வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 31 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 15

தான் கொண்டுவந்த அங்காடிகளை கடற்கரையில் விற்றுவிட்டு.. வீடு திரும்பிய மாரியம்மாளை இங்கே வான்னு கூப்பிட்டு வெஞ்சனத்துக்கு கொண்டுபோன்னு ஒரு வாளை மீனை அவளிடம் கொடுத்தான் சூசை.. இன்னைக்கு மத்தியானம் நம்ம வீட்டுக்கு சாப்பிட வர்றியலா.. என்று கேட்டவளிடம்.. வலை பிஞ்சு கெடக்கு..  நெறைய வேலையிருக்கு நான் வரல..

அப்ப நான் அடுப்பு பத்தவைக்க மாட்டேன்.. எனக்கு மீன் வேண்டாம் என்றாள் மாரியம்மாள்.. 
ஏண்டி இப்படி அடம் புடிக்க.. சரி நான் வர்றேன்.. எடுத்துட்டு போ.. தன் கணவன் கொடுத்த மீனை பெட்டிக்குள் வைத்து சலேத்மேரியின் வீட்டை கடந்து தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாரியம்மாளை...

அக்கா.. இங்கே வாங்களேன்.. சலேத்மேரியின் குரல் கேட்டு திரும்பியவளை... வீட்டுக்கு உள்ளே வாங்க என்றாள்.

தலையில் வைத்திருந்த பெட்டியை கீழே இறக்காமல் என்ன என்றுகேட்ட மாரியம்மாவின் கைகளை பிடித்துகொண்டு... அக்கா ..நாளைக்கு எனக்கு கல்யாணம்.. நீங்க கண்டிப்பா சந்தியா ராயப்பர் கோவிலுக்கு வரனும் என்றாள் சலேத்மேரி.. சரி வர்றேன்... சுரத்தில்லாமல் ஒலித்தது மாரியம்மாவின் குரல் ..

நாளைமுதல் என் புருஷன் இன்னொருத்தியின் கணவன்.... நான் தப்பு பன்னிட்டோனோ.... அந்த வயதுக்குரிய ஏக்கமும், ஆசையும் அழுகையாய் மாறி அவள் நடந்து சென்ற பாதையெங்கும் கண்ணீர் சிதறி சிதறி மணல் ஈரமாக கிடந்தது..

சந்தனமாரியும் அவள் கணவனும் சாயல்குடி மைனர் வீட்டிற்க்கு செல்ல அங்கு அவர்களுக்கு கிடைத்த மரியாதையை பார்த்து பூரித்து போனார்கள்.. பங்காளி என்ற முறையில் உங்கள்ட்ட முதன்முதலா சொல்ல வந்துருக்கோம். எங்க மகளுக்கு கல்யாணம்.. நீங்க நேரடியா வந்து கல்யாணத்துல நெற செலுத்திட்டு போகனும் என்றாள் சந்தனமாரி..

நம்ம பாரம்பரிய வழக்கப்படி சிறப்பாக நடத்திருவோம் என்றார் சாயல்குடி மைனர்... மாரியம்மாவின் வீட்டிற்குள் நுழைந்த சூசை.. பசிக்குது சீக்கிரம் சோறு போடுன்னு சொன்னவன் தான் கொடுத்துவிட்ட மீன் சமைக்காமல் பெட்டியில் அப்படியே இருப்பதை பார்த்து.... நான்தான் வர்றேன்னு சொன்னன்ல... ஏன் சமைக்கல...எரிச்சலுடன் கேட்க... 

சூசைக்கு பதில் ஏதும் சொல்லாமல் விசும்பி கொண்டிருந்தாள்..

அவன் அருகில் சென்று.. நான் உங்க மடியில படுத்துகிறவா..?

அவனின் பதிலை எதிர்பார்க்காமல் தன் இரு கைகளாலும் அவன் அகன்ற தொடையை இறுக அணைத்து அவன் மடியில் தலைசாய்த்து ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள் மாரியம்மா.. சூடான கண்ணீர் சூசையின் தொடையிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.. உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் என்னை விட்டு பிரிஞ்சு போயிறுவீங்களோன்னு எனக்கு பயமா இருக்கு... தினமும் ஒருவேளையாவது என் கையால சமச்சத நீங்க சாப்பிடனும்.. இல்லைனா சாப்பிடாமலே நான் செத்துருவேன். எல்லாமே எனக்கு நீங்கதான்..அழுதுகொண்டே சொன்னவளின் முகத்தை தனக்கு நேராக திருப்பி..

ஊர் உலகத்துக்கு சலேத்மேரி என் பொண்டாட்டி மாதிரி நான் சாகுற வரை என்னைக்கும் உன்கூட நான் இருப்பேன். போதுமா..

ம்ம்....

எப்பவுமே உன்னை தொடுவதற்கு கூட என்னை விடமாட்ட.. இன்னைக்கு நீயா வந்து என் மடியில் படுத்து கிடக்க... 

அதுவா.. நீங்க என்னை விட்டு விலகி போயிடுவியள்னு பயத்துல உங்களை இறுக்கி பிடிச்சுறுக்கேன்..

அப்ப ..உன்னைவிட்டு விலகி போயிற வேண்டியதுதான்.. ச்ச்சீசீ.. போங்கத்தா வெட்கத்துடன் நெளிந்தாள் மாரியம்மா... 

ரெட்டைமாடு பூட்டிய வண்டியில் சாயல்குடி மைனரும் .. குதிரை மேல் இருந்தவனின் கைகளில் குடசுருட்டியும்.... (பாண்டிய அரசகுடி திருமணத்தில் மாப்பிள்ளை இந்த அழகிய பெரிய குடையின் கீழ்தான் ஊர்வலமாக நடந்து வருவார்..) நாலைந்து பேர் பறையடிக்க ஆர்ப்பாட்டத்துடன் மூக்கையூரை நோக்கி கிளம்பியது.. மூக்கையூர் எல்லையில் சாயல்குடி மைனரை வரவேற்று கோவிலுக்கு கூட்டி சென்றார்கள் பெரியவர்கள்..

தங்க நிறத்திலான பட்டு நூலால் நெய்த அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய குடசுருட்டியை அவருக்கு பின்னால் ஒருவன் கொண்டு வந்தான். இவர்களின் வருகையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒரு முதியவரிடம் அருகில் நின்ற மாரியம்மா..

எதுக்கு தாத்தா இந்த கல்யாணத்துக்கு மட்டும் ஜமீன் வர்றாரு, குருதை வருது.. பெரிய குடை வருது... மூக்கையூர்ல மீன் பிடிக்கிறவங்க எல்லோருமே அரச வம்சம்..

இவர்கள் சோழர்களாக, பாண்டியர்களாக வாழ்ந்த அரசகுடிகள் முன்னூறு வருடங்களுக்கு முன் நாயக்கர் படையினராலும் மாலிக்காபூரால் உருவான மூர் என்ற வடுக இனக்குழுவாலும் சிதறடிக்கப்பட்டு கடற்கரை ஓரங்களில் ஒதுங்கினார்கள்..

இவர்கள் இனத்தின் தலைவி மதுரை மீனாட்சி.. குமரி அம்மனாக அவதாரம் எடுத்து இவர்களை கடற்கரை பிரதேசத்தில் நிலை நிறுத்தினாள்.. பின் நூறு வருடங்களுக்கு முன் மீண்டும் அதே இனக்குழுக்களோடு நடந்த சண்டையில் மிக பெரிய அழிவை சந்தித்தது இந்த இனம். தன் மக்களை அழிவிலிருந்து பாதுகாக்க இவர்களின் அரசர் போர்த்துகீசியர்களோடு செய்த ஒப்பந்தத்தின் படி... தலைமையின் உத்தரவுக்கு பணிந்து இவர்கள் அனைவரும் ஒரேநாளில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள்..

தங்களை அழித்த மூர் இனகுழுவை 1538 ஆம் வருஷம் வேதாளை என்ற ஊர் அருகே போரை திட்டமிட்டு கடலிலே நடத்தி ஆயிரக்கனக்கான பேரின் தலைகளை சீவி கடலிலே போட்டு தங்கள் பழியை தீர்த்து கொண்டார்கள்.. தப்பித்தவர்களில் ஒன்றிரண்டு பேர் இலங்கைக்கு ஓடி சென்றார்கள் ..அந்த இனம் அத்தோடு முற்றிலுமாக அழிந்து போனது.. தங்களை சீண்டியவனை காத்திருந்து ஒரு இனத்தையே முற்றிலுமாக வேரறுத்த அரசகுடியின் வாரிசுகள் இவர்கள்..

என்னது... என் புருஷன் அரசகுடி வாரிசா.. வாயை பிளந்து நின்றாள் மாரியம்மா..
...... தொடரும் .....
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com