வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 25 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 10

மாரியம்மாளை பார்க்காமல் திரும்பி வந்ததால் தூக்கமில்லாமல் புரண்டு கோண்டேயிருந்தான் சூசை.. காலையில் கடலுக்கு செல்லகூட மனமில்லாமல் சென்று.. மடி ( வலை) கிழிந்து அன்று.. அவனுக்கு மட்டும் பாடு இல்லாமல் கரை திரும்பியவன் எரிச்சலுடன்... அக்கா.. ஒங்க மீனோடு சேர்த்து இதையும் வித்துருங்க ..அக்காவின் பதிலை கூட கேட்காமலே அவளை கடந்து சென்றான் சூசை... மீன்பாடு இல்லாததுனால தம்பி வருத்தத்துல போறான்னு நெனச்சுக்கிட்டாள் சூசையின் அக்கா சந்தனமாரி..

உடலெங்கும் மீன் செதில்கள் அப்பியிருந்ததால் குளத்திற்கு சென்று குளித்துவிட்டு ஈரமான உடையை கூட கழற்றாமல் மாரியம்மா இருக்காலான்னு பார்க்க பதட்டத்துடன் அவள் வீட்டிற்க்கு சென்றான் சூசை... சூசை வருவதை தூரத்திலேயே பார்த்த மாரியம்மா அம்மாச்சி தன் பேத்தியின் புருஷன் வருவதை கண்டு வீட்டைவிட்டு வெகுதூரமாக நடந்து போனாள்.. பழைய துணிகளை மூட்டையாக கட்டி அதில் தலைவைத்து தூங்கி கொண்டிருந்த மாரியம்மாவை.. 

எந்திரி.. என்று அதட்டல் குரல் கேட்டு விழித்தவள் வீட்டுக்குள் தன் மிக அருகில் சூசை நிற்ப்பதை பார்த்து மிரண்டு போய் எழுந்து கண்களை தாழ்த்திய படி எழுந்து அவன் அருகில் போய் நின்றாள் மாரியம்மா... 

ஏன் இப்படி பன்றே.. என்னைய நிம்மதியா இருக்க விடமாட்ட போல.. மீன்பாடு வேற இல்லாத கோபத்துல அவளை கன்னத்தில் ஒங்கி அறைந்தான் சூசை.. கிண்ணாரமா சுத்தி துணிமூட்டை மேலே விழுந்தாள்..

ஏண்டி என்னை கிறுக்கன்னு நெனச்சியோ.. உன்னைய தேடி அலஞ்சு உன்னை பார்க்காம ராத்திரி பூரா தூங்கல... கடலுக்கு போயும் வெளங்கல... உன்னைய விட்டுட்டு நான் திரும்ப ஊருக்கு போயிறலாம்னு நெனைக்கேன்... சூசை எரிச்சலுடன் பேசியதை பார்த்து, பதறிபோய் எழுந்த மாரியம்மா அவன் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து சட்டென தன்னை மறந்து தன் மாராப்பால் அவன் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்தாள்.

நான் செஞ்சது தப்புத்தான் போதுமா..
அடிவாங்கிய அவள் கண்ணம் சிவந்திருப்பதை பார்த்து ..
ஏதோ.. கோபத்துல அடிச்சுட்டேன், சரியா.. என்றான் சூசை...

அவள் தன் கண்ணத்தை தொட்டுபார்த்து கடுமையாக வலித்தாலும் அதை வெளிகாட்டாமல்.. என் புருஷன்தான அடிச்சாரு.. பரவாயில்ல என்றாள் மாரியம்மா உற்ச்சாகமாக வலியை மறைத்து கொண்டு... சூசை தன் கைகளால் அவள் தலையை அணைத்து தன் பக்கம் இழுக்கும் போது அவனின் கைகளை தட்டிவிட்டு... 

யாரவது பார்த்துட போறாங்க.. போய்ட்டு வாங்க என்றாள்.. சூசை வீட்டை விட்டு வெளியே செல்லும்போது..

என்னங்க..

திரும்பி பார்த்தான் சூசை.. வீட்டுட்டுக்கு போய் சீக்கிரம் சாப்பிடுங்க..
எதுக்கு என்பது மாதிரி கண்களை உயர்த்தினான் சூசை.. எனக்கு பசிக்குது என்றாள் மாரியம்மாள்... தான் சாப்பிடாம அவள் சாப்பிடமாட்டாள் என்று நினைத்து வீட்டிற்கு போனவுடனே மளமளவென கலயத்திலிருந்த பழைய கஞ்சியை குடிக்க தொடங்கினான் சூசை..

வேம்பாறிலிருந்து வட்டாண்களை (பனை ஒலையால் செய்யப்பட்ட பெரிய பெட்டி) வாங்கி வந்து காயப்போட்ட கருவாடுகளை அதில் அள்ளி வைத்து பெண்கள் தலைசுமையாக விவசாய கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்க தொடங்கினார்கள்.. ஆண்களுக்கு நிகராக பெண்களும் உழைத்ததால் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு கொண்டே சென்றது..

மூக்கையூரிலிருந்த ஒன்றிரண்டு பூர்வ குடி மக்களின் விவசாய நிலங்களையும், பனங்காடுகளையும் விலைக்கு வாங்கி மூக்கையூர் முழுவதையும் தன்வசப்படுத்தினார்கள்...

மூக்கையூரில் வசிக்கும் மக்களின் பொருளாதார நிலையை கேள்விபட்டு இடிந்தகரையிலிருந்தும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் மூக்கையூரை நோக்கி கட்டுமரங்கள் புறப்பட்டது... பூர்வகுடி கிராம மக்களின் ஜனத்தொகையை விட குடியேற்றம் நடந்த மூக்கையூர் ஜனதொகையாலும் பொருளாராதத்தாலும் புகழ் பெற்றது.. 

இராமநாதபுரம் சமஸ்தானத்தின் பார்வை மூக்கையூரின் மேல் விழுந்தது.. பொழுது விடிஞ்சும் விடியாம இருக்கும் போது எந்துச்சு மணலை வச்சு பல்லு வெளக்கிட்டு பழைய கஞ்சில உள்ள நீராத்தணிய மட்டும் குடிச்சுட்டு கடலுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து கிளம்பினான் சூசை ..

கடற்கரைக்கு செல்லும் வழியில் ஒரு பனை மரத்துக்கு பின்னாலிருந்து என்னங்க... இங்கே வாங்களேன்.. ஒரு குரல் கேட்டது..

முகம் மங்கலாக தெரிந்தாலும் குரல் யாரென்று தெரிந்து நெருங்கி போனான் சூசை.. எதுக்கு இந்நேரத்துல வந்துருக்க..

நீங்க திரும்ப உங்க ஊருக்கு போயிட்ட மாதிரி கனவு வந்துச்சு.. அதுலயிருந்து தூங்கவேயில்லை..அதான் உங்களைபார்த்துட்டு போகலாம்னு வந்தேன் என்றாள் மாரியம்மா.. சூசையை மிக நெருக்கமாக பார்த்துவிட்டு பனை மர கூட்டத்திற்குள் மறைந்து போனாள்மாரியம்மாள்... அதிகாலையில் அவளை பார்த்த சந்தோஷத்தில் துள்ளலுடன் கடலுக்கு சென்ற சூசை..

திரும்பி வரும்போது தாங்கமுடியாத அளவுக்கு மீன்களால் ஒமல் நிறைந்திருந்தது.. கடற்கரையில் மாங்கோடு மீன்களை கொட்டினான்.. மீன்கள் ஒவ்வொன்றும் வழுக்கி கொண்டு போய் அந்த பகுதி முழுவதும் நிறைத்தது.. 

சந்தனமாரி தன் தம்பியை நோக்கி வந்தாள்.. கூட்டமாக சிதறி கிடந்த மீன்களின் அளவை பார்த்து.... என் தம்பி பெரிய கம்மாறுகாரன் பெருமிதத்தோடு சொன்னாள் சந்தனமாரி... 

எக்கா ..எங்கே மருமகளை காணோம்? தன் அக்காவிடம் கேட்டான் சூசை...

வெட்கம் கலந்த சிரிப்போடு.. ஒம் மருமகள் நேத்து ராத்திரி சமஞ்சுட்டா என்றாள் சந்தனமாரி...
...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com