வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 22 April 2024

பாண்டியபதி ராஜாக்கள்


பாண்டியபதி என்பவர்கள் தூத்துக்குடியை தலைநகராக கொண்டு மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டிணம், புன்னைக்காயல், வைப்பார், வேம்பார் நகரங்களை உள்ளடக்கிய ஏழுகடற்றுறையின் ஆட்சியாளர்கள் என்பதால் "ஏழுகடற்றுறை ராஜாக்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியை மையப்படுத்தி இவர்களுடைய ஆட்சி இருந்தபடியால் "தூத்துக்குடி ராஜாக்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். பாண்டியபதிகள் ஒட்டுமொத்த பரதவர்களின் பரம்பரை தலைவர்கள் என்பதால் "ஜாதிதலைவன்" என்ற பெயரும் இவர்களுக்கு உள்ளது. மேற்கண்டவைகள் குறித்த  ஆவணங்களைக் காண்போம்...

தூத்துக்குடியில் ராஜா டான் காஸ்பர் அந்தோனி டி குரூஸ் வாஸ் கொரியா(1808-1839) என்ற பாண்டியபதி ஆட்சி புரிந்து வந்த காலத்தில் பிரஞ்சு நாட்டை சேர்ந்த மார்ட்டின் என்ற ஏசுசபை குருவானவர் பரதவர் நாட்டுக்கு வருகை தந்திருந்தார். பிரஞ்சு நாட்டவரான இந்த மார்ட்டின் பாதிரி புன்னைக்காயலிலிருந்து கிபி1838 ஆம் வருடம் ஜுலை 11 ஆம் தேதி மதுரை மிஷன் பாதிரியார் பெர்டிராண்ட்க்கு தாம் எழுதிய கடிதத்தில்....

"ஒட்டுமொத்த பரதவர்களின் தலைவராக தூத்துக்குடியில் இருப்பவர் டான் காஸ்பர் அந்தோனி டி குரூஸ் வாஸ் கொரியா என்பவர் ஆவார். இவர் பரதவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு படைத்த நபராக இருக்கிறார். நானும் என் உடன் வந்தவர்களும் வீரப்பாண்டியன் பட்டிணம் வந்திருந்தபோது, அங்குள்ள பரதவர்களை திருப்திப்படுத்த அவர்களின் தலைவரும் தூத்துக்குடி ராஜாவுமானவரின் இல்லத்தில் தங்க வேண்டியிருந்தது.

வீரபாண்டியன் பட்டினத்து மக்கள் குடியிருப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள அவருடைய இல்லம் ஒரு அரண்மனை ஆகும். பிறகு நாங்கள் வீரபாண்டியன் பட்டினத்திலிருந்து புறப்பட்டு கடைசியாக தூத்துக்குடி வந்து சேர்ந்தோம். தூத்துக்குடி மாநகர் பரதவர்களின் தலைநகர் ஆகும். பரதவர்களின் அரசனும் தூத்துக்குடி ராஜாவுமான டான் காஸ்பர் அந்தோனி டி குரூஸ் வாஸ் கொரியா(1808-1839) தமது இரண்டு குமாரர்களான இளவரசர்களுடன் எங்களை வரவேற்க நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்.

நாங்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்த காலம் வரை அவருடைய மேசையில் அவருடன் உணவு அருந்தினோம். மேலும் ராஜா எங்களை இந்த வருடம் ஆகஸ்ட் 5 தேதி நடக்கவிருக்கும் பனிமய மாதாவின் திருநாள் சம்மந்தமான ஏற்பாடுகளை உடனடியாக செய்யும்படி கேட்டுக்கொண்டார்". என்று பிரஞ்சு நாட்டவரான மார்ட்டின் பாதிரி குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேய அரசு அதிகாரியான சைமன் காசி தமது குறிப்பில்....

"டச்சுக்காரர்கள் பாண்டியபதிகளை ஏழுகடற்றுறை ராஜா என்று அழைத்தனர்" என்று பதிவு செய்கிறார். 

ஆங்கிலேய அரசு அதிகாரியான "ஜேம்ஸ் ஹார்னெல்" தமது நூலில்....
"பாண்டியபதிகளை டச்சுக்காரர்கள் ராஜாவாகிய ஜாதிதலைவன் என்று அழைத்தனர்" என்று குறிப்பிடுகிறார்.

பாண்டியபதிகளுள் கடைசியானவர் ராஜா டான் மனுவேல் லூயிஸ் டி குரூஸ் அனஸ்தாசியுஸ் மோத்தா கொரைரா என்பவர் ஆகும்.

_____________________________________________

Foot Notes:-

1.La Mission Du Madure Vol 1 By French Jesuit Bertrand. Pg 60, 62, 63, 64

2.Madras Fisheries Bulletin No 7,The Sacred chank of India by BY JAMES HORNELL, Fs, Superintendent of Pearl and Chank Fisheries to the Government , pg 10

3.Remarks on the origin and history of parawas, by SIMON CASIE CHITTY, maniyagar of puttalam, ceylon, The Journal of Royal Asiatic Society. pg 134

- UNI

















Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com