வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 18 April 2024

ஜாதி தலைவன்


வெறும் ஜாதி தலைவர்களாக மாறிப்போன மன்னர் வம்சத்தினர்:

மன்னர்கள் தங்களது ஆட்சி பகுதியிலிருக்கும் அனைத்து குடிகளுக்கும் மன்னராகவே இருக்கிறார்கள். ஒரு மன்னர் அன்னியரின் படையெடுப்புகளில் தமது அரசை இழப்பாராகில் மீண்டும் அதனை கைப்பற்ற முயல்வார். அதுவும் தோல்வியடையும் பட்சத்தில் தங்களது சொந்த இனத்தவருக்கு மட்டுமே  ஜாதி தலைவர்களாக நீடிப்பார்கள்.
 
எடுத்துக்காட்டாக ...

தும்பிச்சி நாயக்கர் என்னும் பட்டமுடைய மன்னர்கள் விஜயநகர பேரரசு காலத்திலே சேது நாட்டில் அமைந்துள்ள பரமக்குடியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர்களாவர். இவர்களின் ஆட்சி பகுதியும் அவர்கள் பெயராலேயே தும்பிச்சி நாயக்கர் சீமை என்றே அழைக்கப்பட்டது. விஜயநகர பேரரசின் மதுரை பிரதிநிதி விசுவநாத நாயக்கர்(1529-64), தன்னரசு பெற கருதிய பரமக்குடி தும்பிச்சி நாயக்கர்களை வெளியேற்றி பரமக்குடியை கைப்பற்றி கொல்லப்பட்டி பாளையக்காரனுக்கு வழங்குகிறார்.

விசுவநாத நாயக்கரின் மரணத்துக்கு பிறகு, கிபி1564 ஆம் ஆண்டில் தும்பிச்சி நாயக்கர், வாணாதிராயர்கள் உதவியுடன் கொல்லப்பட்டி பாளையக்காரனான அப்பனகஜலப்ப நாயுடுவை போரிலே புறங்காட்டி ஓடவைத்து பரமக்குடியை கைப்பற்றி விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக மதுரையில் இருந்த கிருஷ்ணப்ப நாயக்கரை(1564-72) எதிர்த்து கலகம் செய்கிறார்.

கிருஷ்ணப்ப நாயக்கரோ தும்பிச்சி நாயக்கரின் கலகத்தை அடக்கி அவரை கொன்று பரமக்குடியை கைப்பற்றுகிறார். இதன்பிறகு நாட்டை இழந்த தும்பிச்சி நாயக்கர் வம்சத்தினர் தங்களது "தொட்டிய நாயக்கர்" இனத்து மக்களுக்கு மட்டுமே ஜாதி தலைவர்களா நீடித்தனர். 

(18 கம்பளத்து நாயக்கர்களின் ஒரு பிரிவு தொட்டிய நாயக்கர். தெலுங்கு மொழி பேசும் இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த சாதியினர் இராஜகம்பளம், கொல்லவார், சில்லவர், தோக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர் என்னும் உட்பிரிவுகளின் பெயரிலும் அழைக்கப்படுகின்றனர்.[1] இவர்கள் தற்போது இராஜகம்பளம் என்கிற பெயரையே தங்கள் சாதிப் பெயராகப் பயன்படுத்தி வருகின்றனர். தொட்டியர்கள் கொல்லா, எர்ர கொல்லாவின் கிளை சாதியினர் என எட்கர் துர்ஸ்டன் தனது CASTE AND TRIBES OF SOUTH INDIA புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்[2].)

இராபர்ட் டி நோபிலி என்ற இத்தாலி நாட்டு மிஷனரி மதுரை மாநகரிலிருந்து கி.பி. 1608 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி தாம் எழுதிய கடிதத்தில்......

''வைப்பார் முதல் விஜயநகரம் வரையில் வாழும் தொட்டிய நாயக்கர் சமூகத்தவர் அனைவருக்கும் தும்பிச்சி நாயக்கர் ஜாதி தலைவராக இருக்கிறார்" என்று குறிப்பிடுகிறார்.

இக்கடித குறிப்பை ஆங்கிலேய அரசு அதிகாரியான ஜே.எச். நெல்சன் என்பவரும் தமது "மதுரை கன்ட்ரி மேனுவல்" பக்கம் 117 யில் குறிப்பிடுகிறார்.

०००००००००००००००००००००००००००००००००००००००

ஆதாரம்:-

பாண்டிய நாட்டில் வாணாதிராயர் வெ. வேதாசலம் பக். 128.

* LETTER FROM FR. DE’ NOBILI TO R. P. PROVINCIAL.

Madure, December 24, 1608.La Mission Du Madure Vol 2 by Joseph Bertrand. Pg 19.


- UNI
















Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com