வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 28 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 14
கொற்கை அழிந்து சில நூறு வருடங்களுக்கு பிறகு... மணப்பாடு, வீரபாண்டியன்பட்டனம், புன்னக்காயல் மற்றும் வேம்பார் ஆகிய துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடைபெற்றது... குறிப்பாக புன்னையும் வேம்பாரும் அயல்நாடு வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது..

புன்னக்காயலிலிருந்து அரேபிய தீபகற்பம், தென்எகிப்து வரை சென்று அங்கிருந்து தரைவழி போக்குவரத்து வழியாக டமாஸ்கஸ், ஜெருசலேம் மற்றும் ரோம் வரையிலும் சிலர் மத்தியதரை கடல் பகுதியை கடந்து மேற்கு உலக (ஐரோப்பா) வர்த்தகத்தில் பரதவ கடல் வணிகர்கள் ஈடுபட்டார்கள்.. பட்டு, சந்தனம், யானைதந்தம், மிளகு, முத்து இவைகளை கொண்டு சென்றார்கள்... வேம்பாரிலிருந்து கீழ்திசை நாடுகளுக்கு மட்டுமே அதிகமாக வணிகம் செய்தார்கள்.. இலங்கை, சிங்கப்பூர், கடாரம், (கம்போடியா) சைனா, இந்தோனேசியா வரை நீடித்திருந்தது இவர்களின் வணிகம்..

கருவாடு, உப்பு, பருத்திநூல், முத்து, மற்றும் பவளம்... (கடலில் உள்ள பவளப்பாறையிலிருந்து உடைத்து எடுக்கப்படுவது. தூத்துக்குடியிலிருந்து இலங்கையின் மன்னார் பகுதிவரைதான் பவளபாறைகள் காணப்படும்..)

ராம்நாடு சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்ட வீடுகளில் முதன் முதலாக சீனா பீங்கான் தட்டுகள் புழக்கத்திற்க்கு வந்ததற்கு வேம்பார் பரதகுல கடல் வணிகர்களின் இறக்குமதியே காரணம்... கி.பி 1800 பிற்பகுதியில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் ஒட்டு மொத்த பரதவர்களின் கடல் வணிகமும் அழிக்கப்பட்டது.. ஓரிரு குடும்பங்கள் அந்த வரலாற்றை இன்னமும் கடத்தி வருகிறது.. கடல் பெருவணிகம் அழிக்கப்பட்டதால் இன்று பரதவர் இனம் மீனவர் என்ற ஒற்றை அடையாளத்தை மட்டுமே தாங்கி நிற்க்கிறது..

மூக்கையூரில் நெல் விளைந்தாலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பருத்தி விளைச்சலே அதிகம். இவர்களிடமும் சொந்தமாக பருத்தி வயல் இருந்தது.. மூக்கையூர் பெண்கள் சந்தைகளில் கருவாட்டை கொடுத்து பருத்தி மூட்டைகளை வாங்கி ஊருக்கு கொண்டுவந்து... பருத்தியை தன் தொடையில் வைத்து உருட்டி உருட்டி பருத்திநூல் (ஒடநூல்) தயாரிக்கத் தொடங்கினார்கள். காலப்போக்கில் இவர்களிடமிருந்து பருத்தி நூல்கண்டுகளை விலைக்கு வாங்க வேம்பாரிலிருந்து கடல் வணிகர்கள் வந்தார்கள்.. 

எம்மா.. என்று கூப்பிட்ட தன் மகன் பிலேந்திரனை என்ன என்பது போல் சைகையால் கேட்ட சந்தனமாரியிடம்.. நம்ம கருவாடு இங்கே உள்ள சந்தையில விக்கிறதவிட இலங்கைல அஞ்சுமடங்கு அதிகமா விக்குமாம். பருத்தி நூல்கண்டும் நல்ல விலையாம்.. கடல்ல என் பக்கத்துல வலைவிட்ட வேம்பாரு பையன் சொன்னான். அடுத்த வாரம் அவன் இலங்கைக்கு போறானாம்.. நம்ம வீட்ல உள்ள கருவாட்டை எடுத்துட்டு நானும் அவன் கூட இலங்கைக்கு போய் அங்கிருந்து ஒரு வாரத்துல திரும்பி வந்துருவேன்.. சரியாம்மா ...

தன் அக்கா சந்தனமாரிக்கு அருகில் நின்ற சூசை உடனே பிலேந்திரனிடம் நாமளும் பெருசா யாவாரம் பார்ப்போம் நீ இலங்கைக்கு போய்ட்டு வா என்றான்.. 
சரி .. மாமா..
சீலா, கட்டா, மற்றும் நெத்திலி கருவாடும், நூல்கண்டும் வேம்பாரிலிருந்து வந்த வள்ளத்தில் இலங்கை கொண்டு செல்ல ஏற்றப்பட்டது..  ஒரு கூட்டம் கடற்கரையில் நின்று வழியனுப்பி வைத்தது பிலேந்திரனை. மூக்கையூரில் முதல் கடல் வணிகம் ஆரம்பமானது.. கடற்கரையிலிருந்து திரும்பி தன் தம்பியோடு கூட நடந்து கொண்டிருந்த சந்தனமாரி.. 

தம்பி.. உன் மருமகள் சமஞ்சு ரொம்ப நாளாயிட்டு (5 மாதம்) கொமர ரொம்ப நாள் வீட்ல வைக்ககூடாது. அதுனால இந்த மாச கடைசில உனக்கும் சலேத்மேரிக்கும் கல்யாணத்த முடிச்சுறுவோம். அதுக்குள்ள உன் மருமகனும் இலங்கையிலிருந்து வந்துருவான்... எந்த பதிலும் சொல்லாமல் தன் அக்காவுடன் கூட நடந்து வந்து கொண்டிருந்தான் சூசை..

என்னடா உம்முன்னு வர்ற.. பதறிக்கொண்டு ஒன்னுமில்லக்கா என்றான் சூசை.. அவன் கண்கள் கலங்கியிருந்தது... சந்தனமாரிக்கு தெரியாது..

அடுப்பு எரிக்க பனை மட்டைகளை பொருக்கி கொண்டு வீட்டிற்குள் நுழையும் போது வாசலில் நின்ற மாரியம்மாவின் அம்மாச்சி.. உன் புருஷன் உன்னை தேடி அப்பவே வீட்டுக்கு வந்துட்டாரு போய் பாரு...

வீட்டின் நடுவில் மரச்சட்டத்தில் கண்ணை மூடி சாய்ந்திருந்தவனை 
என்னங்க.. ஏன் அசந்துபோய் உட்கார்ந்து இருக்கிய...
கண்ணுலாம் கலங்கிபோய் இருக்கு என்னாச்சு உங்களுக்கு ..?

மௌனமாகவே இருந்தான் சூசை..
உங்களுக்கு பிரச்சனை தீறனும்னா நான் செத்து போயிறவா ..?

கண்களை உயர்த்தியவனை...
எனக்கு எல்லாம் தெரியும் என்றாள்.
சலேத்மேரி இன்னைக்கு என்னட்ட சொன்னா..
எனக்கும் எங்க மாமாவுக்கும் இந்த மாச கடைசில கல்யானம்னு ..
பொறந்ததிலிருந்து இப்பவரைக்கும் நீங்கதான் அவ புருஷன்னு நினைப்பவளை நீங்க ஏமாத்தபோறியளா.. ?
அவள் வாழ்க்கையை கெடுத்து நான் வாழமாட்டேன் ..
என் புருஷன் சாகுரவரைக்கும் இந்த ஊர்ல தலை நிமிர்ந்து நடக்கனும் அதுக்காக எந்த தியாகம்னாலும் நான் என் புருஷனுக்காக செய்வேன்....
சலேத்மேரியை நீங்க கல்யாணம் கட்டிங்குங்க என்றாள் மாரியம்மா..

கொஞ்சநேரம் சோகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தவன் பின் தன் அரைஞான் கயிற்றில் சேர்த்து கட்டியிருந்த சுருக்கு பையை விரித்து அதிலிருந்து தன் அக்காவுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த தங்கநிறம் கொண்ட ஒரு முத்து கோர்த்த நூல் கயிறை எடுத்து அவளிடம் கொடுத்து...

கழுத்துல போட்டுக்கோ ..என்றான்

கண்களை அகல விரித்து எனக்கா.. நான் அங்காடி விக்கிறவ..

நீ என் பொண்டாட்டி தான..

ம்ம் ..தலையை மேலும் கீழுமாக வேகமாக ஆட்டினாள் மாரியம்மா..

அப்ப இந்தா.. அவள் கையில் வைத்து அழுத்தினான் சூசை..

வீட்டைவிட்டு வெளியே கொஞ்சதூரம் சென்றவனை என்னங்க.. என்று கூப்பிட்ட மாரியம்மாவை நோக்கி திரும்பி வந்தவன் என்ன என்பது போல் கண்களால் கேட்க ..

ஒன்னுமில்ல சும்மாதான்.. ஒங்க முகத்தை திரும்ப பார்க்கனும் போல இருந்துச்சு...

கோட்டி சிறுக்கி...சிரித்த முகத்துடன் திரும்பி சென்றான் சூசை..

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com