வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 14 April 2024

புதிய தேசத்தை நோக்கி


கிபி 1559 இல் போர்ச்சுகல் பேரரசு ஒரு முடிவெடுக்கிறது. விசுவநாத நாயக்கரின் தொடர் படையெடுப்பால் பாதிப்படைந்த பரதவருக்கு ஒரு புதிய நாட்டை உருவாக்க தீர்மானித்தனர். அதன்படி யாழ்ப்பாணத்தை கைப்பற்றி அங்கு பரதவரை குடியேற்ற முடிவு செய்தனர். கிபி 1560 இல் மதுரை மன்னர் விசுவநாத நாயக்கர் முதல் இரண்டு நாளில் எடுத்த முத்துக்களை வருடாந்திர அன்பளிப்பாக கேட்க, பரதவர்கள் மறுத்தனர்.

தன் ஆளுகையின் கீழ் இருந்த காயல்பட்டினத்தில் விசுவநாத நாயக்கர் தன் சேனைகளுடன் முகாமிட்டிருந்தார். விஜயநகரப் பேரரசின் தளபதியில் ஒருவரான மேல் ராவ் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தார். மேல் ராவ் தன் படைகளுடன் ஆகஸ்ட் மாதம் விடியற்காலையில் புன்னைகாயலை அடைந்தவுடன் தங்களால் முடிந்த வரை பரதவர் மக்களின் வீடுகளை அனைத்திற்கும் தீவைத்து கொளுத்தினார்.

கோவாவில் இருந்து சில நாட்களுக்கு முன் புன்னைகாயல் வந்திருந்த போர்ச்சுகல் தளபதி Dom Duarte de Menezes கேள்வியுற்று தனது 40 படைவீரர்களுன் மேல் ராவையும் அவன் படைகளையும் எதிர்கொண்டார். இச்சமயத்தில் புன்னைகாயல் மக்கள் கோட்டையில் தஞ்சம் புகுந்தனர்.

புன்னைகாயல் கோட்டையில் இருந்த போர்ச்சுகல் தளபதி Manoel Rodriguez தனது 40 படைவீரர்களுன், மேல் ராவுடன் போரிட்டு கொண்டிருக்கும் தளபதி Dom Duarte de Menezes யுடன் சேர்ந்து மேல் ராவை எதிர்த்து போரிட்டார். கடுமையான சண்டைக்கு பின் மேல் ராவ் கொல்லப்பட்டு, அவன் படை அழிக்கப்பட்டு படைபாசறை சூறையாடப்பட்டது.

காயல்பட்டினத்தில் மிஞ்சி இருக்கும் வீரர்களுடன் விசுவநாத நாயக்கர் பரதவர் நாட்டின் தலைநகரான புன்னைகாயல் மீது படையெடுத்தார். இப்படையை தாக்குப்பிடிக்க முடியாமல் மெதுவாக இரு போர்ச்சுகல் தளபதிகளும் புன்னைகாயல் கோட்டைக்குள் சென்றனர். இதில் போர்ச்சுகல் தளபதி Manoel Rodriguez Coutinho காயமடைந்தார். பின் இரு போர்ச்சுகல் தளபதிகளும் கோட்டையில் தஞ்சமடைந்திருந்த பெண்களையும், குழந்தைகளையும் கோட்டைக்கு அருகில் இருந்த கப்பல்களில் ஏற்றினர்.

கோட்டை வலுவற்றதாய் இருந்தபடியால் சரணடைய முடிவு செய்தனர். அதற்கு முன் மீதமிருந்த பரதகுல ஆண்களை கப்பலில் ஏற்றினர். இதன் பின் கோட்டையை சரணடைந்து இரு தளபதிகளும் தங்கள் வீரர்களுடன் கப்பலில் ஏறினர். கடல் அலையின் சீற்றம் காரணமாக எந்த கப்பலும் புறப்படவில்லை. இதன் பின் விசுவநாத நாயக்கர் கடுமையான சண்டைக்குபின் அனைத்து கப்பல்களையும் கைப்பற்றினார். இதன் பின் கோட்டை தகர்க்கப்பட்டு பரதவர் நாட்டின் தலைநகரான புன்னைகாயல் அழிக்கப்பட்டது.

14 நாட்கள் இரு போர்ச்சுகல் தளபதிகளும், வீரர்களும், பரதவர் மக்களும் சிறை வைக்கப்பட்டனர். முதல் நாள் எடுக்கப்பட்ட முத்துக்களை தரவில்லையெனில் பெண்களையும், குழந்தைகளையும் அடிமையாக எடுத்துச்செல்ல போவதாக மிரட்டினார் விசுவநாத நாயக்கர், அது 3000 வெள்ளி நாணயங்களின் மதிப்பாகும். பின் போர்ச்சுகல் தளபதி Manoel Coutinho அனைவருக்கும் 1000 தங்க நாணயங்கள் தருவதாக பரிந்துரை செய்தார்.

விசுவநாத நாயக்கர் ஏற்றுக்கொண்டு ஏசுசபை பாதிரியார் Fr. Joa de Mesquita தவிர அனைவரையும் விடுதலை செய்தார். பின் போர்ச்சுகல் தளபதி Manoel Rodriguez Coutinho 1000 தங்க நாணயங்கள் கொடுத்து தூத்துக்குடியில் பாதிரியாரை மீட்டார். கிபி 1560 அக்டோபர் மாதம் இந்தியாவின் போர்ச்சுகல் பிரதிநிதி Don Constantine de Braganza 2500 வீரர்களுடன் கோவாவில் இருந்து கிளம்பினார். பின் யாழ்ப்பாண தலைநகர் நல்லூரை நோக்கி படையெடுத்தார். யாழ்ப்பாணம் மன்னர் முதலாம் சங்கிலி தன் படையுடன் எதிர்த்தான்.

பின் போர்ச்சுகல் படையினரால் தோற்கடிக்கப்பட்டு தன் குடிமக்கள் மீது நம்பிக்கை இல்லாமல் ஒடி ஒழிந்து கொண்ட பின், தன் மகனை சமாதானம் பேச தூதனுப்பினான். இதன் படி மன்னார் தீவு போர்ச்சுகல் பேரரசுக்கு சொந்தமாக்கபட்டது. பின் போர்ச்சுகல் பேரரசின் இந்திய ஆளுநர் Don Constantine de Braganza மன்னார் தீவுக்கு திரும்பினார். புதிதாக உருவாக்கப்பட்ட இத்தீவு நாடு கோவா அரசாங்கத்தை சார்ந்து இருக்கும். பின் பரதவர் நாட்டின் மக்களுக்கு நாடு உருவாகிவிட்டது, வந்து குடியேறுங்கள் என்று தகவல் அனுப்பினார்.

பின் மக்கள் பரதவர் நாடு தலைநகர் புன்னைகாயலில் ஒன்று கூடி மன்னார் தீவுக்கு புறபடவிருந்த கப்பல்களில் ஏற தொடங்கினர். இச்சமயத்தில் விசுவநாத நாயக்கரால் அனுப்பபட்ட வடுகர் படைகள் புன்னைகாயலை அடைந்தனர். புன்னைகாயலில் இருந்த போர்ச்சுகல் தளபதியும், அவர் 40 வீரர்களும் எதிரிகளை முறியடித்து வந்தனர். மக்கள் கப்பல்களில் பாதுகாப்பாக ஏறி விட்டனர்.

மக்கள் பாதுகாப்பாக ஏறி விட்டனரா? என்று பார்த்து கொண்டிருந்த பாதிரியார் Henryque Henryques மற்றும் பாதிரியார் John Mesquita தங்கள் படகுகளில் ஏறி உட்கார்ந்து விட்டனர். போர்ச்சுகல் தளபதிக்கு காத்து கொண்டிருந்தனர். இதன் பின் தளபதி தன் வீரர்களுடன் புறப்பட தயாராக இருந்த படகில் பாதிரியார்களுடன் ஏறினர்.

கடலின் சீற்றம் காரணமாக கப்பல்களின் அருகில் பயணிக்க முடியவில்லை. நாயக்கர் படை படகை தாக்கி சிறை பிடித்தனர். பாதிரியார் Henrique Henriques கடலில் குதித்து கப்பல் அருகில் சென்று தப்பித்து கொண்டார். போர்ச்சுகல் தளபதி தனக்கும், தன் வீரர்களுக்கும் நாயக்கர் தளபதிகளிடம் பணம் கொடுத்து விடுதலை பெற்று கப்பலை அடைந்து அனைவருடன் மன்னார் தீவை அடைந்தனர்.

கிபி 1561 இல் மன்னாரில் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. அந்நாட்டை பாதுகாக்க போர்ச்சுகல் தளபதி George de Mello de Castro தலைமையில் 150 வீரர்களுடன் 6 ஆயுதம் தாங்கிய போர் கப்பல்களை நிறுத்தி வைத்து கோவா திரும்பினார். போர்ச்சுகல் பேரரசின் இந்திய பிரதிநிதி Don Constantine de Braganza.
இங்கு மக்கள் சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தனர். இங்கேயே போர்ச்சுகல் தளபதி பாதுகாப்பில் முத்துக்குளிப்பு நடந்தது.

கிபி 1563 இல் இத்தீவு நாட்டில் பரவிய கொல்லை நோயால் 4000 பரதவர் உயிர் இழந்தனர். பின் பெரும்பாலான பரதவர்கள் மீண்டும் பரதவர் நாட்டுகே திரும்பினர்.
---------------------------------------
Foot Notes:
1,Jesuits in Ceylon by Fr. S. G. PERERA, pg:12, 14.
2,South India Under vijayanagar Empire by Fr Henry Heras, Vol 1,Pg:163, 164 and 165.
3,History of Ceylon by M. G Fransis, Pg:137 to 146.
4.St Francis Xavier his life, his times by George Schurhammer, Pg:313.

- UNI



Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com