வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 23 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 7
மூக்கையூருக்கு புதிதாய் வந்த கட்டுமரங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 25 எண்ணிக்கையானது.. புதிதாய் வந்தவர்கள் கடற்கரைக்கு அருகிலேயே தங்களுக்கென்று மள மளவென பனை ஒலை குடிசை அமைத்தார்கள்... சந்தனமாரி தன் தம்பி குடிசைக்கு பக்கத்திலேயே கட்டுமரத்தில் வந்த தன் இரண்டு மகன்களுக்கும் சேர்த்து பெரிய குடிசை அமைத்தாள் ..

கடற்கரை ஒரத்தில் கிட்டத்தட்ட ஐம்பது குடிசைகள் பெருகியது. அன்று ஞாயிற்று கிழமை என்பதால் கட்டுமரம் கடலுக்கு செல்லாது. ரொம்ப நேரம் தூங்கி கொண்டிருந்தான் சூசை .. 

தம்பீ...ஓடியாடா பெருங்குரலில் சந்தனமாரியின் குரல் கேட்டது.

படுத்து கிடந்தவன் எழுந்ததும் பிதா சுதன் இஸ்பிரித்து சாந்து நாமத்தினாலே ஆமென்.. கைகளால் தன் உடலில் சிலுவையிட்டான்.. உடலில் அப்பியிருந்த மணலை தட்டிவிட்டு கடற்கரை நோக்கி நடந்து சென்றான் சூசை.. அங்கு சந்தனமாரியும் அவளது இரண்டு மகன்களும் ஒரு ஆமையை அறுத்து கொண்டிருந்தார்கள்.. பீறிட்ட ஆமை இரத்தத்தை தன் இரண்டு கைகளாலும் அள்ளி ... இரத்தத்தை குடிடா என்று கொடுத்தாள் தம்பியிடம் ...

கடற்கரை மணலை கையில் எடுத்து பல்லுல வச்சு அங்குட்டும் இங்குட்டும் ரெண்டு இழுவை இழுத்துட்டு கடல்தண்ணீல வாய கொப்புளிச்சுட்டு ஆமையின் இரத்தத்தை வாங்கி குடித்தான் சூசை.. ரொம்ப தூரம் ஒடிப்போய்ட்டு வா.. அப்பத்தான் ஆமை இரத்தம் மனுஷ இரத்தத்தோடு சேரும். இது ரொம்ப சத்து என்று தன் தம்பியிடம் சொன்னாள் சந்தனமாரி.. சூசை தலை தெறிக்க ஒட தொடங்கினான்.. இவனை முந்தி கொண்டும் ரெண்டு மூனுபேர் வேகமாக ஓடி கொண்டிருந்தார்கள்.. 

கடற்கரையில் முதல் ஊர் கூட்டம் தொடங்கியது..

நாம் பாண்டியாபதி ஆட்சியின் கீழ் இல்லையென்றாலும் பாண்டியன் தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.. நாளை ஊர்போர் எடுப்பது (பிடித்து வரும் மீன்கள் அனைத்தும் ஊருக்கு சொந்தம். ஒவ்வொரு வீட்டுக்காரனும் வெஞ்சனத்துக்கு மட்டும் மீன் எடுத்துக்கலாம்) என்று முடிவு செய்யப்பட்டது..

அடுத்த நாள் தாங்கள் பிடித்த மீன்கள் அனைத்தையும் பாண்டியன் தீவில் வசிக்கும் தன் இன மக்களுக்கு கொண்டு போய் கொடுத்தது மட்டுமல்ல அங்கு மேலும் இரண்டு நாள் தங்கி மீன் பிடித்து கொடுத்துவிட்டு வந்தார்கள்.. பாண்டியாபதி இவர்களை நேரடியாக சந்தித்து நன்றி சொன்னார்.

சிறு ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த இனத்தின் பாதுகாவலி தஸ்நேவிஸ் மாதா சுருபத்தின் முன்.. தாயே .. எங்களை பாதுகாப்பவளே எம் மக்களை நோய்நொடி இல்லாமல் காப்பாற்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்..

இவ்வளவு அதிகமான மீன்களா.. தன் மகன்களும் தன் தம்பியும் கரைக்கு கொண்டு வந்த மீன்களை பார்த்து ஆச்சரியப்பட்டாள் சந்தனமாரி.. 

இரண்டு நாட்களாக சூசையை கானாமல் கடற்கரைக்கும் அவனுடைய குடிசைக்கும் அலைந்து கொண்டிருந்தாள் மாரியம்மாள்..  திடிரென கடற்கரையில் சூசையை பார்த்ததும் கொட்டானில் உள்ள பயறு பாதி சிந்தியும் அதை பற்றி கவலையில்லாமல் ஓடி சென்று அவன் அருகில் நின்றாள். 

கொஞ்ச தூரத்தில் நின்று மீன்களை பெட்டியில் அள்ளிக்கொண்டிருந்த சந்தனமாரி...

நீ .. யாரும்மா? உனக்கு என்ன வேனும்...

தன் தம்பி அருகில் நிற்பவளை பார்த்து கேட்டாள்.

மீன் வாங்க வந்தேன் ..

தம்பி மீன் கொடுடா ..

அவள் முகஜாடையை பார்த்து சூசையின் அக்கா என்று தெரிந்து கொண்டாள். பக்கத்தில் நிற்கும் பெண்தான் சூசையை கட்டிக்கப்போறவள்னு மாரியம்மாளுக்கு தெரிஞ்சு போச்சு..

இவளின் குரலை கேட்டு திரும்பினான் சூசை...

அவனை விழிமூடாமல் ஏக்கத்தோடு பார்த்தாள் மாரியம்மா..

சட்டென்று கண் தாழ்த்தி மீன்களை அள்ளி கொடுத்தான்..

மீன்களை குனிந்து வாங்கிய மாரியம்மா கழுத்திலிருந்து புது தாலிகயிறு தொங்கியது..

கல்யாணம் முடிஞ்சுட்டா தலை நிமிராமலயே கேட்டான் சூசை.

நானே எனக்கு தாலி கட்டிக்கிட்டேன் என்றாள் மாரியம்மா ..

எதுக்கு..?

எங்க அம்மாச்சி இந்த மாசத்துக்குள்ள எனக்கு கல்யாணம் முடிச்சுறுவம்னு சொன்னாக..

அதான்.. நீங்க எனக்கு தாலி கட்டிட்டியன்னு சொல்லிட்டேன்..

சூசைக்கு கைகால் உதறி மீனை கொட்டான்ல போடாமல் மணல்ல போட்டுகிட்டு இருந்தான்..

என்னங்க..

பதறிபோய் ம்ம் என்றான் சூசை..

தாலிகயிறு நடுவுல உள்ள மஞ்சளை லேசா தொடுங்களேன்..

பயந்து போய் எதற்கு என்றான் சூசை.

சும்மாதான்..

தன் அக்காளை திரும்பி பார்த்தான் சூசை..

அவள் வேலையில் மும்முரமாய் இருந்தாள்..

தாலி கயிற்றில் தொங்கிய மஞ்சளை தொட்டான்..

நான் சாகுற வரைக்கும் இது போதும் எனக்கு. நீங்க என் வீட்டுக்காரர்.. ஆனால் நீங்கள் எனக்கு வேனும் என்று உரிமை கொண்டாட மாட்டேன். உங்க அக்கா மகளை கல்யாணம் பன்னிக்கிறுங்க. இனிநான் உங்க பக்கத்திலேயே வரமாட்டேன். என் புருஷன தூரத்திலே இருந்து பார்த்துக்கிட்டே இருப்பேன்.. நீங்கள் தொட்டு தந்த இந்த தாலியை சாகும் வரை கழற்றமாட்டேன்.. இதுதான் இந்த பிறவியில் நான் வாங்கி வந்த வரம்னு நினைக்கிறேன் அவள் பேசி முடிக்கையில் கண்கள் கலங்கியிருந்தது..

எவ்வளவு நேரம்டா மீன் கொடுக்க... அக்காளின் குரல் கேட்டது..

முடிஞ்சுட்டுக்கா.. முடிஞ்சுட்டுக்கா..

அவளின் கலங்கியிருந்த கண்களிலிருந்து விழுந்த இரண்டு சொட்டு நீர் அவள் தாலி கயிறுலுல்ல மஞ்சளை நனைத்தது..

வேம்பார் தூயஆவி ஆலய பங்குதந்தையின் முன் மூக்கையூரை சேர்ந்த நாலைந்து பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள்..

சாமி.. நாங்க கடலுக்கு போறதுக்கு முன்னாடி கோவிலை பார்த்து பிதா சுதன் போட்டுத்தான் கடல்ல காலை நனைப்போம். மூக்கையூர்ல கோவில் இல்லை. எங்களுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு கோவில் கட்டித்தாங்க.. எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்..

சரி.. என்று முடிவு சொன்னார் பங்கு தந்தை..

அடுத்தநாள் தமிழ் பேச தெரிந்த இரண்டு வெள்ளைக்கார பாதிரியார்கள் வேம்பாறிலிருந்து மூக்கையூரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள் ..

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Picture Source: www.deccanchronicle.com
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com