வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 26 April 2024

செண்பகராமன் காலிங்கராயன்


பரதவர் கோன் செண்பகராமன் காலிங்கராயனின் வரலாற்றில் மறைக்கப்பட்ட சரித்திரம்:

செண்பகராமன் காலிங்கராயன் என்னும் அரசன், பதினேழாம் நூற்றாண்டில், கன்னியாகுமரிக்கு மேற்கே அமைந்துள்ள கோவளத்தை தலைநகராகக் கொண்டு நாஞ்சில் நாட்டை ஆட்சி புரிந்தவர் ஆவார்.

இவரை பாட்டுடை நாயகனாக கொண்டு பாடப்பெற்ற தமிழ் சிற்றிலக்கிய வகையில் ஒன்றான "செண்பகராமன் பள்ளு" இவரை பற்றி பல அறிய செய்திகளை நமக்கு தருகிறது. அவற்றுள் சிலவற்றை நாம் இப்பதிவில் காண்போம்....

செண்பகராமன் காலிங்கராயன் கோவளம் நகரை ஆட்சி புரிந்த பெரியகுட்டி என்னும் அரசனின் மகன் ஆவார். செண்பகராமனை "குருகுலபரதசாதியில் அவதரித்தவன்" என்று இந்நூல் குறிப்பிடுவதன் மூலம் இவர் பரதவர் சமூகத்தில் குருகுல வம்சத்தை சேர்ந்தவர் என்பது தெளிவு.

"தேடு செண்பகராமன் புகழ்சொல்லும் செம்மை சேர்நாஞ்சி நாடெங்கள் நாடே", "எதிரிகளும் கைகூப்பி நின்று வணங்கும் செண்பகராமனின் நாடு" என்ற பாடல்களின் மூலம் நாஞ்சிவள நாட்டில் செண்பகராமன் மிகவும் செல்வாக்குமிக்க அரசனாக விளங்கினார் என்பதனை அறியலாம்.

செண்பகராமன் காலிங்கராயனின் முன்னோர்கள்:-

செண்பகராமனின் முன்னோர்கள் சேது நாட்டின் மங்கைபதியை ஆட்சி செய்து, பின்னர் அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஆட்சியை இழந்து மலையாள தேசத்து நாஞ்சில்நாட்டின் கோவளத்தில் வந்து குடியேறினர் என்ற செய்தியை இந்நூல் தருகிறது. இதன் மூலத்தை ஆதாரங்களுடன் ஆராய்வதே சிறந்தது.

பரதவர்களுக்கு ஆதியரசன் என்னும் முறையான அரச பரம்பரை இருந்தது என்பதனையும், இவர்கள் சேது நாட்டின், மங்கைபதியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்" என்று பதினான்காம் நூற்றாண்டில், காங்கேயனின் வலைவீசி புராணம் ஓலைச்சுவடி, பக்கம் எண். 19ல் குறிப்பிடுகிறது.

மேலும் வலைவீசி புராணம் ஓலைச்சுவடியில் காங்கேயன்......
சேது நாட்டில் அமைந்துள்ள மங்கைபதியை (திருஉத்திரகோசமங்கை)  பரதவர்கோன்நாடு என்று பக்கம் எண். 18ல் குறிப்பிடுகிறார்.  இதே தகவல்களை ஆங்கிலேய அரசு அதிகாரிகளான சைமன் காசி, ஜே. எச். நெல்சன், எட்கர் தர்ஸ்டன், ஹக் நெவில் போன்றோரும் தங்கள் நூல்களில் குறிப்பிடுகின்றனர்.

இதன்மூலம் பரதவகுல அரசர்களே ஆதிகாலம் தொட்டு மங்கைபதியில் ஆட்சி புரிந்து வந்தனர் என்பது உறுதி. விஜயநகர பிரதிநியாக மதுரையில் ஆட்சிக்கு வந்த விசுவநாத நாயக்கர்(1529-63) காலத்தில் செய்துங்கன் என்பவர் மங்கைபதியில் ஆட்சியாளராக இருந்ததை அழகன் பெருமாள் ஓலைச்சுவடி கதைப்பாடல் பக்கம் எண். 32ல் கூறுகிறது. மேலும் இவர் பாண்டியரின் ஆதரவாளர் என்ற விவரத்தையும் அச்சுவடி நமக்கு தருகிறது.

இந்த செய்துங்கன் காலத்திலோ அல்லது அவருக்கு பின் வந்தவர்களின் காலத்திலோ தான் மங்கைபதியை ஆண்ட பரதகுல ஆட்சியாளர்கள் அதாவது செண்பகராமனின் முன்னோர்கள் கோவளத்துக்கு வந்திருக்க வேண்டும். செண்பகராமனின் அரசகுல முன்னோர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் மங்கைபதியை விட்டு கோவளத்துக்கு வரும்போது கூடவே பள்ளர்களையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு வந்தனர் என்பதனை, செண்பகராமன் பள்ளு பக்கம் எண். 53ல் கூறுகிறது.

அரசகுல சின்னங்கள்:-
செண்பகராமன் கடம்ப மாலை அணிந்தவரும், மயில் சின்னத்தை தமது கொடியில் கொண்டவரும் ஆவார்.

நாஞ்சில் நாட்டின் மீதான திருமலை நாயக்கரின் படையெடுப்பு:
செண்பகராமன் நாஞ்சில் நாட்டை ஆட்சி செய்துவரும் காலத்தில், வேணாட்டு அரசன் உன்னி கேரள வர்மன் தன்னரசு பெறகருதி மதுரை திருமலை நாயக்கருக்கு வரி கொடுப்பதை நிறுத்தி விட, திருமலை நாயக்கர்(1623-59) உன்னி கேரள வர்மனை அடக்கி வரிவசூல் செய்து வர, மதுரை வடுகர் படையுடன் 72 பாளையக்காரர்களையும் தனது தளவாய் "இராம அய்யன்" தலைமையில் கிபி1635 ஆம் வருடம் தெற்கே அனுப்பி வைக்கிறார். உன்னி கேரள வர்மனின் நாயர் சமூகத்து படை தளபதி "இரவி குட்டி பிள்ளை" தலைமையிலான வேணாட்டு படைகள் திருமலை நாயக்கரின் தளவாய் "இராம அய்யன்" தலைமையிலான மதுரை வடுகர் படைகளுடன் மோதியது.

முடிவில் "இரவி குட்டி பிள்ளை" போரில் கொல்லப்பட்டு வேணாட்டு படைகள் முழுவதும் தளவாய் இராம அய்யனால் தோற்கடிக்கபட்டன. இந்த வெற்றிக்கு பிறகு மதுரை வடுக படைகள் மேலும் முன்னேறி சென்று கோவளத்து அரசன் செண்பகராமனுடன் மோதினர். வடுகர்களுடனான இந்த சண்டைக்கு இடையில், தளவாய் "இராம அய்ய"னுடன் வந்திருந்த 72 பாளையக்காரர்களுள் ஒருவரான ஊற்றுமலை பாளையக்காரரின் மறவர் படை, செண்பகராமனுக்கு சொந்தமான பசுக்கள் சிலவற்றை கவர்ந்து சென்றனர்.

இதனை வடுகன் சண்டையில் தென்காசி-ஊற்றுமலை மறவர் நிரை சாய்த்த மாடும்" என்று செண்பகராமன் பள்ளு பக்கம் எண்.111ல் கூறுகிறது. முடிவில் செண்பகராமனின் தலைநகரான கோவளத்தை வடுக படையினரால் கைப்பற்ற முடியாமல் போனது.

இதன் காரணமாக செண்பகராமன்.....

"விரோதிகளும் வணங்கும் வீரக்கழலணிந்த கரிகாலனை போன்றவனும்", "பாய்ந்து செல்லும் குதிரை வீரர்களும் தொழுகின்றவனும்", "பகைவர்களை வெல்ல படையுடையவனும்'', "வாள்வித்தையில் வீமனைப் போன்றவனும்"
என்று புகழப்படுகிறார். இருப்பினும் நாஞ்சில் நாட்டில் சிலபகுதிகள் வடுகர் வசம் சென்றது. திருமலை நாயக்கரின் சார்பில் அவருடைய வடுகர் தளபதிகள் அவற்றை ஆட்சி செய்ய தொடங்கினர்.

செண்பகராமனின் தலைநகரான கோவளத்துக்கு மூன்று கிலோமீட்டர் வடக்கில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஊரின் வட எல்லையில் அமைந்துள்ள கிராமம் வரை வடுகர்களின் ஆட்சியின் கீழ் சென்றது, இந்த கிராமம் இன்றும் வடுகர் படை அங்கு தங்கியிருந்தற்கு சான்றாக "வடுகன் பற்று" என்றே தான் அழைக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் சடைக்க தேவர்க்கு எதிரான போரில் பங்கேற்ற செண்பகராமன்:

இரண்டாம் சடைக்க தேவர்(1635-45) என்பவர் சேது நாட்டை ஆட்சி புரிந்துவந்த மன்னர் ஆவார். இவர் தன்னரசு பெற கருதி திருமலை நாயக்கருக்கு வரி கொடுப்பதை நிறுத்தி விட்டார். தனக்கு பணியாத சடைக்க தேவரை அடக்கி வர திருமலை நாயக்கர் மதுரை வடுகர் படையுடன் 72 பாளையக்காரர்களையும் தனது தளவாய் "இராம அய்யன்" தலைமையில் சேதுநாட்டுக்குள் அனுப்பி வைக்கிறார்.

திருமலை நாயக்கரின் சேதுநாடு படையெடுப்பு, கி.பி. 1635ல் நடந்த நாஞ்சில் நாட்டு படையெடுப்புக்கு நான்கு வருடம் கழித்து அதாவது கி.பி. 1639ல் நடைபெறுகிறது. இப்படையெடுப்பை பற்றி விவரிக்கும் "ராமய்யன் அம்மானை" என்னும் நூல் நாஞ்சில் நாட்டு அரசன், திருமலை நாயக்கருக்கு ஆதரவாக சடைக்க தேவருக்கு எதிராக படை கொண்டு வந்ததை பற்றி..

"நாஞ்சி நாட்டு துரையும் நல்ல படையத்தனையும்" என்று பக்கம் எண். 25ல் கூறுகிறது. இதன்மூலம் நாஞ்சில் நாட்டு அரசன் செண்பகராமன், சடைக்க தேவருக்கு எதிரான போரில் பங்கேற்றார் என்பதனை அறியமுடிகிறது.

கோயில் திருப்பணிகள்:
செண்பகராமன் கன்னியாகுமரி அலங்கார நாயகி, கோட்டாறு சவேரியார் போன்ற கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளார். நாகர்கோவிலுக்கு மேற்கே ஆறு மைல் தொலைவில் உள்ள ஆளூர் என்ற கிராமத்தில் "புனித நிக்கோலஸ்" பெயரில் கோயில் ஒன்றை கட்டினார். மேலும், தமது தலைநகர் கோவளத்தில், "புனித இஞ்ஞாசியாருக்கு" கற்கோயில் ஒன்றினை எழுப்பினார். இக்கோயிலானது கிபி1917 வரை நிலை பெற்றிருந்தது.

தமிழுக்கு ஆற்றிய தொண்டு:
'இயலெல்லாந் தெரி செண்பகராமநல் லேந்தல்' 'பழகுதமிழ்ச் சொல்லே தருஞ் செண்பகராமன்' 'தமிழாகரன்' போன்ற அடைமொழிகள் இவனது தமிழ் பற்றை விளக்க தகுந்த சான்றுகளாகும். இவர் தமிழ் புலவர்களை ஆதரித்து பரிசுகள் வழங்கினார் என்பதை ''கைக்கு வளை கடுக்கன் கற்றோற்க்கு உதவு கொடைச் செண்பகராமன்" மற்றும் "தேடற்கரிய பாடர்புலமையோர்க்குதவு கோவையூர் செண்பகராமன்" ஆகியவற்றின் மூலம் அறியலாம்.

செண்பகராமனுக்கு இரண்டு குமாரத்திகளேயன்றி வேறு பிள்ளைகள் கிடையாது.

மருமக்கள்மார் மற்றும் அவர்கள் பிள்ளைகள்:
கற்பூரக் காலிங்கராயன் என்பவர் செண்பகராமனின் மூத்த மருமகன். இவர் மூத்த நயினார் என்றும் அழைக்கப்படுகிறார். வேலப்பபிள்ளை என்பவர் கற்பூரக் காலிங்கராயனின் மூத்த மகன் ஆவார். சுவானி நயினார் என்பவர் கற்பூரக் காலிங்கராயனின் இளைய மகன் ஆவார்.பிரஞ்சிஸ் கொலிவேர் என்பவர் செண்பகராமனின் இளைய மருமகன் ஆவார். இவர் பிரஞ்சிஸ் குட்டி என்றும் அழைக்கப்படுகிறார்.

கோவளத்தில் செண்பகராமன் காலம் முதலே பரதவர்களின் திருமண விழாக்களில் பாடப்படும் பாடல் பின்வருமாறு...

"வாசலிது வாசலிது-நல்ல
கல்யாண வாசலிது
தேசமதி லேபுகழும்-வெகு 
சிறப்பான கோவைநகர்
மங்கையூர் கோசமதில்-கல்ரதம் 
வைத்தோட்டி யபுமான் 
பொங்குமிகு அயோத்திநகர்-செல்வன் 
புகழரசு புரியுநேசன்
மன்றில்செந்தூர்க் கந்தனுக்கு-மயில் 
மண்டபங் கட்டிவைத்தோன் 
அன்றுகதி ரோன்மறைத்த-பனையை 
அன்புடன்த றித்தவீரன்" என்று முடிகிறது இப்பாடல்.

சேது நாட்டின் மங்கைபதியில், செண்பகராமனின் முன்னோர்கள் கல்ரதம் ஓட்டி சிறப்புற்றதை இப்பாடலின் மூலம் அறியமுடிகிறது.

திருவாங்கூர் அரசன் கார்த்திகை திருநாள் ராமவர்மா(1758-98) காலத்தில், செண்பகராமன் சந்ததியினரின் நாஞ்சிநாட்டு கோவளம் அரசாட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, கோவளம் நகரானது திருவாங்கூர் அரசன் வசம் சென்றது.
கிபி1774-1789 இடைப்பட்ட ஆண்டுகளில் மலையாள தேசம் வந்திருந்த "பர்த்தலமேயுவின் பவுலீனுஸ்" என்ற ஆஸ்திரிய நாட்டு பயணி தனது நூலில்....

"மிகவும் வலிமையான கோட்டை அரண்களால் சூழப்பட்டுள்ள கோவளம் நகர் தற்போது திருவாங்கூர் அரசன் கார்த்திகை திருநாள் ராமவர்மாவுக்கு சொந்தமானதாக இருக்கிறது" என்று அவர் குறிப்பிடுவதன் மூலம் இக்காலத்தில் செண்பகராமன் சந்ததியினரின் அரசாட்சி கோவளத்தில் முடிவுற்றது என்பது உறுதி.

செண்பகராமன் காலிங்கராயனின் சந்ததியில் வந்த "மரியஜான் காலிங்கராயன்" என்பவரே இந்த "செண்பகராமன் பள்ளு" என்ற தமிழ் சிற்றிலக்கியத்தை பதிபித்தவர் ஆவார். இவருடைய சந்ததியினர் இன்றளவும் நாகர்கோவில் மாநகரில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________

Foot Notes:-
VOYAGE TO EAST INDIES BY FRA PAOLINO DA SAN BARTOLOMEO Pg. 32

- UNI





















Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com