வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 20 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 5

புன்னக்காயலிலிருந்து மூக்கையூரை நோக்கி வந்து கொண்டிருந்த கூட்டத்தில் ..
இன்னும் ரொம்ப தூரம் போகனுமால்ல நாங்க அங்க நடந்து வரல .. கட்டுமரத்துல வறோம்னு ரெண்டு மூணு பேர் இடிந்தகரைக்கே திரும்ப போயிட்டானுக ...

கூட்டம் தூத்துக்குடியை நெருங்கும் போது ஆட்கள் நடமாட்டத்தையே காணோம். தெருக்களில் ஒருத்தரை கூட காணோம்வீடுகளில் உள்ள கதவுகள் அனைத்தும் சாத்தியிருந்தது. ..

ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் ..

ஐயா .. ஏன் மக்களை காணோம்அவர்கள் அனைவரும் எங்கு சென்றார்கள்? ..

இவர்கள் தன் இனத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டபின்.. உங்களுக்கு தெரியாதா ..?

பெரியவர் எழுந்து நின்று, அதோ தெரியுது பார் பாண்டியன் தீவு அங்கு தான் இருக்கிறார்கள்... ஆறு மாதத்திற்க்கு முன்பே பாண்டியாபதியின் உத்தரவின் பேரில் அங்கு போய் நம் மக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்... மதுரை நாயக்க மன்னன் கயத்தாறு குறுநில மன்னனோடு சேர்ந்து முத்துக்களுக்கு அதிக வரி பணம் கேட்டதால் நாங்கள் உங்களுக்கு இனி வரி தர தரமாட்டோம் ... இனி நாங்கள் உங்கள் நாட்டில் வாழவில்லை எங்களுக்கென்று தனிநாட்டை உருவாக்கி கொள்கிறோம்னு தங்களுக்கு சொந்தமான முயல்தீவு என்றழைக்கப்படும் பாண்டியன் தீவில் மக்களை குடியமர்த்தினார் பாண்டியாபதி.. (கி. பி. 1603 லிருந்து 1610 வரை )

மாதா எங்கிருக்கிறார்கள் ..?

மக்களை காப்பாற்றிய பாண்டியாபதி நம் இனத்தின் பாதுகாவலியை பாதுகாக்காமாட்டாரா... நம் மக்களோடு மக்களாக நம் அன்னையும் இருக்கிறார்... 

பரதர் மாதாவே வாழ்க... 

பெருஞ்சத்தத்துடன் சொன்னது கூட்டம்...

கூட்டத்தினர் அனைவரும் கடற்கரை சென்று கடலில் இறங்கி பாண்டியன் தீவை நோக்கி கையெடுத்து கும்பிட்டு தஸ்நேவிஸ் மாதாவே... மூக்கையூரில் எங்க சந்ததிய நிலைநிறுத்துங்க.. மனமுருக கண்ணீரோடு ஜெபித்துவிட்டு தூத்துக்குடியை விட்டு மூக்கையூரை நோக்கி நகர்ந்தது கூட்டம் ..

நடந்து வரும் வழியெங்கும் மக்கள் வாழ்வதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது... பகல் முழுவதும் நடந்து சோர்ந்து போய் இரவு ஒரு ஊரை அடைந்தார்கள்.. அது தான் வேம்பார் ..

இவர்கள் யாரென்று கேள்விபட்டு இவர்களை வரவேற்க சாதி தலைவர் கடற்கரை வந்து இவர்களை தூய ஆவி ஆலயத்திற்க்கு கூட்டிசென்றார். தலைவரின் தலைமையில் இவர்களுக்கு உணவு வழங்ப்பட்டது. இரவு இங்கு தங்கி காலை திருப்பலி பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று சொல்லி சென்றார் தலைவர்.. தூய ஆவி ஆலயத்தில் காலையில் இலத்தின் மொழியில் திருப்பலி நடைபெற்றது.. கோவில் வளாகத்திற்க்குள் நிறைய வெள்ளக்கார பாதிரியார்கள் நடமாடினார்கள் ..

ஏன் இங்கு இவ்வளவு பாதிரிகள் என்று கேட்டதற்கு.. தமிழ் பேசுவதற்கும் எழுதுவதற்கும் கொச்சியிலிருந்து பாதிரிகள் இங்குதான் அனுப்பப்படுவார்கள்.. பெஸ்கி என்ற வீரமாமுனிவர் கூட இங்குதான் தங்கி பயிற்சி எடுத்து சென்றார் என்றார்கள் ... 


கடற்கரை கிராமங்களிலேயே துறைமுக கிராமங்களான வேம்பாரும் புன்னகாயலும் மிக முன்னேறிய கிராமமாக இருந்தது .. காலையில் மூக்கையூரை நோக்கி மீண்டும் நடக்க தொடங்கியது கூட்டம் ..

எம்மா.. கால் ரொம்ப வலிக்கும்மா இன்னும் எவ்வளவு தூரம் போகனும்.. தன் அம்மா சந்தன மாரியம்மாளிடம் கேட்டாள் மகள்.. மத்தியான சோத்துக்கு மூக்கூர் போயிறலாமாம்.. வேம்பாறுல சொன்னாங்க என்றாள் தாய் சந்தன மாரியம்மாள்...

கரைக்கு கொண்டுவந்த மீன்களை தரம் பிரித்து ருசிக்கு ஏற்றபடி விலை நிர்ணயித்து பொருட்களை வாங்கி மீன்களை கொடுத்து கொண்டிருந்தான் சூசை....மீண்டும் பின்னாலிருந்து ஒரு குரல்.

மொச்சபயிறு தர்றேன் மீன் தர்றியளா.. ? குரல் கேட்டு திரும்பியவன் நேற்று பார்த்தவள் நின்றிருந்தாள். நேற்று மாதிரி கடல்ல போய் விழமாட்டியே..?வெட்கத்துடன் நெளிந்தாள் அவள்.. அவளிடம் சரி.. தா.. என்றான் சூசை.. எல்லோருக்கும் தேங்காய் சிரட்டையில் அளவெடுத்து கொடுப்பவள் இவனுக்கு இரண்டு கைகளையும் சேர்த்து அவனுடைய ஒலை கொட்டானில் பயறு அனைத்தையும் அள்ளி போட்டாள்... உனக்கு எவ்வளவு மீன் வேனுமென்றாலும் நீயே எடுத்துக்கொள் என்றான் சூசை.. அவள் சிறிதளவே மீன்களை எடுத்து கொண்டாள்.. இன்னும் எடு என்றான்.. இவ்வளவு எனக்கு இன்னைக்கு போதும்... அவள் மீன் பெட்டியை தலையில் வைத்து சிறிது தூரம் நடக்க தொடங்கியவள் அவனை திரும்பி பார்த்து..

என்னங்க.. இங்க வாங்களேன்.. சூசை அவள் அருகில் சென்றதும் என்ன என்பது போல் பார்வையால் கேட்டான்.. தன் மாராப்பில் முடிச்சுபோட்டு வச்சிருந்த மாவு உருண்டையை அவனிடம் கொடுத்தாள். இது உங்களுக்காக நான் தயார் செய்து எடுத்து வந்தேன்.. இதுக்கு மீன் தரவா என்றான் சூசை.. அவனை முறைத்தாள் அவள்.. அந்த மாவு உருண்டையில் புது அரிசிமாவும் கருப்பட்டியும் சில வியர்வை துளிகளும் அவளின் காதலும் நிறைய கலந்திருந்தது.. ஏய்... உன் பெயரென்ன..

மாரியம்மாள்....

ஓங்கி அடித்த அலை தன் ஆடையை முழுவதுமாக நனைத்த உணர்வு கூட இல்லாமல் மாரியம்மாள் மறையும் வரை அவளை பார்த்தபடியே நின்றான் சூசை ..

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com