வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 26 August 2021

அலைகளின் மைந்தர்கள்-12

பாண்டியன் தீவை வந்தடைந்த மூக்கையூர் இளைஞர்களை தன் இனத்துக்காரன் என்று சிநேகமாக பார்த்தது மட்டுமல்ல.. வேம்பார் குழியோடிகள் கொண்டுவந்த வெள்ளை எருக்கம் வேரை அவர்களிடம் கொடுத்து (எருக்கஞ்செடி வேம்பார் கடற்கரை மணலில் அதிகம் காணப்படும்) இதையும் இடுப்பில் சுற்றி கொள்ளுங்கள் என்றார்கள்.. எருக்க வேரின் வாடைக்கு பெரிய சுறாக்கள் கிட்ட நெருங்காது..

(முத்து குளிக்கும் போது இதுவரை சுறாமீனால் மரணம் நடைபெறவில்லை என்றாலும் பாதுகாப்புக்காக உடலில் கட்டி இருப்பார்கள்.. குழியோடும் போது திடிரென மூச்சடைத்ததால் மட்டுமே சில மரணங்கள் நடந்துள்ளது...)

உவரி மற்றும் மணப்பாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்கள் ஊருக்கு அருகிலுள்ள புன்னைகாயல் குடமுத்தி பாரிலும்.. வேம்பார், சிப்பிகுளம் மற்றும் மூக்கையூரை சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள பாண்டியன் தீவின் கிழக்கே உள்ள சிலுவைபாரிலும் முத்துக்குளிப்பதென தீர்மானித்து.. கிழக்கு மற்றும் தென்கிழக்காக பிரிந்து சென்றார்கள் தொல் பரதவ குழியோடிகள்..

முத்து குளித்தல் என்பது வருடத்தில் தை, மாசி, பங்குணி ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே நடைபெறும். அந்த மாதங்களில் தான் தென்கடல் (மன்னார் வளைகுடா) தெளிஞ்சுருக்கும் குளியோடும் போது கடலின் தரைபகுதி வரை நன்றாக தெரியும். சித்திரை மாச தொடக்கத்திலேயே கச்சான் நீவாடு (நீரோட்டம்) ஒட தொடங்கியதும் கடல் கலங்கிரும். முத்து குளித்தல் நிறுத்தப்படும்.. ஐப்பசி மற்றும் மார்கழி மாதங்களில் கடற்கரை மணலில் மீன்களை கருவாட்டுக்காக காயப்போட மாட்டார்கள்..

நிறைய உப்புபோட்டு மீனை காயப்போட்டாலும் சின்னதா மழை பெஞ்சாலும் அஞ்சுமணி நேரத்துல புழு வச்சுறும் கொஞ்ச நேரத்துல மீன்ல உள்ள முள்ளு மட்டும்தான் கடற்கரைல கெடக்கும்... தை மாசம் தொடங்கி முடியப்போகுது வெயில் ஒறைக்க தொடங்கிட்டு.. காயப்போட்ட கருவாடுகளை வட்டான்ல அள்ளி சந்தைக்கு போக தொடங்கினார்கள் மூக்கையூர் பெண்கள்..

மழை முடிஞ்சு இந்த வருஷத்துல இப்பத்தான் கருவாடு கெடச்சதால கடலாடி சந்தைக்கு வந்தவர்கள் போட்டி போட்டு அதிக விலைகொடுத்து வாங்கி சென்றார்கள்.. தாங்கள் கொண்டுவந்த பொருளுக்கு இப்படி ஒரு விலை கிடைக்கும்னு எதிர்பார்க்கல மூக்கையூர் பெண்கள்..

கமுதியை விட கடலாடியில விலை ரொம்ப கம்மியாயிருக்கு .. இவர்களை கடந்து சென்றவர்கள் பேசிக்கொண்டு சென்றதை கேட்டு பிரமித்து போனார்கள்... சரி.. நாங்க நாலஞ்சு பேரு இங்கவுள்ள அப்புமாரு வீட்ல.. நாங்க யார்னு சொல்லி தங்கிக்கிறோம். நீங்க மூக்கூருக்கு போய் எங்க வீட்டுக்காரங்கள்ட்ட விவரத்தை சொல்லி கருவாட்டை இங்க கொண்டுவர சொல்லுங்க... அவர்களுக்குள் பேசி முடிவெடுத்து, வயசு அதிகமான நாலைந்து பேர் கடலாடியில் தங்க மீதிபேர் மூக்கையூரை நோக்கி சென்றார்கள்..

இவர்கள் தங்களுக்கு நெருக்கமான பங்காளி உறவுமுறை பெண்கள் என்று தெரிந்து இன்முகத்தோடு வரவேற்று, தங்களின் வீடுகளில் தங்கவைத்தார்கள் கடலாடியில் வசிக்கும் அப்புமார்கள்... மூக்கையூர் கருவாடு கடலாடி சந்தையில் மண மணத்தது... என்னதான் பங்காளி வீடுனாலும் எத்தனை நாள் அவுங்க வீட்ல தங்குறது..

கருவாடு விக்கிறதுல நல்ல சம்பாத்தியம் வருது.. அதுனால இந்த ஊர்லயே...
நாமே ..சொந்தமா வீடு கட்டுவோம்னு (பனை ஒலை வீடுதான்) முடிவெடுத்து ஒரு இடத்தை தேர்வு செய்து நாலைந்து பேர் பக்கத்து பக்கத்துலயே வீடுகட்டி அங்கேயே நிரந்தரமாக தங்க தொடங்கினார்கள்...

முதன்முதலாக மூக்கையூரிலிருந்து தங்களின் தொழிலுக்காக வெளி குடியேற்றம் தொடங்கிய ஊர் கடலாடி. கொஞ்சகாலத்தில் அவர்களின் நெருங்கிய சொந்தகாரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு வந்து வீடு கட்டி அங்கேயே தங்க தொடங்கினார்கள். கடலாடியில் கடல் இல்லையென்றாலும் இவர்களின் வருகையால் நிலத்தில் விளையும் விளை பொருட்களை விட கடலாடி கருவாடு பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது... (சில காலங்கள் கழித்து கமுதி பார்த்திபனூர் மற்றும் விருதுநகர் வரை கருவாடு விற்பனைக்காகவே மூக்கையூர் மக்களின் குடியேற்றம் நடந்தது)

எம்மா.. மாமா எப்பவுமே கடல்லதான் கெடப்பாகளாக்கும்.... சலேத்மேரி தன் அம்மா சந்தனமாரியிடம் கேட்டாள்.. இல்ல.. இல்ல.. ராத்திரி யாரும் கடல்ல தங்கமாட்டாங்க. அன்னைக்கு புடுச்ச முத்து சிப்பிய சாயந்தரம் கரைல கொண்டுபோய் கொடுத்துட்டு அடுத்தநாள் காலைலதான் திரும்ப கடலுக்கு செல்வாங்க.. மாமா எப்ப திரும்பி ஊருக்கு வருவாக..

தன் மகள் கல்யாண ஏக்கத்தோடு கேட்பது போல் தோன்றியது சந்தனமேரிக்கு.. சரி... தம்பி போயி ஒரு மாசம் முடிஞ்சுட்டு. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு சித்திரை மொதல் வாரத்துல ஊருக்கு வந்துருவான். மகளும் சமஞ்சு நாலஞ்சு மாசம் ஆயிறும். இதுக்கு மேலே கொமர வீட்ல வைக்ககூடாது..
வர்ற வைகாசி மாசத்துலயே தம்பிக்கும் மகளுக்கும் கல்யாணத்த முடிச்சுடனும்னு மனசுக்குள் முடிவெடுத்தாள் சந்தனமாரி...

கடற்கரையில் பரவி கிடந்த மீன்களை விற்று கொண்டிருந்த சந்தனமாரி தன்னை கடந்து கொஞ்ச தூரம் சென்ற மாரியம்மாளை பார்த்து..

ஏலா.. இங்க வா புள்ள.. 

சந்தனமேரி தன்னை கூப்பிடதை கேட்டு பதறிபோனாள் மாரியம்மாள்..

தன் விஷயம் அவளுக்கு தெரிந்திருக்குமோன்னு பயந்து கொண்டே சந்தனமேரி அருகில் சென்றாள்.. ஒருமாசமா மீன் வாங்கவே மாட்டேங்குற.. ரொம்ப கெறக்கமா வேற இருக்க... உன் புருஷன் வெளஞ்சத கொண்டுகிட்டு விக்கிறதுக்கு வெளியூர் போயிறுக்கானாக்கும் ..

ஆம் என்பது மாதிரி தலையாட்டினாள்.. புருஷன் திரும்பி வர்றதுக்குள்ள நல்லது பொல்லத சாப்புட்டு உடம்பை தேத்து... சரி.. வர்றேன்னு சொல்லிவிட்டு சந்தனமாரியை விட்டு கடந்தாள்.. மாரியம்மாவுக்கு பயத்தில் உடலெங்கும் வியர்த்து கொட்டியிருந்தது..

சூசை தனக்கு கிடைக்கமாட்டான் என்று தெரிந்தும் கூட ஒவ்வொரு நாளும் முத்து குளிக்க கடலுக்கு சென்றவன் எப்போது திரும்பி வருவான் என்று காலையிலிருந்து சாயந்தரம் வரை மட்டுமல்ல சில வேளைகளில் இரவு நேரம்கூட கடலை பார்த்தபடியே ஏக்கத்துடனே அலைந்து கொண்டிருந்தாள் மாரியம்மாள்...

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com