வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 23 April 2024

பாண்டியரின் மூலம்



பாண்டியர்கள் என்றாலே இன்று மதுரை என்று அழைக்கப்படும் கூடல் நகரம் தான் நமக்கு முதலில் நினைவில் வரும், ஆனால் அதற்கு முற்றிலும் மாறான ஒரு வரலாற்று செய்தியை இப்பகுதியில் காண்போம் . 
கிமு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை, இன்றைய தென்தமிழக பகுதி பல நாடுகளாக பிரிந்து கிடந்தது, ஒவ்வொன்றும் தனி தனி ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. இவற்றுள் பாண்டியர்கள் ஆட்சி செய்த நாடு எதுவென நாம் சான்றுகளை கொண்டு நிறுவுவதே சிறந்தது.

நெடுந்தேர் செழியன் காலம் வரையில் கொற்கை தான் பாண்டியர்களின் தலைநகர். அந்த கொற்கை எந்த நாட்டின் கீழ் வருகிறது என்று பார்ப்பது அவசியம்.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த "தாலமி" என்ற கிரேக்க பயணி தமது நூலில் பரதவர்களின் நாட்டை பற்றி குறிப்பிடுகையில், அந்நாட்டின் வர்த்தக ஸ்தலமாக கொற்கை விளங்கியது என்ற செய்தியை அவர் பதிவு செய்வதன் மூலம் கொற்கை பரதவர் நட்டுக்கு உட்பட்ட பகுதி என்பது தெளிவு.

அதன் விவரம் காண்க

அன்றைய காலகட்டத்தில், பாண்டிய அரசு என்பது கொற்கையை மையப்படுத்தி பரதவர் நாட்டின் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது என்பதனை ஆதாரபூர்வமாக நாம் அறிய முடிகிறது. பாண்டிய அரசை பரதவர் நாட்டுக்கு வெளியே விரிவாக்கிய பூதப்பாண்டியன்:

பரதவர் நாட்டின், கொற்கையில் ஆட்சிக்கு வந்த பூதப்பாண்டியன்(கிமு350-325) என்ற கோமான், உள்நாட்டில் அமைந்துள்ள வேற்று அரசர்களின் நாடுகளை கைப்பற்ற தொடங்குகிறார். இவர் ஒல்லையூர் என்ற நாட்டை கைப்பற்றியமையால், "ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்" என்று அழைக்கப்படுகிறார்.

புறநானூறு 71 (சேர, சோழ) வேந்தர், பூதப்பாண்டியனுக்கு எதிராக படை கொண்டு வந்ததை கூறுகிறது. இப்போரில் பூதப்பாண்டியன் இறந்து போனார், அவரது மனைவி பெருங்கோப்பெண்டு அவருடன் உடன்கட்டை ஏறினாள்.

மதுரையை கைப்பற்றிய நெடுந்தேர் செழியன்:

பூதப்பாண்டியனுக்கு அடுத்து, பரதவர் நாட்டின் கொற்கையில் நெடுந்தேர் செழியன்(கிமு325-300) ஆட்சிக்கு வந்தார். புறம் 347 வரி 5-7, அகுதை என்பவன் கூடலை ஆண்டதைக் கூறுகிறது. நெடுந்தேர் செழியன், அகுதையுடன் போரிட்டு வென்று, கூடல்வரை பாண்டிய அரசை விரிவாக்கினார் என்றும், அதன் பிறகு கூடலில் நிரந்தரமாக தங்கி ஆட்சி புரிந்தார் என்றும் அகநானுறு 296 வரி 10-13 கூறுகிறது. புறம் 233 வரி 2-4, அகுதை சக்கராயுதம் வைத்திருந்தும் போரில் மாண்டதாக கூறுகிறது.

பாண்டிய அரசை பேரரசாக்கிய பசும்பூண் பாண்டியன்:

நெடுந்தேர் செழியனுக்கு பிறகு கூடலில் ஆட்சிக்கு வந்த பசும்பூண் பாண்டியன்(கிமு300-275), பாண்டிய அரசை மேலும் விரிவாக்கினார். கூடலுக்கு தெற்கே ஆட்சி புரிந்த பொதியமலை தலைவனையும், வடக்கே ஆண்ட எவ்வியையும், மேற்கே வாழ்ந்த கொங்கரையும் அடக்கினார் என்றும், பலநாடுகளை வென்று "நாடு பல தந்த பசும்பூண் பாண்டியன்" என்ற பெயரை பெற்றார் என்றும், அறம் கடைப்பிடித்த செங்கோல் ஆட்சி புரிந்தார் என்றும் (அகம்.162: 18, 20-22), (அகம்.266: 10-12), (அகம்.253: 4-5), (அகம்.338: 2, 3, 5) இப்பாடல்களால் நாம் அறிகிறோம்.

இப்படி பாண்டியர்கள் தங்களுடைய சொந்த தேசமான பரதவர் நாட்டுக்கு வெளியில் கைப்பற்றியிருந்த நாடுகளை தக்கவைத்துக் கொள்ளவும், பேரரசின் நிர்வாக வசதிக்காகவும் மதுரையில் தங்கி விட்டாலும் கூட அவர்கள் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தனர். அது என்னவெனில் தங்களது சொந்த தேசமான பரதவர் நாட்டின், கொற்கையில் ஆட்சி பொறுப்பில் இருப்பவனே பாண்டியர் முடிக்கு சொந்தக்காரன்.

(எ.கா) "மதுரையில் ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் மறித்துபோன பிறகு பரதவர் நாட்டின், கொற்கையில் இளவரசனாக வீற்றிருந்த வெற்றிவேல் செழியன் மதுரைக்கு வந்து முடிசூட்டிக் கொண்டான்" என்று சிலப்பதிகாரம் 27வது காதை வரி 127-138 கூறுகிறது. இதன்மூலம் பாண்டியர்களின் முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாக பரதவர் நாட்டின், கொற்கை விளங்கியது என்பது தெளிவு.

கொற்கை பற்றிய ஆய்வுகள்:
"ராபர்ட் கால்டுவெல்" என்ற புகழ்பெற்ற ஆங்கிலேய ஆய்வாளர், தமது கொற்கை பற்றிய ஆய்வு பயணத்தில், தமிழர்களுள் வழங்கிவந்த பாரம்பரிய செய்திகளுடன் சேர்த்து தமது கள ஆய்வுகளில் கிடைத்த வேறு ஆதாரங்களின் அடிப்படையில், பாண்டியர்களின் அரசு முதலில் பரதவர் நாட்டு, கொற்கையில் தொடங்கியது என்பதையும், அதன் பிறகே அவர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்து அங்கு தங்கள் புதிய தலைநகரை நிறுவினர் என்பதையும் உறுதி படுத்துகிறார்.

கொற்கை இன்று கடற்கரையில் இருந்து உள்ளே அமைந்திருந்ததாலும் சங்ககாலம் தொட்டு அங்கு வாழ்ந்து வந்த பரதவர்கள் இன்றும் அதே கொற்கையில் வாழ்வியல் சான்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

००००००००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:-
History of Tinneveli by Robert Caldwell Pg. 283

- UNI







Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com