலை குடிசை அமைத்தார்கள்... சந்தனமாரி தன் தம்பி குடிசைக்கு பக்கத்திலேயே கட்டுமரத்தில் வந்த தன் இரண்டு மகன்களுக்கும் சேர்த்து பெரிய குடிசை அமைத்தாள் ..
கடற்கரை ஒரத்தில் கிட்டத்தட்ட ஐம்பது குடிசைகள் பெருகியது. அன்று ஞாயிற்று கிழமை என்பதால் கட்டுமரம் கடலுக்கு செல்லாது. ரொம்ப நேரம் தூங்கி கொண்டிருந்தான் சூசை ..
தம்பீ...ஓடியாடா பெருங்குரலில் சந்தனமாரியின் குரல் கேட்டது.
படுத்து கிடந்தவன் எழுந்ததும் பிதா சுதன் இஸ்பிரித்து சாந்து நாமத்தினாலே ஆமென்.. கைகளால் தன் உடலில் சிலுவையிட்டான்.. உடலில் அப்பியிருந்த மணலை தட்டிவிட்டு கடற்கரை நோக்கி நடந்து சென்றான் சூசை.. அங்கு சந்தனமாரியும் அவளது இரண்டு மகன்களும் ஒரு ஆமையை அறுத்து கொண்டிருந்தார்கள்.. பீறிட்ட ஆமை இரத்தத்தை தன் இரண்டு கைகளாலும் அள்ளி ... இரத்தத்தை குடிடா என்று கொடுத்தாள் தம்பியிடம் ...
கடற்கரை மணலை கையில் எடுத்து பல்லுல வச்சு அங்குட்டும் இங்குட்டும் ரெண்டு இழுவை இழுத்துட்டு கடல்தண்ணீல வாய கொப்புளிச்சுட்டு ஆமையின் இரத்தத்தை வாங்கி குடித்தான் சூசை.. ரொம்ப தூரம் ஒடிப்போய்ட்டு வா.. அப்பத்தான் ஆமை இரத்தம் மனுஷ இரத்தத்தோடு சேரும். இது ரொம்ப சத்து என்று தன் தம்பியிடம் சொன்னாள் சந்தனமாரி.. சூசை தலை தெறிக்க ஒட தொடங்கினான்.. இவனை முந்தி கொண்டும் ரெண்டு மூனுபேர் வேகமாக ஓடி கொண்டிருந்தார்கள்..
கடற்கரையில் முதல் ஊர் கூட்டம் தொடங்கியது..
நாம் பாண்டியாபதி ஆட்சியின் கீழ் இல்லையென்றாலும் பாண்டியன் தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.. நாளை ஊர்போர் எடுப்பது (பிடித்து வரும் மீன்கள் அனைத்தும் ஊருக்கு சொந்தம். ஒவ்வொரு வீட்டுக்காரனும் வெஞ்சனத்துக்கு மட்டும் மீன் எடுத்துக்கலாம்) என்று முடிவு செய்யப்பட்டது..
அடுத்த நாள் தாங்கள் பிடித்த மீன்கள் அனைத்தையும் பாண்டியன் தீவில் வசிக்கும் தன் இன மக்களுக்கு கொண்டு போய் கொடுத்தது மட்டுமல்ல அங்கு மேலும் இரண்டு நாள் தங்கி மீன் பிடித்து கொடுத்துவிட்டு வந்தார்கள்.. பாண்டியாபதி இவர்களை நேரடியாக சந்தித்து நன்றி சொன்னார்.
சிறு ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த இனத்தின் பாதுகாவலி தஸ்நேவிஸ் மாதா சுருபத்தின் முன்.. தாயே .. எங்களை பாதுகாப்பவளே எம் மக்களை நோய்நொடி இல்லாமல் காப்பாற்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்..
இவ்வளவு அதிகமான மீன்களா.. தன் மகன்களும் தன் தம்பியும் கரைக்கு கொண்டு வந்த மீன்களை பார்த்து ஆச்சரியப்பட்டாள் சந்தனமாரி..
இரண்டு நாட்களாக சூசையை கானாமல் கடற்கரைக்கும் அவனுடைய குடிசைக்கும் அலைந்து கொண்டிருந்தாள் மாரியம்மாள்.. திடிரென கடற்கரையில் சூசையை பார்த்ததும் கொட்டானில் உள்ள பயறு பாதி சிந்தியும் அதை பற்றி கவலையில்லாமல் ஓடி சென்று அவன் அருகில் நின்றாள்.
கொஞ்ச தூரத்தில் நின்று மீன்களை பெட்டியில் அள்ளிக்கொண்டிருந்த சந்தனமாரி...
நீ .. யாரும்மா? உனக்கு என்ன வேனும்...
தன் தம்பி அருகில் நிற்பவளை பார்த்து கேட்டாள்.
மீன் வாங்க வந்தேன் ..
தம்பி மீன் கொடுடா ..
அவள் முகஜாடையை பார்த்து சூசையின் அக்கா என்று தெரிந்து கொண்டாள். பக்கத்தில் நிற்கும் பெண்தான் சூசையை கட்டிக்கப்போறவள்னு மாரியம்மாளுக்கு தெரிஞ்சு போச்சு..
இவளின் குரலை கேட்டு திரும்பினான் சூசை...
அவனை விழிமூடாமல் ஏக்கத்தோடு பார்த்தாள் மாரியம்மா..
சட்டென்று கண் தாழ்த்தி மீன்களை அள்ளி கொடுத்தான்..
மீன்களை குனிந்து வாங்கிய மாரியம்மா கழுத்திலிருந்து புது தாலிகயிறு தொங்கியது..
கல்யாணம் முடிஞ்சுட்டா தலை நிமிராமலயே கேட்டான் சூசை.
நானே எனக்கு தாலி கட்டிக்கிட்டேன் என்றாள் மாரியம்மா ..
எதுக்கு..?
எங்க அம்மாச்சி இந்த மாசத்துக்குள்ள எனக்கு கல்யாணம் முடிச்சுறுவம்னு சொன்னாக..
அதான்.. நீங்க எனக்கு தாலி கட்டிட்டியன்னு சொல்லிட்டேன்..
சூசைக்கு கைகால் உதறி மீனை கொட்டான்ல போடாமல் மணல்ல போட்டுகிட்டு இருந்தான்..
என்னங்க..
பதறிபோய் ம்ம் என்றான் சூசை..
தாலிகயிறு நடுவுல உள்ள மஞ்சளை லேசா தொடுங்களேன்..
பயந்து போய் எதற்கு என்றான் சூசை.
சும்மாதான்..
தன் அக்காளை திரும்பி பார்த்தான் சூசை..
அவள் வேலையில் மும்முரமாய் இருந்தாள்..
தாலி கயிற்றில் தொங்கிய மஞ்சளை தொட்டான்..
நான் சாகுற வரைக்கும் இது போதும் எனக்கு. நீங்க என் வீட்டுக்காரர்.. ஆனால் நீங்கள் எனக்கு வேனும் என்று உரிமை கொண்டாட மாட்டேன். உங்க அக்கா மகளை கல்யாணம் பன்னிக்கிறுங்க. இனிநான் உங்க பக்கத்திலேயே வரமாட்டேன். என் புருஷன தூரத்திலே இருந்து பார்த்துக்கிட்டே இருப்பேன்.. நீங்கள் தொட்டு தந்த இந்த தாலியை சாகும் வரை கழற்றமாட்டேன்.. இதுதான் இந்த பிறவியில் நான் வாங்கி வந்த வரம்னு நினைக்கிறேன் அவள் பேசி முடிக்கையில் கண்கள் கலங்கியிருந்தது..
எவ்வளவு நேரம்டா மீன் கொடுக்க... அக்காளின் குரல் கேட்டது..
முடிஞ்சுட்டுக்கா.. முடிஞ்சுட்டுக்கா..
அவளின் கலங்கியிருந்த கண்களிலிருந்து விழுந்த இரண்டு சொட்டு நீர் அவள் தாலி கயிறுலுல்ல மஞ்சளை நனைத்தது..
வேம்பார் தூயஆவி ஆலய பங்குதந்தையின் முன் மூக்கையூரை சேர்ந்த நாலைந்து பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள்..
சாமி.. நாங்க கடலுக்கு போறதுக்கு முன்னாடி கோவிலை பார்த்து பிதா சுதன் போட்டுத்தான் கடல்ல காலை நனைப்போம். மூக்கையூர்ல கோவில் இல்லை. எங்களுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு கோவில் கட்டித்தாங்க.. எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்..
சரி.. என்று முடிவு சொன்னார் பங்கு தந்தை..
அடுத்தநாள் தமிழ் பேச தெரிந்த இரண்டு வெள்ளைக்கார பாதிரியார்கள் வேம்பாறிலிருந்து மூக்கையூரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள் ..
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Picture Source: www.deccanchronicle.com
அலைகளின் மைந்தர்கள் - 7
Dev Anandh Fernando
00:00

கடற்கரையில் தான் பிடித்து வந்த மீன்களையெல்லாம் விற்றுவிட்டு ரெண்டு சின்ன கட்டா மீனை அங்கேயே தீயில் சுட்டு தான் தங்கும் பனை ஒலை குடிசை வீட்டிற்கு எடுத்து வந்தான் சூசை.. நேற்று இரவே தயார் செய்துவிட்டுபோன பழைய கஞ்சியோடு சுட்ட மீனையும் சாப்பிட்டு தொழிலுக்கு போன அசதியில் தூங்கி போனான்..
திடிரென கால்களில் ஈரம் தட்ட பதறி எழுந்தவன். குளித்த தலையை கூட துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட நின்றாள் மாரியம்மாள்... கையில் வைத்திருந்த மண் குவளையில் உள்ள மீன் குழம்பு மணத்தது.. என்னங்க.. கடலுக்கு போயிட்டு வந்து ரொம்ப பசியிலிருப்பீங்க அதனாலதான் வேகவேகமா சமச்சு உங்களுக்கு கொடுக்க குளிச்ச தலையகூட தொவட்டாம ஒடிவந்தேன்..
(இடிந்தகரைல பொண்டாட்டி தான் புருஷன என்னங்கன்னு தான் கூப்பிடுவாங்க ..)
அவனுக்கு என்னங்க என்ற வார்த்தை அவள் மீது மேலும் பிரியத்தை உண்டாக்கியது.. நான் சாப்ட்டேன்.. எதுக்கு தேவையில்லாத வேலை பார்க்கிற .. இத ஒங்க வீட்டுக்கு கொண்டு போ என்று அவளை அதட்டினான் சூசை.. மாரியம்மாள் முகம் சுருங்கியது.. அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
திடிரென கண்களில் நீர் கோர்த்து ஒரு சொட்டு கண்ணீர் மண் குவளையில் விழுந்தது.. சூசை பதறிபோய் யேய்.. அதை கொண்டா என்று மண் குவளையை வாங்கி கொண்டான்.. வீட்டைவிட்டு வெளியே சென்றவள் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து பனைஒலை குச்சியால் செய்த வெளக்குமாறில் அந்த சின்ன குடிசைவீட்டை பெருக்கி வாசலில் தண்ணீர் தெளித்தாள் மாரியம்மாள்..
எதுக்கு இப்படி செய்ற..
நம்மவீடு சுத்தமா இருக்க வேண்டாமா?
நம்ம வீடா ..?
ஒங்களுக்கு வேனா அது ஒங்க வீடா இருக்கலாம்.. நான் இந்த வீட்ல ஒங்களோடு சேர்ந்து வாழுறனோ இல்லையோ என்னை பொருத்தவரை இது என் வீடு.. என் கையை பிடித்து என் உசுற காப்பாத்தும் போதே நெனச்சுட்டேன் நீங்கதான் என் புருஷன்னு. நான் சமஞ்சதற்க்கு பிறகு எந்த ஆம்பளையும் என் கைகளை தொட்டதில்லை.. நீங்க காப்பாத்தலைனா இந்த உசுறும் உடம்பும் இந்நேரம் இந்த கடல் தண்ணியில கரஞ்சு போயிறுக்கும்.. உங்களை மனசுக்குள்ள வச்சிறுக்கும்போது நான் எப்படி இன்னொருத்தனோட.. அதுக்கு நீங்க பார்க்காத நேரத்துல நான் கடல்ல போய் விழுந்து உசுற மாச்சுறுவேன் .... ஒருநாள் எங்க அப்பா ராத்திரி தூங்கிகிட்டு இருக்கும் போது பேயடிச்சு செத்து போனாரு..
மறுநாள் அதே பேய் எங்க அம்மாவ வீட்டவிட்டு வெளியே கூட்டிட்டு போய் பக்கத்துல நின்ற ஒடமரத்துல தூக்கு போட வச்சுட்டு.. எங்க அம்மாச்சிதான் என்னை பார்த்துகிறாங்க.. எனக்கு யாரும் இல்லைங்கிறதால நான் சமஞ்சு ரெண்டு வருஷம் ஆகியும் எனக்கு இன்னும் கல்யாணம் முடியல.. அவன் தனக்கானவன் என்ற நினைப்பில் அவன் கண்களை நேராக பார்த்து பேசி கொண்டிருந்தாள் மாரியம்மா...
அவனிடமிருந்து எந்த பதிலும் வராதாதால் விரக்தியுடன் நான் வர்றேன் என்று சொல்லி சென்றவளை ஒடிபோய் வாசலை மறித்து நின்றான் சூசை.. என்ன என்பதுபோல் சூசையை நிமிர்ந்து பார்த்தாள் மாரியம்மாள். நான் இதுவரைக்கும் சமஞ்ச புள்ளைகள்ட்ட பேசினதும் கிடையாது அவளை தொட்டதும் கிடையாது..
எங்க அக்கா மகளத்தான் எனக்கு கட்டி வைப்பாங்க என்றான்.. நீங்கள் எனக்கு கிடைக்க மாட்டீர்கள் என்று தெரிந்தாலும் கூட நான் தெனமும் என் புருஷனை பார்க்க இந்த கடற்கரைக்கு வருவேன் என்று சொல்லி அவனை விட்டு நகரும் போது.. இந்த பாவத்தையும் பழியையும் நான் ஏத்துக்கிறமாட்டேன். எம்மா .. அவளின் கரங்களை பற்றினான் சூசை..
மாரியம்மாள் இப்பத்தான் குளத்துல குளிச்சுட்டு வந்தாலும் அவ ஒடம்பு ரொம்ப சூடா இருந்துச்சு..அந்த தொடுதலில்... காதலை விட அவள் மீதான பரிதாபமே அவனுக்கு மேலோங்கி நின்றது.. அங்காடி விக்குறவளையா கல்யாணம் கட்டிக்க போற.. அக்கா கேட்பாளே என்று நினைத்தவுடன் பதறிக்கொண்டு தன் கைகளை விடுவித்தான் சூசை..
தன் பேத்தியை கானாது கடற்கரைக்கு தேடி வந்த மாரியம்மாளின் அம்மாச்சி சூசையோடு நிற்ப்பதை பார்த்து.. முத்துன கொமரின்னு (16 வயசு) இனி புருஷன் கெடைக்கமாட்டான்னு நெனச்சு நீயே கள்ள புருஷன் தேடிட்டியோ சிறுக்கி...
ராத்திரி தலைல கல்லை தூக்கி போட்டு கொன்னுருவேன் ஒழுங்கா போயிறு..
தன் அம்மாச்சியை அதட்டினாள் மாரியம்மா..
என்னங்க கடலுக்கு ரொம்ப கவனமா போய்ட்டு வாங்க..
சூசையிடம் சொல்லிவிட்டு சென்றாள்..
அடுத்தநாள் காலைல கடலுக்கு செல்வதற்கு தயாராக வலைகளிள் உள்ள பீத்தல்களை (ஒட்டைகள்) சரி செய்து கொண்டிருந்தான்.. பொழுது (சூரியன்) அடையும் நேரம் தனக்கு எதிரே பெருங்கூட்டம் நடந்து வருவது தெரிந்தது.. கிட்ட நெருங்க நெருங்க மூக்கையூரிலிருந்து ஊருக்கு சென்றவர்களும் புதிதாய் சில முகங்களும் தெரிந்தது.. தம்பீ.. கத்திக்கொண்டே கூட்டத்திலிருந்து விலகி வேகமாய் ஓடி தன் தம்பி சூசையை கட்டி கொண்டாள் சந்தன மாரி...
எக்க்கா ... பாசத்தோடு அவள் கால்களை கட்டிகொண்டு எனக்கு சிலுவை போடுங்கக்கா என்றான் தாயில்லாமல் அவளால் வளர்க்கப்பட்ட சூசை...
சந்தனமாரி தன் தம்பியின் நெற்றியில் சிலுவை வரைந்தாள்.. அக்கா ஏது இந்த வண்ணப்பெட்டி.. வேம்பாறுல நம்மாளுக பொம்பள எனக்கு கொண்டு போங்கன்னு சும்மா கொடுத்துச்சுடா.. அதோட ஓமத்திரவமும் வேப்ப எண்ணெயும் கொடுத்துச்சு ..
வேம்பாறு பெரிய ஊருடா.. கண்கள் அகல தன் தம்பி சூசையிடம் சொன்னாள் மாரியம்மா.. நடந்து வரும்போது கரை ஒதுங்கி கிடந்த சங்குமுள் குத்தியதால் நடக்கமுடியாமல் தவித்த தன் பதிமூன்று வயது மகள் சலேத்மேரியை தன் தோளில் தூக்கி மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார் சூசையின் மச்சானும் சந்தனமாரியின் கணவனுமான ராயப்பு. ..
இடிந்தகரையிலிருந்தும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் மூக்கையூர் புறப்பட்ட பத்து பதினைந்து கட்டுமரங்கள் மூக்கையூர் கரையை நெருங்கி கொண்டிருந்தது ..
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 6
Dev Anandh Fernando
07:20

புன்னக்காயலிலிருந்து மூக்கையூரை நோக்கி வந்து கொண்டிருந்த கூட்டத்தில் ..
இன்னும் ரொம்ப தூரம் போகனுமால்ல நாங்க அங்க நடந்து வரல .. கட்டுமரத்துல வறோம்னு ரெண்டு மூணு பேர் இடிந்தகரைக்கே திரும்ப போயிட்டானுக ...
கூட்டம் தூத்துக்குடியை நெருங்கும் போது ஆட்கள் நடமாட்டத்தையே காணோம். தெருக்களில் ஒருத்தரை கூட காணோம்வீடுகளில் உள்ள கதவுகள் அனைத்தும் சாத்தியிருந்தது. ..
ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் ..
ஐயா .. ஏன் மக்களை காணோம்அவர்கள் அனைவரும் எங்கு சென்றார்கள்? ..
இவர்கள் தன் இனத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டபின்.. உங்களுக்கு தெரியாதா ..?
பெரியவர் எழுந்து நின்று, அதோ தெரியுது பார் பாண்டியன் தீவு அங்கு தான் இருக்கிறார்கள்... ஆறு மாதத்திற்க்கு முன்பே பாண்டியாபதியின் உத்தரவின் பேரில் அங்கு போய் நம் மக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்... மதுரை நாயக்க மன்னன் கயத்தாறு குறுநில மன்னனோடு சேர்ந்து முத்துக்களுக்கு அதிக வரி பணம் கேட்டதால் நாங்கள் உங்களுக்கு இனி வரி தர தரமாட்டோம் ... இனி நாங்கள் உங்கள் நாட்டில் வாழவில்லை எங்களுக்கென்று தனிநாட்டை உருவாக்கி கொள்கிறோம்னு தங்களுக்கு சொந்தமான முயல்தீவு என்றழைக்கப்படும் பாண்டியன் தீவில் மக்களை குடியமர்த்தினார் பாண்டியாபதி.. (கி. பி. 1603 லிருந்து 1610 வரை )
மாதா எங்கிருக்கிறார்கள் ..?
மக்களை காப்பாற்றிய பாண்டியாபதி நம் இனத்தின் பாதுகாவலியை பாதுகாக்காமாட்டாரா... நம் மக்களோடு மக்களாக நம் அன்னையும் இருக்கிறார்...
பரதர் மாதாவே வாழ்க...
பெருஞ்சத்தத்துடன் சொன்னது கூட்டம்...
கூட்டத்தினர் அனைவரும் கடற்கரை சென்று கடலில் இறங்கி பாண்டியன் தீவை நோக்கி கையெடுத்து கும்பிட்டு தஸ்நேவிஸ் மாதாவே... மூக்கையூரில் எங்க சந்ததிய நிலைநிறுத்துங்க.. மனமுருக கண்ணீரோடு ஜெபித்துவிட்டு தூத்துக்குடியை விட்டு மூக்கையூரை நோக்கி நகர்ந்தது கூட்டம் ..
நடந்து வரும் வழியெங்கும் மக்கள் வாழ்வதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது... பகல் முழுவதும் நடந்து சோர்ந்து போய் இரவு ஒரு ஊரை அடைந்தார்கள்.. அது தான் வேம்பார் ..
இவர்கள் யாரென்று கேள்விபட்டு இவர்களை வரவேற்க சாதி தலைவர் கடற்கரை வந்து இவர்களை தூய ஆவி ஆலயத்திற்க்கு கூட்டிசென்றார். தலைவரின் தலைமையில் இவர்களுக்கு உணவு வழங்ப்பட்டது. இரவு இங்கு தங்கி காலை திருப்பலி பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று சொல்லி சென்றார் தலைவர்.. தூய ஆவி ஆலயத்தில் காலையில் இலத்தின் மொழியில் திருப்பலி நடைபெற்றது.. கோவில் வளாகத்திற்க்குள் நிறைய வெள்ளக்கார பாதிரியார்கள் நடமாடினார்கள் ..
ஏன் இங்கு இவ்வளவு பாதிரிகள் என்று கேட்டதற்கு.. தமிழ் பேசுவதற்கும் எழுதுவதற்கும் கொச்சியிலிருந்து பாதிரிகள் இங்குதான் அனுப்பப்படுவார்கள்.. பெஸ்கி என்ற வீரமாமுனிவர் கூட இங்குதான் தங்கி பயிற்சி எடுத்து சென்றார் என்றார்கள் ...
கடற்கரை கிராமங்களிலேயே துறைமுக கிராமங்களான வேம்பாரும் புன்னகாயலும் மிக முன்னேறிய கிராமமாக இருந்தது .. காலையில் மூக்கையூரை நோக்கி மீண்டும் நடக்க தொடங்கியது கூட்டம் ..
எம்மா.. கால் ரொம்ப வலிக்கும்மா இன்னும் எவ்வளவு தூரம் போகனும்.. தன் அம்மா சந்தன மாரியம்மாளிடம் கேட்டாள் மகள்.. மத்தியான சோத்துக்கு மூக்கூர் போயிறலாமாம்.. வேம்பாறுல சொன்னாங்க என்றாள் தாய் சந்தன மாரியம்மாள்...
கரைக்கு கொண்டுவந்த மீன்களை தரம் பிரித்து ருசிக்கு ஏற்றபடி விலை நிர்ணயித்து பொருட்களை வாங்கி மீன்களை கொடுத்து கொண்டிருந்தான் சூசை....மீண்டும் பின்னாலிருந்து ஒரு குரல்.
மொச்சபயிறு தர்றேன் மீன் தர்றியளா.. ? குரல் கேட்டு திரும்பியவன் நேற்று பார்த்தவள் நின்றிருந்தாள். நேற்று மாதிரி கடல்ல போய் விழமாட்டியே..?வெட்கத்துடன் நெளிந்தாள் அவள்.. அவளிடம் சரி.. தா.. என்றான் சூசை.. எல்லோருக்கும் தேங்காய் சிரட்டையில் அளவெடுத்து கொடுப்பவள் இவனுக்கு இரண்டு கைகளையும் சேர்த்து அவனுடைய ஒலை கொட்டானில் பயறு அனைத்தையும் அள்ளி போட்டாள்... உனக்கு எவ்வளவு மீன் வேனுமென்றாலும் நீயே எடுத்துக்கொள் என்றான் சூசை.. அவள் சிறிதளவே மீன்களை எடுத்து கொண்டாள்.. இன்னும் எடு என்றான்.. இவ்வளவு எனக்கு இன்னைக்கு போதும்... அவள் மீன் பெட்டியை தலையில் வைத்து சிறிது தூரம் நடக்க தொடங்கியவள் அவனை திரும்பி பார்த்து..
என்னங்க.. இங்க வாங்களேன்.. சூசை அவள் அருகில் சென்றதும் என்ன என்பது போல் பார்வையால் கேட்டான்.. தன் மாராப்பில் முடிச்சுபோட்டு வச்சிருந்த மாவு உருண்டையை அவனிடம் கொடுத்தாள். இது உங்களுக்காக நான் தயார் செய்து எடுத்து வந்தேன்.. இதுக்கு மீன் தரவா என்றான் சூசை.. அவனை முறைத்தாள் அவள்.. அந்த மாவு உருண்டையில் புது அரிசிமாவும் கருப்பட்டியும் சில வியர்வை துளிகளும் அவளின் காதலும் நிறைய கலந்திருந்தது.. ஏய்... உன் பெயரென்ன..
மாரியம்மாள்....
ஓங்கி அடித்த அலை தன் ஆடையை முழுவதுமாக நனைத்த உணர்வு கூட இல்லாமல் மாரியம்மாள் மறையும் வரை அவளை பார்த்தபடியே நின்றான் சூசை ..
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 5
Dev Anandh Fernando
08:59

மூக்கையூரில் தங்கி மீன்பிடித்த ஒரு மாதத்திலேயே எந்த நீரோட்டத்திற்க்கு எத்தனை ஆழத்தில் வலையை விட வேண்டும் என்று கற்று தேர்ந்தால் அவர்கள் தங்கியிருந்த மூன்று மாதத்தில் நிறைய மீன்களை கரை கொண்டுவந்து பண்டமாற்று முறையில் அரிசி தவசி அங்காடின்னு நிறைய பொருள் வாங்கி இருந்தார்கள்..
மூன்று மாதம் கழித்து அவர்கள் தங்களது ஊருக்கு செல்வதற்க்கு ஏதுவாக கரவாடை பிறந்தது.. சரி... எல்லோரும் ஊருக்கு போவோம்! இடிந்தகரை பெருசு சொன்னார்.. இங்கே நாம் வாங்கியிருக்கிற பொருட்களை எல்லாம் கட்டுமரத்தில் ஏற்றுவோம்.. கட்டுமரம் பாரம் தாங்காது.. ஒரு கட்டுமரத்துக்கு ஒரு ஆள்.. இளந்தாரிகள் நடந்து போங்க.. எல்லோராலும் தீர்மாணிக்கப்பட்டது ..
ரெண்டு மூனு வாலிப பசங்க நாங்க ஊருக்கு இப்ப வரல .. நாங்க இங்கே தொழிலுக்கு போறோம். எங்க அம்மாட்ட சொல்லி எங்க குடும்பத்தை இங்கே கூட்டிட்டு வந்துருங்க என்றார்கள்.. சரி.. என்று சொல்லி வயதானவர்கள் கட்டுமரங்களிலும் இளந்தாரிகள் ஒட்டமும், நடையுமாக தாங்கள் வந்த ஊரை நோக்கி திரும்பி சென்றார்கள்.. இடிந்தகரையும் அதனை சுற்றியுள்ள ஊர்களும் இவர்களின் எதிர்பாராத வருகையை சந்தோஷமாக கொண்டாடியது ..
கடலுக்கு சென்றாலே போதுமாம்..
எப்பவுமே ஒமல் நெறஞ்சுறுமாம்..
இவர்கள் தங்கள் குடும்பங்களிடம் சொல்லியது காலப்போக்கில் மூக்கையூர் போனா பொளச்சுக்கிறலாம்னு எல்லோரும் ஏங்குற மாதிரி ஆயிட்டு..
மூக்கையூரிலிருந்து வந்தவன் குடும்பம் மட்டுமல்ல அவர்களின் சில உறவு குடும்பங்களும் கூட மூக்கையூருக்கு போவோம்னு முடிவெடுத்து மூக்கையூரை நோக்கி நடக்க தொடங்கியது ஒரு கூட்டம் ..
மூக்கையூர் செல்லும் வழியில் கொற்கை அழிந்தபின் உருவான ஏற்றுமதி துறைமுகம் புன்னக்காயலில் உள்ள ராஜகன்னி மாதா சொருபத்தின் நெடுஞ்சாண்டையாக விழுந்து ஆத்தா.. நாங்க குடும்பம் குட்டியோட மூக்கூர் போறோம் நீதான் காப்பத்தனும்னு கடற்கரை மணலில் உருண்டு புரண்டார்கள்.. மதம் மாறுவதற்கு முன்பாக எப்படி வழிபட்டார்களோ அதே முறையில்தான் வழிபட்டார்கள்.. இவர்களுக்கு கிறிஸ்துவத்தில் பிடித்த தெய்வம் எதுவென்றால் தூத்துக்குடியில் உள்ள தஸ்நேவிஸ் மாதாவும், புன்னையில் உள்ள ராஜகன்னி மாதா மட்டுமே.. இவர்கள் தாய்வழி சமூகத்தை பின்பற்றுபவர்கள் என்பதால் எப்பொழுதுமே பெண் தெய்வங்களையே வேண்டினார்கள்.. மதம் மாறுவதற்க்கு முன்பு இவர்களுக்கு குமரி அன்னையும், மதுரை மீனாட்சி அம்மனுமே குல தெய்வங்களாக இருந்தார்கள்.. (இவர்கள் பெண் தெய்வங்களையே வேண்டுவதால் தான் புனித சவேரியார் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து பனிமய அன்னையை கொணடு வர நினைத்தார்)
அவர்களின் மூக்கையூரை நோக்கிய நீண்ட நெடிய பயணம் மீண்டும் தொடங்கியது... மத்தியானத்துக்கு வெஞ்சனம் எதுவுமில்லை பக்கத்துல போயி மடி இழுத்துட்டு வர்றோம்னு ஊருக்கு போகாமல் மூக்கையூரில் தங்கியிருந்த நால்வரில் ரெண்டு வாலிப பசங்க கட்டுமரத்தை எடுத்து கடலுக்குள் சென்றார்கள்...
திரும்பி வரும்போது அவர்கள் நினைத்ததை விட மீன்கள் அதிகமிருந்தது ..
மீன்களை ரகம் வாரியாக பிரித்து கொண்டிருக்கும் போது ..
என்னட்ட ரெண்டு சுட்ட பணம்பழம் இருக்கு இத வச்சுக்கிட்டு எனக்கு மீன் தர்றீயளா? கெஞ்சும் குரலில் ஒரு பெண் குரல் கேட்டது..
திரும்பி பார்த்தான் சூசை..
பதினைந்து வயது நிரம்பிய பெண் ஒருத்தி தான் கொண்டு வந்த பனைஒலை பெட்டியிலிருந்து இரண்டு பனம்பழத்தை சூசையிடம் கொடுத்தாள்..
போதுமா..
அவள் போதும் என்று சொன்னாலும் அவள் கொண்டு வந்த பனைஓலை பெட்டி மீன்களால் நெறஞ்சுட்டு.. அவனை நேராக பார்க்காமல் கண்களை தாழ்த்தி வர்றேன்னு சொல்லிட்டு கடலுக்கு அருகில் சென்றாள். இவள் சென்ற நேரம் கடலில் அலை அடித்து உள் வாங்கியிருந்தது.. அலையில் தன் கால்களை நனைக்க வேண்டும் என்ற ஆசையில் இன்னும் உள் நுழையும் போது பேரிரைச்சலுடன் புதிய அலை உருவாகி இவளை கடலுக்குள் வாரி சுருட்டி கொண்டுபோனது..
இவள் அலறலைக்கேட்டு திரும்பி பார்த்தான் சூசை..
ஏஏய்ய் ..
அடுத்த அலை இவளை வெளியே துப்பி மீண்டும் சுருட்டி கொண்டு போகுமுன் சூசை ஒடிபோய் அவள் கைகளை இறுக பற்றி கரைக்கு கொண்டு வந்தான்.. பற்றியிருந்த அவன் கைகளை வேகமாக உதறிவிட்டு ஈரம் சொட்ட தன் மீன் பெட்டியை தலையில் வைத்து புறப்படும் போது அவள் கண்கள் முதன் முறையாக அவனை நேராக பார்த்தது..
அந்த பார்வையில் நன்றி இருந்தது. தன் கரம் பிடித்ததால் லேசான வெட்கம் இருந்தது. அதையும் தாண்டி இன்னொன்றும் இருந்தது. ஆனால் அது இவனுகளுக்கு புரியாது. பெண் என்பவள் சந்ததி விருத்திக்காகவும், சோறு பொங்கி கொடுப்பதற்காகவுமே படைக்கப்பட்டவள் என்று இவர்கள் முன்னோர்களால் இவர்களுக்கு வாழ்ந்து காட்டப்பட்டது.. அவனை விட்டு மறையும் போதுகூட அவனை மீண்டுமாய் திரும்பி பார்த்து சென்றாள்.. சொந்தம் விட்டு போககூடாதுன்னு தன் தம்பிக்கு தன் மகளை எப்படியும் கட்டி வச்சிறனம்னு பதிமூன்று வயதேயான (அடுத்த வருஷம் சமஞ்சுறுவா அடுத்த ஆறுமாசத்தில கட்டி கொடுத்திறலாம்) தன் மகளோடு கூட்டத்தோடு கூட்டமாக மூக்கையூருக்கு வந்து கொண்டிருந்தாள் சூசையின் அக்கா சந்தன மாரியம்மாள்.
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 4
Dev Anandh Fernando
06:53

நான் என்ன செய்ய வேண்டும் ஆண்டவரே.. கடவுளிடம் கேட்டார் சந்தியாகப்பர் ..
இந்த மக்களை நான் புலம் பெயர்ந்து இங்குகொண்டு வந்திருக்கிறேன். இங்கு வந்தவர்கள் மீண்டுமாய் இவர்கள் தங்களது ஊருக்கு திரும்பி செல்ல கூடாது.. இந்த இனம் மூக்கையூரில் பல்கி பெருக வேண்டும். இங்கு இவர்களை நிலைப்படுத்த வேண்டுமென்றால்... இவர்களுக்கான பாதுகாப்பையும், தொழிலையும் நீ உறுதிசெய்.. இவர்கள் செழித்து வளர்ந்து அவர்களும் தங்குவதற்கு வீடு வாசல் கட்டியபிறகு உனக்கும் பின்னாளில் அழகான வீட்டை (ஆலயம்) கட்டித்தருவேன் என்றார் கடவுள்..
சொந்த வீடுன்னு சொன்னவுடனே சந்தோஷமாக தலையாட்டினார் சந்தியாகப்பர் ..
மோயிசனை மாதிரி சொதப்பிட மாட்டியே.. என்றார் கடவுள்.. அவரு செங்கடலை பிளக்க செங்கோலை தூக்க எவ்வளவு கஷ்டப்பட்டாருன்னு உங்களுக்கு தெரியும்ல...மறுபடியும் இந்த வேலைய போய் அவருக்கு தூக்கி கொடுத்துருக்கிய ..
தராதரம் அறிஞ்சு வேலை கொடுக்கனும் ஆண்டவரே..
சிரித்துக்கொண்டே சரி..சரி.. கவனமாக இவர்களை பார்த்துக்கொள் என்று சொல்லி சந்தியாகப்பரை விட்டு நகரும் போது..
ஆண்டவரே ஒரு நிமிஷம்.. என்ன என்பது போல் பார்வையால் கேட்டார் கடவுள்..
கலிலேயா கடற்கரையில் உங்கள் மகன் கால்களை நனைத்தது போல் இந்த மூக்கையூர் கடற்கரையிலும் உங்கள் கால்களை நனைத்து செல்லுங்கள் அப்புறம் நான் இந்த இனத்தை பார்த்துக்கிறேன் என்றார் சந்தியாகப்பர்..
கடவுளின் கால்கள் கடலை தொட்டவுடன் ஆழ்கடலிலுள்ள மீன்கள் கூட கரைக்கு மிக அருகாமையில் வர தொடங்கியது...
கரவாடை பொறக்குறதுக்கு இன்னும் மூன்று மாசம்தான் இருக்கு. நாம் நடந்து போய் ஊர் சேரனும்னா எத்தனை நாள் ஆகும்னு தெரியல..
அதுனால மூனுமாசமும் இங்க தங்கி மீன்பிடிச்சுட்டு போவோம்னு முடிவெடுத்தாங்க.. புதுசா கல்யாணம் முடிச்ச ரெண்டு மூனு இளந்தாரி பசங்கதான் நெளிஞ்சாங்க. பிறகு அவர்களும் சம்மதித்தார்கள்..
முதல்நாள் கட்டுமரங்கள் கடலுக்கு சென்றது.
கடலுக்குள் மீன்பிடிக்க போயிருக்காங்களாம்...
அவர்கள் திரும்பி வருவதை பார்க்க மூக்கையூரில் மற்ற இனத்தவர் அனைவரும் ஆச்சரியத்துடன் கடற்கரையில் நின்றார்கள்.. செய்தி கேள்விபட்டு சாயல்குடி மைனரும் கடற்கரைக்கு வந்தார்.. சரியான மீன்பாடு... எல்லா கட்டுமரத்துலயும் ஒமல் நெரஞ்சுட்டு... இதுவரைக்கும் அவர்கள் இவ்வளவு மீன் பிடிச்சதேயில்லை (எல்லாம் சந்தியாகப்பர் மகிமைதான்) ..
தாங்கள் கொண்டுவந்த மீன்கள் அனைத்தையும் கடற்கரையில் நின்ற மக்களுக்கு அவர்களிடம் எதுவும் வாங்காமல் அவர்களுக்கு மீன்களை அள்ளி அள்ளி கொடுத்தார்கள் ..
இதுவரை கடல் மீன்களையே சாப்பிடாத மக்கள் (மழைகாலத்துல மூக்கையூர்ல ஒடுற குண்டாறு தண்ணியில சேலையை வைத்து மறித்து பிடிக்கும் மீன்கள் தான் அவர்கள் இதுவரை சாப்பிட்டது) மகிழ்சியோடும் நன்றியோடும் வாங்கி சென்றார்கள். தங்களிடம் எதுவுமே வாங்காமல் அவர்கள் கொடுத்ததை நினைத்து அவர்களை நினைத்து பிரமித்து போனார்கள் மற்ற இனத்தவர்கள்.
இவர்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக மற்ற விவசாய கிராமங்களிலும் பரவியது.. கடல் மீன்களை வாங்கி செல்ல மூக்கையூர் கடற்கரையில் மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து சென்றார்கள்.. பண்டமாற்று முறை தொடங்கியது.. அரிசி கொடுத்தார்கள் மீன்கள் வாங்கினார்கள். அங்காடி (திண்பண்டம்) கைமாறியது.. பதநீர் கொடுத்தார்கள்.. கள்ளு கொடுத்தார்கள் (பொண்டாட்டிய சாக கொடுத்தவன் ஒருத்தன் நல்ல போதையில் இந்த ஊரவிட்டு போக கூடாது போலயேன்னு மனதுக்குள் நினைத்தான் )..
சந்தியாகப்பர் தன் வேலையை ஆரம்பிச்சுட்டார் ...
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
அலைகளின் மைந்தர்கள் - 3
Dev Anandh Fernando
09:08

கரை ஒதுங்கிய அனைவரும் கடற்கரை வெள்ளை மணலை தாண்டி ஊருக்குள் நுழையும் போது.. இடிந்தகரையை சேர்ந்த பெரியவர் கூட நடந்து வந்த ஒருவனை உற்று பார்த்து.. நீ எங்க ஊர் பையன் இல்லையே.. உனக்கு எந்த ஊர்? என்றார்..
பெருசு.. நான் கூட்டப்புளி என்றான்.. அவனை உரசிக்கொண்டு நடந்து வந்தவன் எனக்கு பெரியதாழை என்றான்.. இன்னொருவனை கைகாட்டி அவன் கூத்தங்குழிகாரன் என்றான்..
அடடா.. எல்லோரும் சோழர்கள் தானா.. நாம எல்லோரும் சொந்தக்காரங்கப்பா.. அந்த பெருசுவின் குரல் பாசத்தில் ஒலித்தது..
அந்த ஒற்றையடி பாதையில் நடக்கும் போது வழியெங்கும் நாட்டு கருவேல மரங்களும் நாட்டு ஒட மரங்களும் பரந்து விரிந்து கிடந்தது.. கடற்கரையிலிருந்து வெகு தூரத்திற்க்கு ஆட்கள் நடமாட்டமே இல்லை.. கடற்கரைக்கும் அந்த ஊரில் வாழும் மக்களுக்கும் சம்மந்தமேயில்லை என்பது புரிந்தது..
கச்சான் காலமென்பதால் ஒரு வற்றிய ஆறு முகத்துவாரத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது.. அறுவடைமுடிந்த வயல்களை ஆங்காங்கே அடுத்த உழவுக்கு தயார் செய்து கொண்டிருந்தார்கள் சிலர் ..
ஆங்காங்கே ஊர் முழுவதும் கூட்டம் கூட்டமாய் பனைமரங்கள் நிறைந்திருந்தது.. பதநீர் காலமென்பதால் மரங்களில் கலயம் கட்டியிருந்தது..
விவசாயமும், கருப்பட்டியும் பிரதான தொழில்போல.. அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். அந்த ஊரிலிருந்த மக்கள் கருத்த உடம்பையும் கட்டுமஸ்த்தான உடலையும் கொண்ட புதியவர்களை பார்த்து மிரண்டு போனார்கள்.. மீன்பிடி பரதவர்கள் வழி தவறி தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து சாயல்குடி மைனர் இவர்களை பார்க்க மூக்கையூர் வந்து ஏய்.. நாம் அனைவரும் சொக்காரங்க என்று சொல்லி அவர்களுக்கு உணவும், அவர்கள் தங்குவதற்க்கு கடற்கரையில் பனைஒலை குடிசையும் ஏற்பாடு செய்தார்..
(தூத்துக்குடியில் நடந்த சண்டையில் பரதவருக்கு எதிராக மூர் இன குழுக்களும் நாயக்கர்களும் ஒன்றினைந்து செயல்பட்டார்கள். பரதவர்கள் மிக பெரிய அழிவை சந்தித்தார்கள். அப்போதும் சரி பின்பு 1538 இல் வேதாளையில் மீண்டும் மூர் இனத்தவரோடு நடந்த சண்டையில் பெரும் வெற்றி பெரும்போதும் கொண்டயக்கோட்டை மறவர்களும், ஆப்பநாடு மறவர்களும் பரதவர்களுக்கு துணையாக நின்றார்கள். இவர்கள் முன்பு பாண்டிய பேரசில் ஒன்றிணைந்து இருந்தார்கள். அந்த வகையில் இரு இனத்துக்கும் உறவுமுறை இருந்தது ..)
இந்த கச்சான் காலத்துல எதிர்த்த ஒட்டுல நாம் ஊருக்கு போக முடியாது. கட்டுமரத்தை இங்க வச்சுட்டு நடந்து ஊருக்கு போயிருவமா..? அல்லது கரைவாட காலத்துல சாய ஒட்டுல ஊருக்கு போவமா? அதுவரைக்கும் இந்த ஊர்ல தொழிலுக்கு செல்வோமா? அவர்களுக்குள் குழம்பி கொண்டிருந்தார்கள்..
சந்தியாப்பரே.. கடவுள் கூப்பிட்டு வாய் மூடுமுன் அவரின் எதிரே நின்றார் ஜேம்ஸ் என்னும் சந்தியாகப்பர். அவரது அருகில் அவர் வந்த முரட்டு வெள்ளை குதிரையும் நின்றது... இவனுக எல்லோரும் உன் இனத்தான் இவர்களோடு கொஞ்சகாலம் நீ தங்கவேண்டும் என்றார் கடவுள்...
தலை குனிந்தவாறு உத்தரவு ஆண்டவரே என்றார் சந்தியாகப்பர் ..
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Picture Source: Pasumai Tamizhagam
அலைகளின் மைந்தர்கள் - 2
Dev Anandh Fernando
07:39
