வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 27 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 13

சித்திரை பிறந்தது...

கடலுக்குள் முத்து குளிக்க போனவுங்க பாண்டியன் தீவிலிருந்து நாள கழிச்சு ஊருக்கு வர்றாங்க... வேம்பாரிலிருந்து மூக்கையூருக்கு தகவல் வந்திருந்தது... மூக்கையூர் கடற்கரையில்அதிகாலையிலேயே பெரும் கூட்டமொன்று கடலை பார்த்தபடி நின்று கொண்டிருந்தது.. கொஞ்சம் கொஞ்சமாக சில கருப்பு தெரிய தொடங்கியது கடலில்.. .

வழக்கம்போல் தன் புருஷன் கரைக்கு திரும்பி வந்துட்டான்னு பார்க்க ஒவ்வொரு நாளும் கடற்கரைக்கு தேடிவரும் மாரியம்மா.. கடற்கரையில் கூட்டமாக நின்று கடலையே பார்த்து கொண்டிருந்த ஒருத்தியிடம்.. எதுக்கு கூட்டமா இங்கே நிக்கிறிய என்றாள்.. முத்து குளிக்க போனவுங்க மூனுமாசம் கழிச்சு இன்னைக்கு தான் ஊருக்கு வர்றாங்க..

கடலில் தூரமாக சுட்டிகாட்டி அந்தா வருதுபாரு கட்டுமரம் என்று சொல்லி கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் கட்டு மரங்களை காட்டினாள்.. மாரியம்மா சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள். பரவசத்தில் அங்காடி கொட்டான் அவள் கையிலிருந்து கீழே விழுந்தது கூட தெரியவில்லை அவளுக்கு ...

சந்தனமேரிக்கு தன்முகம் தெரியக்கூடாதுன்னு தலையில் முக்காடிட்டு அவளுக்கு பின்புறம் செல்லும் போது.. எல்லா மரத்துக்கும் சாய ஒடிவருதுலம்மா அதுதான் சூசை மாமா கட்டுமரம்.. சந்தனமாரியின் இன்னொரு மகன் அவளிடம் சொல்லி கொண்டிருக்கும் போதே முதல் ஆளாக கரைக்கு வந்து சேர்ந்தான் சூசை..

தம்பீ.. ஓடிசென்று தன் தம்பியையும் சூசையோடு துணைக்கு சென்ற தன் மகனையும் இரு கைகளாளும் அணைத்து அவர்களுக்கு நெற்றியில் சிலுவை வரைந்தாள் சந்தனமாரி.. தன்னை யாரும் பார்த்துவிட கூடாதென்று முகத்தை மேலும் மறைத்து கூட்டத்திற்குள் சென்றாள் மாரியம்மா.. முழுநேரமும் கடல்லயே கெடந்து நல்ல சாப்பாடு இல்லாம கண்ணுலாம் குழியோடிபோயி ரொம்ப கெறங்கிபோய் வந்திருந்தான் சூசை..  இதுலவேற தலை முடியெல்லாம் செம்பட்டையா மாறி போயிரூந்துச்சு..

கூட்டத்திற்குள் கிடைத்த இடைவெளியில் கண்ணை மூடாமல் சூசையை உத்து பார்த்து கொண்டிருந்தாள் மாரியம்மா.. பனை ஒலை பாயில் பரப்பியிருந்த முத்துக்களை பார்த்து பரவசப்பட்டு போயி.. தம்பி இதுக்கு முன்னால இப்படி பார்த்ததேயில்லை என்றாள் சூசையின் அக்கா சந்னமாரி... வெள்ளை, நீலம், இளம்சிவப்பு மற்றும் ஒருசில முத்துக்கள் கருப்பு நிறமாகவும் காணப்பட்டது.. அளவில் பட்டாணியிலிருந்து குன்னிமுத்து வரை இருந்தது.. முட்டை வடிவிலான முத்துக்களே அதிகம் இருந்தது. விலை அதிகமான உருண்டை முத்துக்கள் கொஞ்சமே கிடந்தது. அரிதிலும் அரிதாக காணப்படும் தங்கநிற முத்து ஒன்று மட்டுமே இருந்தது ..

வேம்பாருல இருந்து முத்துக்களை விலைக்கு வாங்க வருவாங்களாம்.. தன் அக்காவிடம் சொன்னான் சூசை... தன் மகள் கல்யாணத்துக்கு முத்துமாலை செஞ்சு மீதம் இருந்தால் மட்டுமே விற்பதென முடிவெடுத்தாள் சந்தனமாரி..

சரி.. சாப்பிடாம கெடந்து உன் வயிறுலாம் ஒட்டிபோய் கெடக்கு.. உன் மருமகள் கஞ்சியும் மஞ்சள் ஊத்தி அவிச்ச காரலும் கொடுத்துவுட்டுருக்கா.. சாப்ட்டுட்டு தூங்கு... சரிக்கா என்றான் சூசை..

சூசை தன்னை எப்படியும் பார்க்க வராமல் இருக்கமாட்டான்னு வீட்டுகதவை திறந்தே வைத்திருந்தாள் மாரியம்மா.. இரவு வரை தன்னை பார்க்க வராததால் அழுதுகொண்டே அப்படியே தூங்கிபோயிருந்தாள்.. விடிஞ்சும் விடியாம இருக்கும்போதே அவளை தேடி வீட்டிற்கு சென்றான் சூசை.

வீட்டு கதவு பளார்னு திறந்து கிடப்பதை பார்த்து பதறிக்கொண்டு உள்ளே போக ..
தலைவிரி கோலத்தோடு தூங்கிகொண்டிருந்தவள் ஆள் அரவம் கேட்டு விழித்து இவனை பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து முகத்தை சோகமாக்கி அவனை பார்க்காமல் தலைகுனிந்தவாறே இருந்தவளின் அருகில் போய் உட்கார்ந்தான் சூசை..

அவனை ஏறெடுத்துகூட பார்க்காமல் அமைதியாய் இருந்தவள் .. திடிரென ஏங்கி ஏங்கி அழுக தொடங்க... இப்ப அழுகுறத நிறுத்துறியா இல்ல நான் எந்துச்சு போகவா.. கோபம் வருதாக்கும்.. இங்க ஒருத்தி உங்களுக்காக காத்து கிடக்காள்னு உங்களுக்கு மறந்து போச்சுல.. நேற்று உன்னை கடற்கரைல பார்த்தேன் தெரியுமா உனக்கு ..

எப்ப பார்த்திய... கரைக்கு வந்ததும் முதன்முதலா உன்னையத்தான் பார்க்கனும்னு வந்தேன்.. அந்த கூட்டத்துல எனக்கு வேறு யாருமே தெரியல.. உன் முகம் மட்டும்தான் தெரிந்தது... தன் கணவனின் பாசத்தை நினைத்து அழுகையை நிறுத்தினாள்.. இன்னைக்கு ஞாயிற்றுகிழமை நான் கோவிலுக்கு போகனும் என்று கிளம்பியவனை..

பொறுங்க.. ரொம்ப கிறங்கிபோயிருக்கிய... மண்குவளையில் பழைய கஞ்சியும் காயப்போட்ட சுண்டக்காயையும் கொண்டு வந்து கொடுத்தாள்.. சூசை சாப்பிடும்போது அவன் அருகில் அமர்ந்து அவனை பார்த்தவாறே பிரிந்திருந்த மூன்று மாச ஏக்கத்தையும் தணித்து கொண்டாள்.. 

ஜெபதேயுவின் மகனே என்ன இந்த பக்கம் நடமாடுறிய.. தன் மகன் இயேசுவால் யாக்கோபு என்றழைக்கப்பட்ட சந்தியாகப்பரிடம் கேட்டார் கடவுள்.. மூக்கையூருல எனக்கு நீங்க கட்டிகொடுத்த குடிசை வீட்ல ரொம்ப கூட்டம் குமியுது.. சிலநேரத்துல எனக்கு மூச்சு முட்டுது ஆண்டவரே... எனக்கு அழகான பெரிய வீடு கட்டிதர்றேன்னு சொன்னியல்ல.. அதான் ஞாபகபடுத்திட்டு போகலாம்னு வந்தேன்... அதற்கெல்லாம் காலம் நேரம் இன்னும் நெறய இருக்கு.. இப்ப நான் சொன்ன வேலையை மட்டும் ஒழுங்கா செய்யும் என்றார் கடவுள்... உத்தரவு ஆண்டவரே என்றார் சந்தியாகப்பர்.....

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com