வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 17 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 4


மூக்கையூரில் தங்கி மீன்பிடித்த ஒரு மாதத்திலேயே எந்த நீரோட்டத்திற்க்கு எத்தனை ஆழத்தில் வலையை விட வேண்டும் என்று கற்று தேர்ந்தால் அவர்கள் தங்கியிருந்த மூன்று மாதத்தில் நிறைய மீன்களை கரை கொண்டுவந்து பண்டமாற்று முறையில் அரிசி தவசி அங்காடின்னு நிறைய பொருள் வாங்கி இருந்தார்கள்..

மூன்று மாதம் கழித்து அவர்கள் தங்களது ஊருக்கு செல்வதற்க்கு ஏதுவாக கரவாடை பிறந்தது.. சரி... எல்லோரும் ஊருக்கு போவோம்! இடிந்தகரை பெருசு சொன்னார்.. இங்கே நாம் வாங்கியிருக்கிற பொருட்களை எல்லாம் கட்டுமரத்தில் ஏற்றுவோம்.. கட்டுமரம் பாரம் தாங்காது.. ஒரு கட்டுமரத்துக்கு ஒரு ஆள்.. இளந்தாரிகள் நடந்து போங்க.. எல்லோராலும் தீர்மாணிக்கப்பட்டது ..

ரெண்டு மூனு வாலிப பசங்க நாங்க ஊருக்கு இப்ப வரல .. நாங்க இங்கே தொழிலுக்கு போறோம். எங்க அம்மாட்ட சொல்லி எங்க குடும்பத்தை இங்கே கூட்டிட்டு வந்துருங்க என்றார்கள்.. சரி.. என்று சொல்லி வயதானவர்கள் கட்டுமரங்களிலும் இளந்தாரிகள் ஒட்டமும், நடையுமாக தாங்கள் வந்த ஊரை நோக்கி திரும்பி சென்றார்கள்.. இடிந்தகரையும் அதனை சுற்றியுள்ள ஊர்களும் இவர்களின் எதிர்பாராத வருகையை சந்தோஷமாக கொண்டாடியது ..

கடலுக்கு சென்றாலே போதுமாம்..
எப்பவுமே ஒமல் நெறஞ்சுறுமாம்..
இவர்கள் தங்கள் குடும்பங்களிடம் சொல்லியது காலப்போக்கில் மூக்கையூர் போனா பொளச்சுக்கிறலாம்னு எல்லோரும் ஏங்குற மாதிரி ஆயிட்டு..

மூக்கையூரிலிருந்து வந்தவன் குடும்பம் மட்டுமல்ல அவர்களின் சில உறவு குடும்பங்களும் கூட மூக்கையூருக்கு போவோம்னு முடிவெடுத்து மூக்கையூரை நோக்கி நடக்க தொடங்கியது ஒரு கூட்டம் ..

மூக்கையூர் செல்லும் வழியில் கொற்கை அழிந்தபின் உருவான ஏற்றுமதி துறைமுகம் புன்னக்காயலில் உள்ள ராஜகன்னி மாதா சொருபத்தின் நெடுஞ்சாண்டையாக விழுந்து ஆத்தா.. நாங்க குடும்பம் குட்டியோட மூக்கூர் போறோம் நீதான் காப்பத்தனும்னு கடற்கரை மணலில் உருண்டு புரண்டார்கள்.. மதம் மாறுவதற்கு முன்பாக எப்படி வழிபட்டார்களோ அதே முறையில்தான் வழிபட்டார்கள்.. இவர்களுக்கு கிறிஸ்துவத்தில் பிடித்த தெய்வம் எதுவென்றால் தூத்துக்குடியில் உள்ள தஸ்நேவிஸ் மாதாவும், புன்னையில் உள்ள ராஜகன்னி மாதா மட்டுமே.. இவர்கள் தாய்வழி சமூகத்தை பின்பற்றுபவர்கள் என்பதால் எப்பொழுதுமே பெண் தெய்வங்களையே வேண்டினார்கள்.. மதம் மாறுவதற்க்கு முன்பு இவர்களுக்கு குமரி அன்னையும், மதுரை மீனாட்சி அம்மனுமே குல தெய்வங்களாக இருந்தார்கள்.. (இவர்கள் பெண் தெய்வங்களையே வேண்டுவதால் தான் புனித சவேரியார் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து பனிமய அன்னையை கொணடு வர நினைத்தார்)

அவர்களின் மூக்கையூரை நோக்கிய நீண்ட நெடிய பயணம் மீண்டும் தொடங்கியது... மத்தியானத்துக்கு வெஞ்சனம் எதுவுமில்லை பக்கத்துல போயி மடி இழுத்துட்டு வர்றோம்னு ஊருக்கு போகாமல் மூக்கையூரில் தங்கியிருந்த நால்வரில் ரெண்டு வாலிப பசங்க கட்டுமரத்தை எடுத்து கடலுக்குள் சென்றார்கள்...

திரும்பி வரும்போது அவர்கள் நினைத்ததை விட மீன்கள் அதிகமிருந்தது ..
மீன்களை ரகம் வாரியாக பிரித்து கொண்டிருக்கும் போது ..
என்னட்ட ரெண்டு சுட்ட பணம்பழம் இருக்கு இத வச்சுக்கிட்டு எனக்கு மீன் தர்றீயளா? கெஞ்சும் குரலில் ஒரு பெண் குரல் கேட்டது.. 
திரும்பி பார்த்தான் சூசை..
பதினைந்து வயது நிரம்பிய பெண் ஒருத்தி தான் கொண்டு வந்த பனைஒலை பெட்டியிலிருந்து இரண்டு பனம்பழத்தை சூசையிடம் கொடுத்தாள்..

போதுமா..

அவள் போதும் என்று சொன்னாலும் அவள் கொண்டு வந்த பனைஓலை பெட்டி மீன்களால் நெறஞ்சுட்டு.. அவனை நேராக பார்க்காமல் கண்களை தாழ்த்தி வர்றேன்னு சொல்லிட்டு கடலுக்கு அருகில் சென்றாள். இவள் சென்ற நேரம் கடலில் அலை அடித்து உள் வாங்கியிருந்தது.. அலையில் தன் கால்களை நனைக்க வேண்டும் என்ற ஆசையில் இன்னும் உள் நுழையும் போது பேரிரைச்சலுடன் புதிய அலை உருவாகி இவளை கடலுக்குள் வாரி சுருட்டி கொண்டுபோனது..

இவள் அலறலைக்கேட்டு திரும்பி பார்த்தான் சூசை..
ஏஏய்ய் ..

அடுத்த அலை இவளை வெளியே துப்பி மீண்டும் சுருட்டி கொண்டு போகுமுன் சூசை ஒடிபோய் அவள் கைகளை இறுக பற்றி கரைக்கு கொண்டு வந்தான்.. பற்றியிருந்த அவன் கைகளை வேகமாக உதறிவிட்டு ஈரம் சொட்ட தன் மீன் பெட்டியை தலையில் வைத்து புறப்படும் போது அவள் கண்கள் முதன் முறையாக அவனை நேராக பார்த்தது..

அந்த பார்வையில் நன்றி இருந்தது. தன் கரம் பிடித்ததால் லேசான வெட்கம் இருந்தது. அதையும் தாண்டி இன்னொன்றும் இருந்தது. ஆனால் அது இவனுகளுக்கு புரியாது. பெண் என்பவள் சந்ததி விருத்திக்காகவும், சோறு பொங்கி கொடுப்பதற்காகவுமே படைக்கப்பட்டவள் என்று இவர்கள் முன்னோர்களால் இவர்களுக்கு வாழ்ந்து காட்டப்பட்டது.. அவனை விட்டு மறையும் போதுகூட அவனை மீண்டுமாய் திரும்பி பார்த்து சென்றாள்.. சொந்தம் விட்டு போககூடாதுன்னு தன் தம்பிக்கு தன் மகளை எப்படியும் கட்டி வச்சிறனம்னு பதிமூன்று வயதேயான (அடுத்த வருஷம் சமஞ்சுறுவா அடுத்த ஆறுமாசத்தில கட்டி கொடுத்திறலாம்) தன் மகளோடு கூட்டத்தோடு கூட்டமாக மூக்கையூருக்கு வந்து கொண்டிருந்தாள் சூசையின் அக்கா சந்தன மாரியம்மாள்.
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com