வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 24 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 9

ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலையில் வேம்பாரு தூயஆவி ஆலயத்தில் திருப்பலி முடித்துவிட்டு அங்கிருந்து கடற்கரை வழியாக நடந்து மூக்கையூர் வந்து திருப்பலி நிறைவேற்றினார் வேம்பார் பங்கு தந்தை... மூக்கையூர் மக்களுடனேயே ஒன்றாக உணவருந்தி பொழுது சாயும் நேரத்தில் வேம்பாருக்கு திரும்பி செல்வார் பங்கு தந்தை... அவரை பாதிதூரம் வரை சென்று வழியனுப்பி விட்டு திரும்பி வருவார்கள் மூக்கையூர் இளைஞர்கள்... இது வாரவாரம் நடைமுறைக்கு வந்தது..

அதிகாலையில் கடலுக்கு செல்லுமுன் கோவில் இருக்கும் திசையை நோக்கி திரும்பி பார்த்து பிதா.. சுதன்.. கைகளால் உடம்பில் சிலுவை போட்டபின் கடலில் கால்களை நனைத்தார்கள் மூக்கையூரிலிருந்து தொழிலுக்கு செல்பவர்கள்....

இனி கோவிலுக்கு அருகில் சென்று குடியிருப்போம்னு கடற்கரை அருகிலிருந்த குடிசை வீடுகளை பிரித்து கோவிலுக்கு அருகாமையில் போய் வீடு கட்டினார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் இடையில் மிக நீண்ட இடைவெளி இருந்தது. சமையலுக்கென்று தனியாக சிறு குடில் போடப்பட்டது.. பெண்கள் ஒதுங்குவதற்கு வளவு அமைத்து வீட்டை சுற்றி பனைஒலையால் அரண் அமைத்தார்கள்....

கோவிலை சுற்றி கிட்டத்தட்ட ஒரு மைல் சுற்றளவுக்கு வீடுகள் பெருகியது.. ஆட்கள் நடமாட்டம் உள்ள ஊராக மாறிப்போனது மூக்கையூர். சாயல்குடிக்கும் மூக்கையூருக்குமான ஒற்றையடி பாதை ரெட்ட மாட்டுவண்டி போற அளவுக்கு அகலமானது.. சாயல்குடி மைனரும் அடிக்கடி மூக்கையூர் வந்து போக தொடங்கினார். இவர்களின் பங்காளிகள் என்று அழைக்கப்பட்ட இனத்தவருடன் நெருக்கம் கூடியது... ஆப்பனூரிலிருந்து மக்கள் வந்து போக தொடங்கினார்கள்..

காய்ந்து கிடந்த பனை மரங்களின் தூர் பகுதியை (அடி பகுதி) வெட்டி எடுத்து அதன் உள் பகுதியை நன்றாக குடைந்து தொட்டியாக மாற்றினார்கள்.. அதன் பெயர் பத்தை.. என்று அழைக்கப்பட்டது.. தண்ணீர் தேக்கி கொள்ள உதவும் ஆணமாகவும் (பாத்திரம்) கருவாடு தயார் செய்யவும் பயன்பட்டது பத்தை.. விற்காத மீன்களை கொண்டுவந்து பத்தையில் தட்டி... நல்ல தண்ணீர் ஊற்றி மற்றும் உப்பும் போட்டு துணியால் பத்தையை மூடிவிடுவார்கள்.. அடுத்தநாள் பத்தையில் உள்ள மீன்களை அள்ளி கடலில் அலசி கடற்கரை மணலில் காயப்போடுவார்கள்..

கச்சான் காலத்துல நல்ல வெயில்ல மீன் காஞ்சவுடனே அந்த கருவாட்டு வாசம் மூக்கையூரையும் தாண்டி போய்க்கிட்டு இருந்துச்சு.. நாங்களே சந்தைகளில் வித்துட்டு வர்றோம்னு நாலைந்து பெண்கள் கிளம்பினார்கள் சூசையின் அக்கா சந்தனமாரி உட்பட..

கொஞ்ச காலத்தில் மூக்கையூர் கருவாட்டுக்காக செவல்பட்டி சந்தையும், கடலாடி சந்தையும் இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது... நாறி போன சீலா வாளை போன்ற பெரிய மீன்களை அறுத்து சீக்கிரம் கெட்டுபோகும் குடல் பகுதிகளை அகற்றிவிட்டு உடலின் உள்ளே உப்பால் நன்றாக தேய்த்து பனை ஒலைபாயில் சுருட்டி குழி தோண்டி புதைத்து ஒரு வாரம் கழித்து அதை வெளியே எடுப்பார்கள்... இது பட்டறை கருவாடு என்று அழைக்கப்படும்.... இதன் சுவைக்கு ஈடு இனையே கிடையாது.. மூக்கையூரை சுற்றியுள்ள கிராமங்களில் மட்டுமல்ல தூரமாக உள்ள கமுதி, பார்த்திபனூர் இன்னும் சற்று அதிக தூரத்திலுள்ள விருதுநகர் வரை மூக்கையூர் கருவாடு மணத்தது.. 

ஒரு பனைமரத்துக்கு பின்னால் நின்று.. சூசை எப்போது வெளியே வருவான்..... தூரத்தில் இருந்த அவனது வீட்டையே பார்த்து கொண்டிருந்தாள் மாரியம்மா....
கொஞ்சநேரத்தில் சூசை வீட்டை விட்டு வெளியே வந்தவன் இவளை பார்த்ததும் என்ன என்பது போல் சைகையால் கேட்டான்.. 
மாரியம்மா கைகளால் அவனை அழைத்து இங்க வாங்க என்றாள் ..
அவள் அருகில் சென்றதும் சூசையை திரும்பி பார்க்காமலயே ஒரு மண்சட்டியை நீட்டி இதுல கறியும் சோறும் இருக்கு...
எங்க அம்மாச்சி உன் புருஷன்ட்ட கொடுத்துட்டுவான்னு சொன்னாங்க..
அதான் கொண்டுவந்தேன்.. இந்தாங்க என்றாள் மாரியம்மாள் அவனை திரும்பி பார்க்காமலே...
அவள் தன்னை பார்ப்பதை கூட தவிர்ப்பதை நினைத்து கோபத்துடன்..
எனக்கு வேணாம் என்று சொல்லி வந்த வேகத்திலேயே திரும்பி போனான் சூசை...
என்னங்க .. மாரியம்மாவின் குரலுக்கு திரும்பாமலே சென்றான் சூசை...
நீங்கள் சாப்பிடாமல்.. நான் சாகுற வரைக்கும் இனி சாப்பிட மாட்டேன்..
தூரத்தில் ஒலித்த மாரியம்மாவின் குரலை கேட்டு பதறி திரும்பும் போது மாரியம்மாவை அந்த இடத்தில் கானவில்லை...
சூசை ஓடிசென்று அவளை அங்கும் இங்குமாக தேடினான் ..
அவன் தேடிய பாதையெங்கும் அவளது கண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்திருந்தது..
தன்னை காணாது பதறிக்கொண்டு தேடும் தன் புருஷனை காதலோடு அடர்ந்த பனைமர கூட்டத்திற்க்குள் மறைந்து நின்று ரசித்து கொண்டிருந்தாள் மாரியம்மா...
சாயந்திர கச்சான் காத்து ரொம்ப ஒரமா இருந்ததாலே.. அலைகளின் சப்தம் மூக்கையூரை நிரப்பியிருந்தது ....

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com