வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 22 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 6
கடற்கரையில் தான் பிடித்து வந்த மீன்களையெல்லாம் விற்றுவிட்டு ரெண்டு சின்ன கட்டா மீனை அங்கேயே தீயில் சுட்டு தான் தங்கும் பனை ஒலை குடிசை வீட்டிற்கு எடுத்து வந்தான் சூசை.. நேற்று இரவே தயார் செய்துவிட்டுபோன பழைய கஞ்சியோடு சுட்ட மீனையும் சாப்பிட்டு தொழிலுக்கு போன அசதியில் தூங்கி போனான்..

திடிரென கால்களில் ஈரம் தட்ட பதறி எழுந்தவன். குளித்த தலையை கூட துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட நின்றாள் மாரியம்மாள்... கையில் வைத்திருந்த மண் குவளையில் உள்ள மீன் குழம்பு மணத்தது.. என்னங்க.. கடலுக்கு போயிட்டு வந்து ரொம்ப பசியிலிருப்பீங்க அதனாலதான் வேகவேகமா சமச்சு உங்களுக்கு கொடுக்க குளிச்ச தலையகூட தொவட்டாம ஒடிவந்தேன்..

(இடிந்தகரைல பொண்டாட்டி தான் புருஷன என்னங்கன்னு தான் கூப்பிடுவாங்க ..)

அவனுக்கு என்னங்க என்ற வார்த்தை அவள் மீது மேலும் பிரியத்தை உண்டாக்கியது.. நான் சாப்ட்டேன்.. எதுக்கு தேவையில்லாத வேலை பார்க்கிற .. இத ஒங்க வீட்டுக்கு கொண்டு போ என்று அவளை அதட்டினான் சூசை.. மாரியம்மாள் முகம் சுருங்கியது.. அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

திடிரென கண்களில் நீர் கோர்த்து ஒரு சொட்டு கண்ணீர் மண் குவளையில் விழுந்தது.. சூசை பதறிபோய் யேய்.. அதை கொண்டா என்று மண் குவளையை வாங்கி கொண்டான்.. வீட்டைவிட்டு வெளியே சென்றவள் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து பனைஒலை குச்சியால் செய்த வெளக்குமாறில் அந்த சின்ன குடிசைவீட்டை பெருக்கி வாசலில் தண்ணீர் தெளித்தாள் மாரியம்மாள்..

எதுக்கு இப்படி செய்ற..

நம்மவீடு சுத்தமா இருக்க வேண்டாமா?

நம்ம வீடா ..?

ஒங்களுக்கு வேனா அது ஒங்க வீடா இருக்கலாம்.. நான் இந்த வீட்ல ஒங்களோடு சேர்ந்து வாழுறனோ இல்லையோ என்னை பொருத்தவரை இது என் வீடு.. என் கையை பிடித்து என் உசுற காப்பாத்தும் போதே நெனச்சுட்டேன் நீங்கதான் என் புருஷன்னு. நான் சமஞ்சதற்க்கு பிறகு எந்த ஆம்பளையும் என் கைகளை தொட்டதில்லை.. நீங்க காப்பாத்தலைனா இந்த உசுறும் உடம்பும் இந்நேரம் இந்த கடல் தண்ணியில கரஞ்சு போயிறுக்கும்.. உங்களை மனசுக்குள்ள வச்சிறுக்கும்போது நான் எப்படி இன்னொருத்தனோட.. அதுக்கு நீங்க பார்க்காத நேரத்துல நான் கடல்ல போய் விழுந்து உசுற மாச்சுறுவேன் .... ஒருநாள் எங்க அப்பா ராத்திரி தூங்கிகிட்டு இருக்கும் போது பேயடிச்சு செத்து போனாரு..

மறுநாள் அதே பேய் எங்க அம்மாவ வீட்டவிட்டு வெளியே கூட்டிட்டு போய் பக்கத்துல நின்ற ஒடமரத்துல தூக்கு போட வச்சுட்டு.. எங்க அம்மாச்சிதான் என்னை பார்த்துகிறாங்க.. எனக்கு யாரும் இல்லைங்கிறதால  நான் சமஞ்சு ரெண்டு வருஷம் ஆகியும் எனக்கு இன்னும் கல்யாணம் முடியல.. அவன் தனக்கானவன் என்ற நினைப்பில் அவன் கண்களை நேராக பார்த்து பேசி கொண்டிருந்தாள் மாரியம்மா...

அவனிடமிருந்து எந்த பதிலும் வராதாதால் விரக்தியுடன் நான் வர்றேன் என்று சொல்லி சென்றவளை ஒடிபோய் வாசலை மறித்து நின்றான் சூசை.. என்ன என்பதுபோல் சூசையை நிமிர்ந்து பார்த்தாள் மாரியம்மாள். நான் இதுவரைக்கும் சமஞ்ச புள்ளைகள்ட்ட பேசினதும் கிடையாது அவளை தொட்டதும் கிடையாது..

எங்க அக்கா மகளத்தான் எனக்கு கட்டி வைப்பாங்க என்றான்.. நீங்கள் எனக்கு கிடைக்க மாட்டீர்கள் என்று தெரிந்தாலும் கூட நான் தெனமும் என் புருஷனை பார்க்க இந்த கடற்கரைக்கு வருவேன் என்று சொல்லி அவனை விட்டு நகரும் போது.. இந்த பாவத்தையும் பழியையும் நான் ஏத்துக்கிறமாட்டேன். எம்மா .. அவளின் கரங்களை பற்றினான் சூசை..

மாரியம்மாள் இப்பத்தான் குளத்துல குளிச்சுட்டு வந்தாலும் அவ ஒடம்பு ரொம்ப சூடா இருந்துச்சு..அந்த தொடுதலில்... காதலை விட அவள் மீதான பரிதாபமே அவனுக்கு மேலோங்கி நின்றது.. அங்காடி விக்குறவளையா கல்யாணம் கட்டிக்க போற.. அக்கா கேட்பாளே என்று நினைத்தவுடன் பதறிக்கொண்டு தன் கைகளை விடுவித்தான் சூசை..

தன் பேத்தியை கானாது கடற்கரைக்கு தேடி வந்த மாரியம்மாளின் அம்மாச்சி சூசையோடு நிற்ப்பதை பார்த்து.. முத்துன கொமரின்னு (16 வயசு) இனி புருஷன் கெடைக்கமாட்டான்னு நெனச்சு நீயே கள்ள புருஷன் தேடிட்டியோ சிறுக்கி...

ராத்திரி தலைல கல்லை தூக்கி போட்டு கொன்னுருவேன் ஒழுங்கா போயிறு..
தன் அம்மாச்சியை அதட்டினாள் மாரியம்மா..
என்னங்க கடலுக்கு ரொம்ப கவனமா போய்ட்டு வாங்க..
சூசையிடம் சொல்லிவிட்டு சென்றாள்..

அடுத்தநாள் காலைல கடலுக்கு செல்வதற்கு தயாராக வலைகளிள் உள்ள பீத்தல்களை (ஒட்டைகள்) சரி செய்து கொண்டிருந்தான்.. பொழுது (சூரியன்) அடையும் நேரம் தனக்கு எதிரே பெருங்கூட்டம் நடந்து வருவது தெரிந்தது.. கிட்ட நெருங்க நெருங்க மூக்கையூரிலிருந்து ஊருக்கு சென்றவர்களும் புதிதாய் சில முகங்களும் தெரிந்தது.. தம்பீ.. கத்திக்கொண்டே கூட்டத்திலிருந்து விலகி வேகமாய் ஓடி தன் தம்பி சூசையை கட்டி கொண்டாள் சந்தன மாரி...

எக்க்கா ... பாசத்தோடு அவள் கால்களை கட்டிகொண்டு எனக்கு சிலுவை போடுங்கக்கா என்றான் தாயில்லாமல் அவளால் வளர்க்கப்பட்ட சூசை...
சந்தனமாரி தன் தம்பியின் நெற்றியில் சிலுவை வரைந்தாள்.. அக்கா ஏது இந்த வண்ணப்பெட்டி.. வேம்பாறுல நம்மாளுக பொம்பள எனக்கு கொண்டு போங்கன்னு சும்மா கொடுத்துச்சுடா.. அதோட ஓமத்திரவமும் வேப்ப எண்ணெயும் கொடுத்துச்சு ..

வேம்பாறு பெரிய ஊருடா.. கண்கள் அகல தன் தம்பி சூசையிடம் சொன்னாள் மாரியம்மா.. நடந்து வரும்போது கரை ஒதுங்கி கிடந்த சங்குமுள் குத்தியதால் நடக்கமுடியாமல் தவித்த தன் பதிமூன்று வயது மகள் சலேத்மேரியை தன் தோளில் தூக்கி மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார் சூசையின் மச்சானும் சந்தனமாரியின் கணவனுமான ராயப்பு. ..

இடிந்தகரையிலிருந்தும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் மூக்கையூர் புறப்பட்ட பத்து பதினைந்து கட்டுமரங்கள் மூக்கையூர் கரையை நெருங்கி கொண்டிருந்தது ..

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com