வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 23 August 2021

அலைகளின் மைந்தர்கள் - 8

கோவில் கட்டுவதற்க்காக வேம்பாரிலிருந்து சாமியார்கள் வர்றாங்க.. அதனால யாரும் கடலுக்கு செல்ல கூடாது என்று எல்லோரும்  தீர்மானித்தார்கள்.. மூக்கையூர் வந்த பாதிரிகளை வரவேற்று கூட்டி சென்றார்கள்.. கச்சான் காலத்தில அலை ஏண்டு வரும் அதுனால கடற்கரைக்கு மிக அருகில் கோவில் கட்டக்கூடாது, கொஞ்சம் உள்ளே தள்ளி போய் கட்டுவோம்னு தீர்மானித்து கடற்கரையிலிருந்து அரை மைல்கள் தள்ளி இடத்தை தேர்ந்தெடுத்தார்கள்..

கிழக்கு பகுதியில் குண்டாறும் கடலும் கலக்கும் முகத்துவாரம் அருகிலிருந்தது.. ஒரு ஆள் உயரத்துக்கு மண்சுவர் கட்டி அதுக்கு மேலே பனைஒலை வச்சு குடிசை கட்டிக்குவோம்.. 

சரி.. இந்த கோவில் எந்த புனிதருடைய ஆலயம்..? 

பாதிரி கூட்டத்தினரை பார்த்து கேட்டார்..

சந்தியா ராயப்பர் ஆலயம் ஒன்றிரண்டு பேரை தவிர அனைவரும் சொன்னார்கள்..

(கூட்டத்தில் முக்கால் வாசிபேர் இடிந்தகரையை சேர்ந்தவர்கள் சில பேர்தான் கூட்டப்புளி, பெரியதாழை, மணப்பாட்டை சேர்ந்தவர்கள்)

பாதிரியாரும் மக்களும் சேர்ந்து சரி என்று முடிவெடுத்தார்கள்.. சாயல்குடி மைனருக்கு தகவல் சொல்லி அனுப்பப்பட்டது.. தொடக்க நாளன்று அவரும் தன் பரிவாரங்களோடு வந்து இறங்கினார்.. மளமவென வேலை தொடங்கியது.. பெண்கள் பாத்திரங்களில் களிமண்ணை அள்ளி கொண்டு வந்தார்கள். ஆண்கள் அதை வாங்கி ஆள் உயரத்திற்கு சுவர் எழுப்பினார்கள். ஒரு பிரிவினர் பனை மரங்களை சாய்த்து காயப்போட்டு சட்டம் செய்தார்கள். கூரை வேய்வதற்க்காக பனை ஒலை காய்ந்து கொண்டிருந்தது... பெண்கள் தலையில் சுமந்து வந்த களிமண்ணை அவர்களிடமிருந்து வாங்கி இறக்கி வைத்து கொண்டிருந்தான் சூசை..

தலையில் முக்காடிட்டு முகம் தெரியாமல் தலையிலிருந்த பாத்திரத்தை இறக்கி கொடுத்தாள் ஒருத்தி.. அவள் கழுத்தில் தொங்கிய தாலியை பார்த்தவுடனே தெரிந்து விட்டது சூசைக்கு.. இவள் மாரியம்மா என்று.. அவள் கொஞ்சதூரம் தள்ளி நடந்து சென்றபின் அவளை கூப்பிட்டான் சூசை..

யேய்.. நில்லு

நிற்காமல் தொடர்ந்து சென்றாள் மாரியம்மாள்.

நில்லு அதட்டினான் சூசை..

முகம் திருப்பாமல் அப்படியே நின்றாள்

நீ எதுக்கு மண் சுமக்குற..

என் புருஷன் கும்பிடுற சாமி கோவில் அதான்..

அடுத்து அவன் பேச தொடங்குமுன் அவனை விட்டு வெகுதூரம் போய்விட்டாள் மாரியம்மாள்..

கோவில் கட்டி முடிச்சாச்சு என்று வேம்பாறு போய் பங்குதந்தையிடம் சொன்னார்கள்..

நாளகழிச்சு சுருபத்தோட நான் அங்கு வர்றேன் என்றார் வேம்பார் பங்குதந்தை.. மூக்கையூர் திருவிழா கோலம் பூண்டது... நிறைய மீன்களை கொடுத்து ஆடுகள் வாங்கி எல்லோரும் கூட்டாக சாப்பிட அசன சோறு தயார் செய்தார்கள்..எங்களின் குல தெய்வம் வருகிறது, அவரை வரவேற்க வரவேண்டும் என்று தங்களின் பங்காளி சாயல்குடி மைனரிடம் சொன்னார்கள் மூக்கையூர் பெரியவர்கள்..

கண்டிப்பா நான் வருவேன் என்று சொல்லி.... சந்தியா ராயப்பரை (பீட்டர்) வரவேற்க சாயல்குடி மைனரும் மூக்கையூர் மக்களும் திரண்டார்கள்..

அதோ .. வந்து கொண்டிருந்தார் குதிரை மீதேறிய சந்தியாகப்பர்..
யேசுவின் முதல் சீடரான புனித யாக்கோபு.. ( ஜேம்ஸ் ) சுருப வடிவில் ..

(யாக்கோபு கடலோடிகளின் இனத்தை சேர்ந்தவர்...
இவர்களின் முதல்வன் மட்டுமல்ல..
இந்த இனத்தின் பாதுகாவலர் என்ற ரீதியில் சந்தியாகப்பரை கொண்டுவந்தார்கள் பாதிரிகள் கொச்சி மேற்றாசனம் விரும்பியபடி)

இவரும் வாளோடு குதிரையில் இருந்ததால் இவரை ராயப்பர் என்றே நம்பினார்கள் ..
( இன்றுவரை மூக்கையூரிலும் சரி... தங்கச்சிமடத்திலும் உள்ள சந்தியாகப்பர் ...
கோவிலும் சரி..சந்தியா ராயப்பர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது...)

மூக்கையூர் இராயப்பர் கோவில் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பரவசத்துடன் பேசப்பட்டது ..

(ஐநூறு வருடம் கழிந்தாலும் இடிந்தகரை இராயப்பர் கோவில் தாக்கம் பல தலைமுறைகளை கடந்தும் மூக்கையூர் வழிவந்த மக்களிடம் இன்னும் வாய் வழியாக சொல்லி கொடுக்க பட்டு கொண்டேயிருக்கிறது. தற்போதைய தலைமுறைதான் சந்தியாகப்பர் (ஜேம்ஸ்) கோவில் என்று அழைக்கிறார்கள்..)

கடலுக்கு சென்று பிடித்த மீன்களை விற்று கொண்டிருந்தான் சூசை.. வெகு நேரமாகியும் அவனிடம் மீன் வாங்க வரவில்லை மாரியம்மாள்.. அவளை பார்த்துவிட மாட்டோமா? ஏங்கி கொண்டிருந்த சூசையை பார்க்காமலே அவனை கடந்து சென்றாள் மாரியம்மாள். தூரத்தில் மீன் விற்று கொண்டிருந்தவனிடம் மீனை வாங்கி திரும்பி செல்லும் போதும் அவனை பார்க்காமலே சென்றாள்.. அவளுடைய இந்த நிராகரிப்பால் சூசையின் கண்கள் கலங்கியது.. அவள் தூரமாக சென்றுவிட்டதால் ஒடிச்சென்றான் சூசை ..

மாரியம்மாள் அடர்ந்த பனைமர கூட்டத்திற்க்குள் செல்லும் போது அதட்டலுடன் நில்லு என்றான் சூசை.. திரும்பாமல் நின்றாள் மாரியம்மா..

திரும்பு ..

திரும்பி பார்த்தவள் சூசையின் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து பதறிபோய் அவனை நோக்கி நகர்ந்தவள் சட்டென நின்றாள்...

ஏன் இப்படி நடந்துக்கிற..

என்னங்க.. உங்கள் கண்ணில் தேங்கியிருக்கும் கண்ணீர் நீங்கள் என்மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டுகிறது. ஆனால் நான் உங்களையே நம்பியிருக்கும் பெண்ணுக்கு என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்றாள் மாரியம்மா..

நீங்க சாப்பிடாம நான் சாப்பிடமாட்டேன்.. நீங்கள் தூங்கிய பிறகுதான் என் கண்கள் மூடும் இது என்றைக்கும் மாறாது... நீங்க அழுக கூடாது உங்கள் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தாலும் நான் கரைந்து போய் விடுவேன் இல்லை என்றால் உங்களை விட்டு காணாமல் போய் விடுவேன் என்றாள் மாரியம்மாள் ..

சூசை மறுபக்கம் திரும்பி தன் கண்களை துடைத்துவிட்டுஅவளையே பார்த்து கொண்டிருந்தான் .. 

என்னங்க... அப்படிலாம் பார்க்காதீங்க.. என்னால தாங்க முடியாது என் புருஷன் மடில விழுந்துருவேன்.. வேணாம்.. தயங்கி தயங்கி நின்றபடி தன் புருஷனை கடந்து சென்றாள் மாரியம்மா...

...தொடரும் ...
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com