வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 25 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 11

ஒரு ஞாயிற்று கிழமையில் வேம்பாரிலிருந்து திருப்பலி நிறைவேற்ற வந்த பாதிரியாரோடு அந்த ஊரை சேர்ந்த பெரியவர்களும் மூக்கையூர் வந்தார்கள்..
திருப்பலி முடிந்ததும் ஊர் கூட்டம் கூடியது..

வேம்பார் தலைவர் பேசினார்..

கடலில் மீன்களை யார் வேண்டுமானாலும் பிடித்து கொள்ளலாம்.. ஆனால்.. முத்துக்குளித்தலும் முத்து வணிகமும் பாண்டியாபதி அரசவையின் கீழ் அவரின் அனுமதியோடு மட்டுமே நடைபெறும். தூத்துக்குடி, உவரி அதை சுற்றிய ஊர்கள் மற்றும் சிப்பிகுளம், வேம்பார் இவைகள் மட்டுமே பாண்டியாபதியால் முத்து குளிக்க அனுமதிக்கபட்ட ஊர்கள்..

பாண்டியன் தீவில் வாழும் மக்களுக்கு நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கடனாக இந்தமுறை நீங்களும் எங்களோடு சேர்ந்து முத்து குளிக்கலாம் என்று பாண்டியாபதி உத்தவிட்டுள்ளார் என்றார்.

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட பாண்டியன் தீவில் (தற்போது தூத்துக்குடியிலிருந்து தரைவழி போக்குவரத்து) முத்து வணிகத்திற்காக எப்பொழுதுமே நாலைந்து கப்பல்கள் தீவை சுற்றி நங்கூரமிட்டு கிடக்கும்..

பாண்டியாபதியின் முத்துக்குளித்துறையில் குமரியிலிருந்து இலங்கை வரை 65 முத்து படுகைகள் இருந்தன. எந்த இடத்தில், எந்த காலத்தில் முத்து குளிக்க வேண்டும் என்பதை பாண்டியாபதியே அறிவிப்பார்.. முத்துகுளித்துறை ஆங்கிலேயர்களால் பின்னாளில்.... PEARL FISHERY COAST என்று அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமாகியிருந்தது..

ஒரு இடத்தில் முத்து குளித்தால் மீண்டும் அந்த இடத்தில் முத்து குளிக்க நான்கு வருடத்திற்கு மேலாகும்..  முத்துக்களின் வளர்ச்சியைக் கணித்தே இந்த முறை பின்பற்றப்படும். முத்துக்குளித்தலில் ஈடுபடும் பொழுது சிலகாலம் தூத்துக்குடியை சுற்றியுள்ள சிப்பி பாறைகளிலும் சில நேரங்களில் இலங்கைவரை சென்று கூட முத்துக்குளித்தலில் ஈடுபடுவார்கள்...

(பரதவர்கள் இலங்கையில் குடியேற முத்து குளித்தலே முதல் காரணமாயிருந்தது) சிப்பிக்குள் உள்ள முத்துக்கள் வளர்ச்சியடையும் காலத்தை கணக்கிட்டு பின் இடங்கள் கண கச்சிதமாக தேர்வு செய்யப்படும்.. பிடித்து வரும் முத்து சிப்பிகளை மூன்றில் ஒரு பங்கு பாண்டியாபதியின் அரசவைக்கு வரியாக செலுத்த வேண்டும். முத்து வணிகத்தில் பாண்டியாபதியின் வாரிசுகளே நேரடியாக ஈடுபட்டார்கள்.

தூத்துக்குடியை சுற்றி நிறைய சிப்பி பாறைகள் இருந்தாலும் வருடாந்திர கணக்குப்படி இந்த வருடம் புன்னக்காயலுக்கு எதிரே உள்ள குடமுத்திபாரிலும் மற்றும் பாண்டியன் தீவிற்கு சற்று கிழக்காக உள்ள சிலுவைபாரிலும் மட்டும் முத்து குளிக்க பாண்டியாபதியால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்கள் வேம்பார் ஊர் பெரியவர்கள்..

எங்களுக்கும் கடலில் முத்து குளிக்க அனுமதியா?

மூக்கையூர் இளைஞர்கள் சந்தோஷத்தில் நாலைந்து பேர் ஒடிச்சென்று கடலில் குதித்தார்கள்..

அவர்களுக்கு கடலிலிருந்து முத்து எடுத்து கொடுத்து கிடைக்கும் வருமானத்தை விட.. என்றாவது ஒருநாள்.. 15 பாக ஆழத்துல குழியோடி தரையைத் தொட்டு பாறை மேலே பரவி கெடக்குற நல்லா வெளஞ்ச சிப்பியை
பார்த்து. பார்த்து பொறுக்கி தண்ணிக்கு மேலே கொண்டு வந்துரனும்னு கடற்கரைல உள்ள எல்லா இளந்தாரிகள்ட்ட வெறித்தனமா ஆசை இருக்கும்.

ஆனா.. அவுங்கள்ட்ட கடல்ல குழியோடுவதற்கான ஏத்தனங்கயிறு (நீளமான கயிறு மற்றும் மாப்பா போன்ற பொருட்கள்) இருக்காது..

எங்கள்ட்ட "மாப்பா" இல்லை (இடுப்பை சுற்றி கயிறோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கும் பை.. இதில்தான் கடலிலிருந்து பொறுக்கி எடுக்கும் முத்து சிப்பிகளை சேமிப்பார்கள்) என்றதற்கு நாளை உங்களுக்கு கொடுத்து அனுப்புகிறேன் என்றார் வேம்பார் தலைவர்..

மூக்கையூரில் உள்ள பெரியவர்களுக்கு முத்து குளித்தல் என்பது பிடிக்கவில்லை..

பத்துவருஷத்துக்கு முன்னாடிலாம் கடல்ல வலையை விட்டு வாங்கும் போது மீன்களோடு சேர்த்து வலையில் தைத்து ஒன்றிரண்டு முத்து சிப்பிகளும் வரும்
சிப்பிக்குள் பெரிதும் சிறுதுமாக நாலைந்து முத்துக்கள் மின்னும்.. அதனுடைய உண்மையான மதிப்பு தெரியாமல்.. கள்ளுக்கடைக்கு போயி பண்டமாற்று முறையில் முத்து சிப்பிய கொடுத்துட்டு கள்ளு குடிப்பாங்க... (நாங்கள்லாம் முத்து கொடுத்து கள்ளு குடிச்ச பரம்பரையாக்கும்)..

முத்துகுளித்துறைக்கு யாரும் போகாதியன்னு சொன்னா எந்த இளந்தாரிகளும் கேட்கமாட்டானுக.. போறவுங்க.. போங்கப்பா என்றார்கள் மூக்கையூர் பெரியவர்கள்... சூசை முதல் ஆளாக துள்ளி குதித்தான்..

அக்கா நான் முத்துக்குளித்துறை போறேன் என்றான் சூசை தன் அக்காவிடம்.. நல்லபடியா போய்ட்டு வாங்க ராசா என்றாள் சந்தனமாரி..

தன் மகள் கல்யானத்துல எல்லோரும் உத்து பார்க்கும்படியா அவள் கழுத்துல முத்துமாலை போடனும்னு பெருங்கனவொன்று இருந்துச்சு அவளுக்கு.. தன் தம்பி கெட்டிக்காரன் எப்படியும் கொண்டு வருவான்னு தம்பி மேல நம்பிக்கையும் இருந்துச்சு..

போகும்போது தன் மகனையும் உடன் கூட்டிட்டு போ என்றாள் சந்தனமாரி...

கடலுக்குள் குதிக்குமுன் தன் உடம்பைக் கயிற்றால் சுற்றி முடிச்சு போட்டு கயிற்றின் நுனியை வள்ளத்தின் அமர்ந்திருக்கும் மனைவியின் அண்ணன் அல்லது தம்பியிடமே கொடுக்கப்பட்டது. இது காலகாலமாக நடைமுறையில் இருந்தது ...

கடல்ஆழத்தில் மூச்சுமுட்டியவுடன் கயிற்றை இழுத்து சிக்னல் கொடுப்பார்கள். கடலுக்கு உள்ளே இருப்பது தன் மச்சான் என்று வள்ளத்தின் மேலிருந்து புயல் வேகத்தில் கயிறு மேலே இழுக்கப்படும்.. முத்துக்குளித்தலில் மட்டுமல்ல பின் நடந்த சங்கு குளித்தலிலிலும் (முதுகில் சிலிண்டர் கட்டி குழியோடும் வரைக்கும்) இதுதான் நடைமுறையில் இருந்தது..

யாத்தா.. மாமாவை முத்து குளிக்க போகச்சொல்லாதிய.. கடலுக்குள்ள ஆழமா போனா காது செவிடாயிரும் என்ற தன் மகள் சலேத்மேரியிடம்.. இந்த ஒருதடவை தானம்மா.. மாமா நல்லபடியாய் போய்ட்டு வரட்டும்னு சமாதானபடுத்தினாள் தாய் சந்தனமாரி..

மாரியம்மாவை தேடி அவள் வீட்டிற்கு சென்றான் சூசை..

எப்ப போறீங்க..? என்றாள் கண்கள் கலங்கியபடி...

உனக்கெப்படி தெரியும்..

உங்களை தவிர வேறு எதுவுமே தெரியாதவளுக்கு இந்த விஷயம் எப்படி தெரியாம போகும்...

நான் இதுவரை சேர்த்து வச்சுறுக்குற என் சம்பாத்தியத்தை ஒங்கள்ட்ட தர்றேன்.. நீங்க கட்டிக்க போற சலேத்மேரிட்ட கொடுத்துருங்க.. பிறகு எதுக்கு நீங்க வெளியூருக்கு போய் கஷ்ட்டப்படனும் ..

என் புருஷன பார்க்காம நான் உயிரோடு இருந்துருவன்னு நெனக்கியலா...?

சொல்லி முடிக்குமுன் வாட காலத்துல பெய்யுற மழைமாதிரி கண்ணிலிருந்து அவ்வளவு கண்ணீர்.. சூசை உணர்ச்சி வசப்பட்டு... 

யேய் .. இங்க பாரு இந்த ஒருதடவை மட்டும்தான்... வெகுநேரம் பேசி மாரியம்மாளை சமாதானப்படுத்தினான் சூசை.. அடுத்தநாள் மூக்கையூரிலிருந்து நாளைந்து கட்டுமரங்களும், ரெண்டு வள்ளமும் புறப்பட்டது ...

கடலில் கால் நனைத்தபடி ஏக்கத்தோடு ஒருத்தியும்..

கடற்கரைக்கு அருகில் நின்ற பனைமரத்துக்கு பின்னால் கண்ணீரோடு ஒருத்தியும் கடலில் கலன்கள் மறையும் வரை பார்த்து கொண்டேயிருந்தார்கள் ....

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com