வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 15 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 2

கரை ஒதுங்கிய அனைவரும் கடற்கரை வெள்ளை மணலை தாண்டி ஊருக்குள் நுழையும் போது.. இடிந்தகரையை சேர்ந்த பெரியவர் கூட நடந்து வந்த ஒருவனை உற்று பார்த்து.. நீ எங்க ஊர் பையன் இல்லையே.. உனக்கு எந்த ஊர்? என்றார்.. 

பெருசு.. நான் கூட்டப்புளி என்றான்.. அவனை உரசிக்கொண்டு நடந்து வந்தவன் எனக்கு பெரியதாழை என்றான்.. இன்னொருவனை கைகாட்டி அவன் கூத்தங்குழிகாரன் என்றான்..

அடடா.. எல்லோரும் சோழர்கள் தானா.. நாம எல்லோரும் சொந்தக்காரங்கப்பா.. அந்த பெருசுவின் குரல் பாசத்தில் ஒலித்தது..

அந்த ஒற்றையடி பாதையில் நடக்கும் போது வழியெங்கும் நாட்டு கருவேல மரங்களும் நாட்டு ஒட மரங்களும் பரந்து விரிந்து கிடந்தது..  கடற்கரையிலிருந்து வெகு தூரத்திற்க்கு ஆட்கள் நடமாட்டமே இல்லை.. கடற்கரைக்கும் அந்த ஊரில் வாழும் மக்களுக்கும் சம்மந்தமேயில்லை என்பது புரிந்தது..

கச்சான் காலமென்பதால் ஒரு வற்றிய ஆறு முகத்துவாரத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது.. அறுவடைமுடிந்த வயல்களை ஆங்காங்கே அடுத்த உழவுக்கு தயார் செய்து கொண்டிருந்தார்கள் சிலர் ..

ஆங்காங்கே ஊர் முழுவதும் கூட்டம் கூட்டமாய் பனைமரங்கள் நிறைந்திருந்தது.. பதநீர் காலமென்பதால் மரங்களில் கலயம் கட்டியிருந்தது..

விவசாயமும், கருப்பட்டியும் பிரதான தொழில்போல.. அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். அந்த ஊரிலிருந்த மக்கள் கருத்த உடம்பையும் கட்டுமஸ்த்தான உடலையும் கொண்ட புதியவர்களை பார்த்து மிரண்டு போனார்கள்.. மீன்பிடி பரதவர்கள் வழி தவறி தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து சாயல்குடி மைனர் இவர்களை பார்க்க மூக்கையூர் வந்து ஏய்.. நாம் அனைவரும் சொக்காரங்க என்று சொல்லி அவர்களுக்கு உணவும், அவர்கள் தங்குவதற்க்கு கடற்கரையில் பனைஒலை குடிசையும் ஏற்பாடு செய்தார்..

(தூத்துக்குடியில் நடந்த சண்டையில் பரதவருக்கு எதிராக மூர் இன குழுக்களும் நாயக்கர்களும் ஒன்றினைந்து செயல்பட்டார்கள். பரதவர்கள் மிக பெரிய அழிவை சந்தித்தார்கள். அப்போதும் சரி பின்பு 1538 இல் வேதாளையில் மீண்டும் மூர் இனத்தவரோடு நடந்த சண்டையில் பெரும் வெற்றி பெரும்போதும் கொண்டயக்கோட்டை மறவர்களும், ஆப்பநாடு மறவர்களும் பரதவர்களுக்கு துணையாக நின்றார்கள். இவர்கள் முன்பு பாண்டிய பேரசில் ஒன்றிணைந்து இருந்தார்கள். அந்த வகையில் இரு இனத்துக்கும் உறவுமுறை இருந்தது ..)

இந்த கச்சான் காலத்துல எதிர்த்த ஒட்டுல நாம் ஊருக்கு போக முடியாது. கட்டுமரத்தை இங்க வச்சுட்டு நடந்து ஊருக்கு போயிருவமா..? அல்லது கரைவாட காலத்துல சாய ஒட்டுல ஊருக்கு போவமா? அதுவரைக்கும் இந்த ஊர்ல தொழிலுக்கு செல்வோமா? அவர்களுக்குள் குழம்பி கொண்டிருந்தார்கள்..

சந்தியாப்பரே.. கடவுள் கூப்பிட்டு வாய் மூடுமுன் அவரின் எதிரே நின்றார் ஜேம்ஸ் என்னும் சந்தியாகப்பர். அவரது அருகில் அவர் வந்த முரட்டு வெள்ளை குதிரையும் நின்றது... இவனுக எல்லோரும் உன் இனத்தான் இவர்களோடு கொஞ்சகாலம் நீ தங்கவேண்டும் என்றார் கடவுள்... 

தலை குனிந்தவாறு உத்தரவு ஆண்டவரே என்றார் சந்தியாகப்பர் ..

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Picture Source: Pasumai Tamizhagam  
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com